December 2, 2023 9:03 am

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சங்க இலக்கியம் பதிவு – 5

பெண்களே நடத்தும் திருமணம்

அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளன. இவை ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. இது பல்வேறு புலவர்களும் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.

அகநானூறு 86

பாடியவர்: நல்லாவூர் கிழார்

 திணை:மருதத் திணை

துறை: வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது.

வயலும் வயல் சார்ந்த இடத்தின் உரிப்பொருளான  ஊடலும் ஊடல் நிமித்தமும் என்ற அகத்திணை ஒழுக்கத்தில் இது அமைந்துள்ளது.

நல்லாவூர் கிழார் என்பவர் நல்லாவூர் என்னும் சோழ நாட்டில்  பிறந்துள்ளார்.

இதில் முக்கியமாக ஒன்றை நாம்  அகத்திணையில் குறிப்பிட வேண்டும். எந்த ஒரு இடத்திலும் இந்த அகத்திணையைப் பாடும் புலவர்கள் அந்த பாட்டுடைத் தலைவரின் பெயரையும் தலைவியின் பெயரையும் குறிப்பிடுவதில்லை  ஏனெனில் அகத் திணை என்பது ஒழுக்கம் சார்ந்தது. ஆகவே அவர்கள் தலைவன் 

தலைவி என்றே குறிப்பிடுகின்றார்கள். புறநானூற்றைப் பார்த்தோமானால் பாட்டுடைத் தலைவன் தலைவியின் பெயர் குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் அது ஒழுக்கம் பற்றியதல்ல வீரம் கொடை போர் பற்றியது. எவ்வளவு

கண்ணியமாக எமது மூதாதையர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது இதனுடாக நாம் புரிந்து கொள்ளலாம்.

 அகநானூற்றில் 86 வது பாடல் கிறிஸ்துவுக்கு முன் 600 லிருந்து கிறிஸ்துவுக்குப் பின் 200 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்ட பாடல் ஆகும்.

“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை 

பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரை கால்

தன் பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி

மனை விளக்குறுத்து மாலை தொடரி”

என்று வரும்  32 அடிகள் கொண்ட பாடலின் விளக்கமானது தலைவனுடன் ஊடல் கொள்கிறாள் தலைவி. அவளின் கோபம் போக்க பலரை தூது அனுப்புகிறான் தலைவன். அவர்கள் எல்லோரும் சென்று தலைவனுக்கு சார்பாக பேசித் தலைவனை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்கின்றனர். அவர்களின் வேண்டுகோளை தலைவியும் மறுத்துவிட தலைவனே நேரில் செல்கின்றான். சிறிது நாட்கள் முன்பு தாங்கள் இருவரும் எப்படி மகிழ்ச்சியாக இருந்தோம் என்று இந்த பாடல் மூலம் கூறித் தலைவிக்கு இருக்கும் ஊடலைப் போக்குகின்றான். இது தான் அந்தப் பாடலின் சுருக்கம்.

இனி இந்தப் பதிவின் முக்கிய நோக்கத்தை இங்கு உற்று நோக்கலாம். சங்க காலத்தில் எப்படி தமிழர்களின் திருமண நிகழ்வு நடந்தது என்பதை இந்தப் பாடல் நம் கண்முன் கொண்டு வருகின்றது.

ரோகினி நிறைமதி நாளில் விடியற்காலையில் திருமணம் நடைபெறுகின்றது. அழகிய காலை நேரத்தில் உளுத்தம் பருப்பை கூட்டி சமைத்த பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளையாக விருந்துணவு படைக்கப்பட்டது. வரிசையாகத் தூண்களை நட்டு பெரிய பந்தல் போடப்பட்டது. அந்தப் பந்தலில் புதுமணல் பரப்பப்பட்டது. நிறைய விளக்குகள் ஏற்றப்பட்டன. அலங்கார மாலைகள் தொங்க விடப்பட்டன.

பெண்களே நடத்தும் திருமணம்

இது முழுக்க முழுக்கப் பெண்களே நடத்தி வைக்கும் திருமணம் ஆகும். மணமகள் அழைப்பாக தலை உச்சியில் நிறைகுடம் கொண்ட பெண்டிர் மணப்பெண்ணுக்கு முன்னே சென்றனர். புதுப்பானை ஏந்திய பெண்டிர் மணப் பெண்ணை பின்தொடர்ந்து வந்தனர். மிக ஆரவாரத்துடன் அவர்கள் மணப் பெண்ணை அழைத்து வந்தனர்.

முதுபெண்டிர் நீருடன் கூடிய ஈரமான இதழ்களையுடைய பூக்களை நெல்லுடன் அவளுடைய அடர்ந்த கருமையான கூந்தலில் தூவி வாழ்த்தினர். “எல்லோரையும் விரும்பிப் பேணும் பெண்ணாக வாழ்வாய். பெரிய மனைக் கிழத்தியாக வாழ்வாய்”என்று வாழ்த்தி திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தி முடிக்கிறார்கள். 

சங்க காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இல்லை. தாலி மட்டுமல்ல பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் என்பவை கூட இங்கு பேசப்படவில்லை. இரண்டாம் நூற்றாண்டளவில் வந்த சிலப்பதிகாரத்தில், “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட” என்று வரும் அடியில்   கண்ணகியை கைப்பிடித்த கோவலன் புரோகிதன் வளர்த்த தீயை வலம் வருகின்றான் என்பது இளங்கோ அடிகள் நமக்கு தரும் செய்தி.

அத்தோடு இன்னொரு அடியில் “அகலுள் மங்கல அணி எழுந்தது”என்று வருகிறது. புரோகிதரும், மங்கல அணியும் சிலப்பதிகாரமே முதன் முதல் தரும் செய்தியாக இருக்கிறது. அதற்கு முதல் இவை எங்கும் சங்க இலக்கியத்தில் பேசப்படவில்லை.

பெண்களின் ஆளுமை, முக்கியத்துவம் போன்றவை சங்க காலத்தில் எப்படி இருந்துள்ளன என்பதை இந்தப் பாடல் எம் மனக் கண் முன் கொண்டு வருகிறதல்லவா? 

இப்போது நாம் கூறும் தமிழர் மரபு என்பவை பின்னாளில் நாம் வலிந்து சேர்த்துக் கொண்டவை.பெண்களைப் புறந்தள்ளிப் புரோகிதர் நடத்தி வைக்கும் ஆடம்பரத் திருமணம், பெண்ணுக்குரிய மங்கலப் பொருட்கள் என்று கூறப்படும் தாலி (இந்த தாலி என்ற சொல்லே பதினோராம் நூற்றாண்டிற்குப் பின்பு தான் பேசப்படுகின்றது என்பது ஆய்வாளர்கள் கருத்து), மஞ்சள் குங்குமம் போன்றவை நாம் பிந்தைய நாட்களில் எடுத்துக் கொண்டவை என்பது தெளிவாகின்றது அல்லவா?

ஜெயஸ்ரீ சதானந்தன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்