அமெரிக்கப் பணக்காரர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்அமெரிக்கப் பணக்காரர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்

அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 5 அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள, “400 மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில்’ முதலிடத்தை மைக்ரோசாஃப்ட் துணை நிறுவனர் பில் கேட்ஸ் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 81 பில்லியன் டாலராகும் (சுமார் ரூ.5 லட்சம் கோடி). கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் இவர் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து 2-ஆவது இடத்தில் பெர்க்ஷயர் ஹாதவே நிறுவனத்தின் தலைவர் வாரன் பஃபெட் உள்ளார். மென்பொருள் தயாரிக்கும் ஆரக்கிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் லாரி எல்லிஸன் 3ஆவது இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் 5 அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். சின்டெல் அயலகப் பணிகள் நிறுவனத்தின் நிறுவனர் பரத் தேசாய் 255-ஆவது இடத்திலும், தொழிலதிபர் ஜான் கபூர் 261-ஆவது இடத்திலும், ஸிம்ஃபனி டெக்னாலஜி நிறுவனர் ரமேஷ் வாத்வானி 264-ஆவது இடத்திலும், கம்ப்யூட்டர் துறை முதலீட்டாளர் கவிதார்க் ராம் ஸ்ரீராம் 350-ஆவது இடத்திலும், புதுத் தொழில் ஊக்க முதலீட்டாளர் வினோத் கோஸ்லா 381-ஆவது இடத்திலும் உள்ளனர்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இந்தப் பணக்காரர்கள் பட்டியலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் மாறுதல்கள் இல்லை. எனினும் கடந்த ஆண்டில் பணக்காரர்களாக இருந்தவர்கள், தற்போது மேலும் பணக்காரர்களாக மாறியுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு சராசரியாக 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆசிரியர்