Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சுமை | சிறுகதை | சன்மது

சுமை | சிறுகதை | சன்மது

4 minutes read

1990-ல்

“கருமி … ஓடுடி … சீக்கிரம்”

“ஏன்டா… பல்லா…”

ஓடிக் கொண்டிருந்த புஷ்பராஜ் நின்று ஜெயந்தியை திட்டினான்.

“எதுக்குடி என்ன அப்படி கூப்பிடற… “

“அப்பறம் நீ மட்டும் என்னக் கருமீனு கூப்பிடற … நீயென்ன வெள்ளையா …”

“டேய்… அப்பறம் சண்டை போடுங்கடா… அங்க பாரு டா… ஓடு …” என்று ஓடிக்கொண்டே கத்தினான் ஒருசிறுவன்.

வீட்டின் அருகே பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மூக்கை பொத்திக் கொண்டார்கள். நடந்துக் கொண்டிருந்தவர்கள் பாதையை விட்டு விலகி துணியால் முகத்தை மூடிக் கொண்டார்கள். அந்த வீதியே எதையோ பறிகொடுத்தது போல பாவித்திருந்தது.

கறுஞ்சிவப்பு நிறத்தில் ஜரிகைக் கட்டங்களை நிறைத்திருக்கும் புடவையை கணுக்கால் தெரிய பின் கொசுவமிட்டு, நெற்றியின் மையத்தில் பெரும்புள்ளியென நிறைந்திருந்த சாந்து பொட்டோடு, எந்நேரமும் அரைப்பட்ட வெற்றிலை சாறு வடிய, கோடாலி கொண்டையில் தன் மொத்த உருவத்தை உருப்பெருக்கி காட்டியவாறு வெறுங்காலில் மெதுவாக வீதிக்குள் வந்தாள் ஒரு நடுத்தர வயது பெண்மணி.

எதிரே வந்த கோபால் செட்டியார் அவளையும் ,அவள் கையையும் பார்த்து … முகத்தைத் திருப்பி மூக்கைப் பொத்தியவாறு,

“யாரு வீட்டுக்கு …” என்று அவர் கடந்துபோன பின் அவர் பேசிய வார்த்தைகள் காதுகளை நிறைத்தது.

“நாய்க்கர் வீட்டுக்குங்க …” பதில் கொடுத்தவாறே நகர்ந்தாள்.

கருப்பில் நீளமான கதவை கொண்டு ஆரம்பித்தது நாய்க்கர் வீடு.

கதவைத் தாண்டி நாய்க்கர் வீட்டை ஒட்டி நெடுக போகும் தடம் முடியும் இடத்திலிருந்து வாடகைக்காக விடப்பட்டிருந்த ஆறுவீடுகளின் வரிசை தொடங்கியது.

“எம்மொய்…” வெளியில் இருந்து குரல் கொடுத்தாள்.

“ஏங்க அவ வந்திருக்காங்க … ஒரு இருபது ரூபா எடுத்து வையுங்க …” என்றாள் வீட்டுக்கார அம்மாள் .

“யாரு …”

“கக்கூஸ்காரி…”

ஆம், அழகான கோமளம் என்ற அவள் பெயர் மலத்தின் சுமையினால் கக்கூஸ்காரி என மருவிப்போனது. அந்த பகுதியில் பெரும்பாலான வாடகை வீடுகளில் மலம் எடுக்கும் முறையை தாங்கியே கழிவறைகள் கட்டப்பட்டு இருந்ததன, அதுவும் இல்லாதவர்கள் காட்டுக்கு சென்றுவிடுவதுண்டு.

வசதி படைத்தவர்கள் வீடுகளில் மட்டும் நவீன இந்தியா கழிப்பறை கட்டப்பட்டிருந்தது . கோமளம் வாரத்தில் இருமுறை தன்னுடன் கொண்டுவரும் காலியான வாளியை மலம் நிறைந்த வாளிக்கு பதிலாக மாற்றிவிட்டு, மலம் நிறைந்த வாளியை தன்னுடன் எடுத்துக்கொள்வது வழக்கம்.

அவள் அன்று வராவிட்டால் ஊரே நாறிபோகும். அவளுக்கான தம்ளரில் எப்போதுவது ‘டி’ தண்ணி நிரப்பி வைக்கப்படுவதுண்டு, தீபாவளி, பொங்கலுக்கு வீட்டுக்கு பத்துரூபாய் வசூலாகும்,வீட்டுக்காரம்மா மனம் குளிர்ந்திருந்தால் புடவைகள் கிடைப்பதுண்டு. மற்றபடி எதோ கிடைப்பதில் வாழ்வாதாரத்தை பூர்த்திசெய்துவந்தாள். அங்குள்ள பெரும்பாலோர் இறக்கி வைக்கும் சுமையை களைய வலம் வரும் தீர்க்கதரிசி என அவதரித்திருந்தாள்.

பல நிறங்களை கொண்டு ஒருநிறமாக மாறிய, அந்த கழிவைப் பற்றி நம்மில் பலர் பேசுவதைக் கூட தவிர்க்கிறோம். அப்படி இருக்கும் நிறத்திற்கு கூட ஒரு வாடை கொண்டு அடைமொழி காண்கிறோம். உடல் உதிரத்தை ஏற்றுக்கொள்வதில் இன்னும் மானிட அறிவியல் வெகு தொலைவில் இருக்கிறது .

கதவு திறக்கப் படுகிறது. கோமளம் வெக்கு, வெக்கென கழிவறையை நோக்கி நடந்தாள்.

“டேய் புஷ்பராஜு எங்க டா வெளிய போற இன்னும் அந்த கக்கூஸ்காரி போகுல… அப்பறமா போய் வெளியில விளையாடு…”

கையில் ஒரு பொம்மையோடு மெதுவாக எட்டிப் பார்த்தாள் ஜெயந்தி . தன் மூக்கை மூடிக்கொண்டு முகத்தை சுருக்கிக்கொண்டு கழிவறை வாசலை பார்த்தவாறு நின்றிருந்தாள்.

சட்டென மலம் நிறைத்த வாளியோடு கழிப்பறையிலிருந்து வெளியில் வந்தாள்

கோமளம், அவள் இடது கையில் சீமாறும், வலதுகையில் மல வாளியும் இருந்தது. சில சமயம் வலியின் கனம் அதிகமாக இருந்தால் தன் தோளில் சுமையை ஏற்றிக்கொள்வாள் . அன்றும் அப்படித்தான் நடந்தது.

அந்த கழிவை அங்கிருந்து சுமார் ஒரு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கழிவு நீர் கால்வாயில் கொட்டவேண்டும். தோளில் சுமந்த படி தன் வாயை அசைபோட்டுக் கொண்டு நடந்தாள். நாற்றத்தை தவிர்க்கவே தொற்றிக்கொண்டதாக இருக்கும் இந்த வெற்றிலைப் பழக்கம்.

முகத்தைத் திருப்பிக்கொண்டு இருந்த ஜெயந்தியை கூப்பிட்டாள் கோமளம் .

“பாப்பா… அம்மா இல்லையா… நீ கையில வெச்சிருக்கிற பொம்மையை தரையா எம்பேரன்… ரமேஷுக்கு இந்த பொம்மைன்ன புடிக்கும்…’ நடந்துகொண்டே சத்தமாக பேசினாள் கோமளம்.

“ச்சீ … அவன்கூட எல்லாம் நான் பேசவே மாட்டேன்” என்று முகம் காட்டாமல் பேசிப்போனாள் ஜெயந்தி.

பதுங்கிக் கொண்டவர்கள் எல்லாம் நடமாடத் தொடங்கினர். தொலைவில் தெரிந்த கோமளம் மறைந்து போனாள். அந்த வாடை அங்கிருந்த காற்றில் சிறிதுநேரம் தங்கி இருந்து கலைந்தது .

2018 -ல்

“ஏண்டி … இன்னைக்கு ஆயா வரலையா… இங்க பாரு… உம் பொண்ணு என்ன பண்ணி வச்சிருக்கான்னு… எனக்கு ஜூம்லெ மீட்டிங் இருக்கு… வந்து என்னனு பாரு” என்றான் ரமேஷ் மடிக்கணியை முறைத்த வாரு.

“நான் சமையலைப் பாக்கறதா இல்ல பாப்பாவை பாக்கறதா…”

என்று அடுப்பங்கரையில் இருந்து ஆவேசமாக வந்தாள் ஜெயந்தி .

மலம் கழிந்தது கூட தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்தது குழந்தை.

தன் இடது கையால் பழைய காகிதத்தை கொண்டு அந்த மலத்தை மும்முரமாக அள்ளினாள் ஜெயந்தி.

இதை கவனமாக பார்த்தபடி ரமேஷின் தலைக்கு மேல் சுவரில் ஒரு சட்டகத்தில் சிரித்தபடி இருந்தாள் கோமளம்…                                                          

– சன்மது

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More