செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்

15 minutes read

கல்வியைப் பற்றி திருவள்ளுவர்:

“கற்க கசடறக் கற்றவை கற்ற பின்

நிற்க அதற்குத் தக” என்றார்.

சுப்பிரமணிய பாரதியார்:

“அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டலிலும்

ஆலயம் பதினாயிரம் கட்டலிலும்

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவூட்டல் சிறந்தது” என்றார்.

“கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற பழமொழியும் தமிழில் உண்டு.

இவ்வாறு உள்ள போது மக்கள் தமது பிள்ளைகள் கற்க வேண்டும் என்று தானே நினைப்பார்கள்.

தமது பிள்ளைகள் எழுத, படிக்க தெரியாதவர்களாக இருந்து விடுவார்களோ என்று பயந்து இருந்த மூன்று கிராம மக்களுக்கும் இப்போது நிம்மதி. தமது குடும்பங்களை ஊரில் விட்டு விட்டு தனியே இருந்த குஞ்சுப்பரந்தன் ஆண்கள் சிலரும் படிப்படியாக தங்கள் குடும்பங்களை கொண்டு வந்தார்கள்.

மீனாட்சியுடன் மகிழ்ச்சியாக இருந்த கணபதி வாழ்வில் மிகவும் நிம்மதி தரக்கூடிய ஒரு நிகழ்வும் கவலை தரும் ஒரு நிகழ்வும் பெரும் மகிழ்ச்சி தரும் ஒரு நிகழ்வும் இடம்பெற்றன. இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை.

கொடிகாமச் சந்தையில் ஒரு அம்மா வியாபாரம் செய்வது வழக்கம். அந்த அம்மாவிற்கு நாப்பது வயது இருக்கும். அந்த அம்மாவின் புருசன் யாழ்ப்பாணச் சந்தையில் கடை வைத்து வியாபாரம் செய்ததால், மிகவும் சந்தோசமாக வாழ்ந்தா, ஆயினும் குழந்தைகள் இல்லாத குறை மட்டும் இருந்தது.

சில வருசங்களுக்கு முன்னர் கணவன் இறந்து விட, அவருக்கு உதவியாக இருந்த சகோதரியின் கணவர் கடையை தொடர்ந்து நடத்தினார். கிராமங்களில் இருக்கும் நேர்மை, ஒழுக்கம் என்பன ஐரோப்பியர்களுக்கு மத்தியில் வாழ்ந்த நகர மக்களிடம் குறைந்து கொண்டே வந்தது.

தமது சொந்தக்காரன் தானே என்று அந்த அம்மாவும் அசண்டையாக இருந்து விட்டா. கேட்கும் இடங்களில் எல்லாம் கை நாட்டு போட்டு விட்டா. கடையின் உரிமையை சகோதரியின் புருசன் எடுத்து விட்டார். அந்த அம்மாவிற்காக கதைக்க போனவர்களிடம், அவான்ரை புருசன் கடையின் பேரில் கடன் வாங்கி இருந்ததாகவும், அந்த கடனை தான் கட்டி கடையை மீட்டதாகவும், அந்த காசை அம்மா தந்தால் கடையை திருப்பி கொடுத்து விடுவதாகவும் கூறிவிட்டான்.  காசுக்கு அம்மா எங்கே போவா.                                                        

பட்டினத்தார் “இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள், செல்லாதவன் வாயில் சொல்” என்று பாடியதைப் போல் ஆனது அந்த அம்மாவின் நிலை.

சகோதரியின் புருசனுடன் பிரச்சினை என்றதும் மற்ற உறவுகளும் அந்த பெண்ணை கை விட்டு விட்டன. கொடிகாமத்திலிருந்த ஒரு ஒன்று விட்ட தம்பி அம்மாவை கூட்டி வந்து தன்னுடன் வைத்திருந்தான்.

அவனுக்கும் பிள்ளையள் அதிகம், வறுமை, அதனால் அந்த அம்மா தம்பியாரைக் கூப்பிட்டு “தம்பி, உனக்கும் பிள்ளை குட்டியள் இருக்கு. நான் உனக்கு பாரமாய் இருக்கிறது சரியில்லை, உன்ரை காணியில் ஒரு மூலையிலை எனக்கு ஒரு கொட்டில் போட்டு தா. எனக்கு சந்தை பொம்பிளைகளோடை கதைத்து ஒரு மூலையிலை இடம் பிடித்து தா. நான் தேங்காய், மாங்காய் வித்து என்ரை பாட்டை பார்த்துக் கொண்டு இருப்பன். உன்ரை காணியில் இருந்தால் தனிய எண்ட பயமுமில்லை” என்று சொல்லி தன்ரை சீலைத் தலைப்பில் முடிந்து வைத்திருந்த காசை, கொட்டில் போடுவதற்காக கொடுத்தா. இப்ப அந்த கொட்டிலில் இருந்து சந்தைக்கு போய் வாறா.

அவான்ரை கதை தெரிந்த படியால் முருகேசர் அவாக்கு தான் தன்ரை தேங்காய்களை கொடுப்பார். அவ கொட்டில் மேய கிடுகுகளை கேட்ட போது, கொண்டு போய் இறக்கி விட்டார்.

பிறகு கண்டபோது “என்னணை கொட்டில் மேய்ஞ்சு போட்டியா?” என்று கேட்டார்.

அதுக்கு அந்த அம்மா “எங்கை மேய்ஞ்சது முருகேசு, தம்பி தான் மேய்ஞ்சு தரோணும் அவனுக்கும் ஒரே வேலை.” என்றா. முருகேசர் பார்க்கும் போதே கூரை எல்லாம் கழண்டு பெய்யுற மழை முழுக்க கொட்டிலுக்குள்ளை தான் பெய்யும் போலை இருந்தது. அவர் அந்த அம்மாவை கன நாளாய் பார்த்து வாறார், அவ சிரித்தாலும் அழுற மாதிரி தான் இருக்கும். இரக்கப்பட்ட முருகேசர் “நான் மேய்ஞ்சு தரட்டா?” என்று கேட்டார்.

“உன்னாணை ஒருக்கால் மேய்ஞ்சு தா. நான் உன்ரை கூலியைத் தந்திடுவன்” என்று சொன்னா.  முருகேசர் அடுத்த நாள் காலமை போய் மேய்ஞ்சு கொடுத்தார். அந்த அம்மா மேய்ஞ்ச காசை கொண்டந்து நீட்டினா. முருகேசருக்கு காசு வேண்ட விருப்பம் இல்லை.

“எனக்கு காசு வேண்டாம், ஒரு மனுசருக்கு உதவி செய்யிறேல்லையே, நீயே வைத்திரு” என்று சொல்லி விட்டார்.

அந்த அம்மாவின் தம்பி அவ தன்னட்டை கதைக்கிற மாதிரி, முருகேசரிட்டையும் வாரப்பாடாய் கதைக்கிறதை அவதானித்து, முருகேசரைப் பற்றி விசாரித்தான். அவருக்கு ஒரு மகளும் மகனும் தான் பிள்ளைகளெண்டும், மகன் பிறந்த வீட்டுக்கை மனிசி செத்துப்போச்சு எண்டும், அவர் வேறை கல்யாணம் செய்யாமல் பிள்ளைகளை வளர்த்தவர் எண்டும் சொன்னார்கள்.  இப்ப மகளை வன்னியில் கட்டி கொடுத்திட்டு தனிய இருக்கிறார் எண்டும் கேள்விப்பட்டான்.

தமக்கையிட்டை கதைச்சுப் பார்த்தான், அவ “எனக்கு இனி என்னடா கல்யாணம். அதோண்டும் வேண்டாம், என்னை இப்படியே இருக்க விடு” எண்டு சொன்னவ “அந்த மனுசனை பார்த்தால் நல்ல மனுசன் போலை தான் கிடக்கு” என்றா. தம்பியாருக்கு தமக்கைக்கும் சம்மதம் தான் எண்டு விளங்கியது

முக்கியமான விடயத்தை கதைக்க வருவதாக முன் கூட்டியே அறிவித்த மாமன் முருகேசர் ஒரு நாள் வந்தார். முகம் தெளிவாக காணப்பட்டாலும் அவரிடம் ஒரு பதட்டமும் இருந்தது.

வந்து மகளை சுகம் விசாரித்து, வந்த களைப்பிற்கு மகள் கொடுத்த மோரை குடித்தவர் கணபதியிடம் தயக்கத்துடன் “தம்பி, நான் தேங்காய் கொடுக்கிற அம்மா, நாப்பது வயது இருக்கும். நான் வாடிக்கையாய் அந்த அம்மாட்டை தான் தேங்காய் கொடுக்கிறது. அந்த அம்மா மிகவும் நல்லவ, அவான்ரை தம்பியார் என்னட்டை வந்து தமக்கையை கட்டினால் என்ன? என்று கேட்டான்.” என்றவர், “நான் பிள்ளையளிட்டை கேட்டுப் போட்டு தான் மறுமொழி சொல்லுவன் எண்டிட்டன்.” என்று அந்த அம்மாவின் கதையையும் கூறினார்.

பின்பு “நீங்கள் தான் எனக்கு எல்லாம், நீங்கள் சொல்லுறபடி செய்கிறன்.” என்று ஒருவாறு சொல்லி முடித்தார். அவரது பதட்டத்தைக் கண்டு என்னவோ ஏதோ என்று நினைத்திருந்த கணபதி நிம்மதியடைந்து “மாமா, இதுக்கு ஏன் இவ்வளவு பதட்டப்படுறியள், கேட்க எனக்கு நிம்மதியாக இருக்கு. மீனாட்சிக்கு நெடுக உங்களை தனிய விட்டிட்டு வந்த கவலை, இதை கேட்டு அவளுக்கும் நிம்மதியாக இருக்கும்” என்றான்.

கணபதி இப்படி தான் சொல்லுவான் என்பது மீனாட்சிக்கு, அவனுடன் வாழ்ந்த நாட்களில் கண்ட அவனது குணத்தினால் நன்கு தெரியும். முருகேசரை ஓடிப் போய் கட்டிப்பிடித்து “ஐயா ஐயா, எனக்கு நல்ல சந்தோசம்.” என்றாள்.

தகப்பனை தனியாக தவிக்க விட்டு விட்டு வந்தேனே என்று கவலைப்பட்டு கொண்டிருந்தவளுக்கு நெஞ்சிலிருந்த பாரம் விலகியது போல இருந்தது. முருகேசர் வந்திருப்பதை அறிந்த ஆறுமுகத்தார் விசாலாட்சியுடனும் கந்தையனுடனும் வந்தார். கந்தையன் ஓடிப்போய் தகப்பனை “ஐயா” என்று சொல்லி கட்டிப் பிடித்தான்.

விசயத்தை கேள்விப்பட்ட ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் சந்தோசப்பட்டார்கள். ஆறுமுகத்தார் “முருகேசர், நீங்கள் அந்த அம்மாவை செய்யிறது தான் சரி. வயது போன காலத்தில் தலையிடி, காய்ச்சல் வந்தால் தைலம் தடவி விடவும், ஏலாமல் படுக்கையில் கிடந்தால் கஞ்சி காய்ச்சி தரவும், ஆறுதலாய் கதைக்கிறதுக்கும் தான் ஒரு துணை தேவை, நீங்களும் எவ்வளவு நாள் தனிய இருப்பியள். மீனாட்சிக்கு உங்களை தனிய விட்டிட்டு வந்த கவலை இப்பவும் மாறேல்லை.” என்று அவரது கைகளைப் பிடித்துக் கொண்டே கூறினார். 

‘எங்கே மகளை கட்டி கொடுத்தாப் பிறகு, வயது போன காலத்திலை முருகேசருக்கு இப்படி ஒரு ஆசை வந்திருக்கக்கூடாது எண்டு நினைப்பினமோ’ என்று பயந்திருந்த முருகேசருக்கு பயம் விலகி பெரிய நிம்மதி வந்தது.

நாட்சோறு கொடுக்கும் நாளை சொல்லி விடச் சொல்லி, தானும் கணபதியும் முதல் நாளே வந்திருந்து நல்லபடியாக நடத்தி கொடுப்பதாகவும், மீனாட்சி கர்ப்பிணியாக இருப்பதால் வண்டிலில் அவ்வளவு தூரம் பிரயாணம் செய்யக்கூடாது என்றும் சொல்லிய ஆறுமுகத்தார், கந்தையனையும் அவருடன் கூட அனுப்பி வைத்தார்.

மீனாட்சி “ஐயா, நான் வராட்டி என்ன, இவரும் மாமாவும் வருவினம். கந்தையனும் உங்களோடை கூட நிப்பான். எல்லாம் முடிய சின்னம்மாவை கூட்டிக் கொண்டு வந்து எனக்கு காட்டுங்கோ ஐயா” என்று அன்பாக சொல்லி வழியனுப்பி வைத்தாள்.

குறித்த நாளுக்கு முதல் நாளே மீனாட்சியுடன் விசாலாட்சியையும் பேரம்பலத்தையும் விட்டு விட்டு, கணபதியுடனும் சின்ன மீனாட்சியுடனும் போய் நின்று ஆறுமுகத்தார், முருகேசரின் நாட்சோறு கொடுத்தலை நல்லபடியாக நடத்தி வைத்தார்.

முத்தரும் தனது இளமைக்கால சினேகிதனுடன், முருகேசரின் நாட்சோறு கொடுத்தலுக்கு போய் வந்தார். கணபதி வரும் போது கந்தையனையும் கூட்டி வந்தான். பின்னர் ஒரு நல்ல நாளில் முருகேசர் தன்ரை புது மனைவியுடன் வந்தார். சின்னம்மா, இளமையாகவும் நல்ல நிறமாகவும் வடிவான மனிசியாகவும் இருந்தா. பார்த்த உடனேயே மீனாட்சிக்கு பிடித்து விட்டது.

மீனாட்சி ஓடிச்சென்று “சின்னம்மா வாருங்கோ” என்று சொல்லி சிறிய தாயாரை அணைத்து கூட்டி வந்தாள். சின்னம்மா, மீனாட்சியுடனும் விசாலாட்சியுடனும் நன்கு கதைத்து பழகினா. மீனாட்சி “சின்னம்மா, எனக்கு நல்ல சந்தோசம், நானும் ஐயாவை தனிய விட்டிட்டு வந்திட்டன், அவர் நேரகாலத்துக்கு சாப்பிடுறேல்லை. இனி நீங்கள் பார்த்து கொள்ளுவீங்கள்.” என்று சிறிய தாயை அணைத்தபடி சொன்னாள்.

இரண்டு நாட்கள் பெரிய பரந்தனிலை முருகேசருடன் நின்ற சின்னம்மா, “மீனாட்சி உனக்கு நாள் நெருங்க சொல்லியனுப்பு. நான் வந்து பிள்ளைப்பேறு முடிஞ்சு நீ எழும்பி ஊசாடும் வரைக்கும் உன்னோடை நிற்பன். விசாலாட்சி அம்மா நல்லாய் பார்ப்பா எண்டு எனக்கு தெரியும். அவரோடை நானும் வந்து நின்று கூடமாட உதவி செய்வன்” என்று கூறி விடை பெற்றாள்.

கணபதியின் மகிழ்ச்சியை குறைக்கிற ஒரு செய்தியை பறங்கியர் கடைசியாக வந்த போது கூறினார். “கணபதி, எனக்கு அடுத்த மாதம் தொடக்கம் மட்டக்கிளப்புக்கு இடமாற்றம் வந்திட்டுது. அடுத்த கிழமையோடை இஞ்சை எல்லா கணக்குகளையும் வாற புதாளிட்டை ஒப்படைச்சு போட்டு நாங்கள் போக வேணும். போறதுக்கிடையிலை வாற ஞாயிற்றுக்கிழமை வருவன், கவலைப்படாதை. உடன் பிறந்தது போலை பழகீட்டம், எனக்கும் கவலை தான். சென்சோராவிற்கும் கவலை தான். என்ன செய்கிறது, எல்லாருக்கும் நடக்கிறது தான் எங்களுக்கும் நடக்குது.” என்று பறங்கியர் கூற, கணபதிக்கு கண்கள் கலங்கி விட்டன.

பறங்கியர் அவனுடன் அண்ணன் தம்பி போல பிழங்கியவர். பெரிய பரந்தன், மீசாலை என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்ற, கணபதிக்கு பறங்கியர் ‘கணபதி, இவற்றை விட வேறு உலகமும் இருக்குது, அங்கே வேறு பல நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.’ எண்டதை சொல்லி சொல்லி அவனது அறிவை விசாலமாக்கியவர். அவர் போறது மிகவும் கவலை தரும் விசயம் தான். ஆனால் ஏழு வயதில் பெத்த தகப்பனை பறிகொடுத்த துக்கத்தை தாங்கிய கணபதி, இந்த துக்கத்தையும் தாங்கி கொள்வான்.

தான் சொன்னது போல பறங்கியர் அடுத்த ஞாயிற்றுக்கிழமை சென்சோராவுடன் குதிரை வண்டிலில் வந்தார்.

கணபதியும் தோழர்களும் காடு முழுவதும் அலைந்து திரிந்து ஒரு கலை மானை வேட்டையாடியிருந்தனர். கணபதி துவக்குக்கு எண்ணெய் போட்டு நன்கு துடைத்து வைத்திருந்தான். மிகுதி தோட்டாக்களையும் ரோர்ச் லைற்றையும் எடுத்து வைத்திருந்தான். பறங்கியருக்கு பனம் கள்ளும், சென்சோராவிற்கு சுண்ட காய்ச்சிய பாலும் வைத்திருந்தான்.

பறங்கியர் கள்ளை அருந்த, சென்சோரா மீனாட்சி கொடுத்த பாலை குடித்தார். வேட்டையாடிய மானை சாக்கால் சுற்றி குதிரை வண்டிலில் ஏற்றினார்கள். விசாலாட்சி ஒரு புதிய மூடல் பெட்டியில் மரை வத்தலை வைத்து கொண்டு வந்தார். அதைப் பார்க்க கணபதிக்கு தான் முதல் முதல் தகப்பனோடை பறங்கியரின் அலுவலகத்திற்கு போன நினைவுகள் வந்தது. நேத்து மாதிரியிருக்கு, ஆனால் ஏழு வருடங்கள் ஓடி விட்டன.

பறங்கியர் போக வெளிக்கிட கணபதி துவக்கு, தோட்டாக்கள், ரோர்ச் லைற் என்பவற்றை கொண்டு வந்து வண்டிலில் ஏற்ற ஆயத்தமானான். விரைந்து வந்து கணபதியின் தோளில் பிடித்த பறங்கியர் “கணபதி, அப்பிடி எண்டால் எங்களை இண்டையோடை மறக்கப் போறியோ. துவக்கையும் தோட்டாவையும் உள்ளுக்கை வை. எங்கடை ஞாபகமாக வைத்திரு, நான் ஒரு புது தோட்டாப் பெட்டியும் ஐந்து புது பற்றிகளும் உனக்கு தர கொண்டந்தனான். நாங்கள் இப்ப போனாலென்ன, இரணைமடுவுக்கு வரவேண்டி வந்தால் உங்களிட்டை கட்டாயம் வருவம். முக்கியமாய் சின்ன கணபதியை வந்து பார்க்க வேணும்” என்று மீனாட்சியை பார்த்து சிரித்த படி சொன்னார்.

ஆறுமுகத்தாரை பார்த்து “போட்டு வாறன் ஐயா” என்றவர் விசாலாட்சியைப் பார்த்து “போட்டு வாறன் அம்மா” என்றார். கணபதிக்கும் தோழர்களுக்கும் கைகளை குலுக்கி விடை பெற்றார்.

சென்சோரா எல்லாருக்கும் புன் சிரிப்புடன் தலையை ஆட்டிவிட்டு, குதிரை வண்டிலில் ஏறி கையை ஆட்டிய படி சென்றார். கணபதி தனது தோழர்களுடன் கண்கள் கலங்க குதிரை வண்டில் போய் மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றான்.

மீனாட்சிக்கு பிள்ளை பெறும் காலம் நெருங்கியது. சொன்னது மாதிரி சின்னம்மா வந்து விட்டா. இப்ப மீனாட்சிக்கு வாய்க்கு ருசியான சாப்பாடு செய்யும் பொறுப்பு சின்னம்மாவிற்கு வந்து விட்டது. ஆறுமுகத்தாரும், விசாலாட்சியும் கந்தையனும் ஒவ்வொரு நாளும் காலமையும் பின்னேரமும் வருவார்கள். சின்ன மீனாட்சி தொடர்ந்து கணபதி வீட்டிலேயே நின்றாள்.

பேரம்பலம் பள்ளிக்கூடத்திற்கு காலமை வருபவன், இரவு விருப்பமில்லாமல் தியாகர் வயலுக்கு போவான். (‘சின்னம்மா’ மீனாட்சிக்கும் கந்தையனுக்கும் தான் சின்னம்மா. ஆனால் இப்ப பெரிய பரந்தனில் உள்ள எல்லோருக்கும் அவ சின்னம்மா தான். இனிமேல் பிறக்கப் போற கணபதியின் பிள்ளையளும் பேரப்பிள்ளையளும் ‘சின்னம்மா’ எண்டு தான் கூப்பிட போயினம், அந்த அளவுக்கு எல்லாரையும் அன்பினால் கவர்ந்த மனிசி அவ)

மீசாலையிலிருந்து மருத்துவச்சி கிழவியும் வந்திட்டா. மீனாட்சிக்கு ஒரு நாள் இரவு சாமத்தில் வயித்து குத்து தொடங்கி விட்டது. மீனாட்சி வேதனை தாங்க முடியாமல் துடித்தாள். கணபதி அவளை விட அதிகம் துன்பப்பட்டான்.

மருத்துவச்சி அம்மாவிடம் அடிக்கடி “பிள்ளை பிறக்க கன நேரம் ஆகுமா?” என்று கேட்ட படி இருந்தான். அதிகாலை மீனாட்சி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். மருத்துவச்சி அம்மா “நல்ல நீளம் பெருப்பமான பொடியன். அது தான் தாயை இந்த பாடு படுத்தினவன்” என்று சந்தோசமாக சொல்லி மகனை கணபதியிடம் கொடுத்தார்.

தங்கையையும் தம்பியையும் முதல் முதல் வாங்கிய மாதிரி, தான் பெற்ற மகனையும் வாங்கி வாஞ்சையுடன் அணைத்த கணபதி, தன்ரை தகப்பனிட்டை “ஐயா, இந்தாங்கோ உங்கடை பேரனை பிடியுங்கோ” என்று சொல்லி ஆறுமுகத்தார் கையில் மகனைக் கொடுத்தான்.

கணபதி தன்ரை மகனுக்கு ‘மகாலிங்கம்’ என்று பெயர் வைத்தான்.

1925 ஆம் ஆண்டு வைகாசி மாதம் ஐந்தாம் திகதி மகாலிங்கம் பெரிய பரந்தனில் பிறந்தான்.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா  

.

 முன்னையபகுதிகள்:

 பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

                

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More