இத்தாலியில் ஏன் கொரோனா அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியது!

கொரோனா வைரஸால் சீனாவிற்கு அடுத்து இத்தாலியிலேதான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிய நாடுகளைக் கடந்து, ஐரோப்பாவிலுள்ள இத்தாலியில், கொரோனோ வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது ஏன்?

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் 6 கோடிப் பேருடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலே 3வது மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், உலகிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட 23வது நாடாகவும் விளங்குகிறது. உலகிலே சிறந்த சுற்றுலாத்தலமுள்ள நாடாக விளங்கும் இத்தாலியில் இதுவரை கொரோனோவால் 1,809 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24,747 பேருக்கு நோய்தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியிலுள்ள மக்கள் தொகையில் 25% பேர் 65 வயதிற்கும் மேற்பட்டவராகவுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையில் பெரும்பாலானோர் முதியவர்களாகவே உள்ளனர்.

ஆரம்பத்தில் இத்தாலியின் வடக்குப் பகுதிகளான லோம்பார்டியா, எமிலியா ரோமக்னா மற்றும் வெனெட்டோ போன்ற பகுதியிலே மட்டுமே இந் நோய்த்தொற்று காணப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் நோய்தொற்று வேகமாக பரவியதால், அவசரநிலையைப் பிறப்பித்த முதல் ஐரோப்பிய நாடு என்ற மோசமான நிலைக்கு இத்தாலி தள்ளப்பட்டது.

இந்தளவு பாதிப்புக்கு முக்கிய காரணம், சீனாவுடன் அதிகப்படியான விமானப் போக்குவரத்தை கொண்ட நாடாக இத்தாலி இருந்து வருகிறது. இந்த வருட ஆரம்பத்தில் சீனாவுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக இரு நாட்டுக்கும் இடையேயான விமான போக்குவரத்து 3 மடங்காக அதிகரித்தது. இதனால் சீனாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு அதிகமாக வரத் தொடங்கினர்.

ஆரம்பத்தில் நோய்த் தொற்று காணப்பட்ட இத்தாலியின் வடக்குப் பகுதியில் மட்டுமே இத்தாலி அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு, மற்ற பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தாமல் அலட்சியமாக இருந்ததாக சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

இத்தாலியிலுள்ள தொழிற்சாலைகள் ஓய்வின்றி இயங்கியதால் பொதுமக்களிடையே நெருக்கம் அதிகரித்ததோடு, தொழிற்சாலைகளில் கைவிரல் ரேகைப் பதிவுகள் போன்ற நடைமுறைகளும் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்ததால் நோய்த் தொற்று வேகமெடுத்துள்ளது.

இத்தாலியில் 21% பேர் புகைத்தலுக்கு அடிமையானவர்கள் உள்ளதால், சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் கொரோனோவால் எளிதில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், ஐரோப்பாவிலுள்ள அதிக காற்று மாசடைந்த 100 நகரங்களில், 24 இடங்கள் இத்தாலியில் அமைந்துள்ளதும் அதிகப்படியான உயிரிழப்பிற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

மேலும், கொரோனோ வைரசின் பாதிப்பு இந்த அளவிற்கு தீவிரமாகும் என இத்தாலி கணிக்காமலும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் இருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால் தான் இத்தாலி தற்போது ஏராளமான உயிரிழப்புகளை சந்தித்திருப்பதுடன், வெளியுலகுடனான தொடர்புகளை தடை செய்து கொண்டு தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் அதி தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆசிரியர்