இன்றைய உலக மகளிர் தினமான இந்த சிறப்பு நாளை முன்னிட்டு சங்க இலக்கியத்தில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை இங்கு உற்று நோக்கலாம்.
அனைத்து உயிர்களையும் உண்டாக்கி காக்கும் பெண்ணானவள் சங்ககாலத்தில் கற்புநெறி, காதல் வீரம், விருந்தோம்பல் இல்லறம் போன்ற பண்புகளில் மிகச் சிறந்து விளங்கி இருக்கின்றாள். பல உரிமைகளைப் பெற்றிருக்கின்றாள்.
சங்ககாலத்தில் இருபாலருமே கல்வி கற்றிருக்கிறார்கள். எமக்கு பெண் புலவர்கள் என்றால் ஔவையார் மட்டும் தான் ஞாபகத்துக்கு வருவார்.
ஔவையார், அதியமானுக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையிலான போரைத் தடுப்பதற்காக தனது பாட்டுத் திறமையால் தூது சென்று அந்த போரைத் தவிர்த்தவர், நெஞ்சுரம் மிக்கவர் என்பது எம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் எமக்குக் கிடைத்த சான்றுகளின் படி சங்ககாலத்தில், ஆதிமந்தி, பொன்முடியார், வெண்ணிக்குயத்தியார், காக்கைபாடினியார் போன்ற 31 பெண் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். சங்ககாலத்தில் ஆணுக்கு சமமாக கல்வி கற்று உயர் நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பது வரலாறு. இதில் காக்கைபாடினியார் என்ற புலவரை எடுத்துப் பார்த்தால் நச்செள்ளையார் என்ற இயற்பெயரில் நிறையப் பாடல்களை காக்கை பற்றி பாடியிருக்கின்றார் அதனால் காக்கைபாடினியார் என்று பெயரும் பெற்றிருக்கின்றார். இவர் கல்வியின் மேன்மையால் ஆண் புலவர்களுக்கு மத்தியில் சமமாக தமிழ் சங்கத்தில் அமர்த்தப்பட்டார்.
புறநானூறு 279
ஒக்கூர் மாசாத்தியார் என்ற பெண்புலவர் இந்தப் பாடலைப் பாடி இருக்கின்றார்.
“கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதின் மகளிர் ஆதல் தகும்”
என்று வரும் பாடலில் பெண்ணின் வீரத்தை பாடுகின்றார்.
நேற்றைக்கு முந்தைய மேனாள் நடந்த போரில் இவளது அண்ணன் பகைவரின் யானையை வீழ்த்திப் போரில் போர்க்களத்தில் மாண்டான். நேற்று நடந்த போரில் இவளது கணவன் பகைவரின் அணிவகுப்பு பிளவு படும்படி விலக்கிக்கொண்டு முன்னேறி அங்கேயே மாண்டான். இன்றும் போர்ப்பறை ஒலி கேட்டவுடன் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவலுடன் எண்ணிப் பார்த்து தன் ஒரே மகனை, இளம் பிள்ளையைப் பரந்து கிடந்த அவன் தலைமுடியை எண்ணெய் வைத்து சீவி முடித்து வெண்ணிற ஆடையை உடுத்தி விட்டு வேல் தனைக் கையிலே கொடுத்து போர்க்களம் நோக்கிச் செல்க என்று ஒரு தாய் கூறுவதாக என்று இந்தப் பாட்டில் வருகின்றது. இ சங்க இலக்கிய பெண்ணின் வீரம் மிக்க பரம்பரையில் வந்தவர்கள் என்பதைப் பெண்கள் இன்றும் நிலை நிறுத்துகிறார்கள்.
அகநானூறு 86
இந்தப் பாடலை நல்லாவூர் கிழார் என்பவர் பாடுகின்றார். சங்க காலத்தில் எப்படி தமிழர்களின் திருமண முறை இருந்தது என்பதை எமக்கு வரலாறாக இந்தப் பாடல் தருகின்றது.
அதாவது “உழுந்து தலைப்பெய்த கொளும் கழி மிதவை” என்று தொடங்கும் பாடலை அவர் கூறுவதாவது உளுத்தம் பருப்பைக் கூட்டிச் செய்த சோற்றுக் திரளை விருந்தாக கொடுக்கின்றார்கள். மணல் பரப்பி பந்தல் போட்டு விளக்கேற்றிய பந்தலுக்கு பெண்கள் மணப்பெண்ணை நிறை குடத்துடன் முன்னும் பின்னுமாக கூட்டி வருகிறார்கள். அதன்பின் முதுபெண்டிர் சேர்ந்து நனைந்த பூவிதழ்களோடு நெல்லையும் சேர்த்து மணமக்களுக்குத் தூவி “எல்லோரும் விரும்பும் மணப்பெண்ணை வாழ்வாயாக. பெரும் மனைக்கிழத்தியாக வாழ்வாயாக என்று வாழ்த்தி எளிதாக பெண்களே முழுக்க முழுக்க சங்ககாலத்தில் திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்.
சங்க காலத்தில் பெண்களின் நிலை, அவர்களின் முக்கியத்துவம், தனித்துவம், வீரம் என்பன இந்த சங்க இலக்கியங்களின் ஊடாக நமக்கு வரலாறாக நிமிர்ந்து இருக்கின்றன.
ஆக மன உறுதி கொண்ட பெண்ணில் பெருந்தக்க யாவுள?
பெண் இன்றி அமையாது உலகு என்று பெருமை கொள்வோம். பேராற்றல் கொண்ட பெண்மையைப் போற்றுவோம். அனைத்துப் பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் உரித்தாகுக.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்