Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை தமிழ்த் தலைவர்களின் மனங்களில் குற்றவுணர்வு தோன்றவில்லையா? | மு.திருநாவுக்கரசுதமிழ்த் தலைவர்களின் மனங்களில் குற்றவுணர்வு தோன்றவில்லையா? | மு.திருநாவுக்கரசு

தமிழ்த் தலைவர்களின் மனங்களில் குற்றவுணர்வு தோன்றவில்லையா? | மு.திருநாவுக்கரசுதமிழ்த் தலைவர்களின் மனங்களில் குற்றவுணர்வு தோன்றவில்லையா? | மு.திருநாவுக்கரசு

13 minutes read

தமிழ் மக்களின் அரசியலை அதற்கான இயங்கு நிலையில் இருந்தும், அதன் இருதயத்திலிருந்தும் பார்க்கத் தவறுகிறோம். தமிழ் மக்கள் காலம் காலமாக ஏமாற்றுப்பட்டு வருகின்றனர் என்பது சிறிதும் ஐயத்திற்கு இடமற்ற உண்மையாகும். ஆனால் இவ்வாறு ஏமாற்றப்படுவதில் அதிக பங்கு எதிர்த்தரப்பைச் சாருமா அல்லது தமிழ்த் தலைவர்களின் தரப்பைச் சாருமா என்று கேட்டால் அதற்கான பதில் மிகவும் வியப்பானது.

அதனையிட்டு நாம் ஓர் இயங்கு முறை அணுகுமுறை (Functional Approach)  ஆய்வை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதன் போது இதற்கான உண்மைகள் தெளிவாகத் தெரியவரும்.

ஈழத் தமிழ் மக்கள் இயல்பாகவே போர்க்குணம் கொண்டவர்கள், அர்ப்பணிப்பு உள்ளவர்கள், கடும் உழைப்பாளிகள். அதேவேளை அவர்கள் எப்போது தலைவர்களை கேள்விக்கு இடமின்றி நம்பும் இயல்புள்ளவர்கள். தியாகத்திற்குத் தயங்காதவர்கள். குடும்பம் என்னும் அச்சில் இந்த இயல்புகள் அனைத்தையும் ஒருங்குசேரக் காணலாம்.

சீதனம், சிக்கனம், சம்பாத்தியம், நீண்டகால குடும்ப நோக்கு இவை ஈழத் தமிழர்களிடம் அநேகமாக உண்டு. அதுவும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகம் உண்டு. கல்வியில் அதிகம் நாட்டம் செலுத்தும் இயல்புள்ளவர்கள். அறிவின் மீதான பற்றினாலன்றி உத்தியகத் தேவையிலான பற்றினால் கல்வி மீது அதிக நாட்டமுண்டு. கல்வி அறிவுக்கு ஏதுவான ஒரு கருவியே தவிர, கல்வி மட்டும் அறிவாகிவிடாது. எப்படியோ சீதனம், வீடு, வாசல், காணி, சம்பாத்தியம், உத்தியோகம், கல்வி இவையனைத்தும் ஒரு கோட்டில் இணைபவை.

மகன் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென்பதற்காக தாய் கடும் விரதம் இருப்பாள். அண்ணன் அல்லது தம்பி பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென்பதற்காக சகோதரி விரதமிருப்பாள். ஒருவகையில் ஆண்களை மையமாகக் கொண்ட இந்த மேலாண்மையில் அண்ணனுக்கு நடுமுறியும், தங்கைக்கு வால்துண்டும், அண்ணனுக்கு முட்டைப் பொரியலும், தங்கைக்கு கிழங்குப் பொரியலும் கொடுக்கும் ஒரு பாரபட்சம் ஒருபுறம் இருக்கும் போதும் தங்கைக்கு நல்ல மணமகன் வேண்டி வேல்குத்தி காவடி எடுக்கும் அண்ணன்மாரும், மற்றும் ஆண் சகோதரர்களும் இருப்பார்கள்.

இதைவிடவும் வியப்பிற்குரியது பேரப்பிள்ளைகளின்  வெற்றிகளுக்காக பாட்டி விரதமிருப்பதும், தீச்சுவாலை வீசும் கற்பூரச்சட்டி ஏந்துவதும் தமிழ்ச் சமூகத்தின் வேர்களில் ஒன்று. இந்த குடும்ப மைய விசுவாசம் (Loyalty)  “தமிழ்த் தேசியம்” என்று வந்தபோது அது “கரும்புலி” வரை செல்ல வழிவகுத்தது.

இந்த மக்கள் கூட்டம் குடும்பத் தலைவனை அல்லது மூத்த மகனை நம்பியது போல தமது அரசியல் தலைவர்களையும் நம்பியது. இந்த வரிசையில் “தந்தை” என்றும் “அண்ணர்” என்றும், “தம்பி” என்றும், “அண்ணை” என்றும், “அண்ணா” என்றும் தங்கள் தலைவர்களை குடும்ப உணர்வோடு இணைத்து அழைக்கும் பழக்கம் தமிழ் மக்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது.

மேற்படி இவற்றை புரிந்து கொண்டால் மட்டுமே தமிழ் மக்களுக்கான தமது பொறுப்பு என்ன என்பதை தலைவர்களால் உணர்ந்து கொள்ளமுடியும். இதனைப் புரிந்து கொள்ளாதவரை இந்த பொறுப்பை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது.

ஒருவகையில் கடவுளிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டிருப்பது போல தமிழ் மக்கள் தம் தலைவர்களை நம்பி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தலைவர்கள் கேட்கின்றவாறெல்லாம் செயற்படுகின்ற அவர்களை கேள்வி கேட்காது பின்பற்றுகின்ற அப்பாவித்தனமான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களின் நம்பிக்கைக்கு தீங்கிழைப்பது எத்தகைய மாபெரும் குற்றம் என்பதை யாராவது உணர்ந்திருப்பார்களோ என்றால் அதற்கான பதில் ஐயத்திற்குரியதே.

தமிழ் மக்கள் அதிகம் இலட்சியபூர்வமானவர்கள். புராண இதிகாச படலங்களினால் இவர்களின் கருத்துலகம் பாரம்பரியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் இலட்சியத்தின் பேரால் இவர்களை இலகுவாக ஏமாற்ற முடியும்.  பாலியல் தூய்மை என்பது உண்டோ இல்லையோ என்பது வேறுவிடயம். பாலியல் தூய்மைகளை சிறிதும் பின்பற்றாதவன்கூட பாலியல் ரீதியான இலட்சத்தியத்தை முன்வைப்பவனை பெரிதும் ஆதரிக்கும் கலாச்சரம் இவர்களிடம் உண்டு.

தான் நீதிமானோ இல்லையோ என்பதல்ல பிரச்சனை நீதியின் பேரால் முன்வைக்கப்படும் இலட்சியத்தை ஆதரிப்பதை பண்பாடாகக் கொண்டவர்கள். இந்த அடிப்படையிலிருந்து ஈழத் தமிழர்களின் அரசியல் வாழ்வை எடைபோட வேண்டியது அவசியம்.

மகாத்மா காந்தியைப் போல் இந்தியாவை அதிகம் புரிந்து கொண்டவர்கள் யாரும் கிடையாது. அப்படியே எம்.ஜி.இராமச்சந்திரனைப் போல் தமிழகத்தை புரிந்து கொண்டவர்கள் யாரும் கிடையாது. மகாத்மா காந்தியின் “அரைநிர்வாண ஆடையில்” அப்பாவிகளான சராசரி இந்திய ஏழைகளைக் காணலாம். சன்னியாசிகள், ரிஷிகள், சித்தர்கள், துறவிகள் போன்றோரின் ஆடையும் இதுதான்.

அவர் உப்பு சத்தியாகிரகத்தை மேற்கொண்டபோது அரைச் சதம்கூட பெறாத உப்பை போராட்டத்திற்கான கருவியாக மாற்றிக் கொண்டதன் நோக்கம் உப்புச்சிரட்டையற்ற எந்த வீடும் கிடையாது என்ற அடிப்படையிலாகும்;. அதாவது ஒவ்வொரு இந்தியனையும், மிக அடிமட்டத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கான வழியாக காந்திக்கு அந்த “உப்பு” தெரிந்தது.

இலட்சியப் பற்றுக்கொண்ட தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். அவர்களின் இலட்சியங்களை தனது திரைப்படங்களுக்கான கருப்பொருளாக்கினார். தாய்ப்பாசம், தங்கைப்பாசம் என்பனவற்றையும் அரசியல் அறம் சார்ந்த இலட்சியங்களையும் மக்கள் முன் பெரிதாக பிம்பப்படுத்தினார். அதுவே அவரை மக்கள் தலைவாராக்கியது.

இப்படி பண்பாட்டு அலகுக்கூடாக ஈழத் தமிழரின் அரசியலையும் எடைபோட வேண்டும்.

ஈழத் தமிழர்கள் அதிகம் இலட்சியக் கனவுகளினால் கவரப்படக்கூடியவர்கள். 1920களில் வெளிவந்த “ஈழகேசரி” பத்திரிகையைப் படித்தால் அதில் தேசியப் போராட்டம் குறிப்பாக இந்திய தேசியப் போராட்டம் மற்றும் அறநெறிகள் சார்ந்த விடயங்களையும், கற்பனைக்கு எட்டாத இலட்சிய அரசியல் போக்கையும் காணலாம். பொதுவாக தமிழ் மக்களிடம் இலட்சியப் போக்கு மிக அதிகமாகவே இருக்கும்.

தேசிய யுகத்தில் அவர்களுக்கு அப்போதைய தமிழ் நடுத்தர வர்க்கம் காட்டிய தேசியத்தையே அவர்கள் பின்பற்றினார்கள். உண்மையில் அன்றைய தமிழ் நடுத்தர வர்க்கம் கண்ட அல்லது காட்டிய தேசியம் போலியானது. ஆனால் அதனை அவர்கள் உண்மையாகவே நம்பினார்கள். இதனை பரந்த மக்கள் நம்பிப் பின்பற்றினார்கள்.

“தேசியம்” என்பது காலகட்ட வளர்ச்சிக்குரியது. பண்டை தேசியம், நவீன தேசியம், புதிய தேசியம் என அது பெரும் காலகட்ட வரலாற்றுப் போக்குக்களை கொண்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருப்பெற்ற நவீன தேசியத்திலிருந்து 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய புதிய தேசியம் வேறுபாடானது. 1990ஆம் ஆண்டு பனிப்போர் முடிந்ததைத் தொடர்ந்து இந்த புதிய தேசியம் உருப்பெற்றது. இக்கட்டுரையின் நோக்கம் இதனை ஆராய்வதல்ல. ஆனால் ஒரு வளர்ச்சிக் கட்டத்தையும், அதன் வேறுபாட்டையும் சுட்டிக் காட்டுவது மட்டுமே.

வேதத்தில் “தத்துவமசி” என்று ஒரு கூற்றுண்டு. அதாவது “நீ அதுவாக இருக்கிறாய்” அதற்கான பொருளாகும். இதன்படி அது என்பது “இறைவன்” நீ இறைவான இருக்கிறாய் என்பது அதன் பொருள். ஆனால் தேசியத்தில் “அது நீயாக இருக்கிறது” என்று அதற்கு தலைகீழான கூற்றுண்டு.

இதன்படி நிலம், நீர், காற்று என்பனவெல்லாம் நீயாக இருக்கின்றன என்பது பொருள். அதாவது “நீ” என்பது அந்த நிலத்தில் தங்கியுள்ளது,  “நீ” என்பது அந்த நீரில் தங்கியுள்ளது,  “நீ” என்பது அந்த காற்றில் தங்கியுள்ளது,  “நீ” என்பது அந்த காட்டில் தங்கியுள்ளது, எனவே இங்கு  “நீ” என்று சொல்லப்படுகின்ற அனைத்தும் “தாய்நாடாகிறது”.

மனிதன் இயற்கையின் ஓர் அம்சமட்டுமல்ல அவனே இயற்கையின் அதி அற்புதமான பகுதியுமாவான். மனிதனுக்கு ஊறுவிளைவிப்பதென்பது, மனித இனத்தை அழிப்பதென்பது, இனப்படுகொலை புரிவதென்பது உன்னதமான இயற்கையை மறுப்பதும் அதற்கு பெருந் தீங்கிழைப்பதுமாகும்.

இயற்கையின் ஓர் அங்கமான மனிதன் வெறுமனே பௌதீக பண்டமல்ல. மொழி, பண்பாடு, வாழ்கைமுறை, வழிபாடு, பழக்கவழக்கம், பாரம்பரியங்கள் போன்ற அகம் சார்ந்த அம்சங்களையும் கொண்டவனாவான். “பண்பாடு என்பது உருளைக்கிழங்கல்ல” என்ற ரெஜி டிப்ரேயின் கூற்றும் கவனத்திற்குரியது.

இதன்படி பண்பாடும் “நீயாக” இருக்கிறது. தாய் மொழியும், வாழ்க்கை முறையும் கூடவே  “நீயாக” இருக்கின்றன. எனவே தேசியம் என்பது அவன் சார்ந்த நிலம், நீர், காற்று மற்றும் வளங்களுடன் கூடவே அவனது பண்பாட்டு அம்சங்களையும் சேர்த்த ஓர் உருத்திரட்ச்சியாகும்.

இந்த வகையில் தேசியம் என்பது உயர்ந்த குறிக்கோளின் அடிப்படையிலான இயற்கையையும், அதுசார்ந்த மனிதனையும், வளங்களையும் மற்றும் உயிரினங்களையும் பாதுகாத்து பேணி வளர்ப்பது பற்றிய ஒரு சத்தியத்தைக் கொண்டது. பரந்த பூகோளத்தையும், இயற்கையையும் பாதுகாக்கின்ற பெரும் பணியின் ஒரு பகுதியாக அவனவன் சார்ந்த பகுதியை பாதுகாப்பதில் பேணி வளர்ப்பதில் தேசியம் தலையாய பங்கு வகிக்கின்றது. எனவே அரும்பெரும் பரந்த இயற்கையை பாதுகாக்கும் பணியின் ஓர் உன்னதமான அங்கமே தேசியம் சார்ந்த கடமையாகும்.

தேசியத்தின் பேரால் அவன் நிலத்தையும், அந்த நிலத்தின் கற்பையும், அந்த நிலத்தின் வளங்களையும் பாதுகாக்கின்றான். நீரை மாசுபடாது பேணி மனித குலத்திற்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் அளிக்கின்றான். இதனால் தேசியம் என்பது நிலம், நீர், காற்று காடு, பயிர் மற்றும் உயிரினங்களையும் தழுவிய ஒன்றாக இருப்பதுடன் மனிதனுக்கு அந்த வளங்களை தேசியத்தின் பேரால் பங்கீடு செய்வதில் அனைத்துவகை ஜனநாயத்தையும் கொண்ட ஓர் அங்கமாகவும் அது அமைந்துவிடுகிறது.

இந்த வகையில் ஈழத்தமிழரின் தேசியப் போராட்டம் என்பது பரந்த உலகம் தழுவிய இயற்கைக்கான சத்தியத்தின் ஒரு பகுதியாகவும், பரந்த மனித நாகரீகத்தின் ஓர் அங்கமாகவும், மனித உரிமைகளின் ஒரு தொகுதியாகவும் காணப்படுகிறது. தேசியம் இல்லையேல் ஜனநாயகமும் இல்லை, மனித உரிமையும் இல்லை, இயற்கைக்கு பாதுகாப்பும் இல்லை.

ஈழத் தமிழரின் தேசியம் அவர்களின் தாயகத்தை அடிப்படையாயக் கொண்டது. ஆனால் அவர்களின் தேசியத்தை தோற்கடிப்பதற்காக எதிர்த்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் முதல்வரியைச் சார்ந்தது அவர்களின் தாயகத்தை ஆக்கிரமிப்பதாகும்.

“ஈழத் தமிழர்கள் ஒருநாள் பிரிந்து சென்று இந்தியாவின் ஒரு மாகாணமாக இணைந்துவிடுவார்கள்” என்ற அச்சம் சிங்களத் தலைவர்களிடம் உண்டு. இதுபற்றிய கவலையை திரு,டி.எஸ். செனநாயக்க ஓர் ஆங்கில அதிகாரி அல்லது ஓர் ஆங்கில இராஜதந்திரியுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அப்போது அதற்க அந்த ஆங்கில நபர் அளித்த பதில் பின்வருமாறு அமைந்ததாகவும் ஒரு செவிவழி கருத்துண்டு.

அதாவது கேக்கை துண்டு துண்டாக வெட்டி சாப்பிடுவது போல கிழக்கு மாகாணத்தை சிங்களக் குடியேற்றத்தின் வாயிலாக துண்டு துண்டாக சிங்களமயமாக்கிவிட்டால் கிழக்கற்ற வறண்ட வடக்கு இந்தியாவிற்குத் தேவைப்படாது எனவே சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதே இதற்கான சிறந்த வழியென்று அவர் ஆலோசனை கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

டி.எஸ்.செனநாயக்கவின் விவசாய அமைச்சில் ஓர் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் தமிழரான திரு, ஸ்ரீகாந்த என்பவர் அவரது அந்திம காலத்தில் (1980) நான் அவரைச் சந்தித்து அவரது அனுபவங்களை சேகரிக்க முயன்றேன். ஆனால் மூன்று சந்திப்புக்களோடு அவரை சந்திக்க முடியாதவாறு அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அந்த சந்திப்பின் போது மேற்படி அந்த கூற்றை டி.எஸ்.செனநாயக்கவிடம் கூறிய விடயம் பற்றிய தகவல்களை அவரிடம் கேட்டறிய முயன்றேன். அப்போது அப்படியொரு தகவலை தானும் செவிவழியாக அறிந்திருப்பதாகவும் ஆனால் அந்த ஆங்கிலேயர் பற்றிய பெயரோ அல்லது தகவல்களோ எதுவும் தனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார்.

எப்படியோ திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் தமிழ்த் தாயகத்தை ஆக்கிரமித்து சிதைத்துவிட வேண்டும் என்ற முடிவை கொண்டிருந்த டி.எஸ்.செனநாயக்க அதனை உறுதியாக நடைமுறைப்படுத்தவும் தவறவில்லை.

வெற்றிகொள்ளப்பட்ட பிரதேசத்தில் ஓர் இராணுவ முகாமை அமைப்பதைவிடவும் அங்கு வெற்றிபெற்றோர் தமது குடியேற்றங்களை மேற்கொள்ளவது மிகவும் சிறந்ததென்றும், இராணுவ முகாமிற்கு விநியோகம் செய்ய வேண்டும் ஆனால் குடியேற்றங்கள் தமக்கானவற்றை தாமே உற்பத்தி செய்து கொள்ளும் என்றும் எனவே இராணுவ முகாம் அமைப்பதைவிட குடியேற்றங்களை மேற்கொள்வது மேலானது என்ற மேற்கத்திய இராஜதந்திரியான மார்க்கியவல்லியன் கருத்தை டி.எஸ்.செனநாயக்க அப்படியே பின்பற்றி செயற்பட்டுள்ளார் எனத்தெரிகிறது. 1949ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கல்லோயா திட்டக் குடியேற்றம் இவற்றிற்கான முத்தாரமாய் அமைந்தது.

வடக்கிலிருந்து கிழக்கைப் பிரிப்பதன் மூலம் கிழக்கையும் அழித்து வடக்கையும் அழித்திடலாம் என்ற சிந்தனையே இலங்கை இனப்பிரச்சனையின் மிகக்கூர்மையான பகுதியாகும்.

எப்படியோ 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வடக்கும், கிழக்கும் தமிழர்களின் தொடர் நிலப்பரப்பு என்பதை சிங்களத் தலைவர்கள் கவனத்தில் எடுத்துள்ளனர். 1925 யூன் 28ஆம் தேதி தமிழ்த் தலைவர்களுடன் சிங்களத் தலைவர்கள் கையெழுத்திட்ட “மகேந்திர” ஒப்பந்தத்தில் வடக்கு டிவிசென் எனப்படுவது வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கிய பகுதி என்ற கருத்துண்டு (By the Northern Division of the Island is meant the Northern and Eastern Provinces). ஆனால் சிங்களத் தலைவர்கள் பின்நாட்களில் கிழக்கு மாகாணத்தையும், வடக்கின் சில பகுதிகளையும் சிங்களக் குடியேற்றத்தால் சிங்கள மயமாக்குவதில் வெற்றிபெற்றுள்ளனர். கிழக்கையும், வடக்கையும் மணலாறு என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றத்தால் இரண்டாக துண்டறுத்து அந்த மணலாறுக்கு “வெலிஓயா” என்ற சிங்களப் பெயரையும் இட்டுள்ளனர்.

எப்படியோ சிங்களக் குடியேற்றத்திற்கு எதிரான கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றன. இந்தியாவின் முயற்சியினால் 1984ஆம் ஆண்டின் இறுதியில் “திம்புவில்” நிகழந்த “திம்பு பேச்சுவார்த்தைகளின்” போது தமிழ்த் தரப்பில் அனைத்து அரசியல் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து ஒரு குரலில் “தமிழர் தாயகம்” என்பது சமரசத்திற்கு அப்பாலானது என்பதை முதன்மைப்படுத்தினர்.

1987ஆம் ஆண்டு “இலங்கை – இந்திய ஒப்பந்தம்” தொடர்பாக இந்திய பிரதமர் திரு,ரஜீவ் காந்திக்கும், விடுதலைப்புலிகள் தலைவர் திரு,வே.பிரபாகரனுக்கும் இடையில் ஏற்பட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது வடக்கு-கிழக்கு தற்காலிக இணைப்பு என்று இருக்கும் சரத்தை ஏற்றுக் கொள்ளமுடியாதென திரு. ரஜீவ் காந்தியிடம்  திரு.பிரபாகரன் எடுத்துக் கூறினார் என்றும் அதற்கு பிரபாகரனின் தோளில் தன் கைகளால் ரஜீவ் காந்தி தட்டி பிரபாகரனின் கவனத்தை தன் பக்கம் ஈர்ந்தவாறு பின்வருமாறு கூறினார் என்றும் புலிகள் தரப்பில் பேசப்பட்டது.

அதாவது “வடக்கு-கிழக்கு இணைப்பு” என்பது நிரந்தரமானது என்றும் ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசை ஏற்கச் செய்வதற்காக தற்காலிக இணைப்பு என்ற சொல் பிரயோகிக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் உண்மையில் இணைப்பு நிரந்தரமானது என்று ராஜீவ் காந்தி கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால் பின்நாட்களில் வெறும் சட்டநுணுக்க காரணத்தின் பேரால் வடக்கில் இருந்து கிழக்கை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டது. சிங்களத் தலைவர்கள் அரசியல் நெறிமுறைகளுக்கு புறம்பாக செயற்பட்ட ஒரு மிகப்பெரும் தீங்காகும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் வாயிலாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டம் என்பது யாரினது அன்பளிப்போ, கொடையோ கிடையாது. தமிழ் மக்களின் இரத்தம் தோய்ந்த தியாகத்திற்குக் கிடைத்த ஒரு சிறு பெறுபேறாகும். இந்த 13வது திருத்தச் சட்டம் அதன் வடிவில் போதாது என்று கூறியவாறு தமிழ் மக்கள் மத்தியில் அதற்கு ஆட்சேபனைகள் எழுந்தன.

இதனை புலிகள் மட்டுமல்ல அன்றைய தமிழர் ஐக்கிய முன்னணியும் போதாதென்றே கூறியது. ஆனால் தற்போது தற்காலிக இணைப்பும் பிரிக்கப்பட்ட பின்பு இந்த 13வது திருத்த சட்டத்தின் கீழ் வடக்கையும், கிழக்கையும் தனித்தனி மாகாணங்களாகக் கொண்ட தீர்வுதான் முன்மொழியப்படும் நிலையுள்ளது.

வடக்கு – கிழக்கை ஓர் அலகாகக் கொண்ட இறைமையுடன் கூடிய சமஷ்டி அமைப்பு முறையிலான தீர்வை தாம் பெற்றுத் தருவோம் என்றும், இதற்காக “நல்லாட்சி அரசாங்கத்தை” உருவாக்க ஜனாதிபதித் தேர்தலில் திரு.மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறும், நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கு வாக்களிக்குமாறும் அதன் மூலம் ரணில் விக்கிரமசிங்காவை பிரதமராக்க உதவுமாறும் தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரி நின்றனர். மேலும் “போர்க்குற்ற சர்வதேச விசாரணை”, தமிழ்க் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு நீதி நிவாரணம் வழங்குதல் உட்பட்ட வாக்குறுதிகள் தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்டன.

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் உருவாகி 2 ஆண்டுகளின் பின்பும் இவை அனைத்தும் நிறைவேற வில்லை என்பதுடன் மறுவளமாக இலங்கை அரசுக்கு இறுதிகட்ட யுத்தத்தின் மூலமாக ஏற்பட்டிருந்த அவமானம் மற்றும் சர்வதேச நெருக்கடிகள் என்பனவற்றை நீக்க தமிழ் மக்களின் ஆதரவு பயன்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லையேல் தமிழ் மக்களுக்கென்று ஏதுவும் இல்லை. இப்போது இருக்கும் 13வது திருத்தச் சட்டத்தின் கீழான தீர்வை யாரும் பெற்றுத் தரவேண்டியதும் இல்லை. அது ஏற்கனவே தமிழ் மக்களின் தியாகத்தால் உருவான ஒன்று. மேலும் வடக்கு-கிழக்கு தற்காலிக இணைப்பு என்பதே அதில் உண்டென்பதுடன் நடைமுறையில் அது பிரிக்கப்படமாட்டாது என முன்னாள் இந்திய பிரதமரால் வாக்குறுதி அளிக்கப்பட்டும் இருக்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான திரு,ஆர்.சம்பந்தன் திரும்பத் திரும்பக் கூறிவந்துள்ளார். ஜனாதிபதி சிறிசேன மீதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும், அம்மையார் (மெடம்) சந்திரிகா மீதும் தமக்கு நம்பிக்கை இருப்பதாக அவர் கூறிவந்துள்ளார். அவர்களிடம் எழுதி ரீதியான எந்த வாக்குறுதியையும் அவர் பெறுவதைவிட வெறும் நம்பிக்கையை முதன்மைப்படுத்தினார். ஆனால் தற்போது வடக்கும் – கிழக்கும் தனித்தனியாக மாகாணங்களாக அமையும் என்ற நிலையே உருவாகியுள்ளது.

இங்கு தமிழ் மக்களை சிங்களத் தலைவர்கள் ஏமாற்றியுள்ளார்களா அல்லது தமிழ் மக்களை தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றுகிறார்களா என்ற கேள்வியே முதன்மையாக எழுகிறது.

இதற்கு அச்சாரமாக 1965ஆம் ஆண்டு டட்லி – செல்வா ஒப்பந்தத்தின் பின்னணியையும், உட்பக்கத்தையும், பெறுபேற்றையும் ஆராய்வது நல்லது. 1965ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிந்ததும் இரு பெரும் சிங்களக் கட்சிகளும் அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறின.

தமிழரசுக் கட்சியின் கூட்டின்றி எத்தொரு கட்சியாலும் அரசாங்கம் அமைக்க முடியாது என்ற நிலையிருந்தது. அப்போது யாழ்ப்பாணத்தில் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்த செல்வநாயகத்துடன் தொடர்புகொள்ள ஒருபுறம் ஐதேகாவும், மறுபுறம் டொக்டர் என்.எம்.பெரேராவும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

கொழுப்பில் அப்போதிருந்த திரு, மு.திருச்செல்வத்துடன் டட்லி செனநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன என்போர் தொடர்பு கொண்டனர். இதுபற்றிய விவரங்களை அதுவரை தமிழரசுக் கட்சியின் மூளையாக வர்ணிக்கப்பட்ட காவலூர் வி.நவரத்தினம் என்னிடம் தெரிவித்தார்.

காவலூர் நவரத்தினத்தின் அக்காலகட்ட அரசியல் அனுபவங்களை திரட்டுவதற்காக நான் அவரை 1980ஆம் ஆண்டு பலதடவைகள் சந்தித்துள்ளேன். அப்போது மிக வளமான வரலாற்று முக்கியத்தும் மிக்க பல தகவல்களை அவர் என்னிடம் தெரிவித்திருந்தாலீ. அதில் டட்லி-செல்வா ஒப்பந்தம் பற்றிய விவகாரமும் ஒன்று.

டொக்டர் என்.எம்.பெரேராவும் மற்றும் இடதுசாரிகளும் தமிழரசுக் கட்சியோடு ஓர் உடன்பாட்டிற்கு வந்து தமது பங்களிப்பின் பின்னணியில் பண்டா-செல்வா ஒப்பந்தத்திற்கு குறையாக ஒரு தீர்வை ஏற்படுத்த முடியும் என்று கருதினார். ஆனால் கொழும்பில் தங்கியிருந்த திரு. மு.திருச்செல்வத்துடன் திரு.ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொடர்பு கொண்டிருந்த நிலையில் செல்வநாயகம் குழுவினர் கொழும்பை அடைந்ததும் அனைவரும் லேக்ஹவுஸ் காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டு அங்கு பூட்டப்பட்ட அறையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் டட்லி-செல்வா ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில் உள்ள தவறுகளை தான் சுட்டிக்காட்டியதாகவும் அதைத் தொடர்ந்து அதில் ஆங்காங்கே எமாற்றங்கள் செய்யப்பட்டதாகவும்  அந்த ஒப்பந்தத்தின் முதல் கையெழுத்து வரைபை அவர்  என்னிடம் காட்டினார். டட்லி செனநாயக்க தனது பச்சை மை பேனாவினால் ஆங்காங்கே மேலும் கீழுமென வரிகளுக்கிடையே திருத்தங்கள் செய்யப்பட்டிப்பதை என்னிடம் காட்டினார். அவசர கதியியல் எழுதப்பட்ட அந்த ஒப்பந்தம் ஒரு சதியென்றும் அதற்கு மு.திருச்செல்வமே மூலகாரணம் என்றும் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சி முழுமையாக ஐதேகாவுடன் ஒத்துழைத்தது. ஆனால் இந்த ஒப்பந்தப்படியான மாவட்டசபைகள் அமைக்கும் மசோதாவை உருவாக்க ஐதேகா மறுத்தது. அத்தோடு அந்த ஒப்பந்தம் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் அதன் பின்பும் மிகுதி 3 ஆண்டுகளும் ஐதே பதவியில் இருக்க தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கத் தவறவில்லை. இதைவிட வேறு நல்லிணக்கத்துக்கான உதாரணத்தை தமிழத் தரப்பிடம் கேட்கமுடியாது. எப்படியோ வெறும் கையுடன் தந்தை நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற வாக்கியத்துடன் 1970ஆம் தேர்தலில் தமிழ் மக்களிடம் சென்றார்.

ஐதேவினால் மேற்கொள்ளப்பட்ட ஏமாற்றல் 1967ஆம் ஆண்டுவரைதான். ஆனால் அதன் பின் 3 ஆண்டுகாலம் தமிழ் மக்களை ஏமாற்றியது ஐதேவல்ல தமிழ்த் தலைவர்கள்தான்.

1981ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபை சம்பந்தமான தீர்வு தேர்தலும் தமிழ் மக்களிடம் முன்வைக்கப்பட்டது. அப்போது அதனை அனைத்து ஆயுதம் தாங்கிய அமைப்புக்களும் எதிர்த்தன. இந்நிலையில்  ஒருநாள் திரு.வே.பிரபாகரன் என்னிடம் பின்வருமாறு கூறினார். “தந்தை செல்வாவை தகப்பன் திருச்செல்வம் கெடுத்தார். தற்போது அண்ணர்  அமீரை திருச்செல்வத்தின் மகன் நீலன் திருச்செல்வம் கெடுக்கிறார்” இக்காலத்தில் ஜே.ஆர். – அமீருக்கு இடையே உருவான உடன்பாட்டின் அடிப்படையிலான மாவட்ட அபிவிருத்திச் சபை அமைப்பிற்கான சூத்திரதாரி திரு,நீலன் திருச்செல்வம் என கருத்தப்பட்டது. ஆதலாற்தான் பிரபாகரன் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.

பேபி சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் திரு.இளங்குமரன் காவலூர் நவரத்தினத்துடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தவர். அவர் வாயிலாகவே திரு.மு.திருச்செல்வம் பற்றிய கருத்துக்களை பிரபாகரன் அறிந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

தந்தை செல்வா முதலில் கோப்பாய் கோமகன் எனப்படும் வன்னியசிங்கத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தவர். வன்னியசிங்கத்திடம் தமிழ் மண்ணோடு ஒட்டிய வாழ்வும் சிந்தனையும் இருந்தது. இவர்தான் ஆரம்ப காலத்தில் தமிழ்த் தேசியம் பொறுத்து செல்வநாயகத்துடன் மிக நெருக்கமாக காணப்பட்டவர். இவரின் பின்பு தமிழரசுக் கட்சியின் மூளையென வர்ணிக்கப்பட்டவர் காவலூர் வி.நவரத்தினமாவார். அதன் பின்பு 1965ஆம் ஆண்டிலிருந்து செல்வநாயகத்தின் தீர்மானத்தில் பெரும் பங்கெடுக்கத் தொடங்கியவர் திரு.மு.திருச்செல்வம் ஆவார்.

எது எப்படியோ தமிழ்த் தலைவர்களால் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட முடியாது போனது. இவ்வாறான தோல்விகளுக்கான காரணங்களை கண்டறியவோ தமது அரசியல் தவறுகளை எடைபோடவோ தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் தயாராக இருக்கவில்லை. 1965ஆம் ஒப்பந்தத்தையும் அதன் நடைமுறைகளையும் பற்றி கற்றறிந்தால் இன்றைய நிலையில் செய்ய வேண்டியவை என்பனவற்றை கண்டறிவதில் கஸ்டமிருக்காது.

2005ஆம் ஆண்டு எனக்கு ஓர் அரிதான ஆவணம் தேவைப்பட்டபோது அதனைப் பெறுவதற்காக அதிகாலை 5-30மணியளவில் திரு,பேபி சுப்ரமணியத்தின் வீட்டிற்குச் சென்றேன். அந்த நேரம் நூல்களை பாதுகாப்பாது அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். என்னைக் கண்டதும் அவசர அவசரமாக மேற்சட்டையை அணிந்தார்.

இதன் பின்பு ஒரு சுவாரஸ்சியமான சம்பவம் நிகழ்ந்தது. அவரது வீட்டில் மாட்டப்பட்டிருந்த பெரியார் ஈவேராவின் படத்தைக் கண்டதும் நான் பின்வருமாறு அவரிடம் கூறினேன்;. அதாவது பரப்புரைப் பொறுப்பாளர் ரமேஷின் முகாமிலும் உங்கள் வீட்டிலும் மட்டும்தான் நான் ஈவேராவின் படத்தைக் காண்கிறேன். வேறு எங்கும் கிடையாது என்றேன். அவர் எனக்கு தனது பெரும் சிரிப்பை எனக்குப் பதிலாக்கினார். அவர் அப்படி நீண்ட நேரம் பெரிதாக சிரித்ததை நான் கண்டதில்லை.

சிரிப்பு ஓய்ந்ததும் பின்வருமாறு கூறினார். அதாவது தனது வீட்டிற்கு ஓர் உயர்கல்வி அதிகாரி ஒருமுறை வந்ததாகவும் ஈவேராவின் அந்தப் படத்தைப் பார்த்து அது எனது தந்தையாருடையதா அல்லது எனது தாத்தாவினுடையதா என்று கேட்டதாகவும் கூறி மீண்டும் சிரித்தார். அந்த உயர் கல்வி அதிகாரிக்கு தெரிந்திருக்காத அளவிற்குத்தான் ஈவேரா பற்றிய பரீட்சயம் இருந்தது. அப்போது நான் பேபி சுப்ரமணியத்திடம் பின்வருமாறு கூறினேன்.

அதாவது ஈழத் தமிழர் வீடுகளில் காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், சுவாமி இராமகிருஷ்ணர் போன்றோரின் படங்கள் இருக்கும். ஒரு சிங்களத் தலைவருடைய படமும் இருக்காது. அதுமட்டுமல்ல ஆங்காங்கே அரிதாக ஜி.ஜி.பொன்னம்பலத்தின் படமும், செல்வநாயகத்தின் படமும் இருக்கும். ஏன் தமிழ்த் தலைவர்களின் படங்கள் தமிழ் மக்களின் வீடுகளில் பெரிதும் இடம்பெறவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா என்று கேட்டேன். அந்த கேள்வி அவருக்கு வியப்பை ஏற்படுத்தியது. அவர் இந்தியப் பாணியில் “ஆமா” நல்ல  கேள்விதான் நான் ஒருபோதும் இப்படி யோசிக்கவில்லை என்றார். அதற்கு நான் பின்வருமாறு பதிலளித்தேன்.

“வெற்றிகளை பெற்றுக் கொடுத்துவர்களையும், சாதனைகளையும் நிலைநாட்டியவர்களையும்தான் மக்கள் தங்கள் மனங்களில் நிறுத்திக் கொள்வார்கள்” என்றேன். பொன்னப்பலத்தினதும், செல்வநாயகத்தினதும் படங்கள் தமிழ் மக்களின் வீடுகளை பெரிதும் அலங்கரிக்காததற்கான காரணத்தை அவர் புரிந்து கொண்டார் போல் தெரிந்தது. இன்றைய தமிழ்த் தலைவர்களுக்கும் இந்த உண்மையைத்தான் இங்கு கூறிவைக்க முடியும்.

தமிழ் மக்களுக்கு 13வது திருத்தச் சட்டம்தான் தீர்வு என்றால் அதைப் பெற்றுக் கொடுக்க யாரும் தேவையில்லை. யுத்த அழிவு ஒரு சாபமாக இருந்தாலும் அந்த அழிவின் விளைவால் தமிழ் மக்களை நோக்கி சர்வதேச கதவுகள் திறந்தன. அந்தக் கதவுகள் அதுவரை புரியப்பட்ட இழப்புக்களின் பெறுபேறாக அமைந்தன. அந்த பெறுபேறு இலங்கை அரசை சர்வதேச அரங்கில் அவமானப்படுத்தியதுடன் இலங்கை அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தின. இந்த சர்வதேச கதவுகளையும், இலங்கை அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் முதலீடாகக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டியதே வரலாற்றுப் பொறுப்பாக அமைந்தது.

ஆனால் சிங்களத் தலைவர்களோ தமிழ்த் தரப்பை அணைத்து தம்மை சர்வதேச அவமானங்களிலும், நெருக்கடிகளிலும், போர்க்குற்ற விசாரணைகளில் இருந்தும் விடுவித்துவிட்டனர் என்று தெரிகிறது.

மக்கள்  கருத்தறியும் செயலணியின் இறுதி அறிக்கையை ஜனாதிபதியின் சார்பில் திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனவரி 4ஆம் தேதி அன்று பெற்றுக் கொண்டார். மனோரி முத்துவெட்டுகம தலைமையிலான அந்த அறிக்கையில் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதிவிசாரணை அவசியம் என்றும் குறைந்தது ஒரு நீதிபதியாவது  வெளிநாட்டவராக இருக்க வேண்டுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித செனரத்ன “அப்படி எந்தொரு சர்வதேச நீதிபதியையாவது நியமிப்பதில்லை என்பதே அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாடாகும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் யாருக்கு யாரால் லாபம்? என்ற கேள்வியே முதன்மை பெற்று நிற்கின்றது.

“அறப்போர் தொடுப்போம். தூக்கு மேடை பஞ்சு மெத்தை, துவக்கச் சூடு பந்து விளையாட்டு” என்று தந்தை செல்வா தலைமையில் 1961ஆம் ஆண்டு சாத்வீக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது தமிழ் மக்கள் முழு அளவில் திரண்டெழுந்து 62 நாட்களாய் அவர் பின்னே சென்றார்கள்.

அப்படித்தான் இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி அதன்படி செயற்பட்டுள்ளார்கள். இனி மிஞ்சப்போவது என்ன?

வடக்கு-கிழக்கை பிரிப்பதற்கு எதிராக அவர்களுக்கு வாக்குறுதி அளித்த வெளிநாடுகளை பொறுப்புக்கு உட்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளப்போகிறார்களா அல்லது 1967ஆம் ஆண்டின் பின்பும் ஐதேகவை பாதுகாத்தது போல் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கப் போகிறார்களா அல்லது அரசாங்கத்திற்கு உள்நாட்டு, வெளிநாடு ரீதியான நெருக்கடிகளை ஏற்படுத்தி தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டப் போகிறார்களா என்பதெல்லாம் இமாலய கேள்விகளாய் எழுந்துள்ளன.

இம்முறை வெறுக்கையுடன் திரும்ப முடியாதளவிற்கு தமிழ் மக்கள் தரப்பில் தெளிவான சர்வதேச வாய்ப்புக்கள் இருந்துள்ளன. அவற்றை எவ்வளவு தூதரம் தமிழ்த் தரப்பு கையாண்டுள்ளது என்பதை இன்றைய நிலைமை கேள்விக்குள்ளாக்கி நிற்கின்றது.

 

– மு.திருநாவுக்கரசு –

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More