வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 23 | பத்மநாபன் மகாலிங்கம்

வட மாகாணத்தில் உள்ள பழைய பாடசாலைகள் விபரம்.

  1. Jaffna Central College…. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி….. 1816 ஆம் ஆண்டளவிலும்
  • St.John’s College………. பரி. யோவான் கல்லூரி……………. 1823ஆம் ஆண்டளவிலும்
  • Hartley College…………. ஹாட்லி கல்லூரி………………….. 1838 ஆம் ஆண்டளவிலும்
  • St.Patrick’s College…… சென். பற்றிக்ஸ் கல்லூரி………….. 1850ஆம் ஆண்டளவிலும்
  • Jaffna College………….. யாழ்ப்பாணக் கல்லூரி……………… 1871ஆம் ஆண்டளவிலும்

 மிசனரிகளால் (Missionaries) ஆரம்பிக்கப்பட்டது என்று எனது சிற்றறிவிற்கு எட்டியவரை எழுதியுள்ளேன். தவறுகளிருந்தால் திருத்தி உதவுக.

  • Jaffna Hindu College ……. யாழ்ப்பாணம் இந்து கல்லூரி Mr. Wilłiams Nevins Muthukumaru Sithamparapillai திரு. வில்லியம்ஸ் நெவின்ஸ் முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை என்பவரால் 1887 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

மூன்று கிராமங்களுக்கும் பொதுவான பாடசாலை, பிரதான கல்லூரிகளுக்கு பின் கிட்ட தட்ட அரை நூற்றாண்டுகளின் பின்னரே ஆரம்பிக்கப்பட்டது என்பதை கூறுவதற்காகவே இவற்றின் வரலாறை எழுத எண்ணினேன்.

யாழ்ப்பாண மத்திய கல்லூரி (Jaffna Central College)

மூன்று கிராமத்தின் மக்களும் பாடசாலை கட்டுவதற்காக அதிகாரி வருவார் வருவார் என எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நம்பிக்கையை மட்டும் கை விடவில்லை. விசாரித்து சொல்லும்படி கணபதி இடையில் பறங்கியரிடம் கேட்டுக் கொண்டான். பறங்கியரும் யாழ்ப்பாணம் போன போது விசாரித்து விட்டு வந்தார்.

அவர் கணபதியையும் தோழர்களையும் பார்த்து “கணபதி, ஆங்கிலேயர்களுக்கு அவசியமாக தேவைப்படுவது அவையின் ஆட்சியை கொண்டு செல்ல கிளாக்குகள் தான். அவர்களை மிசனரிமாரின் பள்ளிக்கூடங்கள் தேவையான அளவு படிப்பித்து அனுப்புகினம். கிராமங்களில் பள்ளிக்கூடம் கட்ட அவையளுக்கும் விருப்பம் தான். அவையள் பள்ளிக்கூடங்களைக் கட்ட அனுமதி கொழும்பிலிருந்து தான் வரோணும். அவை கட்ட வேண்டிய பள்ளிக்கூடங்களின் விபரங்களை அனுப்பியிருக்கினம்.

பெரிய பரந்தன் கிராமத்தின் பேரும் அதில் இருக்குது. அனுமதி வந்தாப்பிறகு சனத்தொகையை பார்த்து, கூடின ஆக்கள் உள்ள ஊருக்கு தான் முதல் கட்டுவினம். உங்களுக்கு வர கொஞ்சம் சுணங்கும்” என்றார்.

காளி அம்மனுக்கு ஒரு பொங்கலும் ஒரு மடையும் வந்து போய் விட்டன. அவர்கள் எதிர்பாராத ஒரு நாளில், குஞ்சுபரந்தனில் இருந்த விதானையார் வீடு வீடாக சென்று,

“பள்ளிக்கூடம் கட்டுறதைப் பற்றி கதைக்க ஒரு ஆங்கிலேய அதிகாரி யாழ்ப்பாணத்திலிருந்து வாறார். நீங்கள் எல்லாரும் வரோணும். அவர்கள் ஆம்பிளையள், பொம்பிளையள், பிள்ளையள் எல்லாரையும் வரட்டாம். குஞ்சுப்பரந்தன் சந்தியில் கூட்டம்” என்றார்.

மூன்று கிராம மக்களும் குஞ்சுப் பரந்தன் சந்தியில் கூடி விட்டார்கள். குறித்த நேரத்தில் அதிகாரி தனது உதவியாளருடன் குதிரை வண்டிலில் வந்தார்.

கூட்டத்தைப் பார்த்து வணக்கத்தை தெரிவித்த அந்த ஆங்கிலேய அதிகாரி,

“படிக்கிற வயது உள்ள பிள்ளைகள் கையை தூக்குங்கோ” என்று கேட்டார்.

பிள்ளைகள் கைகளை உயர்த்த உதவியாளர் கைகளை எண்ணி “முப்பத்தேழு பேர்” என்றார். அதிகாரி “சரி, எங்கை பள்ளிக்கூடம் கட்டுறது” என்று கேட்டார். விதானையார் “இந்த சந்தியிலை கட்டலாம்” என்றார்.

அதற்கு அதிகாரி “இந்த இடத்தில் ஒரு வீடுகளையும் காணேல்லை. பள்ளிக்கூடத்திற்கு பாதுகாப்பில்லை, வேறிடத்தை சொல்லுங்கோ. இடம் இந்த பூனகரி வீதியிலை இருக்கோணும்” என்றார். பெரிய பரந்தன் மக்கள் கணபதியைப் பார்க்க, அவர்களைப் பார்த்து தலையை அசைத்த கணபதி எழும்பி “ஐயா, என்ரை காணி இந்த வீதியிலை தான் இருக்குது. நான் என்ரை காணியிலை பள்ளிக்கூடம் கட்ட தேவையானதை தாறன். பாதுகாப்புக்கு நான் ஒரு கொட்டிலை என்ரை காணியிலை போட்டுக் கொண்டு வந்து இருப்பன். காட்டுக் கரையிலே இருக்கிற பெரிய பரந்தன் பிள்ளையளுக்கு ஒன்றரைக் கட்டை தூரம். குறுக்கு பாதையால் வந்தால் செருக்கன் பிள்ளையளுக்கு இரண்டு கட்டை தூரம். குஞ்சுப்பரந்தனிலை, பொறிக்கடவை அம்மன் கோயிலெடியிலை இருக்கிற பிள்ளையளுக்கும் ஒன்றரைக் கட்டை தூரம். எல்லாருக்கும் ஒரேயளவான தூரம். அதிலை கட்டினால் நல்லது” என்றான்.

மூன்று கிராம மக்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதிகாரி ஏற்றுக் கொண்டு “நான் போய், சேவையரை அனுப்புறன். அவர் வந்து கணபதியின் காணியில் பள்ளிக்கூடத்திற்கு தேவையான காணியை அளந்து, வேலி அடைக்க ஒழுங்கு செய்வார்” என்று கூறினார்.

கணபதியைக் கூப்பிட்டு தனது வண்டிலில் ஏற்றி, குஞ்சுப் பரந்தனில் பொறிக்கடவை அம்மன் கோவில் வரைக்கும், செருக்கனில் கிராம ஆரம்ப எல்லை வரைக்கும், கணபதி பள்ளிக்கூடம் கட்ட தருவதாக சொன்ன காணி, பெரிய பரந்தனில் தியாகர் வயல் மட்டும் என எல்லா இடமும் சென்று பார்வையிட்டார்.

வயல்களுக்கு நடுவே நான்கு பக்கமும் அலம்பலால் அடைக்கப்பட்ட சீரான வேலிகளுக்குள் கிடுகுகளாலும், பனை ஓலைகளாலும் வேயப்பட்ட வீடுகளைக் கண்டார்.

வேலிக்கு உள்ளே நான்கு பக்கமும் இப்போது தான் பாளை விடுகின்ற செழிப்பான இளம் தென்னைகளையும் கண்டார். கணபதி சொல்லியது உண்மை தான் என்பதை புரிந்து கொண்டார். திரும்பி வந்ததும் குஞ்சுப் பரந்தன் விதானையார், தான் வாங்கி வைத்திருந்த உடன் இறக்கிய கள்ளை கொடுத்து அவர்களை உபசரித்தார்.

போகும் போது கணபதியைக் கூப்பிட்ட அதிகாரி “கணபதிப்பிள்ளை, நீ ஊர் மக்களைப் பற்றி தான் கூடுதலாக யோசிக்கிறாய். நீ சொன்ன யோசனையை எல்லாரும் மறுப்பின்றி ஏற்றார்கள். உன்ரை காணியைத் தருவதற்கும் நீ யோசிக்கவில்லை, கேட்டதும் தாறன் எண்டிட்டாய். நீ நல்லாய் இருப்பாய்.” என்று அவனை தோளில் அணைத்த படி கூறினார். (அதிகாரியின் எல்லா பேச்சு வார்த்தைகளும் உதவியாக வந்தவரின்ரை மொழி பெயர்ப்பில் நடந்தன)

அதன் பின் பாடசாலை சம்பந்தமான லேலைகள் மிக வேகமாக நடந்தன. சேவையர் வந்து முக்கால் ஏக்கர் காணியை அளந்து வேலிகளை அமைக்க உத்தரவிட்டார்.  வேலியடைக்கப்பட்டது.

கணபதியும் தான் சொல்லியபடியே ஒரு கொட்டிலைப் போட்டு, பனை மரக் கூரை போட்டு கிடுகுகளால் வேய்ந்து, அரைக் குந்து வைத்து, தட்டிகளையும் கட்டி அடைத்துக் கொண்டு, ஒரு நல்ல நாளில் மீனாட்சியுடன் குடி வர திட்டமிட்டான்.

மீனாட்சி, மாமனையும் மாமியையும் விட்டு விட்டு வர விருப்பமில்லாமல் அழத்தொடங்கி விட்டாள். விசாலாட்சி “மீனாட்சி, உன்னை போக விட எனக்கு மட்டும் விருப்பமா? என்ன செய்கிறது, கணபதி பொறுப்பை எடுத்து விட்டான். எங்கை தூரத்திற்கா போகப்போறாய், பக்கத்திலை தானே, நானும் அடிக்கடி வருவன், நீயும் நினைத்தவுடன் வரலாம், இப்ப போட்டு வா.” என்றாள். சின்னமீனாட்சி “நானும் மச்சாளுடன் போவன்” என்று சொல்லி விட்டு மீனாட்சியுடன் போய் விட்டாள்.

வெளிக்கிடும் போது கணபதி பரணில் ஏறி ஒரு சீலைத் துணியால் சுற்றப்பட்டு, மேலே சாக்கு துண்டால் சுற்றப்பட்ட, மயில் இறகு கட்டு எடுத்து தூசி தட்டி மார்போடு அணைத்த படி கொண்டு வந்து மீனாட்சியிடம் “மீனாட்சி, பத்திரமாக வைத்திரு ” என்று சொல்லி கொடுத்தான்.

“மீனாட்சி, அது கணபதிக்கு ஆறு வயதில் பெரிய பரந்தனிலிருந்து தம்பையர் கொண்டு போய் கொடுத்தது.” என்று ஆறுமுகத்தார் ஒரு சோகமான சிரிப்புடன் சொன்னார். அவரால் தனது உயிர் நண்பனின் இழப்பை இன்னும் மறக்க முடியவில்லை.

பேரம்பலம் பகல் முழுக்க அவர்களுடன் தான் நிற்பான். இரவும் போக மாட்டேன் என்று அடம் பிடிப்பான். ஆறுமுகத்தார் வந்து தூக்கி தோளில் வைத்துக் கொண்டு தியாகர் வயலுக்கு போவார்.

கந்தையனை “தம்பி நீ, மாமா, மாமியுடன் நில், அவையளை தியாகர்வயலில் தனிய விட முடியாது” என்று மீனாட்சி சொன்னதால் அவன் தியாகர்வயலில் மாமன் மாமியுடன் தங்கி விட்டான். பேருக்கு தான் பிரிவு, மாறி மாறி கணபதி அல்லது மீனாட்சி பகல் பொழுதை தியாகர் வயதிலேயே கழித்தனர்.

வயல் வேலைக்காக கணபதி கந்தையனுடனும் ஆறுமுகத்தாருடனுமே சென்று வந்தான். 1924 ஆம் ஆண்டு கட்டிட வேலைகள் ஆரம்பமாகியது. ஒரு அறையுடன் கூடிய பெரிய மண்டபம் பாடசாலைக்காக கட்டப்பட்டது. பாடசாலையை விட ஆசிரியர் குடியிருப்பு பெரிதாக இருந்தது. முன் விறாந்தை, பின் விறாந்தையுடன் இரண்டு பெரிய அறைகள். முன் விறாந்தையின் ஒரு பக்கம் சாமான் அறையும், மற்ற பக்கம் கொஞ்சம் கூடுதலாக நீட்டப்பட்டு சிறிய இடை வெளியும் விடப்பட்டு சமையல் அறையும் கட்டப்பட்டன. சமையலறைக்கு முன் சிறிய இடைவெளி சாப்பாட்டு மேசை வைப்பதற்காக விடப்பட்டிருக்கலாம்.

ஆங்கிலேயர் எல்லா வசதிகளுடனும் வாழ்ந்து பழகியவர்கள், அதனால் அந்த ஏற்பாடு. வந்திருந்த ஆசிரியர்கள் ஒருவரும் சாப்பாட்டு மேசையிலிருந்து சாப்பிடுபவர்களல்ல, நிலத்தில் சப்பாணி கட்டிக் கொண்டு இருந்து சாப்பிடுபவர்கள். ஆனால் அம்மி, ஆட்டுக்கல் வைத்து அரைக்கவும் உரல் வைத்து இடிக்கவும் அந்த இடைவெளி பயன்பட்டது உண்மை.

பாடசாலைக் கட்டிடம் செங்கற்களால் கட்டப்பட்டது. பெரிய பரந்தனில் முதலாவது கட்டுக்கிணறு பாடசாலையிலேயே அமைக்கப்பட்டது. பாடசாலைக்கு ஒன்றும் ஆசிரியர் தங்கும் விடுதிக்கு ஒன்றுமாக இரண்டு மலசல கூடங்களும் கட்டப்பட்டிருந்தன.

ஒரு நாள் கணபதி தான் புதிதாக வாங்கி பழக்கும் நாம்பன் மாட்டு சோடியை வீட்டிற்கு முன்னால் தண்ணீர் பாயும் வாய்க்காலில் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் போது வந்த விசாலாட்சி “என்ன கணபதி, மீனாட்சியை காணேல்லை, எங்கை போட்டா” என்று கேட்டா.

அதற்கு கணபதி “அம்மா, மீனாட்சி அலுப்பாயிருக்குதெண்டு உள்ளுக்கை படுத்திருக்கிறா. போய் பாருங்கோ” என்றான். உள்ளுக்குள் போன விசாலாட்சி, மருமகளிடம் மெல்லிய குரலில் ஏதோ கேட்பதும் அதற்கு வழமையாக உரத்து கதைக்கும் மீனாட்சியும் மெல்லிய குரலில் பதிலளிப்பதுமாக கன நேரம் கதைத்தார்கள்.

கணபதிக்கு பதட்டமாக இருந்தது, நாம்பன்களை இடி கட்டையில் கட்டி விட்டு வந்து குட்டி போட்ட பூனை போல வீட்டைக் சுத்தி சுத்தி வந்தான். விசாலாட்சி “என்ன மீனாட்சி படுத்திருக்கிறாய். நீ சுறுசுறுப்பாக ஓடித்திரியும் பிள்ளையாச்சே. என்னம்மா காய்ச்சலா?” என்று நெத்தியில் தொட்டு பார்த்தபடி கேட்டா.

தாயின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த மீனாட்சிக்கு மாமியாரின் அன்பு கண்ணீரை வரவழைத்து விட்டது. அவள் “எனக்கு காய்ச்சல் இல்லை மாமி. இப்ப இரண்டு மூன்று நாளாய் காலமைகளிலை ஓங்காளிக்குது. வாய் கைக்குது, மாங்காய் கடித்து தின்னோணும் போலை இருக்குது” என்றாள்.

விசாலாட்சிக்கு புரிந்து விட்டது, “என்ன பிள்ளை, ஒழுங்காய் முழுகிறாயா.” என்று கேட்டாள். மீனாட்சி “இல்லை மாமி, இரண்டு மாதமாய் முழுகவில்லை” என்றாள். முகம் மலர்ந்து சிரித்த விசாலாட்சி, “பிள்ளை நீ, எங்களுக்கு பேரப்பிள்ளை பெற்றுத்  தரப் போறாய், நல்ல சந்தோசம். கணபதியிட்டை மாங்காய் பிடுங்கி தரச்சொல்லுறன். நீ இனிமேல் கொஞ்ச நாளைக்கு சமைக்காதை. நான் சமைத்து கந்தையனிட்டை அனுப்புறன். கணபதி வாற நேரமும் கொண்டு வருவான். நான் இடைக்கிடை இஞ்சை வந்து சமைக்கிறன். நாளைக்கு காலமை புளிக்கஞ்சி காய்ச்சி அனுப்புறன், குடிச்சு பார்” என்றாள்.

விசாலாட்சி வெளியே வர, பின்னால் மீனாட்சியும் வந்தாள். கணபதியைப் பார்த்து சிரித்த மீனாட்சி வெட்கத்துடன் மாமியாரின் ஒரு தோளை கையால் பிடித்துக் கொண்டு, மற்ற தோளில் முகத்தை வைத்து கொண்டாள். திகைப்புடன் பார்த்துக் கொண்டு நின்ற மகனைப் பார்த்து “தம்பி, மீனாட்சி உன்னை தகப்பனாக்கப் போறாள். நீ இனிமேல் அவளைக் கவனமாக பார்க்க வேணும்” என்று விசாலாட்சி சந்தோசமாக சொன்னாள்.

கணபதியின் முகம் மலர்ந்தது, மீனாட்சியை ஓடிப் போய் கட்டிப்பிடிக்க வேணும் போல இருந்தது. தாயாரின் முன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கேள்விப்பட்டு சந்தோசத்தோடை மருமகளை பார்க்க ஓடி வந்த ஆறுமுகத்தார் “பிள்ளை, இனி நீ கடுமையான வேலையொன்றும் செய்யாதை. பாரம் தூக்காதை, குனிந்து நிமிர்ந்து வேலை செய்யாதை. சின்ன சின்ன வேலைகளை செய்தால் காணும்.” என்றார்.

உடனேயே, மறு நாள் மீசாலைக்குப் போக இருந்தவரை தேடிச் சென்று “தம்பி, நாளைக்கு போற வழியிலை மறித்து முருகேசரிட்டை ஒருக்கால் மீனாட்சி சுகமில்லாமல் இருக்கிற விசயத்தை சொல்லிவிடு” என்றார்.

மூன்றாம் நாள் காலமை, கொடிகாமச் சந்தையிலை வாங்கிய கப்பல் வாழைப்பழ குலையோடு முருகேசர் மகளை பார்க்க வந்தார். மகளோடை நின்று மத்தியானம் சாப்பிட்டு விட்டு “பிள்ளை, உடம்பை கவனமாக பார்த்துக் கொள். உன்ரை மாமாவும் மாமியும் கணபதியும் வடிவாய்ப் பார்ப்பினம்” என்று சொன்னவர் கந்தையனைக் கூப்பிட்டு “கந்தையா அக்காவுக்கு உதவியாய் இரு” என்று கூறி விடை பெற்று சென்றார்.

ஆசிரியராகவும் அதே வேளை தலமை ஆசிரியராகவும் சேவையாற்றுவதற்கு ஒரு ஆசிரியர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தார். அவருடன் அவரது மனைவி பிள்ளைகளும், அவரது பராமரிப்பில் இருந்த தந்தை, தாயும் வந்தனர். பல ஆண்டுகள் பரந்தன் கிராம பாடசாலை ஒரு ஆசிரியர் பாடசாலையாகவே இருந்தது.                                                                                      

1925 ஆம் ஆண்டு தை மாதம் வைபவ ரீதியாக பரந்தன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

முதலில் வந்த ஆங்கிலேய அதிகாரியுடன் இன்னும் சில அதிகாரிகள், இரண்டு குதிரை வண்டில்களில் முதல் நாளே யாழ்ப்பாணத்திலிருந்து வந்து, ஆனையிறவில் இருந்த பங்களாவில் தங்கி ஓய்வெடுத்து விட்டு, காலையில் வந்தார்கள். அதிகாரியுடன் அவரது மனைவியும் வந்திருந்தார்.

விசாலாட்சி தலைமையில் ஊர் பெண்கள் சமையல் செய்தார்கள். “எண்ணையையும் மிளகாய்தூளையும் குறைத்து பாவிக்க வேணும்” என்று தான் அறிந்ததை விசாலாட்சி சொல்லி கொடுத்தா. மீனாட்சிக்கு இறைச்சி காய்ச்சும் மணம், மீன் பொரிக்கும் மணம் ஒத்துக் கொள்ளாது அதனால், அவள் மற்ற வேலைகளை செய்தாள்.

ஆங்கிலேய அதிகாரி தனது மனைவியுடன் நாடாவை வெட்டி சம்பிரதாயப்படி பாடசாலையை திறந்து வைத்தார். யாவருக்கும் இளநீர் குடிக்க கொடுக்கப் பட்டது. அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசினார்கள்,

அவற்றை உடன் வந்த மொழி பெயர்ப்பவர் உடனுக்குடன் தமிழில் கூறினார். பாடசாலைக்கு கொண்டு வரப்பட்ட கதிரை, மேசைகளை அடுக்கி வாழையிலையில் சாப்பாடு பரிமாறப்பட்டது. மொட்டைக் கறுப்பன் அரிசி சோறும், கத்திரிக்காய் போட்ட மரை வத்தல் கறியும், மீன் பொரியலும், அவித்த முட்டையும், பால் சொதியும் சமைத்திருந்தார்கள். வாழையிலையில் சாப்பிடுவதை ஆங்கிலேயர்கள் ரசித்தார்கள். உறைக்க உறைக்க சாப்பிட்டவர்கள், கடுமையாய் உறைத்த பொழுது பால் சொதியை விட்டு சாப்பிட்டார்கள்.

அதிகாரி போகும் போது தலைமை ஆசிரியரையும், கணபதியையும் கூப்பிட்டு கைகளை குலுக்கி விடை பெற்றார். அவரது மனைவியும் மற்ற அதிகாரிகளும் சாப்பாட்டை பாராட்டி விடை பெற்றனர்.

ஆசிரியர் கிராமத்து மக்களின் செய்கைகளால் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். அவருக்கு தேவையான அரிசியை அவர்களே கொண்டு வந்து கொடுத்தார்கள். சனி, ஞாயிறு நாட்களில் காட்டு இறைச்சி கொண்டு வந்து கொடுத்தார்கள்.

மரக்கறிகளையும் காட்டில் பறிக்க கூடிய கீரை வகைகளையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். காலையிலும் மாலையிலும் பசுப்பால் கொண்டு வந்தார்கள். ஆசிரியர் குடும்பமே கிராமத்து மக்களின் உதவிகளால் சந்தோசமாக இருந்தார்கள்.

ஆசிரியர் சுயமாகவே சேவை மனப்பான்மை உடையவர். கிராம மக்களின் அன்பினால் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் சேர்ந்து கொண்டது. ஐந்து வயதை அடைந்த பிள்ளைகளை ஆரம்ப வகுப்பிலும், ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது வயது பிள்ளைகளையும் வரப்பண்ணி இன்னொரு வகுப்பிலும் சேர்த்து அவர்களுக்கு ஆறு மாதம் வரை காலை, மாலை இரண்டு வேளையும் படிப்பித்தார்.

ஆறு மாதங்களின் பின்னர் ஆறு, ஏழு, எட்டு வயது பிள்ளைகளின் தரங்களை மதிப்பிட்டு, அவர்களை இரண்டாம் மூன்றாம் வகுப்புகளுக்கு ஏற்றி விட்டார். அவரின் அயராத முயற்சியினால் பிள்ளைகளின் கல்வியறிவில் மாற்றங்கள் தெரிந்தது.

கணபதியின் தங்கை மீனாட்சி மூன்றாம் வகுப்பிற்கு ஏற்றி விடப்பட்டாள். ஆரம்ப வகுப்பில் சேர்ந்து படித்த பேரம்பலத்திடம் குழப்படிகள் குறைந்தன.

காலை பாடசாலை ஆரம்பிக்கும் போதும் பாடசாலை விடும் போதும் மணி அடித்தவுடன் தேவாரங்களை பாட வைத்தார். முத்தர் கணபதியிடம் படித்த வயது கூடியவர்கள் எல்லாரும் மூன்றாம் வகுப்பில் விடப்பட்டனர். முத்தர்கணபதி திண்ணைப்பள்ளியில் படித்த விபரத்தை அறிந்த ஆசிரியர் அவனைக் கூப்பிட்டு கதைத்தார்.

அவன் தமிழிலும் சமயத்திலும் தேர்ச்சியடைந்து இருப்பதை தெரிந்து கொண்டார். “கணபதிப்பிள்ளை நல்லது, நீ தமிழிலும் சமயத்திலும் திறமையாக உள்ளாய். இப்போது எண் கணிதம், சரித்திரம், சுகாதாரம், ஆங்கிலம் என்ற பாடங்களும் மூன்றாம் வகுப்பிலிருந்து படிப்பிக்க வேணும். அதை நான் பார்த்து கொள்ளுவேன். நீ சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் காலை வேளையில் மூன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு ஒழுங்காக, குறித்த நேரத்தில் வந்து தமிழையும் சமயத்தையும் சொல்லிக் கொடுப்பாயா? இன்னொரு விசயம், நீ பிள்ளைகளை பேசவோ அடிக்கவோ கூடாது. நாங்கள் அன்பாக கதைத்து தெரியாதவற்றை ஆறுதலாக விளங்கப்படுத்தினால் அவர்களும் விரும்பி படிப்பார்கள்.” என்று கேட்டார்.

முத்தர்கணபதியும் சம்மதித்தான். அவனும் ஒருவரையும் கோபிப்பதில்லை, கடிந்து பேசுவதுமில்லை. ஆசிரியர் தனது பிள்ளைகளையும் பரந்தன் அ.த.க. பாடசாலையிலேயே சேர்த்து விட்டார்.

மூன்று கிராமத்து மக்களும் தமக்கு இருந்த ஒரே ஒரு மனக்குறையும் நீங்கியதை எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். கணபதி பள்ளிக்கூடம் அமைக்க பட்டபாட்டை நினைத்து அவனை மனதுக்குள் பாராட்டிக் கொண்டார்கள்.

பாடசாலை ஒரு புறம் வளர்ச்சியடைய கணபதியின் வாழ்க்கையிலும் பல மறக்க முடியாத சம்பவங்கள் இடம் பெற்றன. மீசாலைக்கு போய் திரும்பி வந்த உறவினர் ஒருவர் கணபதியையும் மீனாட்சியையும் சந்தித்து “கணபதி, உன்ரை மாமா முருகேசர் நாளைக்கு வந்து உங்களோடை ஏதோ முக்கிய விசயம் கதைக்க வேணுமாம். சொல்லி விட சொன்னார்” என்றார்.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னையபகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

ஆசிரியர்