செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்

13 minutes read

யானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா? விலங்குகளின் தவறுகள் காரணமா? சிந்தித்து பார்ப்பவர்களுக்கு மனிதன் தான் இந்த முரண்பாடுகளுக்கு காரணம் என்பது புரியும். திட்டமிடப்படாத காடழிப்பினால் விலங்குகள் வாழுகின்ற, உணவு தேடி உலாவி திரிகின்ற காடுகள் யாவும் மனிதனால் அழிக்கப்பட்டு விட்டன. பின் அவை எங்கு தான் செல்வது? பொறுப்பானவர்கள் தான் மிக விரைவில் தீர்வு காண வேண்டும்.

ஆதியிலும் காடு சார்ந்த இடங்களில் மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் நிலமைகள் இருந்தன. இப்பொழுது போல பெரிய இழப்புக்கள் இல்லை, இயற்கை சமநிலை இருந்தது. காட்டு பிரதேசங்களில் வாழும் மக்களிடையே இந்த சந்திப்புகள் பற்றிய கதைகள் பல உண்டு.

ஒரு பெரிய வேட்டைக்காரன் இளைஞர்களின் வேட்டை பற்றிய அறிவை அறிய எண்ணினான். அவர்களைப் பார்த்து “ஒருவன் வேட்டைக்குப் போன போது பன்றி ஒன்றின் உறுமல் சத்தம் கேட்டு பதுங்கி பதுங்கி அதனை சுடுவதற்கு சென்றான். ஒளித்திருந்து பன்றியை குறி பார்த்த போது, ஒரு கொழுத்த தனியன் பன்றி, மேலே ஒரு மரக்கிளையை பார்த்து உறுமுவதைக் கண்டான். நன்கு அவதானித்த பொழுது மரக்கிளையில் சிறுத்தை ஒன்று பன்றியைப் பார்த்து சீறியபடி இருப்பதைக் கண்டான். எதனை வேட்டைக்காரன் சுடுவான்?” என்று கேட்டான்.

சிலர் “பன்றியை விட சிறுத்தை ஆபத்தானது. அதனால் அதைத் தான் சுடுவான்.” என்றனர். மற்றவர்கள் “தனியன் பன்றி மிகவும் ஆபத்தானது. ஆட்களை மூர்க்கமாக தாக்கி குற்றுயிரும் குறையுயிருமாக்கி விடும், அதனால் பன்றியைத் தான் முதலில் சுடுவான்.” என்றனர். வேட்டைக்காரன் சிரித்து “அவன் புத்திசாலியாக இருந்தால் சிறுத்தையைத் தான் முதலில் சுடுவான். சூடு பட்டதும் பன்றியை பார்த்து கோபத்துடன் பாய தயாராக இருந்த சிறுத்தை கடைசி முயற்சியாக பன்றி மேல் ஆக்குரோசமாகப் பாய்ந்து அதை கவ்விபடி உயிரை விடும். அதனால் பன்றியும் இறந்து விடும்.”என்றார்.

முருகேசர் முறைப்படி தனது உறவினர்கள் நண்பர்களான சிலருடன் வந்து ஆறுமுகத்தாரிடமும் விசாலாட்சியிடமும் நாட்சோறு கொடுப்பதற்கு ஏற்ற நாளை கூறி,

“நீங்கள் மாப்பிள்ளையுடன் காலையில் வந்து விடுங்கள். நாங்கள் எல்லா ஒழுங்குகளையும் செய்து வைத்திருப்போம்” என்று சொல்லி விடை பெற்று சென்றார்.

தியாகர் வயலில் பெண்கள் எல்லோரும் கூடி நெல் அவித்தல், மா இடித்தல், பலகாரம் சுடுதல் என்று இரண்டு மூன்று நாட்கள் தடல்புடலாக இருந்தது.

கணபதி, மீனாட்சியை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் மனைவிகளும் சந்தோசமாக வந்து வேலைகள் செய்தனர். அவர்களது புருசன்மார் சிலர் முறுக்கி கொண்டனர். அதற்கு பெண்கள் எல்லோரும் ஒரே குரலில் “ஊரில் இருந்து நாங்கள் வன்னிக்கு வந்த முதல் நாளிலிருந்து விசாலாட்சி அக்கா எங்களுக்கு செய்த உதவிகளை நீங்கள் மறக்கலாம், நாங்கள் மறக்க முடியாது. அவர்களுக்கு பதிலுக்கு உதவி செய்ய இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது.” என்று கூறிவிட்டு வந்து விட்டனர்.

நாட்சோறு குடுப்பித்து, பெண்ணையும் கையோடு அழைத்து வருவதற்காக ஏழு வண்டில்களில் கிராம மக்கள் புறப்பட்டனர். விசாலாட்சியின் தம்பிகள் இருவரும் வரவில்லை, அவர்களின் மனைவிகள் வந்தனர்.

கணபதியின் நண்பர்களும் முத்தர்கணபதியும் வண்டில்களை ஓட்டி செல்ல தயாராக இருந்தனர். ஆண்கள் யாவரும் வெள்ளை வேட்டி கட்டி தோளில் சால்வை போட்டிருந்தார்கள். சால்வை ஆண்களுக்கு ஒரு வித கம்பீரத்தைக் கொடுத்தது. கை, கால், முகம் கழுவும் போது துடைப்பதற்கு சால்வையை பயன்படுத்தினார்கள். வெய்யிலில் செல்லும் போது தலைப்பாகை கட்ட சால்வை உதவியது, இரவில் குளிரும் போது சால்வையை போர்வையாக போர்த்தினா ர்கள்.

குளித்து விட்டு வேட்டி கட்டி வந்த கணபதிக்கு, ஆறுமுகத்தார் தலைப்பாகை கட்டி விட, விசாலாட்சி திருநீறு பூசி, சந்தன பொட்டு வைத்து, அழகு பார்த்து நெற்றியில் முத்தமிட்டாள். “என்ரை ராசா, ஐயாவுடன் போய் மருமகளை கூட்டிக் கொண்டு வா. நான் இங்கு இருந்து வரும் விருந்தாளிகளுக்கு சாப்பாடு செய்து காத்திருப்பன். சந்தோசமாய் போய் வா அப்பன்” என்று கூறி விசாலாட்சி வழி அனுப்பி வைத்தாள்.

விசாலாட்சி என்று பெரிய பரந்தனில் காலடி வைத்தாளோ, அன்றிலிருந்து அவள் வெளி இடங்களுக்கு போவதில்லை என்பதை அறிந்த ஆறுமுகத்தாரும் கணபதியும் அவரை வரும்படி வற்புறுத்தாது விடை பெற்று சென்றனர். அவர்கள் சென்று வண்டிலில் ஏறியதும் உறவினர்களும் ஏறினர்.

ஏழு வண்டில்களும் அணி வகுத்து, எருதுகளின் கழுத்தில் இஸ்லாமிய வியாபாரிகளிடம் வாங்கி கட்டிய சலங்கைகள் ஒலிக்க வரிசையாக பளையை நோக்கி சென்றன. வண்டில்கள் ஓட ஓட கணபதியின் மனதில் நினைவுகளும் ஓடின.

மீனாட்சி வேண்டி கேட்டுக் கொண்ட இரண்டு விடயங்களும் அவனது மனதில் காட்சியாய் விரிந்தன. தாயாரைப் போல அவளும் மச்சம் சாப்பிடுவதில்லை, அதனால் அவனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. கந்தையனைக் கூட்டி வந்து தங்களுடன் வைத்திருப்பது அவனுக்கும் விருப்பம் தான். 

தன்னிடம் அவள் வினயமாக கேட்ட விதம் அவனுக்கு சிரிப்பை உண்டாக்கியது. எதையும் துணிச்சலாக கதைக்கும் மீனாட்சி தம்பிக்காக தயங்கி தயங்கி கதைத்தாள். தகப்பனும் தாயும் ஒன்றாக இருந்த சந்தர்ப்பத்தில் கணபதி “மீனாட்சி கந்தையனையும் எங்களுடன் கூட்டி வந்து வைத்திருப்பம்.” என்று கேட்டவள். நானும் சம்மதித்து விட்டேன் என்றான். அதற்கு ஆறுமுகத்தார் “கட்டாயம் கூட்டிக் கொண்டு வா. நாங்கள் குடிக்கும் கஞ்சியையோ கூழையோ அவனும் எங்களோடை சேர்ந்து குடிக்கட்டுமே.” என்றார். விசாலாட்சி புன்முறுவலுடன் “நாங்கள் தியாகர்வயலுக்கு வந்த போது மூன்று பேர் மட்டும் தான். மீனாட்சியும் பேரம்பலமும் பிறந்த பின்னர் ஐந்து பேர் ஆனோம். மருமகள் மீனாட்சியும் கந்தையனும் வந்துவிட்டால் ஏழு பேராய் ஆகிவிடும். வீடும் கலகலப்பாய் மாறிவிடும், கட்டாயம் கூட்டிக் கொண்டு வா” என்றாள்.

தகப்பனும் தாயும் கந்தையனை கூட்டி வருமாறு சொல்லியது நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்த கணபதிக்கு, மாமன்மாரை நினைத்து சிறிது கவலையும் ஏற்பட்டது. அவர்கள் தாயாரிடம் வந்து வாக்குவாதப்பட்டதை அறிந்து தாயாரிடம் “என்னம்மா? அவைக்கு ஏன் இவ்வளவு கோபம்.” என்று கேட்டான்.

அகற்கு அம்மா “கணபதி, நீ கவலைப்படாதை. அவர்களின் அறிவு அவ்வளவு தான். எத்தனை நாட்களுக்கு தான் கோபிப்பார்கள். கலியாணம் முடிய எல்லாம் சரி வரும்” என்று கூறியிருந்தாள்.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த கணபதி வண்டில்கள் நிற்பதை கண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். வண்டில்கள் எல்லாம் முருகேசர் வீட்டு வாசலில் நின்றன. முருகேசரும் உறவினர்களும் “வாருங்கோ, வாருங்கோ” என்று வரவேற்றபடி விரைந்து வந்தனர்.

எல்லோரும் நேரே கிணற்றடிக்கு சென்று கை கால் கழுவி விட்டு வீட்டுக்குள் சென்றனர். வீட்டுக்கு முன்னால் ஒரு சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பனை ஓலை பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. எல்லோரும் சென்று அமர்ந்தார்கள். முருகேசரின் உறவுக்கார பெண்கள் எல்லோருக்கும் பால் தேனீர் கொடுத்தனர். சரியான நேரம் வர கணபதியை அழைத்து நிறைகுடத்தின் முன் இருத்தி விட்டு, மீனாட்சியை கூட்டி வரும்படி முத்தர் சொல்ல, பெண்கள் மீனாட்சியை அழைத்து வந்தனர்.

வரும் போது மீனாட்சி தனது பெரிய கணகளால் நிமிர்ந்து ஒருமுறை கணபதியை பார்த்தாள், ஒரு கணம் புன்னகை தோன்றி மறைந்தது. மீனாட்சி பதுமை போல நடந்து வந்து தலை குனிந்தபடி கணபதியின் அருகில் இருந்தாள். சேலை கட்டி வந்த மீனாட்சியை கணபதியும் பார்த்தான், பார்த்தவன் மீனாட்சியின் வடிவைக் கண்டு திகைத்துப் போனான்.

முத்தர் நிறைகுடத்தின் மேலிருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து கொடுக்க, கணபதி ஒரு பரவச நிலையில் மீனாட்சியின் கழுத்தில் கட்டினான்.

பெண்கள் தலை வாழை இலையில் உணவைப் படைத்தனர். கணபதி முதலில் சாப்பிட, அதே இலையில் மீனாட்சி சாப்பிட்டாள். பின்னர் வந்தவர்களுக்கு எல்லாம் பந்தியில் சாப்பாடு வழங்கப்பட்டது.

நாட்சோறு கொடுத்தல் சந்தோசமாக நடந்து முடிந்தது. முத்தர் எல்லோரையும் புறப்படும்படி கூற எல்லோரும் வெளிக்கிட்டனர். கணபதி முதலில் மீனாட்சியை கையை பிடித்து வண்டிலில் ஏற்றினான். பின்னர் கந்தையனை கூப்பிட்டு ஏற்றி விட்டு தானும் ஏறினான். முருகேசரும் உறவினர்களுமாக மூன்று வண்டில்களில் வந்தனர். பத்து வண்டில்களும் பெரிய பரந்தனை நோக்கி விரைந்தன. பிரயாணத்தின் போது கணபதி கந்தையனிடம் ஊர்களின் பெயர்களைக் கூறினான்.

மீனாட்சியும் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு தெரியும். ஆனையிறவு பாலம் வந்த போது முன்பு எருதுகள் அதன் மேல் ஏற பயந்த கதையை சொன்னான். பெரிய பரந்தன் காட்டை கடக்கும் போது, அந்த காட்டில் தான் சிறுத்தைகள் உலாவுவதாக சொன்னான். அப்போது அவனுக்கு ஆறுமுகத்தார் தன்னை பத்து வயதில் கூட்டி வந்தது நினைவிற்கு வந்தது. இன்று தான் பன்னிரண்டு வயதில் கந்தையனை கூட்டி செல்கிறான். ஐயா தன்னை வளர்த்தது போல தானும் கந்தையனை வளர்க்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

மாப்பிள்ளை பொம்பிளையை விசாலாட்சி உறவினர்களுடன் சேர்ந்து வரவேற்றார்.

கணபதி மீனாட்சியியுடன் தகப்பன், தாய் இருவரது கால்களிலும் விழுந்து வணங்கினான். கணபதியின் நண்பர்கள் காட்டுத்தடிகளால் கொட்டகை போட்டு, படங்கினால் கூரை போட்டிருந்தார்கள். விருந்தினர்கள் யாவரும் பாய்களில் இருந்தனர். சிறிது நேரம் ஓய்வின் பின்னர் பந்தியில் எல்லோரையும் இருத்தி சாப்பாடு வழங்கப்பட்டது. கணபதியின் மாமன்மார் தயங்கி தயங்கி வந்து இரண்டாம் பந்தியில் இருந்து சாப்பிட்டு விட்டு விசாலாட்சியிடம் ஒன்றும் கதைக்காமல் சென்றுவிட்டனர். மூடல் பெட்டிகளில் பலகாரங்கள் வைத்து மூடப்பட்டிருந்தது.

எல்லோருக்கும் வெற்றிலை பாக்கு வழங்கப்பட்டது. சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் முருகேசரும் உறவினர்களும் விடை பெற்றனர். விசாலாட்சி பலகாரப்பெட்டியை கொண்டு வந்து கொடுத்தார். வெளிக்கிட முன்பு முருகேசர் கந்தையனைக் கூப்பிட்டு “கந்தையா, அத்தான் அக்கா சொல்லுறதை கேட்டு நடக்க வேணும். பெரியாட்களிட்டை மரியாதையாக நடக்க வேணும்.” என்று கூறினார்.

பந்தியில் மற்றவர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட போது, கட்டாடியார், சீவல்தொழிலாளி, சிகையலங்கரிப்பவர், யாவருக்கும் அதே பந்தியில் ஒரு பக்கத்தில் இருத்தி உணவு பரிமாறப்பட்டது.

பெண்கள் யாவரும் மீனாட்சியை சூழ்ந்து கொண்டனர். மீனாட்சியும் அவர்களுடன் நீண்ட நாட்கள் பழகியவள் போன்று சந்தோசமாக கதைத்தாள். கறுப்பாக இருந்தாலும் மிக அழகாக இருந்த அவளை, அவளின் அழகுக்காக மட்டுமில்லை, அவளின் எல்லோருடனும் அன்பாக பேசிப்பழகும் நல்ல குணத்திற்காகவும் தான் கணபதி விரும்பியிருக்கிறான் என்பதை எல்லோரும் உணர்ந்தனர்.

முத்தரின் மனைவி, மாமன்மாரின் மனைவிகள், பொன்னாத்தை முதலியவர்களைப் பற்றி கணபதி கூறியிருந்ததால் அவர்களை விசாரித்து அறிந்தபின் முறை சொல்லியே அவர்களுடன் கதைத்தாள். பெண்கள் யாவருக்கும் மீனாட்சியை நன்கு பிடித்து விட்டது.

வந்து இரண்டு மூன்று நாட்களுக்குள் மீனாட்சி, விசாலாட்சியிடமிருந்து சமையல் பொறுப்பை ஏற்று கொண்டு விட்டாள். முடிந்த அளவு மற்ற வேலைகளையும் தானே செய்தாள்.

விசாலாட்சிக்கு வேலைகள் எதுவும் செய்யாமல் இருக்க முடியவில்லை. மீனாட்சி அவளிடம் “மாமி, நான் வந்துவிட்டேன், நீங்கள் இவ்வளவு நாளும் வேலை செய்தது போதும்.  இனி நீங்கள் ஆறுதலாக இருங்கள்.” என்று சொல்லி விட்டாள்.

கோவில்கள், விசேசங்களின் போது ஊரவர்கள் வீடுகளுக்கு போய் உதவி செய்தல் தவிர வேறு எங்கும் போகாத, விசாலாட்சி இப்போது மாலை நேரங்களில் எல்லோர் வீடுகளுக்கும் போய் வந்தாள். “மீனாட்சி என்னை ஒரு வேலையும் செய்ய விடுறாள் இல்லை.” என்று முக மலர்ச்சியுடன் அவர்களிடம் சொல்லும் போதே மருமகளிடம் அவளுக்கு உள்ள அன்பை யாவரும் புரிந்து கொண்டனர்.     

கந்தையனை படிப்பை நிறுத்தி அழைத்து வந்தது கணபதிக்கு கவலையாக இருந்தது. தங்கை மீனாட்சியும் பள்ளிக்கூடம் போகமலிருக்கிறாள். முத்தர் கணபதி எழுத, வாசிக்க, கணக்குகள் பார்க்க சொல்லி கொடுக்கிறான் தான். பெரிய பரந்தனிலும் செருக்கனிலும் சில பிள்ளைகள் பள்ளிக்கூடம் போறதில்லை. குஞ்சுப்பரந்தன் பிள்ளைகள் அனைவரும் ஊரில் தங்கி சங்கத்தானை பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர்.

எல்லா பிள்ளைகளுக்கும் அந்த வசதி இல்லை. முத்தர்கணபதியுடனும் நண்பர்களுடனும் கணபதி இதைப்பற்றி கதைத்திருந்தான். ஒருநாள் பறங்கியர் வந்த போது கணபதி “செஞ்சோர், எங்கள் ஊர் பிள்ளைகள் படிக்க என்ன செய்யலாம்?” என்று கேட்டான்.

பறங்கியர் “எல்லா ஊருக்கும் ஒரு பள்ளிக்கூடம் வேணும், உங்கடை மூன்று ஊரிலும் கொஞ்ச பிள்ளைகள் படிக்கிறேல்லை போலை இருக்குது. நீ இதைப்பற்றி ஒரு கடிதம் எழுதி ‘கவர்மென்ட் ஏஜன்ற்’ (Government Agent) இடம் நேரே கொடு. நீ தமிழ்பாஷையிலை எழுது, அவருக்கு விளங்கப்படுத்த ஆட்கள் இருப்பார்கள், அவர்கள் வாசித்து காட்டுவார்கள். இப்ப இருக்கிற ‘கவர்மென்ட் ஏஜென்ற் ‘நல்லவர்” என்று கணபதியிடம் சொன்னார். கடிதம் எழுதும் முறையையும் பறங்கியர் சொல்லிக் கொடுத்தார்.

தோழர்களுடன் கணபதி கதைத்த போது பறங்கியர் சொன்னது போல ‘கவர்மென்ட் ஏஜென்ற்’ இற்கு கடிதம் எழுதி மூன்று கிராம மக்களிடமும் கையெழுத்து வாங்கும் பொறுப்பை முத்தர்கணபதியும் சில தோழர்களும் ஏற்றனர்.

அவர்கள் சொன்னதைப் போல முத்தர்கணபதியும் தோழர்களும் கடிதம் எழுதி, ஊரவர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு வந்து கணபதியிடம் கொடுத்தனர். அதில் கையெழுத்துக்களை விட கைவிரல் அடையாளங்களே கூடுதலாக இருப்பதைக் கண்ட கணபதி கவலையடைந்தான்.

முத்தரிடமும் ஆறுமுகத்தாரிடமும் சொல்லிவிட்டு, கணபதி தோழர்களுடன் ‘கவர்மென்ட் ஏஜென்ற்’ இடம் சென்று நேரில் அந்த விண்ணப்பத்தை கொடுத்தான். மொழி பெயர்ப்பவர் வாசித்து சொல்ல கேட்ட ‘கவர்மென்ட் ஏஜென்ற்’ கையெழுத்துகளுக்கு பதிலாக கை அடையாளங்கள் கூடுதலாக இருப்பதைக் கண்டு அவர்களின் மேல் கருணை கொண்டார். 

“கணபதி, நீ போ, எங்கடை அதிகாரி  வந்து உங்கடை ஊரை சுற்றிப் பார்த்து, உங்களோடை கதைப்பார். அவர் திருப்திப்பட்டால் உங்களுக்கு பள்ளிக்கூடம் வரும்.” என்று கூறினார். ஊர் திரும்பிய கணபதியும் தோழர்களும் அதிகாரி எப்போது வருவார் என்று காத்திருந்தார்கள்.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னையபகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More