சங்க காலத்தில் பெண் கேட்டு வரும் தலைவர்கள் தமது பொருட்கள், செல்வங்களைக் கொடுத்து திருமணம் செய்திருக்கிறார்கள்.ஆனால் பின்னால் வந்த காலத்தில் பெண்கள் வரதட்சணை கொடுக்கும் நிலைமையால் முதிர்கன்னிகளாக எத்தனையோ பெண்கள் வாழ்கின்றார்கள். வரதட்சணைக் கொடுமைகள் கூட நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
மாறாக, சங்க காலத்தில் ஆண்கள் தான் தமது வீரத்தைக் காட்டி செல்வத்தைக் கொடுத்துத் திருமணம் செய்திருக்கின்றார்கள் என்பதை இங்கு சான்றுடன் உற்று நோக்கலாம்.
அகநானூறு 280
இந்தப் பாடலை அம்மூவனார் எனும் புலவர் பாடுகிறார்.
“பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச்
செருந்திப் பல் மலர் வேய்ந்த
நலம்பெறு கோதையள்”
என்று தொடங்கும் பாடலில், வளையல் அணிந்த இந்தப் பெண்ணை பெறற்க்கரிய பொருள்களைக் கலம் கலமாகக் கட்டிக் கொடுத்தாலும் இவளைப் பெற முடியாது. ஆக நான் வாழும் வரை ஊரை விட்டு வந்து இவள் தந்தைக்கு அறம் செய்யலாம். இவள் தந்தை உப்பு உழவு செய்யும் போது உடனிருந்து உழைக்கலாம். கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவனோடு மீன் பிடிக்க செல்லலாம். அவனோடு படுத்து உறங்கலாம். அவனைப் பணிந்து நடக்கலாம். அவனோடு கூடவே இருக்கலாம். அப்படி இருந்தால் அவன் தனது பெண்ணை தரக்கூடும். கடலில் மூழ்கி தான் எடுத்து வந்த முத்துக்களை தேனீக்கள் மொய்க்கும் கரையில் எல்லோருக்கும் பங்கிட்டு கொடுக்கும் பண்பாளன். கானலம் பெருந்துறையின் தலைவன் இவள் தந்தை பரதவன். இவன் எனக்கு இந்தப் பெண்ணைத் தந்து விடுவான் என தலைவன் நினைப்பதாக நெய்தல் திணையில் இந்த பாடல் பாடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் நெய்தல் நிலமான கடலும் கடல் சார்ந்த நிலத்தில் வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கை முறையைத் தான் காட்டுகின்றது.
மகட் பாற் காஞ்சி
மகட்பாற் காஞ்சி என்ற துறையில் புறநானூற்றில் 21 பாடல்கள், பல புலவர்களால் பாடப்பட்டுள்ளன.
அதாவது பெண் கேட்டு வந்த மன்னனை இழித்துரைத்து அவனுக்குப் பெண்ணை கொடுக்க மறுக்கும் பட்சத்திலும் தனது மகளை மணக்கும் தகுதி அற்றவன் அந்த மன்னன் எனும் பட்சத்திலும் நடக்கும் போரைப் பற்றியும் அதன் அழிவுகளைப் பற்றியும் பாடுவது இந்த மகட்பாற் காஞ்சித் துறையாகும்.
அப்படி நடக்கும் போர்களில் பெண்ணின் தந்தையான அரசன் பெண் கேட்டு வந்த மன்னனோடு போர் புரிந்து மடிந்ததும் உண்டு, வென்றதும் உண்டு.
தலைவனுக்குரிய எட்டுத் தகைமைகள்
ஒரு தலைவனுக்கு எட்டு ஒழுக்கங்கள் இருக்க வேண்டும் என்று தொல்காப்பியர் தனது நூற்பாவில் தெளிவு படுத்துகின்றார்.
“இளமையும் வனப்பும் இல்லோடு வரவும்
வளமையும் தருகனும் வரம்பில் கல்வியும்” என்று வரும் நூற்பாவில் தொல்காப்பியர்,
இளமையும், வனப்பும் குடிப்பெருமையும், செல்வமும், அஞ்சா நெஞ்சமும், குறை போகக் கற்ற கல்வியும், தான் வாழும் தேசத்தில் அமைதியை விரும்புதலும், குற்றமில்லா நுண்ணறிவும் என எட்டுக் குணம் இருக்க வேண்டும் என்கிறார். அப்படி எட்டுக் குணம் இல்லாதவருக்கு பெண் கொடுப்பதில்லை என்று தொல்காப்பியர் தெளிவு படுத்துகின்றார்.
புறநானூறு 345
இந்தப் பாடலை மகட்பாற் காஞ்சித் துறையில் அண்டர் நடுங்களினர் எனும் புலவர் பாடுகின்றார். “நின் மகளை தருக” என்று தலைவனோடு மாறுபட்டு நிற்கும்போது உண்டாகக் கூடிய போரின் அழிவைப் பாடுகின்றார்.
“களிறு அணைப்பு கலங்கின கா அ” என்று வரும் பாடலில் கரிய கண்களையும் விருப்பமுண்டாக்கும் வனப்பும், மயக்கம் உண்டாக்கும் பார்வையும் உடைய இவளை மணக்க விரும்பி வந்தவர் இரங்கத்தக்கவர். இவள் தமையன்மார் பெண் கேட்டு வந்தவர்கள் தரும் செல்வத்தை விரும்ப மாட்டார்கள். “எமக்கு நிகரில்லாதவருக்கு தங்கையைத் தர மாட்டோம்” என்று கூறிப் போர் புரிவதையை விரும்பி வாழ்கின்றார்கள். “நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்லை” எனப் போர் வேட்டு வஞ்சினம் கூறிக் காத்திருக்கின்றார்கள். இனிப் பருத்தி வேலி சூழ்ந்த இந்த மருத நிலத்து ஊர் தான் என்னாகுமோ? என அஞ்சி அண்டர் நடுங்களினார் என்ற புலவர் பாடுகின்றதாக இந்த பாடல் அமைகின்றது.
ஆக சங்க காலத்தில் நமது மூதாதையர்களின் வாழ்க்கை முறை என்பது, அது அரசன் ஆகட்டும், அல்லது சாதாரண மகனாகட்டும், தலைவன் என்பவன் பெண்ணுக்குத் தான் செல்வத்தைக் கொடுத்துத் திருமணம் செய்து கொண்டிருக்கின்றான். ஆனால் இப்பொழுது நிலைமை அவ்வாறா இருக்கின்றது?
இன்றைய எமது வாழ்க்கை முறைகளைப் பார்க்கும் போது அந்த சங்க காலத்துக்கே நாம் சென்றிட மாட்டோமா என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்