Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் வீட்டிலேயே ஹேர் கலரிங் பண்றீங்களா | இந்த 4 விஷயங்களை மறந்துடாதீங்க!

வீட்டிலேயே ஹேர் கலரிங் பண்றீங்களா | இந்த 4 விஷயங்களை மறந்துடாதீங்க!

2 minutes read

ஒரு மனிதனின் தோற்றமே, அவனுக்குள்ளான தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பூஸ்டர். அந்தப் பட்டியலில் ஹேர் டைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.

மாசத்துக்கு இரண்டு தடவ பார்லருக்கோ சலூனுக்கோ போனோமா… தலையக் குடுத்தோமா… குனிஞ்சு செல்போன நோண்டினோமான்னு இருந்தவங்கள, தலை குனியும்படியா செய்திருச்சு இந்த கொரோனா வைரஸ். மனிதர்களின் அத்யாவசிய தேவைகளுக்கு மட்டுமே ஊரடங்கு நாள்களில் அனுமதியளிக்கப்பட்டிருக்கும் நிலையில், தலை போகிற காரியமான ஹேர் டை பற்றி யாரும் கவலைப்படவில்லை.

ஒரு மனிதனின் தோற்றமே, அவனுக்குள்ளான தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பூஸ்டர். அந்தப் பட்டியலில் ஹேர் டை-க்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. இன்று பியூட்டி பார்லர், சலூன் என்று எதுவும் இயங்காத நிலையில், வீட்டிலேயே ஹேர் கட் முதல் ஹேர் கலரிங்வரை செய்யத் தொடங்கிவிட்டனர் மக்கள். போதாக்குறைக்கு, அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றிவிடுகின்றனர். வீட்டில் ஹேர் டை அடிக்கும்போது, சில விஷயங்களில் கவனம் தேவை என்று எச்சரிக்கின்றனர் சரும மருத்துவர்கள். வீட்டிலேயே ஹேர் டை செய்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான நான்கு விஷயங்களை விளக்குகிறார், சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

 

இயற்கையே சிறந்தது!

மருதாணி, அவுரி இலைப்பொடி, செம்பருத்தி, டீ டிகாக்ஷன் போன்ற இயற்கையான பொருள்கள் சேர்த்த கலவையை ஹேர் டையாகப் பயன்படுத்துவதே சிறந்தது. கடைகளில் கிடைக்கும் ஹேர் டைகளில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாராபினைலின்டையமின் (paraphenelenediamine (PPD) உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்திருக்கும். இதனால் மண்டை ஓட்டில் ஒவ்வாமை, அரிப்பு, சிவந்துபோதல், நீர்க்கசிவு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மண்டை ஓட்டுப் பகுதி மட்டுமில்லாமல் முகம், காது போன்ற பகுதிகளிலும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். ஹேர் டை எப்போதெல்லாம் தலையில் படுகிறதோ அப்போதெல்லாம் இந்த ஒவ்வாமைகள் ஏற்படும்.

 

மருத்துவரை அணுகுவதில் சிக்கல்!

கடைகளில் வாங்கும் ஹேர் டைகளினால் ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டால், மருத்துவரின் பரிந்துரையோடு ஒவ்வாமை மற்றும் அலர்ஜியைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். லாக்டௌன் நேரத்தில் சரும மருத்துவர்களிடம் ஆலோசனைக்குச் செல்வது சிரமமான காரியம். மருத்துவரை டெலி மெடிசின் மூலம் அணுக முடிந்தால் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பிரச்னைகளையெல்லாம் தவிர்க்க விரும்புவோர், இயற்கையான ஹேர் டைகளுக்கு மாறிவிடுவது நல்லது.

 

ரசாயனம் இல்லாத டை!

இயற்கையான டைகளுக்கும் வழியில்லை என்றால் PPD என்ற ரசாயனமில்லாத (PPD free) ஹேர் டைகளைக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தலாம். அந்த டையை தலைமுடிக்குப் பயன்படுத்துவதற்கு முன்பாக, காதின் பின்னால் சிறிய இடத்தில் தடவி 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

10 நிமிடங்களுக்குப் பிறகு சருமம் சிவந்துபோதல், எரிச்சலுணர்வு போன்றவை ஏற்பட்டால், அது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்று அர்த்தம். அப்போது அதைப் பயன்படுத்தக்கூடாது. 10 நிமிடங்களுக்குப் பிறகு பிரச்னை எதுவும் ஏற்படவில்லை என்றால், அதனைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். சோரியாசிஸ், எக்ஸீமா (Eczema) போன்ற சருமம் சார்ந்த பிரச்னையுள்ளவர்கள், அனைத்து டைகளையும் தவிர்த்துவிட வேண்டும்.

 

சைனஸ் தொந்தரவு

சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள், ஹென்னா அல்லது ஹேர் டையை தலையில் பூசிவிட்டு அதிக நேரம் காத்திருக்கும்போது அதிலிருக்கும் ஈரப்பதம் பிரச்னையை அதிகரிக்கலாம். அதனால் சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் அதிக நேரம் ஹேர் டையை தலையில் பூசி வைத்திருக்காமல், குறைவான நேரத்தில் முடியை அலசிவிட வேண்டும். ஈரத்தலையுடன் அதிக நேரமிருக்காமல் வேகமாக உலர்த்திவிடவும் வேண்டும்.

 

நன்றி : ஜெனி ஃப்ரீடா | விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More