Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஷகீலாவுடன் இரு நாட்கள் | எழுத்தாளர் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

ஷகீலாவுடன் இரு நாட்கள் | எழுத்தாளர் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

6 minutes read

ஷகீலாவுடன் இரண்டு நாட்கள்… இரண்டாம்(இறுதி) பாகம்.

Image may contain: 2 people, closeup

விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சியில் ஸ்க்ரிப் ரைட்டராக வாய்ப்புத்தேடியது குறித்தும், முதல் வாய்ப்பிலேயே நடிகை ஷகீலா நடித்த சிறப்பு லொள்ளு சபா நிகழ்ச்சியில் அசிஸ்டென்டாகப் பணியாற்ற வாய்த்தது வரையிலும் முதல் பாகத்தில் கூறியிருந்தேன். இது தொடர்ச்சி…

“ஷகீலா நடிக்கிற சீன் டயலாக்கை அவங்கட்ட சொல்லி விளக்குங்க!” என்று இயக்குநர் ராம்பாலா சார் என்னிடம் சொன்னதுமே ஒருவித பதட்டம், பரவசம் என்னுள்ளே… ஷகீலா மேடத்திடம் சென்று, “மேடம், இது தான் நீங்க சொல்ல வேண்டிய டயலாக், அவங்க இந்த டயலாக்கைச் சொன்னபிறகு, நீங்க இதைச் சொல்லணும்” என்றதுமே ஆர்வமாக வாங்கிப் பார்த்தவர், அதை வாசித்துப்பார்க்கவும் சிரித்துவிட்டார்.

ஆம், அவருக்கு நீண்ட காலத்துக்குப்பிறகு கிடைத்த நகைச்சுவைக் காட்சிக்கான வாய்ப்பல்லவா? அதை வாசிக்கவும் அவருக்குள் இருந்த ஒரு குழந்தைத்தனம் எட்டிப்பார்ப்பதைக் காண முடிந்தது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், “நீ இப்ப நடிகை ஷகீலா கிட்ட பேசிட்டு இருக்குற!” “நீ இப்ப நடிகை ஷகீலாவுக்கு பக்கத்துல நிக்குற!” என்று மனசாட்சி தொடர்ச்சியாக அந்த ஆச்சர்ய கணத்தை உணர்த்திக்கொண்டே இருந்தது! அப்போதே இந்த கணத்தை நண்பர்களோட பகிர்ந்துக்கணுமே என்று மனதுக்குள் நினைத்தாலும், கையில் செல்பேசியே இல்லாத காலகட்டம் அது.

அதனால் யாரையும் அங்கிருந்தபடி தொடர்புகொண்டு பேசுவதற்கு வாய்ப்பே இல்லை. தொலைபேசியில் தொடர்புகொண்டால்தான் உண்டு. அதுவும் நண்பன் வீட்டிலும் தொலைபேசி இணைப்பு இருந்தால்தான் உண்டு. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநரைத் தவிர மற்ற அனைவருமே எனக்கு அறிமுகமில்லாதவர்கள்… நானே முதல் நாள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறேன்… இந்நிலையில் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலும் இதை யாரிடமும் பகிர இயலாது. ஒருவித பிரமிப்போடேயே அன்றைய தினம் முழுவதும் ஷூட்டிங் சென்றது.

மதிய உணவு இடைவேளையில் அனைவருக்குமான உணவைத்தான் அவரும் சாப்பிட்டார்.

அவரோடிருந்த டச்சப் பாய் (சின்ன வயது பையன் தான்) ரொம்பவே ஈர்த்தார். ஒவ்வொரு டேக் இடைவேளையின்போதும் மேக்கப் ஹேண்ட் பேக் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடியுடன் வந்து அவரிடம் கண்ணாடியைக் காட்டி முகத்தில் டச்சப் செய்துவிடுவதும், அவரது கூந்தலை வாரிவிடுவதுமாக இருந்தான். அடுத்த டேக் தொடங்கவும் ஓரமாக நின்றுகொண்டிருக்கும் அவனது முகத்தில் எவ்வித ரியாக்சனையும் பார்க்கவே முடியவில்லை. மண்ணு மாதிரி இருக்கான்னு சொல்வோமே, அப்படியே தான் இருந்தான். இத்துறைக்குப் புதிதான எனக்கு அது பெரிய ஆச்சர்யமாக இருந்தது. ஒரு நடிகையிடம் பணியாற்றும் பரவசமே இல்லாமல் அவனால் எப்படி இருக்க முடியுது என்ற ஆச்சர்யம்தான் அது. எனக்கு அவர் நடிகை என்றாலும் அவனுக்கு அவர் முதலாளி. தினமும் பார்த்துப் பழகிய முதலாளியாக அவர் இருந்ததால் அவனுக்கு அந்த பரவசம் இருந்திருக்காது என்பதைப் பின்னாளில் புரிந்துகொண்டேன்.

ஷூட்டிங்கில், டேக் இடைவேளையின்போது அவர் அங்கிருக்கும் பெரிய ஷோபாவில் அமரும்போது, அவரிடம் சந்தானம் உள்ளிட்ட சிலர் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். நான் அங்கே சற்று தள்ளி நின்று சுவாரஸ்யமாக வேடிக்கை பார்ப்பேன். முதல் நாளில் பங்களாவுக்கு வெளிப்புறத்தில் சூரிய வெளிச்சத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை நிறைய எடுத்தார்கள். அதில் குமரி முத்து, இடிச்சபுளி செல்வராஜ் போன்றோர் நடித்த காட்சிகள் வந்தன. அந்த நேரங்களில் ஷகீலா ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். திரும்ப வெயில் தாழ்ந்தபின்னர் இன்டோர் ஷூட்டிங் வந்ததும் ஷகீலா நடிக்கவேண்டிய காட்சிகளைப் படம்பிடித்தனர். அப்போதும் அவருக்கு பேசவேண்டிய டயலாக்கை விளக்கிச்சொன்னேன்.

எப்படி நடிக்கவேண்டும் என்பதை இயக்குநரும், கேமரா மேனும் அவருக்கு விளக்குவார்கள். டேக் இடையே அங்கிருந்த ஷோபாவில் ஷகீலா அமர்ந்திருந்தபோது நான் அங்கே நின்றுகொண்டிருந்தேன். என்னைப் பார்த்து, “இங்க உக்காருங்க” என்று அருகே அமரும்படி சொன்னார். பொதுவா கிராமத்தானுங்க அறிமுகமில்லாத பெண்களின் அருகே அமர்வதற்கு தயங்குவாங்க… அதுவும் ஷகீலாவே சொல்லும்போது… மிகுந்த தயக்கத்தோடே அவர் அருகே அமர்ந்தேன்.

அவர் அருகே உரசியபடியே அமர்ந்தபோது, இது கனவா இல்ல நனவா என்ற உணர்வுதான். கூடவே மனசாட்சியும், “நீ நடிகை ஷகீலாவை உரசிக்கிட்டு உட்கார்ந்திருக்குற” என்று ‘சிட்டிங்’ கமென்ட்ரி சொன்னது! அன்றைய தினமெல்லாம் ஷூட்டிங்கில் பேசிப்பழகியதால் அனைவரிடமும் சகஜமாகப் பேசத்தொடங்கியிருந்தார் ஷகீலா. அப்பவும் நண்பர்கள்தான் நினைவுக்கு வந்தார்கள். இதெல்லாம் நண்பர்கள் பார்த்தால் என்னவெல்லாம் பேசுவாங்க… எப்படியெல்லாம் கிண்டலடிப்பாங்க… என்ற எண்ணம்தான் மனதில் ஓடியது!

அவர் சகஜமாக தமிழில் பேசுவதைக்கேட்டு, அவரின் மறுபுறம் அமர்ந்திருந்தவர், “மலையாளப்படத்தில் நடிக்கிற நீங்க எப்படி தமிழில் சரளமா பேசறீங்க?” என்று விசாரித்தார். அதற்கு, “நான் தமிழ்ப்பொண்ணு தான்… நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் மெட்ராஸ் தான். எங்க நேட்டிவ் ஆந்திரா நெல்லூர். ஆனால் அதுக்கப்புறம் நாங்க சென்னைக்கு வந்துட்டோம். நான் படிச்சது, வளர்ந்தது எல்லாமே சென்னைல தான். அதனால தமிழ் சகஜமா பேசுவேன்!” என்றார். மேலும், “தமிழ்ப்படத்துலதான் மொதல்ல நடிச்சேன். காமெடி ஹீரோயினாத்தான் நடிக்க சான்ஸ் கிடைச்சது. அதுவும்கூட தொடர்ச்சியா கிடைக்கல. அப்புறமாத்தான் மலையாளப்படத்துல சான்ஸ் கிடைச்சது. தொடர்ந்து மலையாளப்படமா நடிச்சேன். இப்போ மம்மூட்டி, மோகன்லால் படத்தவிட என்னோட படம் நல்லா ஓடுதுன்னு ஏகப்பட்ட பிரச்சனை பண்ணாங்க!” என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போனார்.

ஷகீலா அமர்ந்திருக்கும்போது அவர் அருகே அவரது ஹேண்ட் பேக் இருந்தது. ஓரளவு திறந்தபடியே இருந்தது. அந்த ஹேண்ட் பேக்கில் அப்படி என்னதான் இருக்குமென்ற குறுகுறுப்பு மனதுக்குள் இருந்துகொண்டே இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் அதனுள் பார்த்தபோது, மேக்கப் சாதனங்களுக்கு இடையே வில்ஸ் நேவிகட் சிகரெட் பாக்கெட் ஒன்று இருந்தது. “அட, இவங்க சிகரெட் அடிப்பாங்க போல!” என்று ஏதோ அவர்களின் அந்தரங்க விஷயம் ஒன்று எனக்குத் தெரிந்துவிட்டது போன்ற சந்தோசம் எழுந்தது. ஆனால் அடுத்தடுத்து நட்பாகப் பேசிப்பழகியதும், சிகரெட் அடிப்பது குறித்து அவரே எங்களிடம் சகஜமாகப் பகிர்ந்தார். அதேபோல ஓய்வு நேரத்தில் மது அருந்துவது குறித்த தகவல்களையும் பகிர்ந்தார். அதுகுறித்தெல்லாம் விரிவாகப் பகிர்வது அறமாகாது.

அவர்கூறிய இன்னொரு விஷயம், ஷூட்டிங் டைமிங் குறித்தது. அதாவது, “மாலை 6 மணியானால் ஷூட்டிங்கை பேக்கப் செய்துவிட வேண்டும். அதற்குமேல் போனால் 7 மணிவரை மட்டுமே பொறுத்துப்பார்ப்பேன். அதற்கும்மேலாக ஷூட்டிங் போனால், பேக்கப் செய்யக்கூறிவிட்டு கிளம்பிவிடுவேன்” என்று தடாலடியாகக் கூறினார். அவர் இத்தகவலைக் கூறிக்கொண்டிருந்தபோதே மணி இரவு 7 ஆகப்போனது. அந்நேரத்தில் ஷகீலா நடிக்காத வேறொரு காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தார்கள். அவரோ எங்களோடு பேசிக்கொண்டிருந்தார்.

அவர் 7 மணி கெடு குறித்து சொன்னதுமே இயக்குநரிடம் சென்று, ஷகீலா பேசிய விஷயத்தைச்சொல்லி, நம்ம ஷூட்டிங்கையும் சீக்கிரம் முடிக்கணும் சார் என்று பதட்டத்தோடு சொன்னேன்.

அதைப்புரிந்துகொண்ட இயக்குநரும், “ஷகீலா மேடத்தோட சீன்ஸ் மட்டும் அடுத்தடுத்து சீக்கிரமா எடுங்க!” என்று அவசரப்படுத்தினார். உடனே ஷகீலா மேடத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஷூட்டிங் என்பது என்னதான் திட்டமிட்டாலும் ஏதேனும் காரணத்துக்காக டேக் மேல் டேக் என்று தாமதப்படுவதைத் தவிர்க்க முடியாது. அப்படியே தாமதமாகி, 7 மணி, 8 மணி, 9 மணி என்றாகி இரவு 10 மணியானது அன்றைய ஷூட்டிங் முடிய! ஆனால் ஆச்சர்யம், ஷகீலா மேடம் ஏதும் பிரச்சனை செய்யவில்லை. ஷூட்டிங் முடிந்ததும் அவரிடம் அதுகுறித்து கேட்டபோது, “இந்த காமெடி நாடகத்துல நடிக்க பிடிச்சிருந்தது. என்னோட கேரக்டர் நல்லாருந்துச்சு. அதான் எனக்கு டைம் போனது ஒண்ணும் தோணல!” என்று கூறினார். அனைவருக்கும் சந்தோசம்!

மறுநாள் காலையில் அவர் ஷூட்டிங் வந்தபோது அவர் குறித்த பதட்டம் சற்று தணிந்திருந்தது. அன்றைய ஷூட்டிங் இடைவேளையில் அவர் கூறிய ஒரு செய்தி, அவர்குறித்த எனது பிம்பத்தையே மாற்றிவிட்டது. அந்த ஷூட்டிங்கில் ஷகீலாவின் தம்பியாக நடித்த சந்தானம், ஷகீலாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தனது தம்பி குறித்த நினைவுகளுக்குள் போனார். “என்னோட தம்பிக்கு நிறைய ப்ரன்ட்ஸ் இருக்காங்க. அவங்களோட ஊர் சுத்திக்கிட்டே இருப்பான். ஆனால் எங்கிட்ட மட்டும் ரொம்ப பயப்படுவான்.

நான் ரொம்ப கண்டிப்பான அக்கா. அதனால நான் அவன அதட்டுறதுக்கு பயந்துகிட்டு எம்பேச்சைத் தட்டவே மாட்டான்!” என்று கூறியபோது அவர்மீதான எனது பிம்பம் முழுவதும் அப்படியே நொறுங்கிப்போனது. 18+ படத்தில் நடிக்கும் நடிகை என்றாலே அவருக்கும் குடும்பத்துக்குமான உறவே இருக்காது என்றும், குடும்பத்தால் ஒதுக்கப்பட்டவராகவும், குடும்பத்தையே மதிக்காதவராகவும்தான் வாழ்வார் என்றிருந்த எனது மனப்பிம்பம் உடைந்தது.

அவர் தனது தம்பி குறித்தும், குடும்பம் குறித்தும் பேசும்போதெல்லாம், மிகவும் பெருமிதமாகவும், பூரித்த முகத்துடனும் காணப்பட்டார். அப்போதுதான் அவர்களுக்கும் குடும்ப வாழ்க்கைமீதான பற்றுதல் இருக்கும், அதுகுறித்த சிந்தனை, கனவெல்லாம் இருக்குமென்பதை உணர முடிந்தது. ஆம், அவர்களும் நம்மில் ஒருவரே… அவர்களது தொழில் மட்டுமே சற்று நெருடலானது. மற்றபடி அவர்களின் மனதும் நம் மனதைப்போன்றே சிந்திக்கும் என்பது என் புத்திக்கு எட்டியது.

அவர்போன்ற நடிகைகளைக் குறைவாக நினைத்துக்கொண்டே அத்தகைய படங்களைப் பார்த்து ரசிக்கும் நாம் மட்டும் உயர்ந்தவர்களா என்ற கேள்வியும் எழுந்தது. இப்படி எத்தனையோ கலவையான உணர்வுகளை அந்த இரண்டு நாட்களில் அனுபவிக்க நேர்ந்தது. ஷூட்டிங் முடிந்து அந்த நாடகம் ஒளிபரப்பானபோது நான் அதை டிவியில் பார்த்தாலும் பெற்றோரிடமோ, உறவினர்களிடமோ அந்த நாடகத்தின் ஷூட்டிங்கில் நான் கலந்துகொண்டது பற்றி கூறவேயில்லை. என்ன இருந்தாலும் சமூகத்தின் பார்வை சராசரியானது தானே. எனது நண்பர்களைச் சந்திக்கும்போது மட்டும் அந்த கணங்களைப் பகிர்ந்துகொண்டேன்… “ஷகீலாக்களுக்கும் மனது உண்டு!” என்ற ஒற்றை வரியை அந்த இரண்டு நாட்களில் கற்றுக்கொண்டேன்! மகிழ்ச்சி!

– வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More