மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மன் சென்றுள்ள இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், ஜேர்மன் பாராளுமன்றத்தில் இன்று (30) உரையாற்றினார்.
இதன்மூலம் ஜேர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இங்கிலாந்து மன்னர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் ஆகிய இரு மொழிகளிலும் அவர் ஆற்றிய உரைக்கு, ஜேர்மன் பாராளுமன்றத்தில் பலத்த கரகோஷங்கள் எழுந்தன.
தொடர்புடைய செய்தி : மன்னர் சார்லஸின் முதல் அரசு பயணம் ஜேர்மனியில்
ஐரோப்பாவில் மீண்டும் போர்க் கொடுமைகள் ஆட்கொண்டுள்ளதாக மன்னர் இதன்போது தெரிவித்தார்.
உக்ரைனுக்கு உதவுவதில் ஜெர்மனியும் இங்கிலாந்தும் காட்டிய முனைப்பையும் மன்னர் சார்லஸ் பாராட்டினார்.
தனது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி இறந்தபோது, அவரது குடும்பம் மீது ஜேர்மனி மக்கள் காட்டிய அசாதாரண கருணைக்கு நன்றி தெரிவிக்கும் சந்தர்ப்பமாக இது இருப்பதாகவும் மன்னர் தெரிவித்தார்.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி கமிலா சகிதம் மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதன்கிழமை (29) ஜெர்மனி சென்றார்.