பதிவு -3
சங்க இலக்கியம்
புறநானூறு பாடல் – 9
போரின் அறநெறி
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
பாடியவர்: நெட்டிமையார் என்னும் பெண் புலவர். இவர் சங்க காலத்தில் வாழ்ந்த ஒருவர். நீண்ட இமை கொண்டவர் என்பதால் நெட்டிமையார் என்றும் அல்லது நெடுந்தொலைவில் உள்ள பொருளை கூர்ந்து நோக்கி அறியும் திறன் வாய்ந்தவர் என்பதால் நெட்டிமையார் என்றும் பெயர் பெற்றிருப்பார் என்று கூறுவர்.
“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்” என்னும் பாடலில் “பசு, பசு போன்ற இயல்புடைய பார்ப்பனர்கள், பெண்கள், குழந்தைகள், மரபு நோய் உள்ளவர்கள், இறந்த முன்னோருக்கு கடன் செலுத்தும் குழந்தை இல்லாதவர்கள் உங்களுக்கு பாதுகாப்பான இடம் தேடி சென்று விடுங்கள். இப்போது இங்கே எனது அம்பு பாயும் போர் நடக்க இருக்கின்றது”
என்று போருக்கான அறவழி கூறிய பின்புதான் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி தனது போரை ஆரம்பிப்பான் என்று நெட்டிமையார் புகழ்ந்து பாடுகின்றார்.
இந்தப் பாண்டிய மன்னன் வடிவம்பல நின்ற பாண்டியனின் வழித்தோன்றல். இந்த வடிவம்பல நின்ற பாண்டியன் கடல்கோளால் மூழ்கிய குமரி நாட்டில் கடல் தெய்வத்துக்கு விழா எடுத்ததாக அறியப்படுகின்றது.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னனைப் பற்றி புறநானூற்றில் ஐந்து பாடல்கள் பாடியுள்ளார்கள். அத்தோடு மதுரைக்காஞ்சியில் இவனைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பாசறையில் இருக்கும் போதே கொடுக்கும் சிறந்த கொடை வள்ளல்களில் ஒருவன் என்று புறநானூற்றின் ஆறாவது பாடல் கூறுகின்றது. இந்தப் பாண்டிய மன்னன் கடைச்சங்க காலத்திற்கு முன்னர் பாண்டி நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. அதாவது கிறிஸ்துக்கு முன் 400 இலிருந்து கிறிஸ்துவுக்கு பின் 200 வரையான காலத்துக்கு முன்பாக வாழ்ந்திருந்தான் என்று கணிக்கப் படுகின்றது.
ஆனால் நெட்டிமையார் இந்தப் பாடலைப் பாடும்போது பஃறுளி ஆற்று மணலிலும் பார்க்க பல நாள் வாழவேண்டும் என்று வாழ்த்தி பாடுகின்றார். அப்போ பஃறுளி ஆறு கடல் கொள்ளப்ப்படுவதற்கு முன்னர் நெட்டிமையார் வாழ்ந்தாரா? அல்லது இந்த பாண்டிய மன்னன் பஃறுளி ஆறு கடல் கொள்ள படுவதற்கு முதல் வாழ்ந்தானா? என்றும் கூட நோக்குகின்றார்கள். இந்த பஃருளி ஆறு என்பது குமரிக் கண்டத்தில் இருந்த ஒரு ஆறு என்பதும் இது கடல்கோளால் மறைந்ததும் என்பது வரலாறு.
இந்தப் பதிவின் முக்கிய நோக்கத்திற்கு வருவோம். அதாவது எமது மூதாதையரான பாண்டிய மன்னன் போரின் இலக்கணத்தை அறநெறி யோடு கையாண்டுள்ளான்.
முதலாவதாக பசுவைக் கூறுகின்றார்கள். பசு என்பது அந்தக் காலத்திலும் எந்தக் காலத்திலும் ஒரு நாட்டுக்குரிய செல்வம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு முதலில் ஆநிரையைக் (பசுவைக்) கவர்வார்கள். அதற்கென்று ஒரு புறத் துணையான வெட்சித் துணை உள்ளது.
ஆகவே பசுவை, பசு போன்ற இயல்புடைய பார்ப்பனர்களை அதாவது வேதம் ஓதுபவர்கள் அற நெறியில் நிற்பவர்களை, பெண்கள், குழந்தைகள், நோய் உள்ளவர்கள் என்று மென்மையானவர்களை எல்லாம் அப்புறப் படுத்திவிட்டு போர் செய்து எமது மூதாதையர் போரின் இலக்கணத்தைக் கற்றுத் தந்தார்கள்.
ஆனால் இன்று நடக்கின்ற போர்களைப் பார்ப்போம். ஈவிரக்கமின்றி எமது பசுக்களை, பெண்களை, குழந்தைகளை, கிறிஸ்தவ பாதிரியார்களை தேவாலயங்களிலும், அந்தணர்களை கோயில்களிலும், நோய் உள்ளவர்களை வைத்தியசாலைகளிலும் கொன்று குவித்தார்கள். ஈழத்தில் நடந்த போரே இதற்கு சாட்சியாகி எமது கண்கள் குளமாக காட்சியாய் முன் நிற்கின்றது.
ஜெயஸ்ரீ சதானந்தன்