Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை கால்பந்தாட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட ஊழல் மோசடிகள்

இலங்கை கால்பந்தாட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட ஊழல் மோசடிகள்

2 minutes read

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் 2014 இல் இருந்து நிதி, நிருவாகம், போட்டி செலவினங்கள் ஆகியவற்றில் 30க்கும் மேற்பட்ட ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த மோசடிகளில் குற்றவாளிகளாக காணப்படும் நிருவாகிகள் எவரும் எதிர்காலத்தில் சம்மேளனத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு விதிகள், நிருவாகம், நிதி, கால்பந்தாட்ட விளையாட்டின் நிலை உட்பட மற்றும் சில விடயங்கள் தொடர்பாக ஆராய விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஒரு மாதத்திற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட விசாரணைக் குழுவின் அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் செவ்வாய்க்கிழமை (04) மாலை கையளிகப்பட்டது.

உயர்நீதிமன்ற ஓய்வுநிலை நீதிபதி குசலா சரோஜினி (தலைவர்), ஓய்வுநிலை அமைச்சு செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ, ஒய்வுநிலை பிரதி பொலிஸ்மா அதிபர் சுகத் நாகாமுல்ல, ஓய்வுநிலை ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், முன்னாள் வீரர் சுசில் ரோஹன ராமநாயக்க ஆகியோரைக்கொண்ட விசாரணைக் குழுவினரையே ஒரு மாதத்திற்கு முன்னர் அமைச்சர் நியமித்திருந்தார்.

அந்த அறிக்கை கிடைத்த சொற்ப நேரத்தில் ஊடக சந்திப்பை நடத்துவதால் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள சகல விடயங்களையும் தன்னால் வாசிக்க முடியாமல் போனதாகக் குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ‘இந்த அறிக்கை எனக்கு சமர்ப்பிக்கப்பட்டபோது சில விடயங்களை அக் குழுவின் தலைவர் விளக்கினார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தைப் பொறுத்த மட்டில் அதன் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பாக அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

‘அத்துடன் சம்மேளனத்தில் 30க்கும் மேற்பட்ட ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கால்பந்தாட்ட விளையாட்டின் மேம்பாட்டிற்காகவும் விளையாட்டு வீரர்களுக்காகவும் 2 வீதம் கூட செலவிடப்படவில்லை எனவும் விசாரணைக் குழுத் தலைவர்  என்னிடம் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் வங்கி வைப்பிலிருந்து 100 மில்லியன் ரூபாவை மீளப் பெற்று நிருவாகிகள் மலேசியாவுக்கு சுற்றுப் பயணம் செய்த விடயமும் வெளியாகியுள்ளது.

‘இலங்கையில் கிரிக்கெட், காலப்ந்தாட்டம், றக்பி உட்பட பிரதான விளையாட்டுக்கள் தொடர்பாக நான் ஆய்வுகளை செய்தேன். அதன் மூலம்  இந்த விளையாட்டுக்கள் யாவும் 10 வருடங்கள் பின்னோக்கி சென்றுள்ளதே தவிர முன்னோக்கி நகரவில்லை என்பது எனக்கு அறியக்கிடைத்தது.

இந்த சரிவைப் போக்கி அவ் விளையாட்டுக்களை உயரிய நிலைக்கு கொண்டுசெல்ல  குறுகிய கால, நடுத்தர கால, நீண்டகால திட்டங்களை எவ்வாறு அமுல்படுத்துவது என்பது குறித்து சிந்திக்கவேண்டும். எனவே விளையாட்டுத்துறையில் இடம்பெறும் சகலவிதமான மோசடிகளையும் இல்லாதொழிக்க கடும் நடவடிக்கை எடுக்க உள்ளேன்’ என்றார்.

இதேவேளை, 249 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையை ஆங்கலத்தில் மொழிபெயர்த்து பீபாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, பீபாவினால் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமானால் சம்மேளனத்தின் பொதுச் சபையைக் கூட்டி பீபாவின் கோட்பாடுகளுக்கு அமைய யாப்பு விதிகளை திருத்தி அமைத்து தேர்தல் குழு ஒன்றை நியமித்து தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கை எடுப்பீர்களா? என பிரத்தியேகமாக அமைச்சரிடம் கேட்டபோது, ‘நிச்சயமாக அதனை செய்யமுடியும்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனப் பொதுச் சபை உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடி கால்பந்தாட்ட விளையாட்டை மட்டுமல்லாமல் நிருவாகத்தையும் நேரிய வழியில் கொண்டு செல்ல நான் தயாராக இருக்கிறேன்’ என பதிலளித்தார்.

அத்துடன் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுச் சபை செயலிழந்துள்ளதால் 75 ஊழியர்களுக்கு சம்பளம், புதுவருட போனஸ் என்பன கிடைக்காமலிருப்பதாக சுட்டிக்காட்டியபோது, சம்பளம் கிடைப்பதற்கு ஆவன செய்யப்படும் என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More