September 27, 2023 2:05 pm

‘தூய்மையான இந்தியா’ திட்டத்திற்கு பிரதமர் மோடியிடமிருந்து கமலுக்கு அழைப்பு ‘தூய்மையான இந்தியா’ திட்டத்திற்கு பிரதமர் மோடியிடமிருந்து கமலுக்கு அழைப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

காந்தி ஜெயந்தியான நேற்று டெல்லியில் ‘தூய்மையான இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில், பிரதமர் தூய்மையான இந்தியாவை உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு அழைப்பு விடுத்தார்.

அதன்படி, மிருதுளா சின்காஜி, சச்சின் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல்ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான்கான், அனில் அம்பானி ஆகியோருக்கு தூய்மையான இந்தியாவை உருவாக்கும் பணிக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் மேலும் 9 பேருக்கு அழைப்பு விடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தூய்மையான உருவாக்குவது என்பது இந்திய மக்களின் பொறுப்பு. இந்தியாவை சுத்தப்படுத்துவதற்கு மக்கள் சுமார் 100 மணி நேரம் செலவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடியின் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ள ஒன்பது பேர்களில் என் பெயரும் இடம் பெற்றிருப்பது பெரும் ஒரு பாக்கியமாக நான் கருதுகிறேன்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட மனித சேவை என்பதில் என்றுமே நம்பிக்கை உள்ளவன் நான். இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அரிய ஒன்பது பேர்களில் நாங்கள் அனைவருமே வெவ்வேறு கருத்துக்கள் உடையவர்கள்.

நான் மனித நேயத்தை ஆத்திகம் மூலமாகவோ, வேறு சித்தாந்தங்கள் மூலமாகவோ அணுகாமல் மனிதம் மூலமாக, பகுத்தறிவு மூலமாக அணுகி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவன். எனக்கு இது கொடுக்கப்பட்டிருக்கும் புதிய ஒரு கடமையாக நான் நினைக்காமல் செய்த கடமைக்கான ஒரு பாராட்டாக நினைத்து தொடர்ந்து செயல்படுவேன் என்பதை மாண்புமிகு பிரதமருக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

கடந்த முப்பது ஆண்டுகளாக எனது சினிமா ரசிகர்களாக இருந்தவர்களை சமுதாய ஆர்வலர்களாக, சேவையாளர்களாக மாற்றிய ஒரு சிறிய ஊக்கியாக நான் இருந்திருக்கிறேன். அந்த பணி தொடரும்.

சுத்தமான சூழல் என்பதை நான் உணர ஆரம்பித்து, பேச ஆரம்பித்து பல மாமாங்கங்கள் கடந்து விட்டன. பிரதமர் தேர்ந்தெடுத்த இந்த ஒன்பது பேர் இன்னும் ஒன்பது பேரை தேர்ந்தெடுக்க அவர் பணித்திருக்கிறார், பரிந்துரைத்திருக்கிறார். முடிந்தால் இன்னும் தொன்னூறு லட்சம் பேரை சேர்க்க வேண்டியது என்னுடைய இயலும் கடமையாக நான் நினைக்கிறேன்.

ஒரு பில்லியன் ஜனத்தொகை உள்ள இந்த நாட்டில் என் தொழில் சிறு துளியாக இருந்தாலும், பெரு வெள்ளத்தின் முதல் துளியாக இது இருக்கும் என்று நம்புகிறேன். இந்த முயற்ச்சியில் அரசியல், மத, இன, மொழி கடந்த மனிதம் பரவும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்