Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் அவலங்களின் காட்சியறை-குந்தவையின் சிறுகதைகள் | நடராசா சுசீந்திரன்

அவலங்களின் காட்சியறை-குந்தவையின் சிறுகதைகள் | நடராசா சுசீந்திரன்

10 minutes read

-நடராசா சுசீந்திரன்

காட்சிகளை அச்சொட்டாக விபரித்தபடி எழுதிச் சென்று, அக் காட்சிகள் நினைக்கத்தூண்டும் கடந்தகாலச் சம்பவங்களையும் அவற்றுள்ளே பிணைத்து எழுத்தினை நகர்த்திச் செல்லும் பாணி குந்தவையினுடையது. நிகழ்காலக் களனும் கடந்தகால நிகழ்வுகளும் ஒன்றுடனொன்று பொருந்திப் போவதும், சலிப்படைய வைக்காத விபரிப்புக்களும், அன்றாடம் பயிலப்படுகின்ற பொருத்தமான சொல்லெடுத்து மொழிதலும் குந்தவையின் கலைத்திறன் ஆகும். கதையொன்றில் நிறையக் கதைகள் கிளைத்தலும், சில கதைகளில் வெளிப்படையான கதையொன்று இல்லாதிருத்தலும், பல கதைகளில் இதுதான் திருப்புமுனையென்று அறியமுடியாதபடி சம்பவங்களின் தீவிரத்தன்மை ஒன்றையொன்று மேவி நிற்பதையும் குந்தவையின் கதைகளில் காணலாம்.

’யோகம் இருக்கிறது’ என்ற சிறுகதைத்தொகுப்பு 2002 இல் ’மித்ர’ வெளியீடாக வந்திருக்கின்றது. அதில் பதின்மூன்று சிறுகதைகள் தொகுக்கப்பட்டிருகின்றன. பின்னர் 2016 இல் ‘ஆறாத காயங்கள்’ என்ற ஒன்பது கதைகள் கொண்ட சிறுகதைத்தொகுப்பும் வெளியாகியிருக்கின்றது. ஒன்று இறுதிக்கட்ட ஈழப்போருக்கு ஏழு வருடங்கள் முன்னையதாகவும் அடுத்தது சுமார் 7 வருடங்கள் பின்னையதாகவும் வெளிவந்திருப்பதனால், போருக்கு முன்னும் பின்னுமான சுமார் பதினைந்து, இருபது வருட இலங்கைச் சிறுபான்மை இனங்களின் அவல வரலாறின் ஆறாத ஆழமான காயங்களும் மாறா வடுக்களும் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் ஜெர்மனியின் மீள்விருத்தியினதும், பொருளாதார மேம்பாட்டினதும் போதையில் மனிதர்கள் நடந்தவற்றை மறந்துவிடவும் நடத்தியவற்றை மறைத்துவிடவும் துணிந்த வேளையில் ஹைன்றிஸ் பொல் (Heinrich Böll) போன்ற எழுத்தாளர்களே மறத்தலுக்கெதிரான எச்சரிக்கையினை விடுத்தார்கள். ”போர் ஏற்படுத்திய ஆறாத காயங்களில் இருந்து இன்னமும் சீழ்வடிந்து கொண்டிருக்க்கும் போது, போர் என்பது ஒருபோதும் முடிவிற்கு வருதில்லை.” என்று கூறுவார் அவர். அவ்வாறுதான் குந்தவையும் தன் கதைகளில், பாடுகளையும் பட்ட வலிகளையும் மீண்டும் மீண்டும் நினைக்கவைத்து எழுதிச் செல்கின்றார். குந்தவை இலகுவாகவும் இலாகவமாகவும் கதை சொல்பவர். ஜெர்மன் மொழியில் „Erzählung“ (ஏர்ச்சேலுங்) என்றொரு கதைசொல்லும் வடிவம் இருக்கின்றது. எடுப்பு-நடப்பு-முடிப்பு என்ற அமைப்பினை அது கொண்டிருக்கும். குந்தவையின் கதைகளை அந்த இலக்கியவகைக்குள் அடக்கிவிடலாம் என்றே கருதுகின்றேன். நிகழ்வுகளை அன்றாடச் சொற்களில் விபரிக்கின்றபோது கதைசொல்லியின் நோக்கம் அவரது சொல்திறத்தாலும் புனைதிறத்தாலும் வாசகர்களைச் சென்றடைந்து நிறைவேறுகின்றது. சிக்கல் பிக்கல் இல்லாத வடிவத்தில் கதைகள் குந்தவையினால் இழைக்கப்படுவதால் வாசகரை இம்சைப்படுத்தாத லகுவடிவம் மனங்களில் பதிய வேண்டியவை கதைசொல்லியினால் பதியவைக்கப்பட்டுவிடுகின்றன.

மனிதர்கள் இன, மத, மொழி அடையாளங்களை நனைத்துச் சுமந்து திரிகின்றனர். இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னான சமூக அரசியல் வரலாற்றில் சிறுபான்மை இனங்களின்மேல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒதுக்கலும் புறக்கணிப்பும் அடக்குமுறைகளும் அவர்களின் பொருட்டேயற்ற மிகச் சாதாரண அடையாளங்களின் மீதும் ஆக்கிரமிப்புக்களை செய்தன. பெரும்பான்மையினத்தின் மேலாதிக்கம் போன்றவற்றின் எதிர்வினையாக சிறுபான்மை இனங்களும் தமது இன அடையாளங்களிலேயே பார்க்கப்பட்டனர்;பிரிக்கப்பட்டனர். நாம் இலங்கையர் என்ற அடையாளம் என்றென்றைக்குமே உருவாக முடியாதபடி முதற்கோணல் மனித மனங்களில் நாட்டப்பட்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

”அடையாளம் என்பது பன்மைத்துவமானது” என்பார் அம்ரித்தியா சென் அவர்கள். ஆனால் இலங்கையில் ஒற்றைப் படையான அடையாளமே தமிழர்கள் மேல் திணிக்கப்படுவது இலங்கையின் நவீன வரலாறு. 90களில் இலங்கையில் மனிதர்கள் பட்ட துன்பங்கள், அலைக்கழிப்புக்கள், இடப்பெயர்வுகள், வலிந்த வெளியேற்றங்கள் பெரும்பான்மையினப் பாதுகாப்புப் படையினரால் நடாத்தப்பட்ட கடத்தல்கள், கொலைகள், வன்புணர்வுகள், காணாமலாக்கப்படுதல் என்று ஒரு கூட்டு அனுபங்களைச் சிறுபான்மையினர் பெற்றிருக்கின்றனர். ஆனாலும் ஒவ்வொரு தனிமனிதமும் இவற்றை எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதற்கான நுண்ணுறவான புரிதலுக்கும் இரத்த சாட்சியங்களுக்கும் நாம் இலக்கியங்களைத்தான் அணுக வேண்டும்.

’இணக்கம்’ என்கிற ஒரு கதையில் புத்தளம் பாத்திமா கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் கதைசொல்லி தனது சகவதிவு அருணா ஆசிரியையுடன் சந்தைக்குச் செல்கின்றாள். ஒரு கூட்டம் விதவிதமான மக்கள் இந்தியா-ஸ்ரீலங்கா கிரிக்கெட் மாட்ச் ஒன்றினை டிவிக் கடையின் விளம்பர ஜன்னலில் பார்த்துக்கொண்டிருக்கிறனர். கதை சொல்லும் ஆசிரியைக்கும் அதைப் பார்க்க ஆசைதான். ஆனால் அதுவே நாளை கல்லூரியில் பழிப்பிற்கும், மலினத்திற்கும் ஆளாக்கிவிடும் என்பதாற் தவிர்த்துக் கொள்கின்றாள். விளையாட்டின் ரசனை பெண்களுக்கும் உண்டென்பதை இன்னமும் ஏற்றுகொள்ளாத பழமை இறுகிய சமூகம்தான் நாம் வாழும் சமூகம்.

“…ஸ்ரீகாந்த் வெளுத்தால்….வெத்தமுனி, டயஸ், மெண்டிஸ் என்று wickets விழுந்தால்…”. என்று அவள் நினைத்துக்கொள்கின்றாள். இந்தியா-ஸ்ரீலங்கா கிரிக்கெட் மாட்ச் நடைபெறும்போதெல்லாம், இலங்கைத் தமிழர்கள் இந்தியாவை ஆதரிப்பதும், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மாட்ச் நடைபெற்றால் முஸ்லிம்கள் பாகிஸ்தானை ஆதரிப்பதும் நாம் உலகெங்கும் அவதானிக்கும் விடயம். எமக்கு மறுக்கப்படும் சமவுரிமைக்கும், திணிக்கப்படும் தேசிய அடையாளத்திற்கும் எதிரான, எங்களையறியாமலேயே நாம் ஆற்றும் எதிர்வினை அது.

இதே கதையில் மாற்றுத்திறனாளி ஒருவரை கொதிக்கும் தரையில் போட்டு பரிதாபம் தேடிப் பிச்சை வாங்கும் ஓர் பெண்ணைப் பார்க்கின்றாள் கதைசொல்லி. மனத்தினை வருத்தும் இக்காட்சியில் எரிச்சலுற்று, பின்னர் ”வேறு என்னதான் செய்வது?” என்ற உள்ளிரக்கமும் அவளுக்கு வருகின்றது. இக் காட்சிக்குத் துணையாக 2021ம் ஆண்டுக்கான ’விளக்கு’ விருதுபெறும் வண்ணநிலவன் அவர்களின் ”அழைகின்றவர்கள்” என்ற சிறுகதையினை நினைத்துகொள்கின்றாள்.

எழுத்தாளர்களின், குறிப்பாகத் தமிழ் எழுத்தாளர்களின் பெயர்கள், அவர்களின் புனைவுப் பாத்திரங்கள், சிலவேளைகளில் விமர்சகர்களின் குறித்த கட்டுரை போன்றவற்றை தனது கதைகளில் பொருத்தமான இடங்களில் எழுதிச் செல்வதன் மூலம் பலர் வரலாற்றில் மேலும் பதியப்படுகின்றனர். டொமினிக் ஜீவாவின் ’மல்லிகை’ இதழ், The Island பேப்பரில் வெளியான விமர்சகர் கே.எஸ். சிவகுமாரனின் அறிமுக, விமர்சனக் கட்டுரை, வ.அ.ராசரத்தினம், அசோகமித்திரன், தகழி சிவசிதம்பரப்பிள்ளையின் ’ஏணிப்படி’ நாவலில் வரும் கேசவப் பிள்ளை, சுப்பிரபாரதி மணியன் அவர்களின் புகலிட ஈழத்தமிழர்களின் வீடியோவிற்காக விழாவெடுத்துப் பகட்டை விரித்து எரிச்சலடைய வைக்கும் ஒவ்வாப் பண்பு பற்றிய கட்டுரை, போன்றவை அவற்றுட் சில.

கண்முன்னே நிறுத்தும் காட்சி எழுத்து
மீண்டும் மேலே எடுத்துக்கொண்ட ’இணக்கம்’ என்ற அதே சிறுகதையில் வருகின்ற அருணாவும் கதைசொல்லியும் புத்தளத்தில் ஆசிரியைகளாகக் கடமையாற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். வாடகை அறையில் குடியிருப்பவர்கள். வீட்டுக்கார அன்ரிக்கு வாங்கிய பொருளுக்கு billஉம் பெறக் கூடிய மார்க்கெடிங் டிபார்ட்மெண்டில் கரட் வாங்கச் செல்கிறாள் கதைசொல்லி. இதில் பரஸ்பர நாணயத்தில் நம்பிக்கையற்ற சமூகங்கள் குறியீடாகி நிற்கின்றன. வீட்டுக்கார அன்ரியுடன் கதை சொல்லி சந்தைக்குச் செல்லுங்கால் அந்த மூதாடி, ’வேலைக்காரி பின் தொடர, சந்தைக்குப் போகும் உயர் முஸ்லிம் குடும்பத் தலைவி’ என்ற இமேஜுக்கு உருவம் கொடுக்க மேற்கொள்ளும் பிரயத்தனங்களும் கூட எழுதிச் செல்லப் படுகின்றன. மனிதர்களின் அற்ப ஆசைகளும் போக்குகளும் சிலவேளைகளில் சக மனிதர்களின் சுயமரியாதைக்குச் சவால் விடுவனவாக அமைந்து விடுகின்றன.

1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் இருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் அனேகம்பேர் அடைக்கலம் தேடிய பூமி புத்தளம் ஆகும். குந்தவையின் பல கதைகள் புத்தளத்தினைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டபோதிலும், அதனால் யாழ்ப்பாணத்தவர்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது என்பது கதைகளில் காட்டப்படபோதும், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட முஸ்லிம் பாத்திரங்கள் எதனையும் இவரது சமகாலக் கதைகளில் காணமுடியவில்லை.

இணக்கம் என்ற இதே கதையில் மேற்படி ஆசிரியைகள் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டுக்கார அன்ரிக்கு மார்க்கெடிங் டிபார்ட்மெண்டில் கரட் வாங்க் காத்திருக்கும்போது கதைசொல்லிக்கு நிகழ்ந்த அனுபவம் நெஞ்சில் பதைப்பினை ஏற்படுத்துகின்றது. அந்நிய வெறுப்பும், அதிகாரத்தினால் விதைக்கப்பட்டு ஆழ வேரூன்றிய போலிப் பீதியும் மனிதர்களை அநியாயத்திற்கு அஞ்சாத கொடூரர்கள் ஆக்கிவிடுகின்றன. இந்த அனுபவம் 1980களின் நடுவில் இருந்து யுத்தகாலமான 2009 ஐக் கடந்தும் தொடர்வது என்று நிச்சயம் கூறிவிடலாம்.

மார்க்கெடிங் டிபார்ட்மெண்டில் கியூவில் மனிதர்கள் நிற்கின்றனர். அரசாங்க நிறுவனங்களின் அதே மந்தகதியில் அலுவல்கள். ஏன் என்று கேட்கவும் முடியாத, தெரியவும் வராத அலுவலற்ற, சிலவேளைகளில் ஆட்களுமற்ற இடைவேளைகள். நின்ற கியூ இப்பொழுது வசதிப்படி ஆங்காங்கே உட்கார்ந்துகொள்கின்றது. கியூவில் நிற்கும் மனிதர்களில் நமது கதைசொல்லி மட்டுமே சிங்களம் பேசமுடியாத தமிழராக இருக்கலாம். புதிதாக ஒரு சிங்களமாது பின்னால் வருகின்றாள். நேரம் என்னவென்று கேட்டு கதை சொல்லியின் முன்னல் நிற்கும் இன்னொரு மாதுடன் ஸ்நேகமாகின்றாள். வசதிப்படி இதுவரை தொய்வாக் கிடந்த கியூ மீண்டும் எழுந்து அமைத்துக்கொள்ளும்போது கதைசொல்லிக்குப் பின்னால் நின்றவள் முன்னால் நின்றவளுடன் ஒட்டிக்கொள்கிறாள். கதைசொல்லி அது தனது இடமென்று சொல்ல, ”நீ இடையில் வந்து புகுந்தாய்” என்று சொல்லிவிடுகிறார்கள். முழுக் கியூவும் மௌனமாக இதையே ஆமோதிக்கின்றன. அவள் அதி பின்னே போய்விடுவதாகக் கதை முடியும். இந்தக் குரூரமான அனுபவம் இலங்கையின் தென்பகுதியில் சிறுபான்மை இனத்தவர்களுக்கும் அடிக்கடி ஏற்படுவது. ஆஸ்பத்திரி போன்ற அரச பொதுநிறுவனங்களில் இது இயல்பாகிக் கிடக்கின்றது. இதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. கொழும்பில் நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்களைக் கைது செய்து இராணுவ பஸ்ஸில் ஏற்றி வவுனியாவரை கொண்டு சென்ற சர்வாதிகாரச் சம்பவம் நினைவில் வரலாம். 90களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் ரெயிலில் பிரயாணப்பட்ட பயங்கர அனுபவம் எனக்கு இருக்கின்றது. எனது பெட்டியில் இருந்த ஒரு தமிழரை ஒரு சிங்களப் பயணி ”பற தெமுழு” என்று கூறிக் கன்னத்தில் அறைகின்றான். பெட்டிக்குள் இருந்த எந்தப் பயணியும் எதுவும் நடந்துவிடவில்லை என்றவாறு மௌனமாக எல்லாவற்றையும் காணாதும் கேட்காதும் இருப்பதாகப் பாசாங்கு செய்கின்றனர். என் அருகில் இருந்த எனது மாமா என்னை எச்சரித்தபடி ”கலவரம் ஒன்றை உருவாக்கிவிடும் எத்தனிப்புக்கள் இவை. வாய் பொத்தி மௌனமாக இருந்து விட்டால் மட்டுமே ஊர்போய் சேரலாம்” என்று கூறுகின்றார். நினைத்துப் பார்க்கும்போது ஒருவகை இரத்தக் கொதிப்பு வருமாற் போல் இருந்தாலும் இதுவே நாம் கடந்து வந்த பாதைகள். தனித்த மனிதர்களின் எளிய சாட்சிகள்! எங்காவதொரு இலக்கியப் பதிவுகளில் சொன்னால் உண்டு. இல்லாவிட்டால் நடப்புக் கால மனிதர்களின் மரணத்துடன் அழிந்துபடுபவை இந்த அனுபவங்கள்.

குந்தவையின் ’இடப்பெயர்வு’ என்ற சிறுகதை ”வேரோடும் வேரடி மண்ணோடும் வெளிக்கிளம்பல்” என்ற கவிஞர் சு.வில்வரத்தினத்தின் கவிதை வரிகளை ஞாபகமூட்டுகின்றன. அந்த மழைக்கால இடப்பெயர்வின் அவலங்களை அனுபவித்தவர்கள் பலரது நேரடி வாக்குமூலங்களைக் கேட்டிருக்கின்றேன். இரண்டு உலக மகா யுத்தங்களை நேரடியாக அனுபவித்த முதிய ஜெர்மன் மூதாட்டியின் (1896-1989) வீட்டில் வாழ்ந்திருகின்றேன். நீரினைக் கொதிக்க வைத்து அவளுக்கான நூடில்ஸை போட்டபோது சிறிய புழுக்கள் மேலே மிதந்தன. அப்படியே அதனை குப்பை வாளியில் வீசிவிட்டு நான் படிக்கப் போய்விட்டேன். அடுத்த நாள் முழுவதும் அவள் என்னோடு பேசவில்லை. காரணம் நான் உணவுப் பண்டங்களை (பொறுப்பற்று) வீசியது என்றாள். எது சொல்லியும் அவளைச் சமாதானப்படுத்த முடியவில்லை. அந்த நூடில்ஸ் பத்து இருபது வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டதாக இருக்கலாம். அதனாற்றான் அவை புழுப்பிடித்துவிட்டன. இன்று கண்ட பூனையை நாளை காண முடியாது என்று தொடங்கி, தாங்கள் உலக மகா யுத்தங்கங்களின்போது பட்ட துன்பங்களை விபரிக்கத் தொடங்கிவிட்டாள்.

”மறந்துவிடுவதல்ல, மாறாக நம்பிக்கையும் அன்பும் எல்லா வெறுப்புக்களையும் வெல்லும் பலம் மிக்கவை” என்று அவுஸ்விட்ஸ் என்ற கொலைமுகாமில் இருந்து உயிர் தப்பிய எடி ஜேக்கூ – Eddie Jaku (1920-2021) அவர்கள் எழுதுகின்றார். அவர் எழுதிய ”உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்” என்பது. நாசிகளால் கொல்லப்பட்ட ஆறு மில்லியன் மக்கள் சார்பாகப் பேசும் குரலாக தனது 100 ஆவது வயதில் இந் நூலை வெளியிட்டார்.

”பேரினவாதம் கோலோச்சும் எமது நாட்டில் மனதைச் சஞ்சலப் படுத்தும் நிகழ்வுகளே எனது கதைகள்” என்று கருத்துப் பட எழுத்தாளர் குந்தவை அவர்கள் ஒரு பேட்டியில் சொல்கிறார். தம் மனங்களுக்குள்ளேயே புழுங்கி ஊனமாகிப் போய்விட்ட மௌன சாட்சிகளின் குரலாகவும் குந்தவையின் கதைகள் இருகின்றன.

’இடப்பெயர்வு’ என்ற இச் சிறுகதை ஆங்கில மொழியில் ஏ.ஜே. கனகரத்தினா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு „the little magazine“ என்ற ஆங்கிலச் சஞ்சிகையின் 2003ஆம் ஆண்டின் மூன்றாவது இதழில் வெளியாகியிருக்கின்றது. போர்க்கால இலக்கியங்களின் பதிவுகளில் இவைபோன்ற கதைகள் அனேகம் எழுதப்படிருக்கின்றன.

வொல்வ்காங் போர்சேட்(Wolfgang Borchert) என்பவர் ஜெர்மன் மொழியின் சிறந்த எழுத்தாளர். 27 வயதில் காலமாகிவிட்ட வொல்வ்காங் போர்சேட் அவர்கள் தனது சிறுகதைகளில் போர்க்கால அவலங்களின் நுண் தளங்களை தனது சிறுகதைகள் மூலம் தொட்டவர். அவரது ஒரு சிறுகதையின் தலைப்பு ” bread“ (பாண்) என்பது. சமையலறையிற் சத்தம் கேட்கவும் விழித்துக்கொண்டவள், கணவன் சமையலறையில் நிற்பதைக் காண்கிறாள். இரவு சுத்தப்படுத்திய மேசையில் பாண் துண்டின் சிறிய துகள்கள்; பொருமல்கள் கிடக்கின்றன. எதுவும் நடக்கவில்லைப் போலப் பாவனை செய்து, ”சத்தம் கேட்டு எழுந்து வந்தேன்” என்று , 39 வருட காலத் திருமணவாழ்வில் அவளது கணவன் முதன் முறையாகப் பொய் சொல்கிறான் என்று அவள் எண்ணுகின்றாள். உண்மையில், நாளைக்கு என்று வைக்கப்பட்டிருக்கும் பாண் துண்டினைப் பசிதாங்காது அவன் களவாக மென்றிருக்கவேண்டும். இதுவே கதை.

போர் என்பது தனி மனித உறவுகளை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இக் கதை. அன்பு, அறம், மனித நேயம் என்பதெல்லாம் கேள்விக்குறியாகி, மனித நடத்தைகள் விகாரமடையும் கணங்களை இக் கதை காட்டுவதுபோல் குந்தவையின் ’இடப்பெயர்வு’ என்ற கதையும் போர்க்காலச் சூழலில் நமது இதுவரையான அறங்களும் தாய்மை, நேயம் என்பவையும் வற்றி உலர்ந்து போகும் கணங்களைக் காட்டி நிற்கின்றது.

இடப்பெயர்வு என்ற கதையில் மனிதர்கள் படும் அவலங்கள் வேதனைகள்,இயலாமைகள் சொல்லப்பட்டு இறுதியாக, “.. „…கையிலிருந்த (பாண்)துண்டு முடிந்து விட்டது. அவள் குனிந்து இன்னொரு துண்டைப் பிய்த்தெடுத்தாள். யாரோ பார்ப்பது போலிருந்தது; நிமிர்ந்தாள். அவர்களோடு மரத்தடியைப் பகிர்ந்துள்ள மற்ற குடும்பத்துச் சிறுவன் ஒருவன், சற்று விலகி நின்று அவள் கையிலிருந்த பாணைப் பார்த்து நின்றிருந்தான். அமுதனை ஒத்த வயதுதானிருக்கும். மூன்றரை; மிஞ்சினால் நாலு. அவளுக்குச் சங்கடமாக இருந்தது. பாணின் இரு துண்டங்களைப் பிய்த்து நீட்டி, அவனை அருகில் கண்களால் கூப்பிட்டாள். சிறுவன், தயக்கமின்றி வந்து வாங்கிக் கொண்டான். அப்பொழுது தான் அவனின் தாய் அதைப் பார்த்திருக்க வேண்டும் “என்னத்திற்கு இதெல்லாம்?” என அவள் சொல்ல விரும்பியது போலிருந்தது. ஆனாலும் சொல்லவில்லை. இயலாதவள் போல் நின்றாள்.

அவள் கையிலிருந்த மீதி இரண்டு துண்டும் அமுதனுக்குக் காணும் என நினைத்துக் கொண்டாள். கையில் எடுத்த துண்டும் முடிந்து விட்டிருந்தது. மற்றதையும் அவள் எடுத்துக் கொண்ட பொழுது முதுகில் ஏதோ குறுகுறுப்பது போல இருந்தது. திரும்பினாள். பக்கத்து மரத்தடியிலிருந்த வேறொரு குழந்தை, தன் தாயின் முதுகிற்குப் பின்னாலிருந்து அவள் கையிலிருந்த துண்டையே பார்த்துக் கொண்டிருந்தது.“ என்று முடிகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More