புறநானூறு 66
மானம் மிக்க வீரம்
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
வெண்ணிக் குயத்தியார்
இவர் சங்க காலத்திலே சோழ நாட்டில் வாழ்ந்து வந்த பெண் புலவர் ஆவார். இந்தப் புலவர் வெண்ணிப்பறந்தலைப் போரை நன்கு அறிந்தவரும் அந்தக் காலத்தில் வாழ்ந்தவரும் ஆவார்.
வெண்ணிப் பறந்தலைப் போர் பற்றிப் பாடியதால் இவர் வெண்ணிக் குயத்தியார் என்றும் பெயர் பெறுகிறார். இவர் குறவர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. கரிகாலன் செய்த தவறைச் சுட்டிக்காட்டி அவனை மன்னிப்பு கேட்கும்படி செய்துள்ளார். இந்தப் புறநானூறு 66 வது பாடல் கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.மு இரண்டாம் நூற்றாண்டளவில் பாடப்பட்டது.
வெண்ணிப் பறந்தலை
சங்க காலப் போர்க்களங்களில் மிகவும் பேர் போனது இது. மிகப் பெரும் பேரரசுகளான பெருஞ் சேரலாதனுக்கும் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானுக்கும் இடையில் நடந்த பெரும் போர் இது. இதில் சோழ நாட்டை வெற்றி பெறுவதற்காக சேர மன்னனும் பாண்டிய மன்னனும் பதினொரு குறுநில மன்னர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே அணியாகப் பெரும்படையோடு சோழ நாட்டின் மீது போர் தொடுத்தனர். அதிக படையோடு வந்த பகைவரை வென்று கரிகால்சோழன் வெற்றி வாகை சூடினார். இதில் என்ன சிறப்பு என்பதை ஈண்டு காண்போம்.
பகைவனே நல்லவன்
” நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக” என்று இந்தப் புறநானூற்றுப் பாடல் வரிகள் ஆரம்பிக்கின்றன.
வெண்ணிக் குயத்தியார் தனது மன்னனைப் போற்றி பாடும் பாட்டில் பகைவனே நல்லவன் என்று நெஞ்சுரம் கொண்டு கூறுகிறார்.
“களிப்புடன் நடைபோடும் யானை மேல் தோன்றும் கரிகால் வளவ!
கடலில் நாவாய் (பெரிய கலம்) கப்பலோட்டி காற்றையே ஆண்டவரின் வழி வந்தவன் நீ. இந்த வெண்ணிப் பறந்தலைப் போரில் வென்றாய். அதனால் நீ நல்லவன்.
ஆனால் வெண்ணிப்பறந்தலைப் போர்க்களத்தில் உனது வலிமை மிக்க தாக்குதலால் மார்பில் அம்பு துளைத்தாலும் முதுகு வரை சென்றதால் புறப் புண்ணாகக் கருதி, இது தனக்கு ஏற்பட்ட அவமானம் என்று நினைத்து நாணி, உண்ணா நோன்பிருந்து அந்தப் போர்க்களத்திலேயே வடக்கிருந்த படி உயிர் நீத்த மன்னன் பெருஞ் சேரலாதன். அவன் உன்னைக் காட்டிலும் நல்லவன் அல்லனோ!” என்று நெஞ்சில் அச்சம் இன்றி மானம் மிக்க வீரத்தினைப் பாடுகின்றார்.
கரிகால் சோழனும் தனது இழி செயலை நினைந்து வருந்தினான். இதனால் வெண்ணிப் பறந்தலைப் போர்க்களத்தில் சோழன் கரிகாலனது வெற்றி முரசு கூட முழங்கவில்லை என்று வரலாறு கூறுகின்றது.
ஆனால் இப்போது இன்றைய தலைவர்கள் செய்யும் பிழைகளை அச்சமின்றி சுட்டிக் காட்ட முடியுமா? அதனை சுட்டிக்காட்டிய பின்பு நிம்மதியாகத் தான் இருந்து விட முடியுமா?
மானத்துக்காகவே தன் உயிரைத் துறக்கிறான் சேரலாதன்.
மானம் மிக்க வீரம் கொண்ட சேரலாதனே (பகைவனே) உன்னை விட நல்லவன் என்கிறார் வெண்ணிக் குயத்தியார். கரிகால் சோழன் தனது செயலுக்காக நாணுகிறான்.
பாருங்கள்! இதுவல்லவோ! நமது மூதாதையரின் பெருமை மிக்க பண்புகள்.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்