Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் குறைகள் தீர்க்கும் கேதார கௌரி விரதம்

குறைகள் தீர்க்கும் கேதார கௌரி விரதம்

4 minutes read

சாமானியர்கள், இல்லறத்தில் இருந்துகொண்டு நித்திய வழிபாடு செய்வது கடினம். எனவேதான், சில குறிப்பிட்ட நாள்களை நிர்ணயித்து, அதற்கான வழிபாட்டு முறைகளையும் வகுத்திருக்கின்றனர் நம்பெரியோர்கள். அவ்வாறு அவர்கள் வகுத்துக்கொடுத்திருக்கும் விரதங்களுள் முக்கியமானவை ‘அஷ்ட மகாவிரதங்கள்.’

உலக வாழ்க்கை, இன்பமும் துன்பமும் கலந்தது. வாழ்வில் இன்பமும் துன்பமும் நம் முன்வினைப் பயன்களால் வருவன. ‘தீதும் நன்றும் பிறர் தரவாரா’ என்பதுதான் சனாதன தர்மத்தின் அடிப்படை. ஆனபோதும், மனிதர்கள் வினைப்பயன்களிலிருந்து விடுபடவும், துன்பங்களைக் களைந்து இன்பங்களைப் பெருக்கிக்கொள்ளவும் முன்னோர்கள் கண்டுபிடித்த உபாயங்கள்தான் விரதங்கள்.

இறைவனை எப்போதும் சிந்தனையில் நிறுத்தித் தொழுவது ஞானிகளுக்கு எளிது. ஆனால் சாமான்யர்கள், இல்லறத்தில் இருந்துகொண்டு அவ்வாறு நித்திய வழிபாடு செய்வது கடினம். எனவேதான், சில குறிப்பிட்ட நாள்களை நிர்ணயித்து, அதற்கான வழிபாட்டு முறைகளையும் வகுத்திருக்கின்றனர் நம்பெரியோர்கள். அவ்வாறு அவர்கள் வகுத்துக்கொடுத்திருக்கும் விரதங்களுள் முக்கியமானவை, ‘அஷ்ட மகாவிரதங்கள்.’

அஷ்டமகாவிரதங்கள், சிவபெருமானைப் போற்றும் விரதங்கள். கார்த்திகை சோமவார விரதம், கார்த்திகை உமா மகேஸ்வர விரதம், மார்கழி திருவாதிரை விரதம், தை மாத சூல விரதம், மாசிமாத மகா சிவராத்திரி விரதம், பங்குனி உத்திரத் திருக்கல்யாண விரதம், வைகாசிமாத அஷ்டமி ரிஷப விரதம் மற்றும் ஐப்பசி மாத கேதார கௌரி விரதம் ஆகிய எட்டு விரதங்களுமே மகா விரதங்கள் என்று போற்றப்படுவன. இவற்றுள், கேதாரகௌரிவிரதம் மிகவும் முக்கியமானது.

ஒருமுறை, சிவபெருமானும் பார்வதிதேவியும் கயிலாயத்தில் இருந்தபோது, பிருங்கி முனிவர் தரிசனம் செய்ய வந்தார். அப்போது பிருங்கி, சிவபெருமானை மாத்திரம் வலம்வந்து நமஸ்கரித்தார். மகரிஷி, சக்தியாகிய தன்னைவிடுத்து சிவத்தை மட்டும் நமஸ்கரிப்பது ஏன்? என்று பார்வதி தேவி சிவபெருமானிடம் கேட்டாள். அன்னையின் கேள்வியின் பொருள் அறிந்த அப்பனும், இந்த உலகிற்கு ‘சிவன் இல்லையேல் சக்தி இல்லை’ எனவும் ‘சக்தியில்லையேல் சிவம் இல்லை’ என்பதை உணர்த்தவும் திருவுளம் கொண்டார். ஈசன் மனத்தில் நினைத்ததை உள்ளூர உணர்ந்த அன்னை, கயிலாயத்திலிருந்து நீங்கினாள். ‘கேதாரம்’ என்னும் மலைச் சாரலுக்குச் சென்று அங்கு தங்கி, ஈசனை லிங்க வடிவமாய்ப் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தாள் பார்வதிதேவி.

புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தன் பூஜையைத் தொடங்கி, தொடர்ந்து 21 நாள்கள் கடுமையான விரதம் மேற்கொண்டாள் கௌரி. அன்னையின் தவம் கண்டு மனம் கனிந்த ஈசன், உமையின் முன் தோன்றினார்.

“சர்வ ஜகன்மாதாவான நீ வேண்டுவது என்ன?” என்று கேட்டார். அப்போது அன்னை ஈசனை வணங்கி, “இந்த உலகில் ஆண்களும் பெண்களும் சமம் என்பதை உணர்த்த, உலகின் முதலோனான தாங்கள், தங்களில் பாதியை எனக்குத் தரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டாள். ஈசனும் அன்னையின் வேண்டுகோளுக்கிணங்கி, தன் இடப்பாகத்தை அம்மைக்கு வழங்கி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சிகொடுத்தார்.

மனம் மகிழ்ந்த அன்னை, ‘தான் மேற்கொண்ட விரதமே தனக்கு இந்த வரத்தை வழங்கியது’ என்பதை உணர்ந்து, ‘இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்’ என்றும் ‘அவ்வாறு மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்களுக்கு, தீர்க்க சுமங்கலி பாக்கியமும் கணவனை விட்டுப் பிரியாத ஆனந்த வாழ்வும் ஸித்திக்கும்’ என்றும் ஆசீர்வதித்தார். அன்று முதல் கேதார கௌரி விரதம் இந்தப் பூவுலகில் முதன்மையான விரதமாகப் போற்றப்பட்டு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. ‘இந்த விரதத்தைத் தொடர்ந்து கடைபிடிப்பவர்கள், அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வார்கள்’ என்றும், ‘பிரிந்திருக்கும் தம்பதியர் இந்த விரதத்தை மேற்கொள்ள, விரைவில் சேர்ந்துவாழும் பாக்கியம் உண்டாகும்’ என்றும் கூறுகிறார்கள்.

கேதார கௌரி விரதத்தைக் கடைபிடிப்பது எப்படி?

இந்த விரதம், புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி, ஐப்பசி அமாவாசையான தீபாவளி நாள் வரை 21 நாள்கள் கடைபிடிக்கப்படும். 21 நாள்களும் இந்தப் பூஜையை மேற்கொள்ள இயலாதவர்கள், பௌர்ணமிக்குப் பிறகு வரும் பிரதமை முதல் தொடங்கி அமாவாசை வரை 14 நாள்கள் செய்வது நல்லது. அதுவும் இயலாதவர்கள், தீபாவளி அன்று இந்த நோன்பினை மேற்கொள்ளலாம்.

`திருப்பதி தரிசன’ புண்ணியம் அருளும் திருவடிசூலத்தில்… குருப்பெயர்ச்சி சிறப்புப் பரிகார ஹோமம்!
`திருப்பதி தரிசன’ புண்ணியம் அருளும் திருவடிசூலத்தில்… குருப்பெயர்ச்சி சிறப்புப் பரிகார ஹோமம்!
விரதம் மேற்கொள்ளும் நாளில், மாலைவரை உபவாசம் இருந்து மாலையில் பூஜை செய்ய வேண்டும். முதலில் கலசத்தை தேங்காய், மாவிலை கொண்டு அலங்கரித்து வைக்க வேண்டும். பூஜைக்குத் தேவையான பூ, பழம், நைவேத்தியங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். பச்சரிசி மாவில் அதிரசம் செய்து நைவேத்தியம் செய்வது விசேஷம். ஒரு மஞ்சள் சரடில் 21 முடிச்சுகள் இட்டு, அதைக் கலசத்தில் அலங்கரித்து வைக்க வேண்டும்.

அனைத்து பூஜைகளுக்கும் முதன்மையானது, பிள்ளையார் பூஜை. மஞ்சளில் சிறு பிள்ளையார் பிடித்து, அதற்குப் பூஜை செய்ய வேண்டும். விநாயகக் கடவுளை வணங்கித் தொடங்குவதன் மூலம், பூஜை எந்தத் தடங்கலும் இல்லாமல் முடிந்து சங்கல்ப பலன் பூரணமாகக் கிடைக்கும். மலரும் அட்சதையும் கொண்டு விநாயகப்பெருமானின் 16 நாமங்களைச் சொல்லித் துதித்து அர்ச்சித்து, தூப தீபம் காட்ட வேண்டும். பின், விநாயகருக்கு ஏதேனும் ஒரு பழம், வெற்றிலை பாக்கு சமர்ப்பிக்க வேண்டும். பிறகு கணநாதனுக்கு கற்பூர தீபம் காட்டி வழிபட வேண்டும். அப்போது, ‘வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப அவிக்னம் குரு மே தேவ சர்வ கார்யேசு சர்வத’ என்று சொல்லித் துதித்து வணங்க வேண்டும்.

பிள்ளையார் பூஜை முடிந்ததும், பிரதான கேதார கௌரி விரத சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். சங்கல்பம் என்பது ஒரு பூஜையை எங்கு, என்று, எந்த வேளையில், எதற்காகச் செய்கிறோம் என்பதைச் சொல்லி, அந்தக் காரண காரியங்கள் செவ்வனே நடக்க இறைவனைத் தொழுதுகொள்வதாகும். பொதுவாக, எந்த விரதமானாலும் அது கல்வி, செல்வம், ஆயுள், ஆரோக்கியம், புத்ர, பௌத்ர பாக்கியம், வெற்றி ஆகியன வேண்டிக்கொள்வது வழக்கம்.

சங்கல்பம் செய்துகொண்ட பின்பு, கலசத்துக்குப் பூஜை செய்து, பின்பு அஷ்ட திக் பாலகர்களை வணங்க வேண்டும். பின்பு, பிரதான பூஜையான சிவபெருமானை தோத்தரிக்கும் அஷ்டோத்திரங்களை வாசித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

அதன்பின், கலசத்தில் சாத்தியிருக்கும் தோரணத்துக்குப் பூஜை செய்ய வேண்டும். தோரணத்திலிருக்கும் 21 முடிச்சுகளுக்கும் கீழ்க் கண்ட மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

சிவாய நம: ப்ரதமக்ரந்திம் பூஜயாமி

வாஹாய நம: த்விதீயக்ரந்திம் பூஜயாமி

மஹாதேவாய நம: த்ருதீயக்ரந்திம் பூஜயாமி

வ்ருஷபத்வஜாய நம: சதுர்த்தக்ரந்திம் பூஜயாமி

கௌரீசாய நம: பஞ்சமக்ரந்திம் பூஜயாமி

ருத்ராய நம: ஷஷ்டக்ரந்திம் பூஜயாமி

பசுபதயே நம: ஸப்தமக்ரந்திம் பூஜயாமி

பீமாய நம: அஷ்டமக்ரந்திம் பூஜயாமி

த்ரியம்பகாய நம: நவமக்ரந்திம் பூஜயாமி

நீலலோஹிதாய நம: தசமக்ரந்திம் பூஜயாமி

ஹராயே நம: ஏகாதசக்ரந்திம் பூஜயாமி

ஸ்மர ஹராய நம: த்வாதசக்ரந்திம் பூஜயாமி

பவாய நம: த்ரயோதசக்ரந்திம் பூஜயாமி

சம்பவே நம: சதுர்தசக்ரந்திம் பூஜயாமி

சர்வாய நம: பஞ்சதசக்ரந்திம் பூஜயாமி

ஸதாசிவாய நம: ஷோடசக்ரந்திம் பூஜயாமி

ஈச்வராய நம: ஸப்ததசக்ரந்திம் பூஜயாமி

உக்ராய நம: அஷ்டாதசக்ரந்திம் பூஜயாமி

ஸ்ரீகண்ட்டாய நம: ஏகோநவிம்சக்ரந்திம் பூஜயாமி

நீலகண்ட்டாய நம: விம்சதிதமக்ரந்திம் பூஜயாமி

கேதாரேச்வராய நம: ஏகவிம்சதிதமக்ரந்திம் பூஜயாமி

கேதாரேச்வராய நம: நாநாநாவித பரிமள புஷ்பாணி ஸமர்ப்பயாமி

21 நாள்கள் பூஜை செய்ததன் அடையாளமாக இடப்பட்ட 21 முடிச்சுகளுக்கும் பூஜை செய்து, பின் அந்தத் தோரணத்தைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பின், கலசத்துக்கு தூப தீபங்கள் காட்டி நைவேத்தியம் செய்து, கற்பூர ஆரத்திகாட்டி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

கேதார கௌரிவிரதம், அனைத்து நலன்களையும் அருளும் விரதம். செல்வங்கள் அனைத்தும் சேர்வதோடு, அவை நிலைத்து நிற்கவும் செய்யும் விரதம் இது. இதை உணர்த்த ஒரு சம்பவம் சொல்லப்படுவதுண்டு.

முன்னொரு காலத்தில், புண்ணியவதி, பாக்கியவதி என்று இரு சகோதரிகள் வாழ்ந்துவந்தனர். இருவரும் அரச குமாரிகள். தங்களின் தந்தை போரில் தோற்ற காரணத்தால், நாடிழந்து வாழ்ந்து வந்தனர். ஒருநாள், இருவரும் ஆற்றங்கரையோரம் செல்லும்போது, அங்கு தேவ கன்னியர்கள் கேதார கௌரி விரதத்தை மேற்கொண்டிருந்தனர். ‘அது என்ன விரதம்?’ என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, தாங்களும் அதே விரதத்தைக் கடைபிடித்தனர். அதன் பலனாக, இருவருக்கும் புண்ணிய பலன் ஏற்பட்டது. இழந்த ஆட்சியை அவர்களின் தந்தை பெற்றார். இருவருக்கும் நல்ல கணவர்கள் அமைந்தனர். இதற்கெல்லாம் காரணமான உமாதேவியின் பூஜையான கேதார கௌரி விரதத்தை மறக்காமல் பின்பற்றினர். சில ஆண்டுகள் கழித்து, பாக்கியவதி கேதார கௌரி விரதத்தைக் கைவிட்டாள். கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றைக் கழற்றி அவரைக் கொடியில் வீசினாள். இதனால் அவளுக்கு வறுமை ஏற்பட்டது.

அவளது தங்கையான புண்ணியவதி, தொடர்ந்து விரதத்தைக் கடைபிடித்துவந்ததாள். செல்வச் செழிப்போடு வாழ்ந்துவந்தாள். அவள், தன் சகோதரிக்கு வேண்டிய செல்வம் கொடுத்து உதவ முயன்றும் அனைத்தும் அவளுக்குக் கிடைக்காது போயின. காரணம் என்ன என்று யோசித்தவளுக்கு, பாக்கியவதி கேதார கௌரி விரதம் கடைபிடிப்பதை விட்டுவிட்டது தெரிந்தது. மீண்டும் அவளை விரதம் கடைபிடிக்கச் சொன்னாள். இதன்மூலம் இருவரும் மீண்டும் செல்வச் செழிப்போடு வாழ்ந்தனர். வறுமை நீங்கி செல்வம் சேரவும், சேர்ந்த செல்வம் நிலைக்கவும் கேதார கௌரி விரதத்தைத் தவறாமல் கடைபிடிப்பது நல்லது என்பதை உலகோர் அறிந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More