Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஸ்ரீலங்காவை பாதுகாக்க ஐ.நாவில் புலிகளை பலியிட வேண்டாம்!: அவதானிப்பு மையம்

ஸ்ரீலங்காவை பாதுகாக்க ஐ.நாவில் புலிகளை பலியிட வேண்டாம்!: அவதானிப்பு மையம்

3 minutes read

கூட்டமைப்புக்கு அவதானிப்பு மையம் கடும் கண்டனம்!

ஸ்ரீலங்கா அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கும் உரிமைக்கும் உன்னத வழியில் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை ஐ.நாவில் பலியிடுகின்ற முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடக்கூடாது  என்பதை மிகவும் கடுந்தொனியில் வலியுறுத்துவதுடன் இத் துரோகத்திற்கு கடும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம் என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையை முழுமையாக உரிமை மின்னிதழ் தருகிறது.

சிங்களத்தின் தந்திரம்!

“இந்த மாதம் 13ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 48ஆவது அமர்வு இடம்பெறவுள்ளது. இதில் ஸ்ரீலங்கா அரசின் போர் குற்றங்கள் மற்றும் அதற்குப் பிந்தைய நிலவரங்கள் குறித்தும் மார்ச் மாத அமர்வில் நிறைவேற்றப்பட்ட 46-1 இலக்க தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் மிச்சேல் பச்லற் அம்மையார் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை வாசிக்கவுள்ளார்.

இதனை முன்னிட்டு சர்வதேச நாடுகளை தனக்கு ஆதரவாக மாற்றும் சூழ்ச்சிகளில் சிங்களம் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக மும்முனையில் எதிர் எதிர் களங்களில் நிற்கும் நாடுகளைக் கூட பல்வேறு சூழ்ச்சி வலைகளைப் பின்னி சிங்கள தேசம் வளைத்து வருகின்றது. அமெரிக்கா, இந்தியா, சீனா முதலிய நாடுகளை தனது அரசியலுக்காக அணுகி வரும் ஸ்ரீலங்கா அமெரிக்காவின் இலங்கைத் தூதுவர் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திய இரகசிய சந்திப்பு மற்றும் அதன் பின்னணி பற்றியும் அண்மையில் அவதானிப்பு மையம் அம்பலப்படுத்தி இருந்தது.

கூட்டமைப்பின் துரோகக் கடிதம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் ஸ்ரீலங்காவை காப்பாற்றவே இந்த சந்திப்பு இடம்பெற்றது என்பதையும் இது மிகப் பெரிய துரோகத்திற்கான அத்திவாரம் என்பதையும் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியிருந்தோம். ஸ்ரீலங்கா அமைச்சர் ஜி.எல். பீரீஸ் மற்றும் சுமந்திரன் இடையில் நடைபெற்ற கூட்டத்தின் விளைவை தற்போது ஈழத் தமிழினம் கண்கூடாக கண்டு வருகின்றது.

அந்த அடிப்படையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கூட்டமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதில் ஸ்ரீலங்கா இராணுவத்தினருடன் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க்குற்றம் செய்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை பலியிட்டேனும் ஸ்ரீலங்கா அரசை காப்பாற்றுவோம் என்ற இழிவரசியல் நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறங்கியுள்ளது. பீரீஸ் – சுமந்திரன் சந்திப்பு எதற்கான என்பதை ஐ.நாவுக்கு எழுதப்பட்ட கடிதம் தற்போது கைப்புண்ணு கண்ணாடி தேவையில்லை என்றால்போல வெளிப்படுத்தி நிற்பதை அனைத்துத் தமிழர்களும் அறிவர்.

கூட்டமைப்பு எனும் விலாங்குமீன்கள்!

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு துரோக வலையமைப்பாக செயற்பட்டு வரும் நிலையில் அதற்குள் உள்ளக துரோக வலையமைப்புக்களும் சுமந்திரனால் தந்திரமாக உருவாக்கப்பட்டுள்ளன. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்ற வேலைகளை கூட்டமைப்புக்குள் செய்யும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீலங்கா அரசுக்கு ‘பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டுகின்ற விலாங்குமீன்களாயும்’ உள்ளனர்.

ஐ.நாவுக்கு சுமந்திரன் எழுதியுள்ள கடிதத்தை எதிர்ப்பதாக கூறுகின்ற சிறீதரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுமந்திரனை வெல்ல வைப்பதற்காக எடுத்த முயற்சிகளும் பெற்ற பண உதவிகளும் மக்கள் நன்கு அறிந்தவையே. அன்றைக்கு சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம் என்று கூறிய சிறீதரன் இன்று ஐ.நாவுக்கு தனிக்கடிதம் எழுதியதாக கதைவிடுவது என்பது மிகவும் மக்களுடன் செய்கின்ற விலாங்குமீன் ஆட்டம் என்பதும் வெளிப்படையானது.

மாவீரர்கள் மன்னிப்பார்களா?

ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காக தமது இளமை வாழ்வை, குடும்ப உறவுகளை எல்லாம் தியாகம் செய்து இனத்தின் விடுதலை ஒன்றே இலட்சியம் எனக் களமாடி மரணித்த மாவீரர்களை போர்க்குற்றவாளிகள் என்று சிங்களத்திற்காக துரோகம் இழைக்கும் கூட்டமைப்பை மண்ணில் மாண்ட மாவீரர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

ஆட்சிக்கு வரும் அரசின் கால்களைப் பிடித்து நக்கி, அவர்களை சர்வதேச அரங்கில் பிணையெடுத்து, பதவி, சுகபோக வாழ்க்கை, பணம் என்று வாழ்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?

மாணவர்கள் இளையவர்களின் கையில்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை ஜனநாயக முறையில் ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் உரைத்திடவும், சர்வதேச பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றைக்கு உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர்களாக, அக் கொள்கையை மறந்து துரோக வலையமைப்பாக மாறி, மாவீர்ரகளையும் முன்னாள் புலிப் போராளிகளையும் ஐ.நாவில் பலியிட்டு சிங்களத்தை காக்க முற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ் தேசியத்தின் பால், மாவீரர்களின் மாண்பு மற்றும் சத்தியத்தின் மீது மாறாப் பற்றுக் கொண்ட தமிழ் தேசிய தலைவர்களும் தமிழீழ ஆதரவு அமைப்பகளும் புலம்பெயர் தேசய ஈழப் போராட்ட அமைப்புக்களும் தமிழக அமைப்புக்கள் மற்றும் கட்சிகளும் குறிப்பாக இளைய தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் இதில் விழிப்பும் அக்கறையும் கொண்டு செயற்பட்டு விடுதலைப் புலிகளின் தியாகத்தை பாதுகாப்பதுடன் அதன் வழியாக ஈழத் தமிழ் மக்களின் உரிமையையும் தேச விடுதலையையும் வென்றெடுக்க வேண்டும் என்பதை விநயமாக வலியுறுத்தி நிற்கிறோம்…” என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி – உரிமை மின்னிதழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More