“புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்”
என்ற பாரதிதாசன் வரிகளை நினைவு கூர்ந்து கொண்டபடி இன்று உலகமே திரும்பிப் பார்க்கும் உக்ரைன் ரஷ்யாவுக்கிடையிலான போர் நடந்து கொண்டிருக்கும் இவ் வேளையில் இப்பதிவை எழுதுவது சாலப் பொருத்தமாக அமைந்து விடும்.
சங்ககாலத்தில் போர் காரணங்கள்
மன்னர்கள் தமது எல்லைகளை விரிவு படுத்தவும், புகழை நிலை நாட்டவும், தாம் விரும்பும் பெண்களை கொடுக்காத மன்னர்களை எதிர்த்தும், தன்மானத்தையும், தம்மையும் காத்துக் கொள்ளவும் போர் புரிந்தனர் என்று புறநானூற்றில் பல பாடல்கள் வருகின்றன.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க உலக நாடுகளில் உரிமைக்காகவும் போர் நடந்திருக்கின்றது. ஈழத்தில் நடந்த மிகப் பெரும் இனப்படுகொலையானது உரிமையை ஒழித்து, தமிழ் இனத்தை அழித்த செயலாக இருந்திருக்கின்றது என்பது எமக்கு கண்கூடு. எமக்கு போரின் வலி என்பது அனுபவித்து ஆறாத வடுவாக என்றும் இருப்பது.
போருக்குப் பிந்தைய காட்சி
சங்க இலக்கியம், நெடுங்கீழ்க்கணக்கில் களவழி என்னும் இலக்கியம் போர்க்களத்தில் பிணங்கள் எங்கும் கிடக்கின்ற தோற்றம் தச்சனின் உலைக்களத்தில் கிடக்கும் கருவிகளை போன்று இருந்தது என்கிறது. அடுத்து வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் அவர்கள் உடலிலிருந்து சொட்டுச் சொட்டாக குருதி ஒழுகும் காட்சி கார்த்திகை நாளில் ஏற்றும் விளக்குகள் போல எங்கும் இருந்தன என்கிறது.
போருக்கு எதிர்
போர்கள் நடைபெறாமல் தடுக்கப் புலவர்கள் நிறையப் பேர் இருந்திருக்கின்றார்கள். அதியமானுக்காக தூது சென்று ஔவையார் போரை தடுத்தார் என்பது வரலாறு. அதுபோலவே சங்க காலத்தில் பல புலவர்கள் போருக்கு எதிரான குரல் கொடுத்துப் போரை தடுத்து இருக்கின்றார்கள். அதில் கருங்குழலாதனார், கபிலர், காரிக்கண்ணனார், கோவூர்கிழார், ஆலத்தூர் கிழார், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்று பலர் உள்ளனர்.
போருக்கு எதிரான குரலாக புறநானூற்றில் 7,15, 51,163, 230 போன்ற பாடல்கள் இருந்திருக்கின்றன.
இதில் கருங்குழல் ஆதனார் பாடிய புறநானூற்றில் 7வது பாடலை ஈண்டு காணலாம்.
புறநானூறு பாடல்- 7
பாடியவர்: கருங்குழல் ஆதனார் பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
“களிறு கடைஇய தாள்” என்று தொடங்கும் பாடலில் களிற்றுப் படை, காலாட் படை ஆகியவற்றின் காலால் மிதித்தும், அம்பு தொடுத்தும் நாட்டை அளித்தாய். விரும்பி வந்த திருமகளை ஏற்க மறுத்தத மலர்ந்த மார்பில் தோல் என்னும் கவசத்தை அணிந்திருந்த வலிமை மிக்க மார்பினை உடையவன் நீ. இரவு பகல் என்று பாராது பகை நாட்டை சுட்டு அது எரியும் விளக்கில் அவர் நாட்டு மக்கள் அழுகுரலை கேட்பவன் நீ. இயன் தேர் வளவ! இது நல்லது அன்று.புனல் பாயும் வள நாட்டைக் காக்க மறந்து மீன் பாயும் நாட்டில் இப்படி செய்யலாமா? என்று புலவர் தனது போருக்கெதிரான குரலாக இந்தப் பாடலை முன்வைக்கின்றார்.
முள்ளிவாய்க்கால் போரில் அத்தனை நாடுகளும் சேர்ந்து ஒரு இனத்தை அழித்துக் கொண்டிருக்கும் போது எந்த நாடுகளுமே தடுத்திட வில்லை.
இன்று நடக்கும் போரை யாராவது தடுத்திட மாட்டார்களா என்ற ஆதங்கமே எம்முள் எழுகின்றது.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்