இராக்கின் மலைப் பகுதியில் 20,000 பொதுமக்கள் முற்றுகை | பிரிட்டன் விமானங்கள் உணவுகளை வீசினஇராக்கின் மலைப் பகுதியில் 20,000 பொதுமக்கள் முற்றுகை | பிரிட்டன் விமானங்கள் உணவுகளை வீசின

இராக்கின் சின்ஜார் மலைப் பகுதியில் தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த பொதுமக்கள் 20,000-க்கும் மேலானோர், ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து தப்பினர்.

இராக்கின் சிறுபான்மைப் பிரிவினரான யாஜிதி சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி, அங்குள்ள சின்ஜார் மலைப்பகுதியில் பதுங்கியுள்ளன.

அங்கு உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வந்த அவர்களுக்கு விமானங்கள் மூலம் உணவுப் பொட்டலங்களும், குடிநீரும் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், அவர்களில் 20,000-க்கும் மேலானோர் அங்கிருந்து சிரியா வழியாக தப்பி, இராக்கில் குர்து இனத்தவரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியை வந்தடைந்ததாக குர்து தன்னாட்சிப் பிரதேச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, சின்ஜார் மலைப்பகுதியில் சிக்கிய மக்களுக்கு உதவும் வகையில், பிரிட்டன் விமானங்கள் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை சனிக்கிழமை வீசின.

அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களுடன் குடிநீர் சுத்திகரிப்பான்கள், சூரிய மின் விளக்குகள், மொபைல் போன் சார்ஜர்கள், கூடாரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களும் பிரிட்டன் விமானங்கள் மூலம் வீசப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலர் பிலிப் ஹாம்மண்ட் கூறுகையில், “”இராக்கின் சின்ஜார் மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களுக்கு விமானங்கள் மூலம் உதவிப் பொருள்கள் வழங்கிவரும் மற்ற நாடுகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.

“தாக்குதல் நடவடிக்கை இல்லை’: விமானம் மூலம் உணவுப் பொருள்களை விநியோகித்தாலும், தீவிரவாத நிலைகள் மீது விமானத் தாக்குதல் நிகழ்த்தும் அமெரிக்காவைப் போல், இராக்கில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என பிரிட்டன் அறிவித்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவும், அப்பகுதியில் மூன்றாவது முறையாக உணவு மற்றும் குடிநீர் பொட்டலங்களை தங்களது விமானங்கள் மூலம் சனிக்கிழமை விநியோகம் செய்தது.

இதுவரை 52,000 உணவுப் பொட்டலங்களையும், 40,125 லிட்டர் குடிநீர் பாட்டில்களையும் அமெரிக்க விமானங்கள் வீசியுள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரிகள்தெரிவித்தனர்.

ஆசிரியர்