தை நீராடல்
சங்க இலக்கியத்தில் பல பாடல்கள் தைத்திங்களில் பெண்கள் நீராடி நோன்பு மேற்கொண்டதைக் குறிக்கின்றன.
நற்றிணை 22
சங்ககால மக்கள் தைத்திங்கள் முதல் நாளில் நீராடி நோன்பு மேற்கொண்டனர்.
“வான் வயல் நனைத்த புறந்த நோன்பியர்
கைஊண் இருக்கையின் தோன்றும்
நாடான்” என்று நற்றிணையில் 22 வது பாடல் வருகின்றது. அதாவது மழை பெய்ததால் குரங்கின் புறப்பகுதி எல்லாம் நனைந்திருந்தது. இக்காட்சி நோன்பு உடையவர் தைத் திங்களின் போது நீராடி நோன்பு முந்தியிருந்து பின்பு உண்ணுதல் போலத் தோன்றிற்று என்று கூறப்படுகின்றது.
நற்றிணை 80
இந்தப் பாடலில் “தைஇத் திங்கள் தண்கயம் படியும்”
என்று வருகிறது. தலைவி குளிர்ந்த நீரால் நிரம்பிக் கிடக்கும் குளத்தில் நீராடி நோன்பு இருக்கின்றாள். நாணம் தடுக்கவே காதலனோடு புறப்பட்டுச் செல்லாது அவனைக் கணவனாக அடைய நோன்பிருக்கின்றாள் என்ற பொருளில் வருகிறது. இந்தப் பாடலில் தைத்திங்களில் தலைவி பயன் கருதி நோன்பு நோற்றமை கூறப்படுகின்றது.
புறநானூறு 22
“அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின்
கொடிக்கீரை சாறு கொண்ட களம்”
என்ற பாடலை குறுங்கோழியூர் கிழார் அறுவடை நாளினை “சாறு கொண்ட களம்” போல என்கிறார்.
புறநானூறு 70
“திங்கள் தண்கயம் போலக்
கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்”
என்றொரு பாடல் வருகின்றது.
தைத்திங்களின் தண்மையான (குளிர்ச்சியான) நிறைந்த குளம் போல அள்ள அள்ளக் குறையாத அன்னம் நிறைந்த வீடுகள் உடையது கிள்ளி வளவனின் நாடு என்கிறார் புலவர்.
கலித்தொகை 59
“அயலார் நிற் பழிக்குங் கால் வையெயிற் றவர் காப்பண்
வகையணிப் பொலிந்து நீ
தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ”
என்று வருகிறது. அதாவது தன் காதலி, காதலில் அக்கறை காட்டாததால் தலைவன் குறையாக அவளை நோக்கிக் கூறுகிறான். “நான் காதல் வேதனையில் மயங்கினால் உன்னை அயலவர் பழிப்பர். அந்தப் பழி உனக்கு வரின், நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று தோழியருடன் நீ நோன்பு கோலம் கோலம் பூண்டு தைத்திங்களில் நீராடிய தவத்தின் பயன் உனக்கு கிட்டாமல் போகும்” என்கிறான். இந்த பாடல் மூலம் கன்னியர் தைத்திங்களில் நீராடுவதன் நோக்கமும் பயனும் புலனாகிறது. நீராடுதல் ஒருவகை நோன்பு என்பது தெட்டத் தெளிவாகின்றது.
பரிபாடல் இலக்கியத்தில் குளிர்ந்த நீரில் தைத்திங்களில் பெண்கள் தாயுடன் நீராடி நோன்பிருத்தல் “அம்பா ஆடல்” என்று வருகின்றது.
பின் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் “இந்திர விழா” என்ற பெயரில் தைத்திங்கள் பெருவிழா வருகின்றது.
“பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” வழிபட்டதாக கூறப்படுகிறது.
ஒன்பதாம் நூற்றாண்டில் திருத்தக்க தேவரின் சீவகசிந்தாமணியில் “அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுகலத்து எழுந்த தீம்பால் பொங்கல்” என்று முதல் முதலில் ஒரு உணவுப் பொருளாக பொங்கல் வருகின்றது.
ஆதியிலிருந்து தைத் திங்களே தமிழ் புத்தாண்டாக தமிழரின் பண்டைய பெரு விழாவாக இருந்தாலும் இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபும் தமிழரிடையே இருந்து வந்தது.
பிற்காலச் சோழர் காலத்தில்தான் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இந்தக் காலத்திலேயே ஆரியம் தலை எடுத்தது.
நமது பண்டைய பண்பாட்டுத் திருவிழாவான தைநீராடலே இன்று தைப் பொங்கல் கொண்டாட்டமாக மாறியுள்ளது.
தைத்திங்கள் பெருவிழா காலந்தோறும் எமது வாழ்வியலின் அங்கமாக இருந்து வந்தது என்பதை நிறுவ, சங்க இலக்கியப் பதிவுகளே எமக்கு சாட்சியாய் நிற்கின்றன.
ஈராயிரமாயிரம் ஆண்டுகளாய் நாம் கொண்டாடிய தைத்திங்கள் பெருவிழாவை, தைப்பொங்கலை தரணியெங்கும் கொண்டாடுவோம்.
தமிழன் பெருமை நாட்டிடுவோம்.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்