திருவள்ளுவரும் பனைமரமும்
திருவள்ளுவர் தனது குறள்களில் அதிகம் பனைமரத்தைப் பற்றிப் பாடியிருக்கின்றார். திருவள்ளுவர் முப்பாலிலும் பனைமரத்தை குறிப்பிட்டு இருக்கின்றார். ஏன் அவருக்கு பனை மரத்தில் அவ்வளவு நாட்டம் என்று நாம் உற்று நோக்கும் பொழுது, அவர் எமக்குத் தந்த அரிய புதையலான திருக்குறள்களையே பனை ஓலையில் தானே எழுதி இருப்பார். ஆக ஒரு நன்றி உணர்வோடு கூட அவர் இந்த பனை மரத்தை தனது திருக்குறள்களில் குறிப்பிட்டு இருக்கலாம் என்று நாம் வைத்துக் கொள்ளலாம்.
நாரை விடு தூது
சங்க இலக்கியப் புலவரான சத்திமுத்திப் புலவர்
“நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிழந்தன்ன”
என்று நாரையைத் தூது விடுவதாக இந்தச் செய்யுள் அமைந்திருக்கின்றது. அதாவது பனங்கிழங்கை பிளந்தாற் போல அழகு கொண்ட நாரை கூட்டங்களே! நீயும் உன் இல்லாளும் தென் திசையில் விளையாடிக் களித்துவிட்டு வட திசை வழியே செல்லும் போது சத்தி முத்தம் எனும் எங்கள் ஊர் குலத்தினில் தங்கி சற்று இளைப்பாறிக் கொள்ளுங்கள் என்று பாடுகின்றார்.
அதாவது பாண்டியன் மாறன் வழுதி மன்னன், நகர்வலம் வரும்போது இந்த சத்திமுத்திப் புலவரைக் காண்கின்றான். மன்னன் வருவது தெரியாது சத்திமுத்திப் புலவரும் நாரைக் கூட்டத்தினைப் பார்த்து இந்தப் பாடலை பாடுகின்றார்.
நாரையின் வாய்க்குப் பனங்கிழங்கை ஒப்பிட்டுப் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்த பாண்டிய மன்னன், புலவரின் வறுமையைப் போக்கினான் என்பது வரலாறு. இவ்வாறு அன்று தொட்டு எம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது இந்த பனைமரம்.
மடலேறுதல்
தொல்காப்பியர் தனது பொருளதிகாரத்தில் மடலேறுதல் என்பதைக் குறிப்பிடுகின்றார். பெற்றோர் பெண் தர மறுக்கும் பட்சத்தில் தலைவன் தனது காதலைச் சொல்வதற்காக பனைமர மடல்களைக் கட்டிக்கொண்டு குதிரையில் ஏறி காதலியின் பெயரைச் சொல்லி ஊருக்குள் செல்வான். இதுதான் மடல் ஏறுதல் என்று பொருள் கொள்கின்றது. சில வேளைகளில் மடல் ஏறியும் பெண் தர மறுக்கும் பட்சத்தில் காதலன் தன்னை மாய்த்துக் கொண்டதும் எமது வாழ்வியலில் இருந்திருக்கின்றது.
மதுரைக்காஞ்சி
இந்த சங்க இலக்கியத்தில் மதுரை நகர தெருக்களை வருணிக்கும் மாங்குடி மருதனார் எனும் புலவர், கள் விற்கும் கடைகளைப் பாடுகின்றார். அதாவது சங்க காலத்தில் களா,துபரி,கருநாவல், இஞ்சி, குங்குமப்பூ இலுப்பைப் பூ, மதுவகாயம் போன்ற மூலிகைகளை சேர்த்து ஒரு கலவையாகவே குடித்திருக்கின்றார்கள் என்பது வரலாறு.
புறநானூறு 232
“இல்லாகியரே காலை மாலை”
என்று வரும் பாடலை ஔவையார் பாடுகின்றார்.
தான் ஆளும் நாட்டையே மக்களுக்காக கொடுத்தவன் அதியமான். இப்போது பீலி ஆடையும், கள் உணவையும் பெற்றுக் கொள்வானோ? என்று கவலையோடு பாடுகின்றார். ஆக நடுகல் அமைத்து அதியமான் இறந்ததன் பின்னர் கள் படைத்ததாக ஔவையார் பாடுகின்றார்.
பதிற்றுப்பத்து
“இரும்பனம் புடையல் ஈகை வாங்கல்”
என்று வரும் பாடலில் சேரன் செங்குட்டுவன் பனம்பூ மாலை அணிந்தவன் என்று வருகின்றது. அதாவது சேரர்கள் சூடிய மாலை பனம்பூவாகும். பனை மரமே சேரர்களின் காவல் மரமாகப் போற்றப்பட்டது. அவர்களின் காசுகளில் பணமரம் பொறிக்கப் பட்டிருக்கும். பனையின் புடையலொடுட வாகை மலரை இணைத்து வெற்றி கொண்டாடினர் என்பது வரலாறு. அதாவது பனம் புதையல் என்பது பனம் குருத்து மாலை என்பதை இங்கு நாம் காணலாம்.
பனை ஓலையில் தாலி
பனை ஓலையில் மணமகள் பெயரை எழுதிச் சுருட்டி துவாரமட்ட மணமகள் காதில் அணியும் பண்பாடு கூட நமது முன்னோர்களிடத்தே இருந்திருக்கின்றது.
ஆகத் தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்தி இலக்கியம் ஈறாகப் பனை தொடர்பான குறிப்புகள் எம் வாழ்வியலில் பரவிப் பரந்து காணப்படுகின்றன.
பனை ஓலையைப் பதப்படுத்தியே எழுத்தாணி கொண்டு எமக்கு வரலாறு கொடுத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.
பதநீர் என்று நாம் சொல்லும் பதம் கூட பதி உண்ட காரணத்தினால் தான், அதாவது மன்னன் அந்த பதநீரைக் குடித்த காரணத்தினால் தான் பதநீர் என்ற சொற்பதமே எமக்குக் கிடைத்திருக்கின்றது.
ஏன் ஐம்பது வருடங்களுக்கு முன்பு கூட நாம் பனையின் அத்தனை பொருளையும் உபயோகித்து வந்தோம். பிறந்ததிலிருந்து நாம் இறக்கும் வரை நமது வாழ்வியலின் ஒரு அங்கமாகவே பனைமரம் இருந்திருக்கின்றது. அதனால் தான் நாம் பனைமரத்தை அனைத்தையும் தரும் “கற்பகதரு” என்ற பெயரைக் கூடச் சூட்டி அழகு பார்க்கின்றோம்.
ஆனால் கோடி கோடியாய் இருந்த பனை மரங்கள் இப்பொழுது குறைந்து, ஒழிந்து அழிந்து போய்விட்டது என்பது எவ்வளவு வேதனைக்குரிய விடையமாக இருக்கின்றது?
சமீப காலங்களில் கூட நாம் கிராமப்புறங்களில் பார்க்கும் பொழுது, தமது நிலங்களில் இருக்கும் பனைகளையே எமது உறவுகள் வெட்டி அழித்து எரிக்கின்றனர். ஏனெனில் அவற்றை பராமரிக்க முடியாது என்ற காரணத்தை முன் வைக்கின்றனர்.
நீரூற்றிக் கூடி வளர்க்கத் தேவையில்லாத, பனை மரத்தை வளர விடுவோமே!
பண்பட்ட மண் கூட வேண்டாத, பனம் விதைகளை விதைப்போமே!
வறுமை போக்கும் எமது வாழ்வியலின் பண்பாட்டு மரத்தைக் காப்போமே!
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்