இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை பேச்சுவார்த்தையின் ஊடாக வெற்றிக் கொள்ள முடியும் என்ற காரணத்தினால்தான் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினேன் என முன்னாள் பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.
பி.பி.சி செய்தி பிரிவுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை நான் காட்டிக் கொடுத்ததாக கூறப்படுவது மிகவும் தவறான விடயமாகும்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை பேச்சுவார்த்தையின் ஊடாக வெற்றிக் கொள்ள முடியும் என்ற நோக்கத்துடனே நோர்வே போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த ஆரம்பித்தேன்.
மேலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்பாவி உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை கொண்டிருந்தேன்.
எனினும், எனது அந்த நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விரும்பவில்லை. அதனால் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நான் வெளியேறினேன்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கருணா அம்மான் மாத்திரமே காட்டிக் கொடுத்தார் என விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் கூறவில்லை.
ஆனாலும் விடுதலைப் போராட்டம் தொடர்பாக அறியாத சிலரே, நான் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்ததாக பிரசாரம் செய்து வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.