Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மலச்சிக்கல் நீக்கும் யோகா சிகிச்சை!

மலச்சிக்கல் நீக்கும் யோகா சிகிச்சை!

5 minutes read

ஒரு மனிதனுக்கு காலை, மாலை இரு வேளை உடலில் மலம் சரியாக வெளியேற வேண்டும். நமது உடலில் கழிவுகள் நான்கு விதத்தில் வெளியேறுகின்றது.

1. கிட்னி வழியாக – சிறுநீர்
2. தோல் மூலம் – வியர்வையாக
3. தோல் மூலம் – மலமாக
4. நுரையீரல் மூலம் – கார்பன்டை ஆக்சைடாக

இதில் ஏதாவது கோளாறு நேர்ந்தால். சரியாக வெளியேறவில்லையெனில் வியாதியாக மாறுகின்றது. உடலில் மலம் காலை, மாலை சரியாக வெளியேற வில்லை என்றால் கழிவுகள் ரத்தத்தில் கலக்கின்றன. வாயு பிரச்சினை, இதயம் ஒழுங்காக இயங்காது. இதய வலி, ஜீரண மண்டலம் பிரச்சினை, வயிறு உப்பிசம், பசியின்மை, சோம்பல், ரத்த அழுத்தம், மன அழுத்தம், மூலம், வயிறு புண்படுதல், அல்சர் போன்ற பல பிரச்சினைகளுக்கும் மலம் சரியாக வெளியேறாததே காரணமாகும்.

எனவே தான் இதை காலை கடன் என்று பெயர் வைத்தனர். கடன் வாங்கினால் அதை திருப்பிக் கொடுக்கும் வரை நிம்மதி இருக்காது. அதுபோல காலையில் எழுந்தவுடன் நம் உடலில் இருந்து மலம் வெளியேற வேண்டும், வெளியேறினால் காலை கடன் கொடுத்துவிட்டோம். நிம்மதியாக, ஆரோக்கியமாக இருக்கலாம். மாலையும் உடலில் கழிவுகள் மலமாக வெளியேறினால் மாலைக் கடனும் கொடுத்துவிட்டோம். உடலில் ஆரோக்கியம் உறுதியாக இருக்கும்.

எதற்காக இதனை இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறேன் என்றால் இன்று நிறைய மனிதர்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் மலம் உடலை விட்டு வெளியேறுகின்றது என்று கூறுகின்றனர். இதனை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அவர்கள் உடலில் பலவிதமான நோய்கள் உள்ளன. அதற்கு சிகிச்சை எடுக்கின்றனர். மருத்துவரிடம் கூட மலம் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தான் செல்கின்றது என்பதை கூறுவதில்லை. எனவே ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் உடலில் மலம் காலை, மாலை வெளியேற வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது உடலில் மலம் வெளியேற என்ன யோகசிகிச்சை எடுக்க வேண்டும் என்பதை தெளிவாக காண்போம். நாம் ஒரு சிகிச்சையாக இதனை பயிற்சி செய்ய வேண்டும். கீழே குறிப்பிட்ட முத்திரைகளையும், யோகாசனத்தையும் வரிசையாக தினமும் பயிற்சி செய்யுங்க. காலை, மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள். நிச்சயம் மலச்சிக்கல் நீங்கும்.

அபான முத்திரை செய்முறை

விரிப்பில் நிமிர்ந்து கிழக்கு திசை நோக்கி அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் மோதிரவிரல், நடுவிரல் மடக்கி அதன் நுனியில் கட்டை விரலை படத்தில் உள்ளது போல் வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.அபான வாயு முத்திரை

விரிப்பில் கிழக்கு திசை நோக்கி சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் நடு விரல், மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். ஆள்காட்டி விரலை கட்டை விரலின் அடியில் வைக்கவும். சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கி இருக்க வேண்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும். காலை, மாலை சாப்பிடுமுன் செய்யவும். அதிக மலச்சிக்கல் உள்ளவர்கள் காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் மூன்று வேளை பயிற்சி செய்யவும்.

சுஜி முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து சுகாசனத்தில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் தியானிக்கவும். பின் சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து, அதன் மேல் பெருவிரலை வைக்கவும். ஆள்காட்டி விரல் மட்டும் நேராக வைக்கவும் (படத்தை பார்க்கவும்). இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள். காலை, மதியம், மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் செய்ய வேண்டும்.

பவன முக்தாசனம்

விரிப்பில் நேராகப் படுக்கவும், இருகால்களை நீட்டவும், வலது காலை மடித்து முட்டின் மேல் இருகைகளையும் சேர்த்து பிடிக்கவும். மூச்சை இழுத்து கொண்டே முகத்தின் தாடையால் முட்டைத் தொடவும், சாதாரண மூச்சில் பத்து விநாடிகள் இருக்கவும். இதே போல் காலை மாற்றி பயிற்சி செய்யவும்.

பின் இரு கால்களையும் மடக்கி முட்டை கைகளால் பிடித்து மூச்சை இழுத்து முகத் தாடையை இரு மூட்டுகளின் மையத்தில் வைக்கவும். பத்து விநாடிகள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும். மூன்று முறைகள் பயிற்சி செய்யவும்.

இந்த மேற்குறிப்பிட்ட முத்திரைகள், யோகாசனத்தை காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிடுமுன் செய்யவும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் நான்கு நாட்கள் பயிற்சிகள் செய்ய வேண்டாம். ஐந்தாவது நாள் முதல் யோகப் பயிற்சிகள் செய்யலாம்.

உணவு

மலச்சிக்கல் ஏற்படுவதற்கும், நாம் எடுக்கும் உணவிற்கும் நெருங்கிய சம்மந்தம் உள்ளது. மைதாவினால் ஆன உணவு சப்பாத்தி, புரோட்டா, அடிக்கடி சாப்பிடக்கூடாது. நூடுல்ஸ், பீட்சா, பர்கர், சாப்பிடக் கூடாது.  பழங்கள், கீரைகள் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். கொய்யா பழம், வயல் வாழைப்பழம், அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளவும்.

பசிக்கும் பொழுது பசி அறிந்து நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும். நிறைய நபர்கள் காலை உணவு எடுத்துக் கொள்வதில்லை. அது வாயு கோளாறாக மாறி மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே காலை 8 மணி முதல் 8 .30 மணிக்குள் சிறிய அளவில் சாப்பிடுங்கள். இட்லி மிகச் சிறந்த உணவு. விரைவில் செரிமானமாகும். மதியம் 1 மணி முதல் 1.30 மணிக்குள் சாப்பாடு சாப்பிடவும். இரவு உணவு 7.30 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிடவும். இரவு சாப்பாடு அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று செல்ல இடம் வேண்டும். அதிக காரம், புளிப்பு, உப்பு தவிர்க்கவும்.

சாப்பிட்டு பத்து நிமிடம் கழித்து சுடு தண்ணீர் ஒரு டம்ளர் குடிக்கவும். இரவு பால் குடிப்பதை தவிர்க்கவும். அதிக டீ, காபி குடிப்பதை தவிர்க்கவும். சுரைக்காய், பூசணிக்காய் உணவில் எடுக்கவும். முட்டை கோஸ், கேரட், அவரைக்காய், புடலங்காய், பீட்ரூட், வெண்டைக்காய் உணவில் அடிக்கடி எடுக்கவும்.
மாதம் இரு நாள் சாப்பாடு அரை மூடி தேங்காய், ஒரு வாழைப்பழம் மட்டும் சாப்பிடவும்.

மனம்

மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம், கவலை, டென்ஷன் இருந்தால் மலச்சிக்கல் ஏற்படும். மனம் சிக்கலானால் மலமும் சிக்கலாகும். எனவே காலை எழுந்தவுடன் ஒரு ஐந்து நிமிடம் கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கூர்ந்து தியானிக்கவும். மாலையிலும் கண்ணை மூடி ஐந்து முதல் பத்து நிமிடம் மூச்சை தியானிக்கவும். இதனால் மனம் சாந்தமாகும், அமைதியாகும். எண்ணங்கள் ஒடுங்கும். இந்த யோகப்பயிற்சியை பயிலுங்கள் மலச்சிக்கல் வராமல் மகிழ்ச்சியாக வாழுங்கள்.

யோகக் கலைமாமணி
பி.கிருஷ்ணன் பாலாஜி M.M(Yoga)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More