Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் விதியோடும் மதியோடும் | சிறுகதை | விமல் பரம்

விதியோடும் மதியோடும் | சிறுகதை | விமல் பரம்

8 minutes read

‘அமரர் செம்பியன் செல்வன்’ ஞாபகார்த்தமாக ஞானம் சஞ்சிகை நடாத்திய சிறுகதைப்போட்டி 2019 ல் இச் சிறுகதை பாராட்டு பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

 “அம்மா நான் ரகுவரன் கதைக்கிறன் எப்பிடியிருக்கிறீங்கள் சுகமாயிருக்கிறீங்களே”

தொலைபேசியினூடாக வந்த குரலைக் கேட்டதும் நெஞ்சு பதறியது எனக்கு.

“ரகு நீயா… எப்பிடியடா இருக்கிறாய். உன்னைப்பார்த்து, உன்ர குரலைக்கேட்டு எத்தனை வருசமாச்சு இந்த அம்மாவை மறந்திட்டியே…” சொல்லும்போதே அழுகை வந்தது.

“லண்டனிலயிருந்து வந்து மலர் வீட்ட வவுனியாவில நிக்கிறன். நாளைக்கு உங்களைப் பார்க்க பரந்தனுக்கு பிள்ளைகளோடு வாறனம்மா” ரகு சொன்னதைக் கேட்டதும்

“பிள்ளைகளா…. எத்தனை பேரடா. பிள்ளைகள் பிறந்தது எனக்குத் தெரியாதே” குரலில் கோபத்தைக் காட்டினேன்.

“இரண்டு பேரம்மா பார்த்தால் சந்தோஷப்படுவீங்கள்”

“கூட்டிவாடா, உன்னையும் பார்க்க ஏங்கிக் கொண்டு இருக்கிறன்”

“சரியம்மா. நாளைக்கு வாறன் உங்களோட இரண்டு கிழமை நிற்பன். நிறைய கதைக்கலாம் சந்தோஷம் தானே” என்னால் நம்பமுடியவில்லை.

பத்து வருசம் ஒரு தொடர்புமில்லாமல் எங்கேயிருக்கிறான் என்றும் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த எனக்கு திடீரென அவன் குரலைக் கேட்டதும் தாங்கமுடியவில்லை. எத்தனை இரவுகள் அவனை நினைத்து மனம் நொந்து அழுதிருக்கிறேன். இவ்வளவு நாளும் வராதவன் இனி வருவானா என்று நினைத்திருக்க நாளை வருவதாகச் சொன்னானே பாசமில்லாமலா வருவான்.

எங்களுக்குச் சொந்தமாய் இருபோகம் விழையக்கூடிய இருபது ஏக்கர் வயல் இருந்ததினால் குத்தகைக்கும் வயலெடுத்து என் கணவர் விவசாயமே செய்து வந்தார். வசதியிருந்ததினால் அவன் கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து செல்லமாய் வளர்த்தோம்.

ஊரிலுள்ள பாடசாலையில் நான் ஆசிரியையாக இருந்ததினால் தொடக்கத்திலிருந்து பத்துவரை என் கவனிப்பில் அங்குதான் படித்தான். படிப்பிலும் கெட்டிக்காரன்.

ஏ எல் படிக்க கிளிநொச்சி மத்தியகல்லூரியில் சேர்த்த அந்த வருசம் அறுவடை நேரம். நெல் அறுவடைக்குத் தயாரானபோது தொடர்ந்து இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையில் வயலே வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. போதாததற்கு இரணமடுக்குளத்தின் பலகைகளையும் திறந்துவிட வெள்ளம் அலைபாய்ந்தது. வெள்ளத்தில் பிள்ளைபோல் வளர்த்த பயிர்கள் மூழ்கி அழிந்ததைப் பார்த்து தாங்கமுடியாமல் நெஞ்சு வலிக்குது என்று படுத்தவருக்கு இதயமே நின்றுவிட்டது.

அவர் இழப்பு பெரிய இடியாய் தாக்க துவண்டு போனேன். தந்தையின் அன்பும் வழிநடத்தலும் தேவைப்படும் இரண்டும் கெட்டான் வயது ரகுவுக்கு. பக்கத்து வீட்டிலிருக்கும் அண்ணா, அண்ணியின் ஆதரவில் கவலை தாங்கி தேறியெழ அவனைப் பற்றிய நிறைகுறைகள் காதில் விழத் தொடங்கியது. பெரிய பாடசாலையில் சேர்ந்ததும், ஏ எல் படிப்பதும், தான் பெரியவன் என்ற நினைப்பு அவனுக்கு. என்ன சொன்னாலும் எதிர்த்துக் கதைக்கத் தொடங்கினான். படிப்பில் கவனம் குறைந்தது.

“என்னம்மா நான் என்ன சின்னக்குழந்தையா. படி படியெண்டு சொல்லிக் கொண்டிருக்கிறீங்கள். எனக்குத் தெரியும் படிக்க” கோபத்தோடு கத்தினான்.

“எனக்கு நீதானேயிருக்கிறாய் படிச்சு யூனிவர்சிட்டி போகவேணுமடா” அழுகையோடு சொன்னேன்.

“அழாதேங்கோ நான் படிக்கிறன்” என்றான்.

எனக்கு மாதவருமானம் இருந்ததால் செலவுகளுக்கு கஷ்டமிருக்கவில்லை. வயலையும் குத்தகைக்குக் கொடுத்துவிட்டால் ரகுவின் படிப்பு செலவுகளை சமாளிக்கலாம் என்று அண்ணாவிடம் கேட்டேன்.

“குத்தகைக்குக் குடுக்க வேண்டாம். என்ர வயலோட சேர்த்து செய்யிறன் போட்ட காசை எடுத்திட்டு லாபத்தை தாறன். நீ நிம்மதியாய் இரு” அண்ணா சொன்னது ஆறுதலாகயிருந்தாலும் ரகுவை நினைக்க கவலையாயிருந்தது.

“வீட்டில ரீயூசனுக்கு ஒழுங்கு செய்யிறன் படி” என்றேன்.

“வீட்டில வேண்டாம் நான் ரீயூசன் சென்டரில சேர்ந்து படிக்கிறன்” என்றான்.

ஒருமுறை ரகுவின் ஆசிரியரை சந்தித்தபோது,

“ரகுவைப்பற்றி உங்களோட கதைக்கவேணும். படிப்பிலையும் கவனமில்லை, சொல்லுறதும் கேட்கிறதில்லை. வீட்டில கவனியுங்கோ” என்றார்.

அவன் வீட்டிலிருக்கும்போதும், படிக்கும்போதும் என் பொழுதுகளை அவனோடு கழித்தேன். படிப்பதாகச் சொன்னாலும் படிப்பில் முழுக்கவனமும் இல்லையென்று தெரிந்தது. கேட்டால்

“இதுக்குமேல கஷ்டப்பட்டு படிக்க என்னால ஏலாது” என்பான்.

“படிக்கிற வயதில கஷ்டப் பட்டுத்தான் படிக்க வேணும்”

“அவன் எங்க படிக்கிறான் படிக்கிறன் எண்டு சொல்லி ஒவ்வொரு நாளும் பெடியளோட ஊர் மைதானத்தில விளையாடுறான்” அவ்விடத்திற்கு வந்த அண்ணா சொன்னார்.

“நெடுகவும் படிக்க ஏலுமே விளையாடவும் வேணும்தானே”முறைத்தபடி சொன்னான்.

“எக்ஸாம் வருகுது இப்ப படி பிறகு விளையாடலாம்”

எக்ஸாமும் நடந்து றிசல்டும் வந்தது. பாஸ் பண்ணுவான் என்று நினைக்க ஒரு பாடம்தான் வந்தது. அழுதுகொண்டிருக்கும் அவனிடம் என் கோபத்தைக் காட்ட முடியவில்லை.

அன்று அண்ணாவும், அண்ணியும் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.

“படியாமல் ஒண்டும் செய்யேலாது வீட்டில ரியூசனுக்கு ஒழுங்கு செய்யிறன். இரண்டாம் தரம் எடு” என்றேன் ரகுவிடம்.

“என்னோட படிக்கிற பெடியள் எல்லாம் யாழ்ப்பாணம் போய் படிக்கப்போறாங்கள். நானும் போய் அங்க படிக்கப் போறன்” என்றான்.

“இங்க படிக்காமல் பெடியளோட திரிஞ்சாய். யாழ்ப்பாணம் போய் எப்பிடிப் படிப்பாய்” அண்ணா கேட்டார்.

“நீங்கள் மட்டும் கலாவை அங்கைவிட்டு படிப்பிக்கலாம் நான் மட்டும் போகக்கூடாதோ. நான் அங்கதான் படிப்பன்” பிடிவாதமாய்ச் சொன்னான்.

அண்ணாவின் மகள் கலா நாலுவருசமாய் அண்ணியின் அக்காவோடு யாழ்ப்பாணத்திலிருந்து படிக்கிறாள்.

“என்னவோ யோசிச்சுச் செய் பார்வதி. அவனாய் நினைச்சுப் படிக்கவேணும் இல்லாவிட்டால் தனிய அனுப்பாதை” என்றார்.

“நான் படிச்சு பாஸ் பண்ணுவன் என்னை விடுங்கோ”

அவன் விருப்பப்படியே யாழ்ப்பாணம் போனான். மூன்று மாதத்தில்,

“இப்ப படிக்கிற ரியூசன் சென்டரைவிட இன்னொரு இடத்தில நல்ல படிப்பாம் அம்மா. வேற இரண்டு இடத்தில பேப்பர்கிளாஸ் தொடங்கப்போகுது அதிலயும் சேரவேணும்” என்றான். பணம் அனுப்பி வைத்தேன். அந்த வருசம் பாஸ் பண்ணினாலும் யூனிவர்சிட்டி ஒன்றும் கிடைக்கவில்லை.

“இன்னொருதடவை எடு படியாமல் என்ன செய்யப்போறாய்“ என்றேன். ஒரு வேலையும் செய்யாமல் வீட்டிலிருப்பதும் பின்னேரங்களில் பெடியளுடன் விளையாடுவதுமாய் பொழுதைக்கழிக்கும் அவனைப்பார்க்க கவலையாகயிருந்தது.

“நான் வயல் செய்யப்போறன். மாமாவிட்ட சொல்லுங்கோ” என்றான்.

“வயலைப்பற்றி உனக்கென்ன தெரியும். எப்பவாவது வயல் பக்கம் வந்தனியே. என்னோட வயலுக்கு வந்து எல்லாத்தையும் பழகு. பிறகு தனிய வயல் செய்யலாம்” அண்ணா சொன்னார். முதல் மறுத்தாலும் அண்ணாவோடு வயலுக்குப் போனான். இருவருக்கும் பிரச்சனைகள் வரும் முறுக்கிக்கொண்டு வருவான். மூன்று வருசம் வயல் செய்தான் இனி ஒழுங்காய் இருப்பான் என்று நினைக்க,

“கதிரவேலு மாஸ்டரின்ர மகளோட கதைச்சுக்கொண்டு திரியிறான். நாலைஞ்சு இடத்தில கண்டிட்டுக் கேக்க தன்னோட படிச்சபிள்ளை அதுதான் கதைச்சனான் எண்டான். எனக்கென்னவோ சும்மா கதைச்சமாதிரி தெரியேல” என்றார் அண்ணா. மனம் திக்கென்றது. இது என்ன புதுப்பிரச்சனை என்று நினைக்க திடீரென ஒருநாள்,

“வயல் செய்யிறது கஷ்டமாயிருக்கு நான் வெளிநாட்டுக்குப் போகப்போறன்” என்றான்.

“ஒண்டையும் ஒழுங்காய் செய்யமாட்டாய். படிக்காமல் வெளிநாட்டுக்குப் போய் கூலிவேலை செய்யப் போறியோ எப்பிடிப் போவாய்” அண்ணா கேட்டார்.

“என்ர ப்ரெண்ட் ஏஜென்சி மூலம் லண்டன் போனவன் நாப்பது லட்சம் முடிஞ்சுதாம் நான் எல்லாம் விசாரிச்சனான்” என்றான்.

“என்னது நாப்பது லட்சமா காசுக்கு என்னடா செய்யிறது. அம்மா எங்கேடா போவா”

“வயல் இருக்குத்தானே அதை வித்து கடனும் வாங்கலாம். நான் உழைச்சுக் குடுப்பன்” என்றான்.

“வயலை விக்கப் போறியோ நல்ல விளைச்சல் காணி அதை விக்கவேண்டாம்” என்றேன்.

“நெடுகவும் வயலோட கஷ்டப்பட ஏலாது. நான் வெளிநாட்டுக்குப் போகப்போறன்”

கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னான். அதன்பின் அவன் இயல்பு மாறிவிட்டது. வீட்டில் இருப்பதேயில்லை. இருந்தாலும் சாப்பிடுவதில்லை. எதற்கெடுத்தாலும் சண்டைதான்.

“என்ர எதிர்காலத்தைவிட உங்களுக்கு சொத்துத்தானே பெரிசாப்போச்சு” அவன் என்னைப் பார்த்து கேட்டதும் உடைந்து போனேன். இந்தநேரங்களில் கணவரின் இழப்பு என்னைப் பயங்கரமாய் தாக்கும்.

அண்ணா மூலம் ரகு சொன்ன ஏஜென்சியுடன் கதைத்து உண்மைதான் என்று அறிந்து வயலை வித்து, பாங்கில் சேர்த்துவைத்த பணத்தை எடுத்தாலும் பணம் போதவில்லை. என் நகைகளையும் வித்த பின்பும் எட்டு லட்சம் தேவைப்பட்டது. தெரிந்தவர்களிடம் கேட்டும் கிடைக்கவில்லை. நாட்கள் போய்க்கொண்டிருந்தது. ரகு அவசரப்பட்டுக் கொண்டிருந்தான்.

“நாலு நாளில காசு குடுத்திட்டால் அடுத்த குறூப்போட என்னையும் அனுப்புவினம் என்னம்மா செய்யிறது” என்றான்.

“சரி, முப்பத்திரண்டு லட்சம் ஒழுங்கு செய்தாச்சு மற்றக்காசுக்காக பிந்தவேண்டாம் கலாவின்ர கலியாணத்துக்கு சேர்த்து வைச்ச காசை எடுத்துத்தாறன். அவளின்ர படிப்பு முடிய இரண்டு வருசம் இருக்கு பிறகு கலியாணத்திற்கு தந்திடுவாய்தானே” என்றார் அண்ணா.

இதை நான் எதிர்பார்க்கவில்லை . அண்ணியும்

“அதில எடுக்கவேண்டாம்” என்று சொன்னாள்.

“நாங்களும் ஏதாவது உதவி செய்யவேணும் அவன் தருவான்” என்றார்.

“ஓம் மாமா, கட்டாயம் தருவன்” என்றான் ரகு உடனே.

ரகு போன மூன்றுவருடங்களுக்குப்பின் கலாவின் திருமணத்திற்கு பணத்தைக் கேட்க ஒரு லட்சத்தை அனுப்பிவிட்டு தனக்கு கஷ்டம் முழுதும் அனுப்பமுடியாது என்று சொன்னான். அதுவரை கதைத்துக்கொண்டிருந்தவன் போன் எடுப்பதையே நிறுத்திவிட்டான். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தெரிந்தவர் மூலம் விசாரித்தபோது ஊரில் இருந்தபோது விரும்பின பிள்ளையும் ஏஜென்சி மூலம் அவனிடம் வந்தது என்றும் லண்டனை விட்டு தூரமாய்ப் போய் இருப்பதாகச்சொல்லி அவர்கள் போனபின் தனக்கும் தொடர்பு இல்லை என்று சொன்னார்.

எனக்குத் தெரியாமல் கலியாணம் செய்தானா….. சொல்லியிருக்கலாமே மனம் துடித்தது.

கலாவின் திருமணமும் நடந்து லண்டன் போனாள். அவளும் அவனைச் சந்திக்கவில்லை. இந்தப் பத்து வருடங்கள் அவனோடு எந்த தொடர்புமில்லை. என்னைவிட்டு அவனால் எப்பிடி
இருக்கமுடியுது. அழுது அழுது தேறி வாழக் கற்றுக் கொண்டேன். வயோதிகத்தின் காரணமாய் அண்ணாவும் போய்சேர அண்ணியும் நானும் தனிமையானோம். இறுதிச்சடங்குக்கு கலா வந்தபோது என்னிடம்,

“மாமி, அம்மாவை என்னோட வரச்சொல்ல உங்களை விட்டிட்டு வரேலாதாம். ரகு வரட்டும் அல்லது கதைக்கட்டும் பிறகு வாறன் எண்டு சொல்லுறா. நான் அம்மாவுக்கு விசா போட்டு கிடைச்சால் வீட்டை வித்திட்டு அம்மாவைக் கூட்டிக்கொண்டு போக நினைச்சனான். லண்டனில வீடு வாங்கப்போறன். அம்மா உங்களோட இருக்கப்போறாவாம். எப்ப வாறன் எண்டு சொல்லுறாவோ நான் வந்து கூட்டிக்கொண்டு போறன்” என்றாள்.

“தனியத்தானே இருக்கிறன். அம்மா என்னோட இருக்கட்டும். நீ வீட்டை வித்து அங்க வாங்கு”என்றேன். வீட்டை விற்று அதில் ஒரு பங்கை அண்ணி பெயரில் மாதவருமானம் வருமாறு சேமிப்பில் போட்டாள். அண்ணியோடு இருப்பது ஆறுதலாகயிருந்தது.

மழைக்காலம். மழை விடாது பெய்துகொண்டிருந்தது. பக்கத்து வீட்டு குடிசையிலிருக்கும் ஆச்சியின் நடமாட்டத்தைக்காணவில்லை. அடிக்கடி வந்து கதைத்துக் கொண்டிருப்பாள். சொந்தமென்று யாருமில்லை. போய்பார்த்தபோது காய்ச்சலும் நடுக்கமுமாய் படுத்திருந்தாள். கைத்தாங்கலாய் வீட்டுக்குக் கூட்டிவந்தோம். காய்ச்சல் மாறி எழுந்து நடக்க ஒரு கிழமையானது.

“எங்களோட இருங்கோ ஆச்சி தனியப் போயிருக்க வேண்டாம்” என்றேன்.

“உங்களுக்கு கரைச்சல் பிள்ளை நான் போறன்” என்றாள்.

“இந்த பெரியவீட்டில, தனிய இருக்கிறனாங்கள் ஒருத்தருக்கொருத்தர் உதவியாயிருப்பம்”

சந்தோஷமாய் தலையாட்டினாள். சேர்ந்திருந்தாலும் மனம் எப்போதும் ரகுவையே தேடியது

இன்று அவன் குரலைக்கேட்டதும் உடைந்துவிட்டேன். அண்ணியிடம்

“ரகு கதைச்சவன். நாளைக்கு பிள்ளைகளோட வாறானாம்” அழுகுரலில் சொன்னேன்.

“வரட்டும் வரட்டும் இப்ப சந்தோஷம்தானே” என்றாள் அண்ணி.

அடுத்தநாள் என்னால் ஒருவேலையும் செய்ய முடியவில்லை. வாசலுக்கும் வீட்டுக்குமாய் அலைந்து கொண்டிருந்தேன்.

“அவனுக்காகத்தானே தவமிருந்தாய் வருவான் அலையாத இதில இரு. நாங்கள் சமைக்கிறம்” ஆச்சி சொல்லிவிட்டு அண்ணியோடு சமைக்கப் போனாள்.

காரில் வந்து இறங்கியவர்களை கட்டி அணைத்துக்கொண்டேன்.

“என்னைப் பார்க்காமல் பேசாமல் எப்பிடியடா உன்னால இருக்க முடிஞ்சுது. அப்பிடி என்னடா உனக்கு குறைவைச்சன்” அழுகையை அடக்கமுடியவில்லை. பேரப்பிள்ளைகளைப் பார்த்தேன். பத்து வயதும் எட்டு வயதும் இருக்கும். இவர்களோடு இருக்கும் சந்தோஷங்களையும் தவறவிட்டு மருமகளோட பழகும் வாய்ப்பையும் இழந்து தனிய தவித்துக் கொண்டு இருந்திருக்கிறேன்.

“கதைக்கவேணும் எண்டு நினைக்கிறதம்மா, நிறைய பிரச்சனைகளும் கஷ்டங்களும் விசா பிரச்சனையால வேலையும் செய்யமுடியாமல் ஒளிச்சுத் திரிஞ்சு பசி பட்டினியோட கஷ்டப்பட்டுப் போனன். இப்ப விசா கிடைச்சாலும் ஓடி ஓடி வேலை செய்தாலும் கஷ்டம்தானம்மா. போய் எவ்வளவு நாளாச்சு சொந்தமாய் ஒரு வீடில்லை வாடகை வீட்டிலதான் இருக்கிறம்”

“அதுக்கு போன் எடுத்து கதைக்கக்கூடாதா. உன்ர குரலுக்காக எத்தனை நாள் ஏங்கியிருக்கிறன்”

“நானும் அம்மாவோட கதையுங்கோ எண்டு சொன்னனான் மாமி” என்றாள் மருமகள் மலர்.

“தம்பி கதைக்காவிட்டால் நீங்களாவது எடுத்து கதைச்சிருக்கலாம்” என்றதும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துவிட்டு பேசாமல் இருந்தார்கள் .

“மாமி என்னோடதானே, பக்கத்து வீட்டு ஆச்சிக்கும் ஒருத்தருமில்லை இங்கதானிருக்கிறா. எங்களுக்கும் உதவி” என்றேன்.

“கனகாலத்துக்குப் பிறகு போன மாதம் கலாவைக் கண்டனான் வீட்டை வரச்சொல்லிப் போனபோது மாமி உங்களோட இருக்கிறா எண்டு சொன்னவள் சொந்தமாய் வீடு வாங்கியிருக்கிறாள். வடிவான வசதியான வீடு” என்றான்.

பக்கத்திலிருந்து சந்தோஷமாய்ச் சிரித்துக் கதைக்கும் ரகு, மலரின் முகங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிள்ளைகளும் எனக்கு அருகிலிருந்தார்கள். இதுக்குத்தானே ஆசைப்பட்டேன். ஒரு கிழமை எப்படி போனதென்று தெரியவில்லை சந்தோஷமாயிருந்தது.

அன்று பின்னேரம் எல்லோருமிருந்து கதைத்துக் கொண்டிருந்தோம்.

“லண்டனுக்குப் போய் நாலைஞ்சு வீடு மாறி இப்ப இருக்கிற வீட்டிலதான் ஆறு வருசமாய் இருக்கிறம். நல்ல வசதியான வீடு. இப்ப அதை விக்கப் போகினமாம். இனி வேற வீடு தேடவேணும். பேசாமல் இந்த வீட்டையே நாங்கள் வாங்குவம் எண்டு யோசிக்கிறமம்மா”என்றான் ரகு.

“ நல்ல விஷயம்தானே வாங்குங்கோவன்” என்றேன்.

“மலரின்ர அப்பாட்ட மலருக்கு குடுத்த வீட்டை வித்து காசு தரச் சொல்லி கதைச்சனான். அவர் ஓமெண்டு சொல்லி விக்க ஒழுங்கு செய்யிறார். அதுமட்டும் காணாது. இந்த வீட்டையும் வித்தால் வாங்கலாம். கலா, மாமியை இங்க விட்டிட்டு வீட்டை வித்து தான் வீடு வாங்கிட்டாள். நீங்கள் மாமியையும் கிழவியையும் பார்த்துக் கொண்டிருக்கிறீங்கள்” என்றான்.

மனதில் எதுவோ நொருங்கியது போலிருந்தது.

“நீ என்னை விட்டிட்டுப் போயிட்டாய். கலா எனக்காகத்தான் மாமியை விட்டிட்டுப் போனவள் சொன்னால் கூட்டிக் கொண்டு போவாள். வீட்டை வித்தால் நான் எங்க போறது”

“கொஞ்சநாளைக்கு தெரிஞ்சவங்களோட இருங்கோ. நான் வீடு வாங்கின பிறகு வந்து உங்களை லண்டனுக்குக் கூட்டிக் கொண்டு போறன். கடைசிக் காலத்தில எங்களோட இருக்கிறது உங்களுக்கும் நிம்மதியாயிருக்கும்” என்றான்.

“வேண்டாமடா, நான் இந்த வீட்டிலேயே இருக்கிறன். நான் போனாப்பிறகு வந்து வீட்ட வில்லு” என்றேன்.

“உங்களுக்கு விளங்கேலயம்மா. இரண்டு வீட்டையும் ஒண்டாய் வித்தால்தான் அந்த வீட்ட வாங்கலாம். இது பிழைச்சால் அது வித்தும் பிரயோசனமில்லை”

“அதுக்கு நானென்ன செய்யிறது. நானிருக்குமட்டும் விக்க சம்மதிக்கமாட்டன்”

நான் பிடிவாதமாக இருந்தேன்.

அடுத்த நாள் பெட்டிகளோடு புறப்பட ஆயத்தமாக வெளியே வந்தார்கள்.

“சாப்பிட வாங்கோ. பிள்ளைகளுக்கும் சாப்பாட்டை குடுங்கோ” என்றேன்.

“உடன வவுனியா போய் வீட்டை விக்காமல் மறிக்கவேணும். இல்லாட்டா மிச்சக்காசுக்கு அலையவேணும். நாங்கள் போட்டுவாறம்” என்றான்.

வாசல் வரை சென்றவன் சிறிது தயங்கி நின்றான். நான் கூப்பிடுவேன் என்று நினைத்தானோ நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காரில் எல்லோரும் ஏற கார் புறப்பட்டது.

“வராமல் இருந்திருக்கலாம். வந்து உன்ர மனசை நோகப் பண்ணிட்டானே” அண்ணி ஆறுதல் சொன்னாள்.

“இல்லை அண்ணி. எங்கையிருக்கிறான்….எப்பிடியிருக்கிறான்…..இருக்கிறானோ இல்லையோ…. எண்டு நித்தமும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறதை விட அவனைப் பார்த்திட்டன். குடும்பமாய் குழந்தைகளோட சந்தோஷமாய் இருக்கிறான் எண்டு இனி நிம்மதியாயிருப்பன். நான் போனபிறகு வீட்டுக்காக வருவான். எனக்கு பலன் இருந்தால் அவன் கையால கொள்ளி வைக்கட்டும்”

பார்வையில் இருந்து கார் மறைந்ததும் கண்களை அழுந்த தேய்த்து விட்டு என் பழைய இயல்புக்குத் திரும்பினேன்.

“அண்ணி, ஆச்சி சாப்பிட வாங்கோ நேரமாச்சு பசிக்குது”



நிறைவு..


– விமல் பரம்


நன்றி : ஞானம் சஞ்சிகை 2019 மார்கழி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More