Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் வெற்றிப் படங்களின் வசனகர்த்தா ஆரூர் தாஸ்

வெற்றிப் படங்களின் வசனகர்த்தா ஆரூர் தாஸ்

2 minutes read

திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலிகள். தமிழில் பெரும் வெற்றியும் பெற்ற அநேகத் திரைப்படங்களின் வசனகர்த்தா இவர்.

இருபது வயதில் எழுத ஆரம்பிக்கும் இவர் முப்பதுவயதுக்குள் இரவும் பகலுமாக எழுதியிருக்கிறார். சிவாஜி , எம்ஜிஆர், ஜெமினி கணேசன் மூவருக்கும் ஆஸ்தான எழுத்தாளராக இருந்தவர். ஒரு நாளில் தூக்கமே மூன்று மணி நேரம் தான் …இப்படி பதினைந்து வருடங்களாக எழுதிக் கொண்டே இருந்தவர். பாசமலர் படத்துக்கு இவர் எழுதுகிறபோது வயது 22. அடுத்தடுத்து பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார், படித்தால் மட்டும் போதுமா, என இயக்குனர் பீம்சீங் மற்றும் ஏ.சி திரிலோகசந்தர் படங்களுக்கு எழுதுகிறபோதே தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு படங்களில் எம்ஜிஆருக்கு எழுதிக் கொண்டிருந்தார்.

எழுதிய பெரும்பாலன படங்கள் நூறு நாட்களைக் கடந்து ஓடின. ஒரு படத்தின் கதை என்ன, கதாபாத்திரங்களின் தன்மை, யார் இயக்குகிறார்கள், குறிப்பாக யார் நடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து எழுதப்படும் வசனங்கள் இவருடையது. சிவாஜியின் ‘பாசமலர்’ வசனம் போல இருக்காது எம்ஜிஆரின் ‘தாய் சொல்லைத் தட்டாதே’…இரண்டுமே உணர்ச்சிக் காவியங்கள்.

இரு மலர்கள், புதிய பறவை , அன்பே வா போன்ற படங்கள் அப்போதைய நவீனத்துவ பாணி படங்கள். அதற்கு இவர் எழுதிய வசனங்கள் சற்று சுருக்கமும், கூர்மையும் கொண்டவை. இவருடைய படங்களில் கதாபத்திரங்கள் தங்களுக்குள் கிண்டலும் நக்கலும் செய்து கொள்வார்கள்…அத்தனை நன்றாக இருக்கும் கேட்பதற்கு..

எடுத்துக் கொண்ட அத்தனை படங்களும் வெவ்வேறு கதைக்களன்களைக் கொண்டவை. தெய்வ மகன் படம் அப்பா மகனுக்கான முரண்களைக் கொண்டது. அப்பாவே மகனை அவலட்சணம் என்று நினைத்து புறக்கணித்திருப்பார், அப்பாவைத் தேடி மகன் வந்து அவரை நோக்கி கேள்விகள் எழுப்புவான்..நின்று ஆடியிருப்பார் ஆரூர் தாஸ்.

பின்னாட்களில் Tomorrow Never Dies, Mask போன்றபடங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும்போது அதற்கு வசனங்களை தமிழில் எழுதியது ஆரூர்தாஸ் தான். வசனங்களை அருமையாக ‘தமிழ்படுத்தியிருப்பார்’. இந்தப் படங்கள் எல்லாம் தமிழகத்தின் மூலைகளிலும் கூட திரையரங்குகளில் வசூலைக் குவித்ததற்கு முக்கிய காரணம் இவரது வசனங்களாக இருந்தன.

ஆரூர் தாஸ் அவர்களின் உழைப்பும் தொழில் மேல் கொண்டிருந்த அர்ப்பணிப்பும் குறிப்பிட வேண்டியது. இரவெல்லாம் எழுதுபவர்,மறுநாள் தான் எழுதிய படங்களில் முக்கிய காட்சிகளை படம்பிடித்தால் அதற்கு வசனம் கற்றுத் தரும் பணியை சளைக்காமல் செய்தவர். எழுதிய ஆயிரம் படங்களின் வசனங்களும் தனக்கு மனப்பாடமாக இருந்ததை அவர் நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். தன் வசனங்களுக்கான உந்துதலை பைபிள் கதைகளிலும், புராணங்களிலும் பெற்றிருந்ததாக அவர் தன்னுடைய சுயசரிதையான நிழலும் நிஜமும் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அதே போல அவர் படங்களில் எங்கேனும் வாய்ப்புக் கிடைத்தால் தமிழ் மொழி குறித்து பெருமை சொல்வதை அவர் தொடர்ந்திருக்கிறார்.

சிவாஜி அவர்களுக்கு வசனம் எழுதுங்கள் என்று ஆரூர் தாஸை சிவாஜிக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் ஜெமினி கணேசனும், சாவித்திரியும். அவர்கள் இருவரின் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்.

திரைக்கதை எழுதுதலும் வசனங்களும் எந்தளவுக்கு படைப்பூக்கம் கொண்டதோ அதே அளவு பயிற்சியால் மேம்பட வேண்டியது என்பதும் திரைப்படங்களுக்கு எழுத வருபவர் தர வேண்டிய உழைப்பே அதோடு எழுதி வாழ்வது தான் என்பதும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு மூத்தோராக இருந்து அவர் சொன்ன அறிவுரை.

நாற்பது ஆண்டு காலத்திற்கு மேல் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்திருக்கிறார் என்பதே அவரது பெரும் சாதனை. தலைவர்கள் தாமாக உருவாகக்கூடும். நாயகர்கள் தாமாக உருவாவதில்லை, அவர்களுக்கு பின்புலமாக ஒரு குழு தங்கள் திறமையைக் காட்ட வேண்டியிருக்கிறது. அந்தக் குழுவில் பிரதானமாக ஒரு தலைமுறைக்கு ஆரூர் தாஸ் இருந்திருக்கிறார்.

தீபா ஜானகிராமன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More