சங்க இலக்கியத்தில் பதினெண் மேற்கணக்கில் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்று இரு வகை நூல்கள் இருக்கின்றன. பத்துப்பாட்டில் ஒரு நூல் சிறுபாணாற்றுப்படை. இது கிறிஸ்துவுக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டிற்கு முதல் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இதன் ஆசிரியர் இடைக்கழிநாட்டு நத்தத்தனார் ஆவார். இது 269 அடிகளால் ஆன நேரிசை ஆசிரியப் பாவால் எழுதப்பட்டது. மிகவும் வியப்பையும் ஆர்வத்தையும் தூண்டும் வரலாறு இது.
நல்லியக்கோடன் என்னும் குறுநில மன்னனிடம் பரிசில் பெற்ற ஒரு பாணன் வேறு பாணருக்கு அவன் கொடைச் சிறப்பைக் கூறி அவனிடம் செல்லும்படி பாடுவதே இந்த சிறுபாணாற்றுப்படை.
இந்த சிறுபாணாற்றுப்படை, நல்லியக்கோடன் என்னும் மன்னனின் வரலாற்றைக் காட்டுகின்றது. இவன் ஒய்மா நாட்டை ஆண்டு வந்தான். இது இப்போதுள்ள திண்டிவனம் பகுதி ஆகும். அதன் தலைநகரம் மாவிலங்கை எனும் பெயர் கொண்டது.
இதில் புலவர் நத்தத்தனார் சேரனது வஞ்சி நகர், பாண்டியனது மதுரை நகர், சோழனது உறையூர் நகர் போன்றவற்றின் சிறப்புகளையும் பாடுகின்றார். கடையெழு வள்ளல்களான பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி ஆகியோரின் கொடைச் சிறப்பையும் பாடுகின்றார்.
இனி இந்த சிறுபாணாற்றுப்படையின் தனிச் பெரும் சிறப்பைக் காணலாம்.
இந்த கடை எழு வள்ளல்களின் பின்னர் கொடை வழங்கும் பணியை தனி ஒருவனாக செய்தவன் நல்லியக்கோடன் என்கின்றார். எழுவரும் மறைந்த பின் கொடை வழங்கும் தன்மை இவனிடம் வந்து சேர்ந்தது என்கின்றார்.
அன்றே விடுக்கும் அருமை
இதுதான் நல்லியக்கோடனின் மாபெரும் சிறப்பு. வந்த விருந்தினர்க்கு தானே முன்நின்று உணவளித்து பரிசில்கள் தந்து வந்த அதே நாளிலேயே வழியனுப்பும் குணம் கொண்டவன் இந்த வள்ளல் நல்லியக்கோடன். இதனாலேயே மூவேந்தர்களையும் விட, கடையெழு வள்ளல்களையும் விட இவன் சிறந்து விளங்குகின்றான் என்று புலவர் இயம்புகின்றார்.
பகை முடித்து படைவீரர் கொண்டு வந்த செல்வம் எல்லாம் கொடுப்பானாம். சாதிலிங்கப் பலகையிலான தேரில் தானே ஏறி நின்று வெள்ளோட்டம் பார்த்து தேர்ப்பாகனையும் சேர்த்துக் கொடுப்பானாம்.
இந்த நேரத்தில் ஒரு வரலாறு ஞாபகம் வருகிறது. ஔவைப் பாட்டி பரிசில் பெற ஒரு மன்னனிடம் செல்கின்றார். அந்த மன்னனும் நன்கு உபசரித்து ஒவ்வொரு நாளும் விருந்து அளிக்கின்றான். ஆனால் பரிசல் கொடுத்து அவரை திருப்பி அனுப்பவில்லை. அவர் நொந்து பாடுவதாக சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் இருக்கிறது.
இங்கு நல்லியக்கோடனோ அன்றே பரிசில் கொடுத்துவிடும் பெருமை மிக்கவன்.
இவ்வளவு காலமும் கொடை என்றால் இதிகாசத்தில் வரும் கர்ணனையும் கடையெழு வள்ளல்களையும் நாங்கள் கூறிக் கொண்டிருந்தோம்.
இனி வரும் காலங்களில் நல்லியக்கோடன் என்னும் குறுநில மன்னனையும் நாம் கொடைவள்ளல் பட்டியலில் சேர்த்துக் கொள்வோம்.
இதில் இன்னுமொரு சிறப்பு என்னவெனில் நால்வகை நிலத்திலும் வாழும் நல்லியக்கோடனின் குடிமக்கள் எப்படி விருந்தோம்பல் செய்கிறார்கள் என்று பாடல்கள் உள்ளன. ஒரு பாடலில் மருத நிலத்து மக்கள் எப்படி இந்தப் பாணர்களுக்கு விருந்தளிக்கின்றார்கள் என்பதைக் கூறுகின்றார். அப்படிக் கூறும் போது நல்லியக்கோடனின் அரசாட்சிக்கு உட்பட்ட மருதநிலத்தின் இயற்கை அழகை மிக மிக சுவையாக வர்ணித்து பாடுகிறார். அன்றைய எமது மண்ணின் வளத்தை ஆச்சரியத்தோடு நோக்கும் பாடலாக பின்வரும் அடிகள் விளங்குகின்றன.
எருமை கண்ட சுகம்
“கொழுமீன் குறைய ஒதுங்கி வள்ளிதழ்க் கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை”
என்று தொடங்கும் பாடலில் கொழுத்த மீன்கள் துண்டாகும் படி வயல்களில் எருமை நடந்து செல்லும். பின்னர்
வளம் மிகுந்த இதழ்களைக் கொண்ட செங்கழுநீர் (தாமரை) மலர்களைப் பெரிய வாயினை உடைய அந்த எருமை மேயும்.
அது பசுமை மிகுந்த மிளகுக் கொடிகள் படரும் பலா மரத்தின் நிழலில் படர்ந்துள்ள காட்டு மல்லிகை மலர் படுக்கையில் துயில் கொள்ளும். அப்போது மஞ்சளின் மென்மையான இலை எருமையின் முடி நிறைந்த முதுகினைத் வருடித் தடவிக் கொடுக்குமாம். அந்த இன்பத்தில் திளைத்த எருமை வாயிலிருந்து கழுநீர் (தாமரை) மலர்த்தேன் வெளியாகி மணக்கும் படி அசைபோடுமாம்.
அந்தக் காட்சியை கண்முன் கொண்டு வருவோம்.
அந்த இயற்கையின் அழகை சுவைப்போம். சிறுபாணாற்றுப்படை அழகை அப்படியே ஆட்கொள்வோம்.
நல்லியக்கோடனை இன்னும் ஆய்ந்து நோக்குவோம்.
ஜெயஸ்ரீ சதானந்தன்