Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் விடுபடுதல் | சிறுகதை | அருண் குமார் செல்லப்பன்

விடுபடுதல் | சிறுகதை | அருண் குமார் செல்லப்பன்

7 minutes read

அஸ்வின் Tidel Park க்கில் நைட் ஷிப்ட்டில் வேலை செய்கிறான். சமீபத்தில்தான் Team Lead ஆக பதவி உயர்வு கிடைத்திருந்தது. இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது.

அஸ்வின் வேளச்சேரி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தான். நேரம் காலை 10:45. ரயில் கிளம்புவதற்கு தயாராகிக்கொணடிருந்தது. அதுவரைக்கும் கீழேயே நின்றுகொண்டிருந்த அஸ்வின் மெதுவாக உள்ளே ஏறினான். ரயிலில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. உட்காரலாமா, நின்று கொண்டே போகலாமா என்று யோசித்தான். ஒரு சீட் காலியாக இருப்பதைப் பார்த்தான். காலியாக இருந்த முதல் இருக்கையில் அமர்ந்தான்.

பக்கத்தில் இருந்தவர்கள் சுந்தரத் தெலுங்கில் மாட்லாடிக்கொண்டிருந்தார்கள். அஸ்வினுக்கு வேறு இடத்துக்குப் போகலாமா என்று தோன்றியது. அடுத்த பெட்டிக்குப் போய்ப் பார்த்தான். இருக்கைகள் எல்லாம் நிறைந்திருந்தது. சரி கொஞ்ச நேரம் நின்றுகொண்டே போகலாம் என்றெண்ணி வாசல் பக்கம் வந்து நின்றான். காற்று ஏகாந்தமாய் வீசியது. நைட் ஷிப்ட் முடித்து வந்ததினால் ஆசுவாசமாய் இருந்தது. அந்த சுகத்திலிருக்கவே விரும்பினான். கொஞ்ச நேரத்தில் பெட்டியின் ஓரத்துக்கே வந்துவிட்டு மேலே கையைப் பிடித்துக்கொண்டான். கொஞ்ச நேரம் அப்படியே போய்க்கொண்டிருந்தான். திடீரென, ஒரு போலீஸ் அவனது முதுகில் கைவைத்தார். “டிரெயின்ல புட்ஃபோர்டு அடிக்கக் கூடாதுன்னு தெரியாது” என்றவாறே அவனது கையை இறுக்கிப் பிடித்தார். இவ்வாறு போவது அவனுக்குப் புதிதல்ல, பல நாள்கள் இப்படி நின்றுகொண்டு போயிருக்கிறான்.

Representational Image
Representational Image

அவன் ஒரு நிமிடம் திகைத்துப்போனான். என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

“சார், சார், தெரியாம நின்னுட்டேன் சார், மன்னிச்சிக்கிடுங்க சார், ஏதோ ஞாபகமறதில நின்னுட்டேன் சார். I.T கம்பெனில ஒர்க் பண்றேன் சார். மன்னிச்சுருங்க சார்” என்றான்.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு நல்லவன் மாதி பேசுறியா. உன்ன பிடிக்காம விட்டா எங்க மேலதிகாரிங்க எங்களைக் கிழிச்சுருவாங்க’ என்றார் போலீஸ். தரமணி ஸ்டாப்பிலேயே அவனை இறக்கினார்.

`முதல்ல உன்ட்ட இருக்கிற ஆதார் கார்டு, பான் காடு, போன் எல்லாம் கொடு” என்றார். “சார் வேண்டாம் சார், நான் டீம் லீடரா ஒர்க் பண்றேன். அசிங்கமாப் போயிரும்” என்றான்.

“இப்போ குடுக்கப்போறீயா இல்லையா” என்றார்.

அடுத்த கணமே பயந்துபோய் எல்லாவற்றையும் எடுத்துக்குடுக்க ஆரம்பித்தான். சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டேயிருந்தான். தெரிந்தவர்கள் யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். பிறகு “”சார், 500 ரூ தாரேன்” என்றான்.

“பேசாம எங்கூட வா” என்றார்.

Representational Image
Representational Image

அஸ்வின் Tidel Park க்கில் நைட் ஷிப்ட்டில் வேலை செய்கிறான். சமீபத்தில்தான் Team Lead ஆக பதவி உயர்வு கிடைத்திருந்தது. இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. அவனுடைய அப்பாவும் அம்மாவும் ஸ்கூலில் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள். ஒரே புள்ளை என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டிருந்தான். அவனின் வருங்கால மனைவி கீதா காலை 11 மணிக்கு சந்திக்கலாம் என்று whatsappல் மெசேஜ் அனுப்பியிருந்தாள். காலை 7 மணிவரைக்கும் வேலை செய்துவிட்டு வெறும் 3 மணிநேரம் தூங்கிவிட்டுக் காலையில் அவளை சந்திக்கப்போகும்போதுதான் இந்த துர்சம்பவம் நடந்தது. அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற குழப்பத்தில் இருந்தான்.

“எங்கூட வா” என்றார் போலீஸ்.

வேளச்சேரி போகும் டிரெயினில் இருவரும் ஏறினார்கள். வேளச்சேரி வந்ததும் அங்கிருந்த ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு இருவரும் போனார்கள்.

அங்கு ஏற்கெனவே 4 பேர் வேறுவேறு கேஸ்களில் பிடிக்கப்பட்டு உட்கார்ந்துகொண்டு இருந்தார்கள். இவனைப் பார்த்தும் எந்த உணர்ச்சியுமே இல்லாமல் உட்கார்ந்திருந்தார்கள். இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சேற்றுக்குள் அகப்பட்டுக்கொண்டவன்போல் தவித்தான்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. கையில் 5 நிமிடம் போன் இல்லாமல் வாழ்வதுபோல கொடுமை எதுவுமில்லை என்று தோன்றியது அவனுக்கு. என்னவெல்லாமோ நினைக்கத் தொடங்கினான். நான் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிறது அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க, கீதாவுக்குத் தெரிஞ்சா என்ன நினைப்பா என்றுக் குமுறினான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. மதியம் 1:30 இருக்கும். அங்கிருந்த ஒரு போலீஸ் சொன்னார், “யார் யாருக்குப் பசிக்குதோ அவங்கள்லாம் போய் சாப்ட்டு வாங்க” என்றார்.

பக்கத்திலிருந்த ஒரு ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டான். அந்த 4 பேரும் அவன் எதிரிலேயே உட்கார்ந்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் எல்லோரும் மறுபடியும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் போனார்கள்.

அங்கிருந்த போலீஸார் ஏதேதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

மணி 3:00 ஆனது. “எல்லாரும் கிளம்புங்க” என்றார் அந்த போலீஸ்.

எல்லோரையும் கடைசி பெட்டியில் ஏறச் சொன்னார். வண்டி பூங்கா நகருக்குச் சென்றது. அங்கிருந்து ஒரு டிரெயினைப் பிடித்து எல்லோரையும் எக்மோர் ஸ்டேஷனுக்கு கூட்டிப்போனார். அங்கு 30 பேருக்குமேல் உட்கார்ந்திருந்தார்கள். சென்னை முழுவதிலுமிருந்து வந்திருந்தார்கள். அதில் இரண்டு பேர் வட இந்தியர்கள். சிக்கிமோ, நாகாலாந்தோ. முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தார்கள்.

“இவங்களோட போய் உட்காந்துக்கங்க” என்றார் அந்த போலீஸ்காரர்.

எல்லாரும் உட்கார்ந்தார்கள்.

“ஜட்ஜ் கேள்விக்கேப்பாங்க. அதுக்கு குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்னு சொல்லணும், வேற எந்த வார்த்தையும் பேசக் கூடாது” என்றார்.

எல்லாரும் தலை ஆட்டினார்கள். 4:20 வரைக்கும் அங்கேயே உட்கார்ந்திருந்தார்கள். அங்கிருந்த ஒருவன் எல்லோரையும் சகட்டுமேனிக்கு கிண்டலடித்துக்கொண்டிருந்தான். கூட இருந்தவனிடம் சொன்னான், “மச்சி நானாவது ஒன்னுக்குப்போனதுக்குப் பிடிச்சாங்க, இவன் என்ன பண்ணான் தெரியுமா எச்சித் துப்பிருக்கான், இங்கக் கூட்டிட்டு வந்துட்டாங்க” என்றான். அஸ்வின் எதையும் ரசிக்கவில்லை. இறுக்கமாகவே இருந்தான். எப்படா வீட்டுக்குப் போவோம் என்றிருந்தது அவனுக்கு. அந்த இடம், சூழ்நிலை, மனிதர்கள் எல்லாமே அவனுக்கு எரிச்சலூட்டியது.

4.40-க்கு எல்லாரையும் நீதிமன்றத்துக்கு உள்ளே அழைத்தார்கள். அங்கே வயதான ஜட்ஜம்மா உட்கார்ந்திருந்தார். இவன் முறை வந்ததும் “குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்” என்றான். 200 ரூபாய் பைன் கட்டச் சொன்னார்கள். அந்த வடஇந்தியர்கள் முறை வரும்போது ஒருவன் சிரித்துக்கொண்டே இருந்தான். அஸ்வின் பணத்தைக் கட்டிவிட்டு வெளியே வந்தான்.

ஒவ்வொருவரும் வரிசையாக சென்று அவர்களது ஆதார்’ கார்டு, பான் கார்டு, மொபைல் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினார்கள். இவர்களைப் பிடித்த போலீஸாரும் இவர்களோடு சேர்ந்தே பயணித்தார். அதுவரைக்கும் இறுக்கமாக இருந்த அவர், ஜாலியாகப் பேசத்தொடங்கினார். அஸ்வினிடம், “தம்பிக்கு சொந்த ஊரு?” என்றார். அவன் “திருநெல்வேலி” என்றான். “நானும் திருநெல்வேலிதான்ப்பா” என்றார். “கோச்சுக்காதீங்க தம்பி, ஒரு மாசத்துக்கு 10 கேசாவது புடிச்சாதான் எங்களுக்கு வேலை பிரச்னையில்லாம போகும். இல்லன்னா குடைச்சலைக் கொடுப்பாங்க” என்றார். அஸ்வின் பேசாமலேயே வந்தான். அந்த நாளில் ஏற்பட்ட மனவலி அவனைக் கடுமையான அவமானத்துகுள்ளாக்கியது. அன்றைய தினம் தூங்கியது வெறும் 3 மணி நேரம் மட்டுமே. யாரிடமும் பேசுவதற்கு மனம் வரவில்லை. மொபைலைப் பார்த்தான். Mobile Switch off ஆகி இருந்தது. கீதாவிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்ற குழப்பத்திலேயே இருந்தான்.

வீட்டுக்குப் போன உடன் முதல் வேலையாக போய் சார்ஜ் போட்டான். எத்தனை மிஸ்டு கால் வந்திருக்கிறது என்று பார்த்தான். மொத்தம் 19 மிஸ்டு கால் இருந்தது. Whatsapp, ஐ திறந்து “I had a small problem, will call you later” என்று கீதாவுக்கு மெசேஜ் அனுப்பினான்.

இரவு 8 மணியளவில் ஆபீஸுக்குள் நுழைந்தான். எதையோ பறிகொடுத்தவன் போலேயே இருந்தான். சிஸ்டத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தான். வேறு யாரிடமும் ஹாய், ஹலோ சொல்லவில்லை. Email எல்லாம் செக் பண்ணிவிட்டு 9 மணிக்கு சாப்பிட வெளியே வந்தான். கீதாவுக்கு கால் பண்ணினான்.

Representational Image
Representational Image

“சாரிம்மா, மொபைல் தண்ணிக்குள்ள விழுந்திருச்சு. எதுவுமே ஒர்க் ஆகல. கடைக்குப் போயி ரிப்பேர் பார்த்துட்டு வர ரொம்ப லேட் ஆயிடுச்சு” என்றான்.

அவள் “சரி சரி” என்றுத் தலையாட்டினாள்.

“அடுத்து எப்போ மீட் பண்ணலாம்” என்றாள்.

“நானே பிறகு போன் பண்ணி சொல்றேன்” என்றான்.

ஆபீஸில் இருந்தததால் அதிக நேரம் பேசவில்லை. இணைப்பைத் துண்டித்தான். பகல் முழுவதும் தூங்காதததால் 11 மணிக்கே தூங்கி வழிந்தான். இன்னைக்கு half day லீவ் கேட்டுக் கிளம்பிட வேண்டிதான் என்றெண்ணி மேனேஜரைப் போய்ப் பார்த்தான்.

“சரி போ, ஆனா நாளைக்கு சீக்கிரமா வந்துரு” என்றார் மேனேஜர்.

மறுநாளே முதல் வேலையாக கீதாவைப் போய்ப் பார்த்தான். ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவளிடம் அவன் அன்றைய தினம் என்ன நடந்தது என்பதைச் சொல்ல விரும்பவில்லை. எங்க போய் கல்யாண பட்டு எடுக்கலாம் என்று தீவிர விவாதத்தில் இருந்தார்கள். அஸ்வின் நல்லி சில்க்ஸ் போகலாம் என்றான், கீதா RMKV போகலாம் என்றாள். கடைசியில் காஞ்சிபுரம் போகலாம் என்று முடிவெடுத்தார்கள்.

Representational Image
Representational Image

அன்றைய நாள்களில் அஸ்வின் சகஜ நிலையிலேயே இல்லை. டிரெயின் ஏறும்போதெல்லாம் ஏதோ குற்ற உணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது. எல்லோர் முகத்தையும் நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தான். போலீஸிடம் அகப்பட்டபோது யாராவது பார்த்திருப்பார்களோ என்ற குற்ற உணர்ச்சி இருந்தது.

ஆபீஸ் போன பிறகும் கூட எல்லோரிடமும் மனம் விட்டுப் பேசவில்லை. அவனது உற்ற நண்பன் ஹரி கேட்டபோதும்கூட ஒண்ணும் இல்லை என்றே சொன்னான். அஸ்வினின் பெற்றோர்கள் அவனை பைக் பயன்படுத்தக் கூடாது, டிரெயினில் தான் ஆபீஸ் போக வேண்டும் என்று கட்டாயபடுத்தியிருப்பதால் அவன் தினமும் டிரெயினிலேயே போகவேண்டியதாயிற்று.

இரண்டு வாரம் கழிந்திருந்தது. அஸ்வின் டிரெயினுக்காக காத்திருந்தான். அது திங்கள்கிழமை காலை 11 மணி. பேங்க் வேலைக்காக டைடல் பார்க் போகவேண்டியிருந்தது. சீட் கிடைத்ததும் ஜன்னல் வழியாக உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

தரமணி ஸ்டாப் வந்தது. அவன் அலுவலகத்தில் வேறு டீமில் வேலை செய்யும் ஒருவரை அதே போலீஸ் கையைப் பிடித்து கூட்டுப் போவது தூரத்தில் தெரிந்தது. அவரும் அவனைப் போலவே அவரிடம் கெஞ்சிக்கொண்டே போய்க்கொண்டிருந்தான். “சார் விட்ருங்க சார், தெரியாம நின்னுட்டேன்” என்று அழாத குறையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். போலீஸ் அவரை இழுத்துக்கொண்டுப் போவதைப் பார்த்தான்.

அஸ்வின் அவனையே அறியாமல் மௌனமாக சிரித்தான். ஏதோ அவமானத்திலிருந்து விடுபட்ட மாதிரி இருந்தது அவனுக்கு. மனசு லேசாகிவிட்டதைப் போல உணர்ந்தான்.

ரயில் கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்கியது.

-அருண் குமார் செல்லப்பன்

நன்றி : விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More