செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஈழத்து நூலகவியலின் வழிகாட்டி | ஸ்ரீகாந்தலட்சுமி நினைவுகள் | தி. கோபிநாத்

ஈழத்து நூலகவியலின் வழிகாட்டி | ஸ்ரீகாந்தலட்சுமி நினைவுகள் | தி. கோபிநாத்

5 minutes read

இணையிலி என அழைக்கப்பட்டதாகக் கருதப்படும் இணுவில் கிராமத்தில் அருளானந்தம், ஜெயலட்சுமி தம்பதிகளின் மூத்த மகளாக 1961 ஏப்ரல் 8ஆம் திகதியன்று பிறந்தவர் ஸ்ரீகாந்தலட்சுமி. இப்போது இணுவில் மத்திய கல்லூரியாக இருக்கும் இணுவில் சைவ மகாஜனா வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி பெற்றவர். இடைநிலைக் கல்வி கற்ற சுன்னாகம் இராமநாதன் கல்லூரியின் முதுநிலை மாணவ முதல்வியாக இருந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறையின் சிறப்பு இளமாணிப் பட்டதாரி. நூலக தகவல் அறிவியல் துறையில் இளமாணிப் பட்டத்தினை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பெற்றவர். பெங்களூரின் ஆவணமாக்க ஆய்வு, பயிற்சி நடுவத்தில் ஆவணமாக்கம், தகவல் அறிவியலில் முதுமாணிக்குச் சமமான பட்டம் பெற்றவர்.

ஸ்ரீகாந்தலட்சுமி 2019 டிசம்பர் 28ஆம் திகதி தனது 58ஆவது வயதில் காலமான போது தொழில் சார்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராக இருந்தார். தன்னார்வமாக நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் நிறுவுன-ராகவும் அறிதூண்டல் மையத்தின் இயக்குனராகவும் நூலக நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நூலக, தகவல் அறிவியலுக்கான தேசிய நிறுவனத்தின் முகாமைத்துவக்குழு உறுப்பினராகவும் இருந்தார். முன்னதாக இலங்கை நூலகச் சங்கத்தின் முதலாவது தமிழ்த் தலைவராகவும் இலங்கைத் தேசிய நூலகத்தின் முகாமைத்துவக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். நூலகத் தகவல் அறிவியற் துறை சார்ந்து கலைக்களஞ்சியம், கலைச்சொற்றொகுதி, சொற்பொருளாய்வுக் களஞ்சியம் உள்ளிட்ட 13 நூல்களையும் எழுதி வெளியிட்டிருந்தார்.

அவர் காலமான செய்தியறிந்ததும் நூலக நிறுவனம் சார்பாக வெளியிட்ட துயர் பகிர்வில் ஸ்ரீகாந்தலட்சுமியை “ஈழத்து நூலகவியலின் வழிகாட்டி” என்று குறிப்பிட்டிருந்தோம். அவ்வாறு குறிப்பிட்டது வெறுமனே உயர்வு நவிற்சி அல்ல; ஈழத்து நூலகவியலின் வழிகாட்டியாகக் கருதப்படுமளவு முக்கியமானது அவரது பங்களிப்பு என்பதனை தமிழ் கூறும் நல்லுலகுக்கு முன்வைப்பதாக இந்தக் கட்டுரை அமைகிறது.

நூலகவியற் கல்வி

ஸ்ரீகாந்தலட்சுமி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையிலேயே சிறப்பு இளமாணிப் பட்டம் பெற்றவர். ஏனைய கலைத்துறை பட்டதாரிகள் போல அவர் கல்வி சார்ந்து ஆசிரியராகவோ விரிவிரையாளராகவோ அவர் சென்றிருக்கலாம். குறிப்பாகப் பல்கலைக்கழக இளமாணிப் பட்டமானது அரச வேலை வாய்ப்புக்களைப் பெறுவதற்குப் போதுமானதாக இருந்தது. அந்தப் பாதைகளைத் தவிர்த்து நூலகத் துறையில் அவர் குறிப்பான ஆர்வம் எடுத்தமைக்கான காரணம் தெரியவில்லை. ஆயினும் நூலகத் துறை தான் விரும்பி வரித்துக் கொண்ட துறை என்பதனைப் பின்வருமாறு அவர் இணுவில் மத்திய கல்லூரியின் 2008ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டபோது ஆற்றிய உரையில் பதிவு செய்துள்ளார்.

”நூலகத் துறை நான் விரும்பி வரித்துக் கொண்ட துறை. பதவி உயர்வுக்கு மட்டும் படிக்கவென நூலகத் துறை கருதப்பட்ட 80களில் பதவியை நாடாது மாணவ நூலகராக அன்றி நூலகத்துறையில் வெறும் மாணவியாக நுழைந்த காலத்தில் நூலகவியல் துறையில் முதலாவது மாணவி என்ற பெருமையை இந்திய மண் எனக்குத் தந்தது. தொழில் சார்ந்து நான் அனுப்பும் ஒரு விண்ணப்படிவமே முதலாவதும் இறுதியுமானதுமாக இருக்கவேண்டும் என்ற எனது பிடிவாதம் தான் தொழிலுக்குத் தேவைப்படும் அடிப்படைத் தகுதியை விடக் கூடுதலான தகுதியுடன் இத்துறைக்குள் நுழைந்து தற்போதைய வேலையையே முதலும் முடிவும் ஆக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது. எனக்கு பல்கலைக்கழகத்தின் எனது மாதிரிகளாகத் தொழிற்பட்ட ஆசான்களே என்னை பொருளியல் துறைக்குள் விரிவுரையாளராக வலிந்து உள்வாங்க எத்தனையோ தடவைகள் முயற்சித்தபோதும் நான் விரும்பி வரித்துக் கொண்ட இத்துறையை விட்டு அகற்ற முடியவில்லை.”

அவருக்கு ஆர்வத்துறை நூலகராகுவது மட்டும்தான் என்றால் பொருளியல் இளமாணிப் பட்டத்துடனேயே மாணவ நூலகராக நூலகத் துறைக்குள் இணைந்துகொண்டு இலங்கை நூலக்ச் சங்கத்தின் டிப்புளோமாக் கல்வியைப் பெற்றிருக்க முடியும். ஆயினும் அவர் முதுமாணிப் பட்டத்துக்குச் சமனான நூலகக் கல்வியினைப் பெற்றுக் கொண்டார். சாதாரணமாக நூலகத் துறைக்குள் நுழைய அத்தனை தூரம் கற்றிருக்க வேண்டியதில்லை. பல்கலைக்கழகத்தின் நூலகச் சேவையினுள் நுழையவே அத்தனை கல்வி தேவைப்பட்டிருக்கும். பல்கலைக் கழக விரிவுரையாளராக வருவதற்கான வாய்ப்புக்களையும் அவர் தவிர்த்துக் கொண்டிருக்கிறார். அவ்வகையில் பல்கலைக்கழக நூலகத்துறையை இலக்காகக் கொண்டே அவர் மேற்படிப்பினைத் தொடர்ந்தமை தெளிவாகிறது.

யாழ் பல்கலைக்கழகம்க்கான பட முடிவுகள்"

1984 அளவில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் இணைந்து நூலக தகவல் அறிவியல் இளமாணிப் பட்டம் பெற்றார். நூலகவியலில் முதுமாணிக் கல்விக்காக அவர் தெரிவு செய்த இடம் இந்தியாவின் பெங்களூரில் அமைந்துள்ள பல்கலைக்கழகமான இந்திய புள்ளியல் கழகத்தில் (Indian Statistical Institute) அமைந்துள்ள நூலக, தகவல் அறிவியலுக்கும் அதனுடன் தொடர்புடைய ஆய்வுத் துறைகளுக்குமான ஆய்வு நடுவமாகிய ”ஆவணமாக்க ஆய்வு, பயிற்சி நடுவம்” (Documentation Research and Training Centre) ஆகும். இந்த ஆய்வு நடுவம் இந்திய நூலகவியலின் தந்தை எனக் கருதப்படும் இரா. அரங்கநாதனால் (S. R. Ranganathan) 1962 ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டதாகும்.

ஸ்ரீகாந்தலட்சுமி நிலப்பிரபுத்துவத் தன்மைகள் கொண்ட பாரம்பரியமான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். பெண்கள் கல்விக்கு வெளியூருக்குச் செல்வதே அரிதாயிருந்த காலத்தில் அவர் இந்தியாவுக்கு மேற்படிப்புக்குச் செல்வதென்பது அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததாலேயே சாத்தியமானது. இந்த எடுத்த முடிவில் உறுதியாக நிற்கும் தன்மையை அவரது வாழ்க்கைக் காலத்தின் இறுதிவரை அவர் தொடர்ந்தார். அதனாலேயே பலரது எதிர்ப்புக்களுக்குள் இயங்க வேண்டியதாக அவரது வாழ்க்கை அமைந்திருந்தது.

ஆவணமாக்க ஆய்வு, பயிற்சி நடுவத்தில் அவர் தொடர்ந்த கற்கை நெறியானது ADIS எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட Associateship in Documentation and Information Science என்பதாகும். இரண்டாண்டுக் கற்கைநெறியான அது நூலக தகவல் அறிவியல் துறையில் முதுகலைமாணிக்குச் சமனானது. நூலகவியலை நோக்கமாகக் கொண்டு அவர் மேற்படிப்பைத் தொடர்ந்தாலும் ஆவணமாக்கம், தகவல் அறிவியற் துறைகள் சார்ந்த கல்வியை அவர் பெற்றமை அவரது எதிர்காலச் சாதனைகள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்தது.

வித்தியானந்தன் நூலகம்க்கான பட முடிவுகள்"

ஆவணமாக்க ஆய்வு, பயிற்சி நடுவத்தில் கல்விகற்ற 1987, 1988ஆம் ஆண்டுகளில் அவர் பல்வேறு கருத்தரங்குகள், பயிற்சிநெறிகளில் பங்குகொண்டார். ஆவணமாக்க ஆய்வு, பயிற்சி நடுவத்தின் வெள்ளி விழாவையொட்டிய தகவற் சமூகம் தொடர்பான கருத்தரங்கு, நூல் விபரவியலின் (Bibliometrics) அடிப்படைகள் தொடர்பான கருத்தரங்கு, 34ஆவது இந்திய நூலக மாநாடு, கொலோன் பகுப்பாக்கம் தொடர்பான கருத்தரங்கு, பேராசிரியர் நீலமேகனின் சொற்பொருளாய்வுக் களஞ்சியம் தொடர்பான கருத்தரங்கு, போன்றவை அவர் பங்குபற்றிய மாநாடுகள், கருத்தரங்குகள் ஆகும்.

ஆவணமாக்க ஆய்வு, பயிற்சி நடுவத்தின் கற்கைநெறியின் ஒரு பகுதியாகப் பின்வரும் இரண்டு செயற்றிட்டங்களை அவர் மேற்கொண்டிருந்தார்.

  • Construction of Thesaurus on Computer Software using CDS/ISIS Package for Information Storage and Retrieval
  • Expert systems and its application to Information retrieval -A State- Of- The-Art- Report 1989

இலங்கையைப் பொறுத்தவரை தமிழில் நூலகவியல் சார்ந்த குறிப்பிடத்தக்க ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கியது 1985இன் பின்னரேயாகும். 1986இலேயே நூற்பகுப்பாக்கம் தொடர்பான முதலாவது சிறுநூல் வெளியானது. தமிழில் பட்டியலாக்கம், பகுப்பாக்கம் போன்ற அடிப்படையான நூலகவியல் ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கிய காலத்தில் ஆவணவாக்கம், தகவல் அறிவியல், நூல்விபரவியல், சொற்பொருளாய்வுக் களஞ்சியம் அமைத்தல் போன்ற நவீனத் துறைகளில் தேர்ச்சி பெற்று 1989இல் இலங்கை திரும்பிய ஸ்ரீகாந்தலட்சுமி அதே ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் துணை நூலகரானார்.

(தொடரும்)

அவுஸ்திரேலியாவிலிருந்து தில்லைநாதன் கோபிநாத், பணிப்பாளர் – நூலகம் நிறுவனம்

.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More