புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் “எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் சந்திப்பது என்ற நோக்கத்தில் முதல் முறையாக 1980 இல் தமிழ் நாட்டுக்குப் போனேன்” | நேர்காணல் | இ.பத்மநாப ஐயர் | சந்திப்பு : பொ.ஐங்கரநேசன் (பகுதி 2)

“எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் சந்திப்பது என்ற நோக்கத்தில் முதல் முறையாக 1980 இல் தமிழ் நாட்டுக்குப் போனேன்” | நேர்காணல் | இ.பத்மநாப ஐயர் | சந்திப்பு : பொ.ஐங்கரநேசன் (பகுதி 2)

7 minutes read

 

இலக்கிய உலகில் ஒரு தொகுப்பாசிரியராகவும் பதிப்பாளராகவும் அறியப்படுகிறீர்கள். உங்களின் முதலாவது தொகுப்பைப் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இந்திய மொழிகளில் வெளியான சிறு கதைகள் சிலவற்றைத் தமிழாக்கம் செய்து ‘மறு கதைகள்” என்ற தலைப்பில் வாசகர் வட்டம் ஒரு தொகுதியை வெளியிட்டிருந்தது. அதனைப் படித்தபோது ஏற்பட்ட உந்துதலால், ஈழத்துப் படைப்புக்களைக் கொண்ட ஒரு தொகுதியையும் கொண்டுவந்தால் என்ன என்று கேட்டு லக்~;மி கிரு~;ணமூர்த்திக்கு ஒரு கடிதம் எழுதினேன். இலங்கை மலேசிய எழுத்துக்களைக் கொண்ட ஒரு தொகுதியை வெளியிடுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருப்பதாகவும், ஆக்கங்களை அனுப்பி உதவினால் தெரிவு செய்து பயன்படுத்தலாம் என்றும் அவர் பதில் எழுதியிருந்தார். செ. யோகநாதன் உதவியுடன் பல ஆக்கங்களை அனுப்பி வைத்தேன். அதிக எண்ணிக்கையில் சிறுகதைகளைiயும் ஒரு சில கவிதைகளையும் கட்டுரைகளையும் கொண்டு ‘அக்கரை இலக்கியம்” என்ற பெயரில் அந்தத் தொகுப்பு 1968 டிசம்பரில் வெளியானது. 468 பக்கங்களைக் கொண்டிருந்த அதில், முற்பாதி முழுவதும் எமது எழுத்தாளர்களின் ஆக்கங்களைக் கொண்டிருந்தது. உண்மையில், இந்த முதல் முயற்சி நான் எதிர்பார்த்ததுக்கும் மேலாக மனநிறைவைத் தந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

உங்களின் ஆரம்பகால வெளியீட்டு முயற்சிகள் பற்றி…

காத்திரமான நூல்களை வெளியிடுவதற்கு ‘மல்லிகைப்பந்தல்”, ‘தேசியகலை இலக்கியப்பேரவை”, ‘மூன்றாவது மனிதன்” என்று இப்போது பல பதிப்பகங்கள் இருக்கின்றன. ஆனால், என்னுடைய நினைவுக்குத் தெரிந்தவரை அப்போதெல்லாம் கொழும்பில் இருந்த ‘அரசு வெளியீடு” ஒன்றுதான் பல இலக்கிய நூல்களை அதுவும் நல்ல முறையில் பதிப்பித்தது. ஏ.ஜே. கனகரத்தினாவின் ‘மத்து”, எஸ் . பொன்னுத்துரையின் ‘வீ”, மஹாகவியின் ‘குறும்பா”, எம். ஏ. ரஹ்மானின் ‘மரபு” எல்லாம் அவர்களுடைய நூல்கள்தான். சொக்கனும், மயிலங்கூடலூர் பி.நடராசனும் சேர்ந்து நடத்திய முத்தமிழ்க் கழகத்தையும் சொல்லலாம். மற்றப்படி, பாடசாலை நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள்தான் அதிகம் இருந்தன. அரசாங்கத் தரப்பிலும் அக்கறை இருக்கவில்லை. தங்களின் நூலைத் தாங்களே அச்சிடுவிக்கவேண்டிய நிலையிலேயே பெரும்பாலான எழுத்தாளர்கள் இருந்தார்கள்.

இந்தப் பின்னணியிலேயே மு. நித்தியானந்தன் ‘வைகறை”  வெளியீடாகத் தெளிவத்தை ஜோசப்பின் ‘நாமிருக்கும் நாடே”, என்.எஸ்.எம் ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து” சிறுகதைத் தொகுதிகளையும், சு.வி;. வேலுப்பிள்ளையின் ‘வீடற்றவன்” நாவலையும் கொண்டு வந்தார். இந்த மூன்று மலையக இலக்கியங்களிலும் அவருடன் சேர்ந்து என் பங்களிப்பும் இருந்தது. இந்த ரீதியில் அலையின் சார்பாகவும் நூல்களைக் கொண்டுவர விரும்பினோம். நண்பர்கள் சிலரிடம் ஆளுக்கு நூறு ரூபாய் வீதம் சேகரித்து, முதலில் ஏ.ஜே கனகரத்தினாவின் ‘மார்க்சியமும் இலக்கியமும் : சில நோக்கு” என்ற நூலை வெளியிட்டோம். அதற்குப் பிறகு ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய ‘கோடை விடுமுறை” நாவலும், வ.ஐ.ச. ஜெயபாலனின் ‘தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லீம் மக்களும்” , சு.வில்வரத்தினத்தின் ‘அகங்களும் முகங்களும்” கவிதைத் தொகுப்பும் வெளியாகியது. இவை எல்லாவற்றிலும் அனைவரும் நாம் என்ற உணர்வுடன் செயற்பட்டோம்.

unnamed (3)

‘அலை” சஞ்சிகை குறித்து இப்போதும் பேசப்படுகிறது. ‘அலை” யின் உருவாக்கத்தில் உங்களுக்கு எந்த அளவுக்கு ஈடுபாடு இருந்தது?

மாத்தளையில் நான் வேலை பார்த்தபோது – 1972 அல்லது 73 இல் என்று நினைக்கிறேன் – என்னிடம் இருந்த சஞ்சிகைகளைப் பார்வையிடுவதற்காக யேசுராசா மாத்தளைக்கு வந்து என்னைச் சந்தித்தார். அப்போதுதான் அவருடன் பழக நேரிட்டது. இன்றுவரை நட்புத் தொடர்கிறது. 1975 இல் அவர் ‘அலை”யை ஆரம்பித்தார். அதன் ஆசிரிய பீடத்தில் என்னுடைய எந்தப் பங்களிப்பும் இருக்கவில்லை ‘அலை”க்கான ஆக்கங்களைப் பெறுவதிலும், அச்சுச் செலவை ஈடுகட்டுவதற்காக விளம்பரங்களைச் சேகரிப்பதிலும் உதவினேன். அச்சகத்தில் போய் நின்று இதழ் வேலைகளையும் கவனித்தேன். எனக்குப் பலபேரோடு தொடர்பு இருந்ததால் ‘அலை”யைப் பரவலாக அறிமுகம் செய்ய முடிந்தது. தமிழகத்துக்கும் அனுப்பி வைத்தோம்.

1975 கார்த்திகை தொடங்கி 1990 வைகாசி வரையில் 35 இதழ்கள் தான் ‘அலை” வெளிவந்திருந்தாலும் அதன் பங்களிப்பு மிகவும் காத்திரமானது. ஆக்கபூர்வமான கட்டுரைகள், விவாதங்கள் பலவும், சிறப்பான கவிதைகள், சிறுகதைகளும் அலையில் வெளிவந்துள்ளன. சு. வில்வரத்தினம், ஸ்ரீதரன், எம்.எல்.எம். மன்சூர்,  உமாவரதராசன், ரஞ்சகுமார் போன்றவர்கள் பெருமளவுக்கு அலையினூடாகவே அறியப்பட்டார்கள். நவீன ஓவியம், திரைப்படம் பற்றிய பிரக்ஞையையும் அலை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஓவியர் மார்க் கவனம் பெற்றதுக்கு அலை தொடர்ந்து ஓவியம் பற்றியும் மார்க் பற்றியும் அக்கறை செலுத்தியமைதான் காரணம்.

மலர்மன்னனால் நடாத்தப்பட்ட 1ஃ4 என்ற காலாண்டிதழில், வெங்கட் சாமிநாதன் ‘ஹிட்லரும் ரிச்சார்ட் வாக்னரும்” என்ற தலைப்பில் ஒரு கட்;டுரை எழுதியிருந்தார். ரிச்சார்ட் வாக்னர் போன்ற இசை மேதையின் மீது பெரும் மதிப்பு வைத்திருந்த ஹிட்லர் எப்படி ஒரு இனவெறியனாக இருக்க முடியும்; என்ற கேள்வியை எழுப்பி, ஹிட்லரைப்போல வாக்னர் ஒரு மோசமான யூத எதிர்ப்புவாதியாக இருந்திருக்க முடியாது என்று நிறுவ முற்பட்டிருந்தார்.  அந்தக்கட்டுரை பற்றிய நீண்ட விமர்சனம் ஒன்றை, ‘அலை” யில் நிர்மலா நித்தியானந்தன் எழுதினார். பெரும் ஆகிருதியாகக்  கொண்டாடப்பட்ட வெங்கட்சாமிநாதனின் கட்டுரைக்கு இப்படி ஒரு எதிர்வாதம் வைக்கப்பட்டது பற்றி தமிழகச் சிற்றிதழ்ச் சூழலில் பரவலாகப் பேசப்பட்டது.  மேலைத்தேச இசையில் நல்ல பயிற்சியுடைய நிர்மலாவின் கட்டுரைக்கு வெங்கட்சாமிநாதன் ஒருபோதும் பதிலளிக்கவில்லை. அது மட்டுமல்ல அதன்பின் அவர்; சில  ஆண்டுகள் எதுவுமே எழுதியதாகவும் தெரியவில்லை.

‘அலை” பற்றி இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். ‘அலை”யின் பழைய இதழ்களைப் பலரும் கேட்டபடி இருந்தனர். யாழ்ப்பாணம் கத்தோலிக்க அச்சகத்தில் பேப்பர் பிளேற் (Pயிநச Pடயவந) முறையில் அச்சிடும் வசதி வந்த புதிதில், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முதல் 12 இதழ்களையும் ஒரு தொகுதியாக 1986 இல் மீளப்பதிப்புச் செய்தோம். 275 பிரதிகளுக்குப் 15,000 ரூபாய் செலவானது. தமிழ்ச் சஞ்சிகையொன்று அப்படியே மீள்பதிப்புச் செய்யப்பட்டது எனக்குத் தெரிந்து ‘அலை” மட்டும்தான் . ‘அலை” யுடனான ஈடுபாட்டுக்கு யேசுராசாவுடைய நட்பும், கலை, இலக்கியங்களின் மீதான ஆர்வமும் மட்டும் காரணங்களாக இருக்கவில்லை. அலை,- சிங்களப் பேரினவாதத்தின்  ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழ்த் தேசியவாதத்தினை முன்வைத்துச் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்த விடயங்களில் எனக்கிருந்த உடன்பாடு காரணமாகவும்தான். ‘அலை” யுடன் தொடர்ச்சியாக இயங்கினேன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மறுமலர்ச்சிக் கழகத்தினரின் அரசியல் சார்ந்த வெளியீடுகளிலும் உங்களின் முயற்சி இருந்திருக்கிறதல்லவா?

உண்மைதான். மறுமலர்ச்சிக் கழகத்தின் ‘தளிர்” சஞ்சிகையினதும், சில நூல்களின் வெளியீட்டிலும் உதவ முடிந்திருக்கிறது. மறுமலர்ச்சிக் கழக உறுப்பினர்கள் ரவிசேகரம், சர்வேந்திரா, சிவரஞ்சித் போன்றவர்களுடனும் வரலாற்றுத்துறை விரிவுரையாளர் மு. திருநாவுக்கரசுடனும் 1981 இற்குப் பின் தொடர்பு ஏற்பட்டது. திருநாவுக்கரசு பரந்த உலகவரலாற்று, அரசியல் ஞானம் உடையவர். சுயமான சிந்தனை உடையவர். 1987 இல் அவர் எழுதிய ‘இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும்” ஒரு சிறந்த நூல். அதனை சித்திரா அச்சகத்தில் அச்சிடுவித்தோம். ஏறத்தாழ 8000 ரூபாய் செலவானது. சிவரஞ்சித் ஒருவரிடமிருந்தும்;, நான் ஒருவரிடமிருந்தும்; கடன் பெற்று அச்சிட்டோம். அடுத்த ஆண்டே இந்த நூலின் இரண்டாவது பதிப்பை சென்னை ரோஸா லக்சர்ம்பேர்க் பதிப்பகம் வெளியிட்டதையும் சொல்ல வேண்டும். சுகந்தம் வெளியீடாக திரு எழுதிய ‘தமிழீழ விடுதலைப்போராட்டமும் இந்தியாவும்” என்ற சிறு நூலின் 25,000 பிரதிகளை அச்சிடுவித்தோம். அவ்வளவும் விற்பனையானது. தமிழ் நூல் வெளியீட்டில் அதற்கு முன்னர் அத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். இதுபோலவே, 1987 ஜுலையில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டதும் ‘யாருக்காக இந்த ஒப்பந்தம்?”  என்ற பிரசுரத்தினை திருநாவுக்கரசு எழுதியிருந்தார். அதை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருந்த ‘சற்றடே றிவியூ” (ளுயவரசனயல சுநஎநைற)  அச்சகத்தில் அச்சிட்டோம். அந்த வேலை நடந்து கொண்டிருந்த சமயம் இந்தியப்படை அணி ஒன்று திருகோணமலையில் இருந்து பிரதான வீதியால் அணிவகுத்துச் சென்றதை அச்சக வாசலில் நின்று பார்த்தது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது.

தமிழ் நாட்டிலும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு அவர்களிடம் இருந்து எந்த அளவுக்கு ஒத்துழைப்புக் கிடைத்தது?

எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் சந்திப்பது என்ற நோக்கத்தில் முதல் முறையாக 1980 இல் தமிழ் நாட்டுக்குப் போனேன். அப்போது தலை மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்துக்குக் கப்பல் சேவையிருந்தது. மூன்று மணித்தியாலம் எடுக்கும். நிறையச் சஞ்சிகைகளையும், நூல்களையும் கொண்டு போனேன், ‘க்ரியா” ராமகிரு~;ணனுடன் தங்கியிருந்து அசோகமித்திரன், சா. கந்தசாமி எனச் சில எழுத்தாளர்களைச் சந்திக்க முடிந்தது. பின்னர் 82இல் நானும், யேசுராசாவும். குலசிங்கமும் போனோம். விமானத்தில் போய் கப்பலில் திரும்பினோம். எங்களை அழைத்துச் செல்வதற்காக திருவனந்தபுரம் விமானநிலயத்துக்கு சுந்தரராமசாமி வந்திருந்தார்.

இந்தத் தடவை அ. மாதவன், வேதசகாயகுமார், கி. ராஜநாராயணன், ‘அன்னம்” மீரா, எஸ்.வி.ஆர், பரீக் ஞாநி, கோவை ஞானி, ந. முத்துசாமி, தமிழவன், வண்ணநிலவன், சிற்பி பாலசுப்பிரமணியம் எனப் பலரையும் சந்தித்துக் கதைக்க முடிந்தது. இவர்களுடைய தொடர்புகளினூடாகத் தான் தமிழகத்தில் சில நூல்களையேனும் கொண்டு வருவது சாத்தியமாகியது.

முதன் முதலில் எஸ்.வி. ராஜதுரை அவரது பொதுமை வெளியீடு மூலம், தலித்து ஓய கே. கணே~; மொழிபெயர்த்த  ‘போர்க்குரல்”  நூலை வெளியிட்டார். இது புகழ் பெற்ற சீன எழுத்தாளர் லூசுன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. ஏறத்தாழ அதே சமயத்தில், கந்தையா நவரேந்திரனின் ஜே. கிரு~;ணமூர்த்தி பற்றிய ‘விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்” என்ற நூலின் இரண்டாவது பதிப்பை ‘நர்மதா” பதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து எம். ஏ. நுஃமானின் ‘அழியா நிழல்கள்” கவிதைத் தொகுப்பையும், குப்பிழான் ஐ. சண்முகனின் ‘சாதாரணங்களும் அசாதாரணங்களும்” சிறுகதைத் தொகுப்பையும், பேராசிரியர் கைலாசநாதக் குருக்களின் ‘வடமொழி இலக்கிய வரலாறு” நூலின் மறுபதிப்பையும் நர்மதா வெளியிட்டு உதவியது.

‘அன்னம்” மீராவிடம் மஹாகவியினதும், தா. ராமலிங்கத்தினதும், எம்.ஏ. நுஃமானினதும் கவிதைகளைக் கொடுத்திருந்தேன். இரண்டு நூல்களை வெளியிடுவதாக ஒப்புக் கொண்டார்.  அதன்படி ‘மஹாகவி கவிதைகள்” எம்.ஏ. நுஃமானின் ‘மழைநாட்கள் வரும்” இரண்டையும் பிரசுரித்தார். நுஃமானும், யேசுராசாவும் சேர்ந்து தொகுத்த ‘பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்”, யேசராசாவின் ‘அறியப்படாதவர்களின் நினைவாக”, மு. தளையசிங்கத்தின் ‘ஏழாண்டு  இலக்கிய வளர்ச்சி”,   ‘முற்போக்கு  இலக்கியம்”  ஆகியவற்றை   க்ரியா  வெளியிட்டது.

மு. தளையசிங்கத்தை  தமிழகத்தில்  அறிமுகப்படுத்திய  பெருமையில்  கோவை. சி. கோவிந்தனுக்கும் கணிசமான பங்கிருக்கிறது. கோவை சமுதாயம் பிரசுராலயத்தின் மூலம் தளையசிங்கத்தின் ‘புதுயுகம் பிறக்கிறது”, ‘ஒரு தனிவீடு”, ‘போர்ப்பறை”, ‘மெய்மை”, ‘கலைஞனின் தாகம்” போன்ற நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.

சேரனும் தன்னுடைய ஒரு தொகுப்பு இந்தியாவில் வெளிவர வேண்டும் என்று விரும்பினார். எஸ்.வி.ஆரின் பொதுமை வெளியீடு மூலம் சேரனின்  ‘இரண்டாவது சூரிய உதயம்” கவிதைத் தொகுப்பின் மறுபதிப்பைக் கொண்டு வந்தோம். அதனை வெளியிட்ட சமயம், 1983 யூலைக் கலவரம் நடந்து விட்டமையால், வெளியீட்டு விழா இனப்படுகொலையைக் கண்டிக்கும் நிகழ்ச்சியாகவும் அமைந்து விட்டது. விழா மண்டபம் முழுவதும் சேரனின் கவிதைகளை மட்டைகளில் எழுதிக் கட்டியிருந்தார்கள். ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் என அநேகமாக எல்லாச் சஞ்சிகைகளுமே போட்டி போட்டுக் கொண்டு சேரனின் கவிதைகளைப் பிரசுரித்தன. சேரன் பரவலாக அறியப்பட இந்தச் சந்தர்ப்பம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இப்படி 1981 தொடங்கி 1984 காலப்பகுதியில் ஏழு பதிப்பகங்கள் எல்லாமாக 20 நூல்கள் வரை வெளியிட்டிருக்கின்றன

தொடரும்…….. 

பொ.ஐங்கரநேசன் 

நன்றி | தினக்குரல் ( 31/08/2003) 

 

 

முன்னைய பகுதிகள்…..

Part 1  https://vanakkamlondon.com/one-min-interview/2014/03/7628/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More