புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

3 minutes read

சங்க இலக்கியம்
கார் நாற்பது
கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும்.
பாடியவர்: மதுரைக் கண்ணங் கூத்தனார்
திணை: முல்லைத் திணை
காலம்:கி.பி 300 இலிருந்து 600 வரை.
கார் நாற்பது என்னும் இலக்கியம் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்டது.
இது, நாற்பது பாடல்கள் கொண்ட அகத்திணை சார்ந்த மிகச்சிறிய நூலாகும்.

மழைக் காலத்தில் நடந்த நிகழ்வுகளையும், அன்றைய பண்பாட்டு நிகழ்வுகளையும் இது எடுத்துக் காட்டுகின்றது.
இந்த 40 பாடல்களும் முல்லைத் திணையில் அமைந்துள்ளன. அதாவது காதலன் பொருளீட்டவோ, கல்வி கற்கவோ, தூதுவராகவோ, போர்க்களத்திற்கோ சென்ற நேரத்தில் பிரிந்து இருக்கும் சூழலில் காதலி காத்திருப்பதும் முல்லைத் திணை ஆகும். இந்த முல்லைத் திணையின் பெரும்பொழுது கார்காலம். சிறுபொழுது மாலை நேரம். முல்லைத் திணையின் பெரும்பொழுதான கார் காலத்தையே கண்ணங் கூத்தனார் கார் நாற்பது என்று தனது நூலுக்கு பெயரிட்டுள்ளார்.

இப்போது மிக முக்கியமாக நமது தலைப்பிற்குள் வருவோம்.
“நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகை உடையவாகி
புலம் எல்லாம் பூத்தன தோன்றி- சில மொழி
தூதொடு வந்த மழை” என்று ஒரு பாடலை கண்ணங்கூத்தனார் பாடுகின்றார்.

அதாவது தோன்றிப் பூக்கள் (இங்கு தோன்றிப் பூக்கள் என்பவை செங்காந்தள் மலர்கள் ஆகும்) கார்த்திகைத் திருவிழாவில் முதல்நாள் போல அழகாக மலர்ந்தன. மழையும் தூதுடனே வந்தது. எனவே தலைவன் கார்காலம் கண்டு வருவான், என்று தோழி, தலைவியை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கார் நாற்பதில் அதாவது மழைக் காலத்தில் பூக்கும் பூக்களாக செங்காந்தள் பூக்கள், கொன்றைப் பூக்கள், கருவிளம் பூக்கள் (நீலப் பூக்கள் அல்லது சங்குப் பூக்கள்) மாதிரிப் பூக்கள் போன்றவற்றை கண்ணங்கூத்தனார் குறிப்பிடுகின்றார்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி கூடும் நாள் கார்த்திகை ஆகும். இதனால் இந்நாள் திருக்கார்த்திகை எனப்படுகின்றது. இந்தநாளில் விளக்கீடு செய்தலையும் அதன் பெருமையையும் மலைபடுகடாம், பரிபாடல், நற்றிணை, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்கள் எமக்கு காட்டி நிற்கின்றன. அகநானூற்றில், தலைவன் குறித்த காலத்தில் வராமல் இருந்தாலும் கார்த்திகைத் தீப விழாவினை தன்னுடன் சேர்ந்து கொண்டாட வருவான் என்று தலைவி பாடுவதாக ஒரு பாடல் இருக்கின்றது.

“தொல் கார்த்திகை நாள்” என்று தொடங்கும் பாடலில் திருஞானசம்பந்தரின் கூற்று நமக்கு இதை வலுப்படுத்துகின்றது. ஆக தீபம் ஏற்றுவது என்பது சங்ககால மக்களிடையே சிறப்பாக இருந்திருக்கின்றது. அத்தோடு திருக்கார்த்திகைத் தீபத் திருவிழா என்பது தமிழ் மக்களிடையே தொன்று தொட்டு வழங்கி வந்த ஒரு பெருவிழாவாக அமைந்திருக்கின்றது.

ஆனால் இப்போது இந்த திருக்கார்த்திகைத் தீபத் திருவிழா என்பதும், இதை கொண்டாடுவதும் எம்மிடையை அருகிக் கொண்டு போவதாகத் தெரிகின்றது. பிற்காலத்தில் வந்து சேர்ந்த விழாக்களுக்கு முக்கியம் கொடுக்கும் நாம், பண்டைய காலம் தொட்டு வந்த திருக்கார்த்திகை விழாவை, எமது பண்டைய வாழ்வியலை, பண்பாட்டை நமது அடுத்த சந்ததிக்குக் கொடுக்கும் கடப்பாடு உள்ளவர்கள் ஆகிறோம்.

கார் நாற்பது இலக்கியத்தில் வரும் செங்காந்தள் பூவும் (கார்த்திகைப் பூ) திருக்கார்த்திகைத் தீபமும் இந்தக் கார்(மழைக்)காலத்தில், கார்த்திகை மாதத்தில் எம்மோடு இரண்டறக் கலந்தவை அல்லவா..
உங்கள் கருத்துகளினால் ஏற்படும் உந்துசக்தியோடு அடுத்து இன்னுமொரு சங்க இலக்கியப் பதிவில் சந்திக்கலாம்.

ஜெயஸ்ரீ சதானந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More