இன்னொரு பதிவு – சங்க இலக்கியம்
பொருநராற்றுப்படை
ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு
பாடியவர்: முடத்தாமக்கண்ணியார்- இவர் ஒரு பெண்பாற் புலவர் என்று கூறப்படுகின்றது.
பாட்டுடைத் தலைவன்: கரிகால் வளவன்/ சோழன் கரிகாற் பெருவளத்தான்.
இந்த நூல் நான்கிலிருந்து ஆறாம் நூற்றாண்டில் பாடப்பட்டதாகக் கணிக்கப்படுகின்றது. பதினெண்மேல்கணக்கில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று 18 வகை சங்க இலக்கிய நூல்கள் உள்ளன.
இதில் பத்து பாட்டின் கீழ் வருவது இந்த பொருநராற்றுப்படை ஆகும். போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்ட நூல் இதுவாகும். அதாவது மற்றைய பொருநனும் சென்று பரிசில்கள் பெற்று துன்பம் நீக்க தூண்டி அனுப்புவது என்பது இதன் பொருள் ஆகும்.
சோழன் கரிகாற் பெருவளத்தான் தாய் வயிற்றில் கருவாக இருக்கும்போதே அவனது தந்தை இறந்தான். ஆதலால் அவன் கருவில் இருக்கும்போதே அரசுரிமை பெற்று பின்னர் பிறந்தான் என்று பொருநராற்றுப்படை கூறுகின்றது. இளமையிலேயே முடிக்கு அரசனாகி நன்கு தனது நாட்டை ஆட்சி செய்து வந்தான்.
மிகப்பெரும் பகைவருடன் போர் புரிந்து இளமையிலேயே பெரும் பகைவரைக்கொன்றான், என்று இந்த இலக்கிய நூல் கூறுகின்றது.
பகைவரின் வஞ்சகத்தால் இவனை சிறையில் அடைத்தார்கள். பகைவர் சிறையில் தீயை மூட்டி விட அந்த தீப்பற்றிய சிறையிலிருந்து கரிகாலன் தப்பி வெளியேறினான். இந்த முயற்சியின் போது அவன் கால் தீயில் கருகியது என்ற காரணத்தினாலேயே கரிகாலன் என்ற பெயரை பெற்றான்.
கரிகாலன் காடுகளை அழித்து களனிகள் ஆக்கினான். காவிரிப் பெரு வெள்ளத்தால் மக்கள் துன்பப் படுவதைக் கண்டு காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டினான் என்ற மகத்தான பெரும் வரலாறு இவன் பின்னாலே இருக்க, கரிகால் பெருவளத்தான் விருந்தோம்பலை இங்கு உற்று நோக்க வேண்டும்.
இந்தப் பதிவின் தனிப் பெரும் சிறப்பு அம்சமே
கரிகாலனின் விருந்தோம்பல் தான்.
பெருவளத்தானின் விருந்தோம்பல்
“கேளிர் போல” என்று தொடங்கும் பொருநராற்றுப் பாடல் வரிகள் கூறுவதாவது, கரிகாலன் பொருநருடன் (விருந்தினருடன்) நண்பர்கள் போல உரையாடி அவர்கள் நமக்கு நெருக்கமானவர் என்று உணர வைத்து ஈன்ற கன்றில் காட்டும் பசுவின் அன்பைப் போல தானே முன்னின்று முகம்பார்த்து உணவு ஊட்டும் தாய் போல கரிகால் பெருவளத்தான் விருந்து படைப்பான்.
நடந்து வந்த களைப்புத் தீரவும் மனம் மகிழும் வண்ணமும் ஒரு மன்னனோடு விருந்துண்ண வந்த மற்றொரு மன்னன் தனக்கு சமமாக உபசரிக்க படுவது போல இந்தப் பொருநரும் உபசரிக்கப்பட்டார்கள் என்று கூறப்படுகின்றது.
காலில் ஏழு அடிகள் பின் செல்வான்
“காலில் ஏழு அடி பின்சென்று”
என்னும் பாடல் வரிகள், கரிகாலன் தன்னை நாடி வந்தவர்களை வரவேற்று உபசரித்து அவர்களுக்கு யானைகளைப் பரிசாகத் தருவான். வெண்மையான நான்கு குதிரைகள் பூட்டிய தேரை கொடுப்பான். அவர்கள் விடைபெறும்போது ஏழு அடி தூரம் பொருநரின் (விருந்தினரின்) பின் நடந்துசென்று வழியனுப்பி வைப்பான் என்று கூறுகிறது.
இது தமிழரிடையே நிலவி வந்த பண்டைய மரபாகும். இதை இன்னும் எம்மிடையே விருந்தோம்பலில் நாம் காணலாம்.
இந்த பொருநராற்றுப்படை கரிகாலனின் வீரம் பற்றி சொல்வது தெரிந்திருந்தாலும் அவனின் சிறப்பான விருந்தோம்பல், தமிழர்களாகிய நாம் எப்படி விருந்தினரை நடத்த வேண்டும் என்று கூறுகிறது.
விருந்தினர் பின் சென்று வழியனுப்பும் இப்படியான பண்புகள் நம்மை விட்டு அருகிப் போய் விடாது காப்போம்.
மீண்டும் இன்னுமொரு சங்க இலக்கியப் பதிவில் சந்திப்போம்.
ஜெயஸ்ரீ சதானந்தன்