December 2, 2023 9:27 am

சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கோழியை விரட்டிடப் பெண்கள் காதணியை எறிவர்

பட்டினப்பாலை என்ற இந்த நூல் சங்க காலத்தைச் சேர்ந்த பத்துப்பாட்டு நூலில் அடங்கியதாகும். இதைப் பாடியவர் உருத்திரங் கண்ணனார் என்பவர். இவரே பெரும்பாணாற்றுப்படையையும் பாடியுள்ளார். இந்த இலக்கிய நூல் 301 அடிகளாலான ஆசிரியப்பா வகையாகும். இவற்றில் வஞ்சிப்பாவுமா விரவி வந்துள்ளது. பட்டினம் என்பது இங்கு காவிரிப்பூம்பட்டினம் ஆகும். காவிரி ஆற்றின் சுற்றுப்புறங்களில் செழிப்பான காட்சி, காவிரித் துறையில் காட்சி, என்று இந்தப்பாடல் விரிந்து செல்லும்.

பாலைத் திணை என்பது பிரிவின் பால் காத்திருத்தல் ஆகும். 2000 வருடங்களுக்கு முன் ஆட்சி செய்த கரிகால் பெருவளத்தான் காவிரிப்பூம்பட்டினத்தை ஆண்டு வந்தான். அவன் ஆட்சியின் காலத்தில் இந்த காவிரிப்பூம்பட்டினம் தலைநகராக விளங்கியது. காதலியைப் பிரிந்து பொருள்வயிற் செல்வதால் அந்த பிரிவு தனக்கும் தலைவிக்கும் துன்பத்தைத் தரும் என்பதை தன் நெஞ்சுக்கு கூறி தான் செல்ல இருப்பதை கைவிடுவதே இந்த பாடல் நூலாகும்.

காவிரிப்பூம்பட்டினம் என்பதை பூம்புகார் என்றும் அழைப்பர் இது சோழ நாட்டுத் துறைமுகமும் ஆகும். ஊரின் மக்களை வாழவைத்தது போக மீதி தண்ணீரை கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு, கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது இந்த அழகிய பட்டினம். 1500 வருடங்களுக்கு முன் வந்த ஆழிப்பேரலை இந்த நகரை உருத் தெரியாமல் அழித்துவிட்டது. பட்டினப்பாலை என்னும் சங்க இலக்கியம் இந்த நகரின் அழகைப் பல இடங்களில் பாடி நிற்கின்றது.

காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழிப்பு

காவிரியாறு குறையாது பாய்ந்து கொண்டிருப்பதால் சோழநாடு எப்படி நிலவளத்தை பெற்றிருக்கின்றது என்பதை இதில் அழகாகக் குறிப்பிடுகின்றார் உருத்திரங்கண்ணனார்.
சோழநாட்டின் அகன்ற வயல்களில் விளைச்சல் நடந்துகொண்டிருக்கும் அந்த வயல்களில் விளைந்து நன்கு முற்றிய கரும்பினைப் பாகாகக் காய்ச்சவும் ஆலைகள் அங்கிருக்கும். அந்த ஆலைகளில் இருந்து வரும் நெருப்பு புகையின் வெப்பத்தால் நீர் நிறைந்த வயல்களில் நீண்டு வளர்ந்திருக்கும் நெய்தல் பூக்கள்(ஆம்பல் மலர்கள்) அழகு கெட்டுப்போகும். அங்கு விளைந்த காய்ந்த செந்நெல்லின் கதிர்களைத் தின்ற பெரிய வயிற்று எருமை மாட்டின் முதிர்ந்த கன்றுகள் நிழலிலே படுத்துறங்கும். மருதநிலத்தில் குலைகளையுடைய தென்னை,தாறு போட்டிருக்கும் வாழை, காய்த்திருக்கும் பாக்கு, மணக்கும் மஞ்சள், பல்வேறு இன மாமரங்கள், கிழங்கினையுடைய சேப்பஞ் செடிகள் முளைத்து இருக்கும். இஞ்சி செடி செறிவாக அங்கு காணப்படும்.

கோழியை விரட்டக் காதணி எறிவர்

“அகல் நகர் வியன் முற்றத்துச்
சுடர் நுதல் மட நோக்கின்”
என்று தொடங்கும் இந்தப் பாடலில், காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழிப்பு கூறப்படுகிறது. இதுவே இந்த பதிவின் முக்கிய பகுதியாகும். இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் காவிரிப்பூம்பட்டினம் மிகச் செல்வச் செழிப்பாக இருந்திருக்கின்றது என்பதை இந்தப் பாடல் நமக்கு உறுதிப்படுத்துகின்றது.

ஒளி பொருந்திய நெற்றியும் மென்மையான பார்வையும் நேர்த்தியாகச் செய்யப்பட்ட அணிகலன்களையும் அணிந்துள்ள மகளிர் அகன்ற வீட்டில் பரந்த முற்றத்தில் உலர்த்தியிருக்கும் உணவுப் பொருள்களை தின்ன வரும் கோழிகளை விரட்ட, தமது காதில் அணிந்திருக்கும் வளைந்த அடிப்பாகத்தை கொண்ட கனத்த குழையினை (காதணி) கழற்றி எறிவர். பொன்னாலான அணிகலன்கள் கால்களிலே அணிந்துகொண்டு தேர் உருட்டி விளையாடும் சிறுவர்களின் வழியில் இந்த குழைகள் தடுக்கும். இதைத் தவிர்த்து வேறு எந்த பகையும் இல்லாதது காவிரிப்பூம்பட்டினம் என்கிறார் உருத்திரங்கண்ணனார்.

எப்பொழுதும் புலவர்கள் தமது கருத்தை அழகாக மிகைப்படுத்தி தான் காட்டுவார்கள். எப்படி என்றாலும் அவர் சொல்ல வருவது அரும் பெரும் செல்வச் செழிப்பு வாய்ந்தது அந்த காவிரிப்பூம்பட்டினம் என்பதே.

காவிரிப் பூம்பட்டினத்தின் அட்டில் சாலைகள்

அந்த பட்டினத்தின் அடுக்களைகளைப் பற்றிக் கூறும்போது “புலிப் பொறி போர்க் கதவின்
திருத்தும் திண் காப்பின்”
என்ற பாடலில், புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட இரட்டைக் கதவுகள் கொண்ட உணவுச் சாலைகள் அங்கு இருந்தன. இந்த உணவுச் சாலைகளில் சோற்றினை வடித்த கஞ்சியானது ஆறு போலப் பரந்து காவிரிப்பூம்பட்டினத்தில் ஓட அங்கே காளைகள் சண்டையிட சோற்றுக் கஞ்சி சேறானது. அதில் தேர்கள் ஓட சேறு புழுதியாகி எங்கும் பரவியது. அபபுழுதி பல்வேறு வண்ணங்களில் அமைந்த அழகிய அரண்மனையின் மேல் பட்டதால், புழுதியைத் தன் மேல் வாரி இறைத்துக் கொண்ட யானையைப் போல மாசு படிந்து காட்சி அளித்தது என்கிறார் புலவர்.

இவ்வாறு பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழநாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினச் சிறப்பு, காவிரிஆற்றினதும்,அதன் மருத நிலப் செல்வச் செழிப்பும், கரிகாலனுடைய வீரம், பெருமை, கொடை, அன்றைய தமிழ் மக்களின் வாழ்வியல் முறை என்பவற்றை அழகாக இந்த இலக்கியம் எமக்கு இயம்புகிறது.

கரிகால் சோழன் திரைகடலில் நாவாய்கள் (கப்பல்கள்) பல செலுத்தும் முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளில் வணிகத் தொடர்புகள் வைத்திருந்து, தமிழருக்கு உலகப் புகழை தந்தவன் என்று கூறுகின்றது இந்த பட்டினப்பாலை.

இதுகாறும் காவிரியாற்றில் சுற்றியுள்ள செழிப்பான வளத்தை பார்த்த நாம் இன்று காவிரி ஆறு இருக்கும் நிலையை மனக்கண் முன் கொண்டு வந்தால் நாம் காண்பதெல்லாம் வற்றிப்போய் இருக்கும் காவிரியும், ஆற்று மணல் ஆங்காங்கே திட்டுகளாக இருப்பதும் தான் தெரிகின்றது. மக்கள் தொகைப் பெருக்கமும் மனிதனின் பேராசையும், அளவுக்கதிகமாக ஆற்று மணலை அள்ளியதால் காவிரியன்னை அழகிழந்து காட்சியளிக்கின்றாள். சுற்றுப்புற மருதநிலம் தரிசாகக் கிடக்கிறது. காவிரி ஆற்றை நாம் வெறும் ஆறாக மட்டும் பார்க்க முடியாது . அது தமிழரின் கலாச்சாரம். இலக்கியம் பல எழுந்த உன்னத சின்னம். தமிழனின் பொற்காலமும் அதைச் சுற்றியே இருந்து வந்தது என்ற மாபெரும் வரலாற்று உண்மையை இந்த பட்டினப்பாலையும் எமக்கு உணர்த்துகின்றது அல்லவா.

ஜெயஸ்ரீ சதானந்தன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்