Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை பூக்கள் பூமியை ஆக்கிரமித்தது எப்படி? புதிய ஆய்வில் கிடைத்தது விடை!

பூக்கள் பூமியை ஆக்கிரமித்தது எப்படி? புதிய ஆய்வில் கிடைத்தது விடை!

2 minutes read

அறிவியல் அறிஞர் சார்லஸ் டார்வினையே குழம்ப வைத்த கேள்வி ஒன்றுக்கான பதிலை அறிவியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளதாக நம்புகின்றனர். பூக்கள் எப்படித் தோன்றியது மற்றும் பூக்கும் தாவரங்கள் பூமி முழுவதும் எவ்வாறு பரவின என்பதே அந்தக் கேள்வி.

பூக்கள் பூக்கும் தன்மை உடைய தாவரங்கள் (Angiosperms) உலகில் உள்ள தாவர வகைகளில் 90% உள்ளன. பெரும்பாலான உணவுப் பொருட்களை வழங்கும் தாவரங்களும் அவற்றுள் அடக்கம்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தங்களை உணவாகக் கொண்ட முள் செடிகளை விஞ்சி பூக்கும் தாவரங்கள் வேகமாகப் பரவின. ஆனால், அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதும் ஒரு புதிராகவே இருந்தது.

ஜீனோம் எனப்படும் மரபணுத்தொகைகளை (Genome) உருவத்தில் சிறியதாக சுருக்கிக்கொண்டதன் மூலமே அவை வேகமாகப் பூமியெங்கும் பரவின என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

“உயிரணுவின் உருவ அளவை குறைத்தாலும் வாழத் தேவையான குணாதிசயங்களை எப்படி அதில் அடக்கி இருக்க முடியும் எனும் கேள்வி எழுகிறது,” என்கிறார் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கெவின் சிமோனனின்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி முள் செடிகளாலும், ஊசியிலை தாவரங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதல் பூக்கள் பூக்கும் தாவரங்கள் தோன்றின.

அவை வேகமாகப் பரவி ஒரே பச்சை நிறமாக இருந்த பூமிக்கு பல்வேறு நிறங்களைத் தந்தன. அவை வெற்றிகரமாக வேகமாகப் பரவியதற்கான காரணம் சில நூற்றாண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வந்தது. சார்லஸ் டார்வின் அதை ‘வெறுக்கத்தக்க புதிர்’ என்று கூறியுள்ளார்.

சிமினோன் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளரான ஏல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆடம் ரோடி தாவரங்களின் மரபணுத்தொகையின் உருவ அளவுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று நினைத்தனர். அவர்கள் பலநூறு தாவரங்களின் மரபணுக்களின் உருவ அளவை ஆய்வு செய்தனர்.

மரபணுத்தொகையின் உருவ அளவையும் தாவரங்களின் உடல் கூற்றையும் அவர்கள் ஒப்பிட்டனர். அப்போது மரபணுத்தொகையின் உருவ அளவை தாவரங்கள் சிறிதாக்கிக் கொண்டதற்கும், பூக்கும் தாவரங்கள் வேகமாக உலகில் பரவியதற்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் இதன்மூலம் கிடைத்தது.

உயிரணுக்களின் கருவில் உள்ள மரபணுத்தொகையின் அளவை சுருக்கியதன் மூலம் பூக்கும் தாவரங்களால் சிறிய உயிரணுக்களை உருவாக்க முடிந்தது. இது பூக்கள் பூக்கும் தாவரங்கள் (Angiosperms)-இல் மட்டுமே நடந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

நன்றி : ஹெலன் பிரிக்ஸ் | பிபிசி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More