சங்க காலத்தில் நமது உணவு முறை எப்படி இருந்தது என்பதை ஆர்வத்தோடு இங்கு நாம் உற்று நோக்கலாம்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என்ற ஐவகை நிலங்களில் வேறுபட்ட உணவு முறைகள் இருந்திருக்கின்றன.
ஒவ்வொரு நிலத்திலும் குறிப்பிட்ட வகை உணவுப் பொருட்களே கிடைத்திருக்கின்றன. அல்லது உற்பத்தி செய்யப்பட்டு இருக்கின்றன.
இயற்கையாய் அமைந்த நிலப்பாகுபாடுகளில் அங்கு கிடைக்கும் பொருட்களையும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப உணவை உற்பத்தி செய்தும் உண்டு வாழ்ந்து வந்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். நல்ல முறையில் பக்குவம் செய்து உண்டு மகிழ்ந்திருக்கின்றனர். காய், கனி, கிழங்கு சிறு தானியம், பருப்பு போன்றவற்றை அசைவ உணவு வகைகளையும் உண்டிருக்கின்றனர்.
இப்போது ஐவகை நிலத்திற்கான உணவுப் பொருட்களை இங்கு நோக்கலாம்.
குறிஞ்சி- மூங்கிலரிசி தினை, மலை நெல், கிழங்கு போன்றவற்றை பயிரிட்டு உண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.
முல்லை – வரகு, சாமை போன்றவற்றை உணவாகக் கொண்டிருக்கிறார்கள்.
மருதம் – இங்கு நீர்வளமும், விவசாய அறிவும் பெரிதும் நிறைந்திருந்ததால் இங்கே செந்நெல், கரும்பு, வெண்ணெல்லரிசி போன்றவற்றை உணவாகக் கொண்டு இருக்கின்றார்கள். நெய்தல் – மீன் முதலான கடல்சார் உயிரினங்களை உணவாகக் கொண்டிருக்கிறார்கள் .
பாலை – இது விளைச்சல் இல்லாத, இயற்கை வளம் இல்லாத வறண்ட பகுதி ஆதலால் கிடைப்பதை உண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால் இங்கு பண்டமாற்று முறை நடந்திருக்கின்றது. ஐவகை நிலங்களுக்கும் நெல், தயிர், தேன் போன்றவை பண்டமாற்றுப் பொருட்களாக இருந்திருக்கின்றன.
இப்போது சங்க இலக்கிய சான்றுகளோடு எம் முன்னோரின் உணவு முறைகளை நாம் நோக்கலாம்.
நற்றிணை 41
“எல்லி வந்த நல்இசை விருந்திற்கு” என்று தொடங்கும் பாடலில் தலைவி இரவில் வந்த விருந்தினருக்கு நெய்விட்டு கொழுப்பு உடைய ஊன் உணவை செய்கின்றாள் என்று இதில் குறிப்பிடப்படுகின்றது.
பெரும்பாலும் அக்கால வழக்கமாக உணவை நீரிலிட்டு அவித்தல் சுடுதல், வற்றல் ஆக்குதல், வறுத்தல், எண்ணெயிலிட்டு பொரித்தல் போன்ற முறைகளைப் பின்பற்றியிருக்கின்றறனர். செல்வம் படைத்தவர்களே இந்த அசைவ உணவுகளை எண்ணெயில் பொரிக்கும் முறைகளையும் கொண்டிருக்கின்றார்கள்.
பதிற்றுப்பத்து
“உண்மின் கள்ளே அடுமின் சோறே” என்று வரும் பதிற்றுப்பத்து பாடல் சேர மன்னர்களை போற்றிப் பாடும் சிறப்பாக அமைந்துள்ளது. இதில் சேரலாதனின் கொடைச்சிறப்பு வருகின்றது. சமையல் தொழிலுக்கு வருக என்று கூந்தல் விறலியரை( பெண்களை) கூப்பிடுவதாக இது அமைந்துள்ளது. ஆகவே சேர மண்ணில் சோறு மிகவும் முக்கியம் வாய்ந்த உணவாக அமைந்திருக்கின்றது என்பது தெளிவாகின்றது.
குறுந்தொகை- 167
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்” என்ற பாடலில் , தயிரைப் பிசைந்து உணவு செய்த தலைவி தன் கையைத் துடைக்காமலேயே காதலுடன் கணவனுக்கு உணவு பரிமாறுவதாக இந்தக் காட்சி வருகிறது. இதில் தயிர் நெய் போன்றவை மிகுவாக சேர்த்து இருக்கின்றார்கள் என்பது புலப்படுகின்றது.
மதுரைக் காஞ்சி
“சேறும் நாற்றமும் பலவின் சுளையும்” என்று தொடங்கும் மதுரைக்காஞ்சிப் பாடலில் பண்டைய மதுரை நகரிலிருந்த அறச்சாலை ஒன்றில் பலவகை காய்களும் பலாக்கனி, மாங்கனி போன்றவையுடன் அடகு (கீரை வகை) சேர்த்து வறியவர்களுக்கு கொடுக்கப்பட்டதாக இந்த மதுரைக்காஞ்சி கூறுகிறது.
புறநானூறு 159 “குப்பை கீரை கொய் கண் அகைத்த” என்று வரும் பாடலில், போருக்குப் பின்னான அழிவுச் சூழலில் இந்த குப்பைக் கீரையை சமைத்திருக்கின்றார்கள் என்று வருகிறது.
பல பாடல்களில் அடகு என்ற இந்த கீரை வகையை வறிய புலவர்கள் உண்டு இருக்கின்றார்கள் என்று வருகின்றது.
ஆகவே அசைவ உணவை பெரிதும் விரும்பி சங்ககாலத்தில் எமது மக்கள் உண்டிருந்தாலும் அசைவம், சைவம் போன்றவற்றை வகை வகையாக சமைத்து உண்டிருக்கின்றார்கள். தனியாக உண்ணும் பழக்கம் தமிழருக்கு கிடையாது ஆகையால் அரண்மனைக்கு வரும் மக்களுக்கும் உணவு படைத்து மன்னர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது இங்கு சான்றாக இருக்கின்றது.
சங்க காலத்தில் வாழ்ந்த எமது முன்னோரின் உணவு முறை போற்றுதற்குரியது.
எம் பாட்ட்டன் பரம்பரை மிகவும் திடமாக முதுமையிலும் இளமையாக வாழ்ந்தமைக்கு இந்த உணவு முறையே காரணமாக இருந்திருக்கின்றது. இதற்கு சங்க இலக்கியங்கள் சான்றாக இருக்கின்றன. இந்த உணவுகள் உடல் நலத்துக்கு ஏற்ற வையாக இருந்திருக்கின்றன. அத்தோடு சுவைபட அம்மக்கள் சமைத்துப் புசித்து இருக்கின்றனர்.
இன்றைய நாளில் நாம் துரித உணவிலும் புதுப் புது வகையான உணவு முறையிலும் மூழ்கிப் போய் இருக்கின்றோம். பலவித நோய்களையும் எதிர் கொள்கின்றோம்.
எமது பண்டைய மக்கள் வாழ்ந்தது போன்று சிறுதானியங்களுக்கும் பச்சைக் காய்கறி இலை வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
வீட்டில் சமைத்துச் சாப்பிடும் பழக்கத்தை இளம் சந்ததியினருக்கு வளர்த்து விடுவோம்.
ஆரோக்கியமான ஒரு இனமாக உலகில் வாழ்ந்திடுவோம்.
மீண்டும் ஒரு சங்க இலக்கிய பதிவில் சந்திக்கலாம்.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்