Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை கஞ்சாவை சட்டமாக்க துடிக்கும்  சிங்கள அரசும் அதை ஒழிக்க நினைக்கும் சமூக ஆர்வலர்களும் | அ.மயூரன், M.A.

கஞ்சாவை சட்டமாக்க துடிக்கும்  சிங்கள அரசும் அதை ஒழிக்க நினைக்கும் சமூக ஆர்வலர்களும் | அ.மயூரன், M.A.

5 minutes read

கடந்த சில மாதங்களாக தமிழர்கள் வாழும் வடபகுதியில் கஞ்சா உட்பட்ட போதைப் பொருட்களின் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ளது.  இது கடந்த வருடந்தினை விடவும் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக. யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது கடந்த மூன்று மாதங்களில் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் ஏற்படும் உயிரிழப்பானது சடுதியாக அதிகரித்து  இருப்பதாகவும் இவ்வருடம் 11 பேர் இவ்வாறு போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்துள்ளதாகவும்,  இவ்வுயிரிழப்புக்கள் குருதி நாளங்களினூடாக உடலில் போதைப் பொருளை ஏற்றுகின்ற பொழுதே அதிக அளவில் ஏற்பட்டதாக

தெரிவித்தார்.

கடந்த வருடம் போதைப்பொருள் பாவனையால்  யாழ் சிறைச்சாலையில் 10 பெண்கள் உட்பட 491 பேர் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் 13 பெண்கள் உட்பட 854 பேர் சிறைச்சாலையிலும், 165 பேர் யாழ் சட்ட மருத்துவ அதிகாரியின் அலுவலகத்திலும் சேர்க்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்படுகின்றனர்.

யாழ் மாவட்டத்திலுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.  இவர்கள்18 முதல் 23 வயதிற்கிடைப்பட்ட யாழின் பிரபல பாடசாலை மாணவர்கள் எனவும்,  அரசால் இரண்டு மாதங்களிற்கு  முன் திறக்கப்பட்ட. போதை மறுவாழ்வு நிலையத்தில் 134 பேர் தமது தரப்பினரால் புனர்வாழ்வுக்காக சேர்க்கப்பட்டதாகவும்,  யாழ். பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது. மேற்சொன்ன தகவல்கள் யாழ் மாவட்டத்தின் தரவுகள் மட்டுமே.

இதே நேரம் போதைப்  பொருள் ஒழிப்பு நடவடிக்கையை  வலியுறுத்தி யாழ் வைத்தியசாலை சமூகம் ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை பேரணியாகச் சென்று யாழ் மாவட்ட அரசு அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் கையளித்துமிருந்தனர்.

அதில்  போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் முப்படையினரையும் ஈடுபடுத்துதல், போதைப் பொருள் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், போதைப்  பொருள் கடத்தல் தொடர்பாக தகவல்களை வழங்குவோரைப் பாதுகாத்தல், போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்குரிய கட்டமைப்புக்களை உருவாக்கிச் செயற்படுத்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கி இருந்தன.

யாழ்ப்பாணத்தைச் சுற்றிய 273 கடல் மைல்கள் நீளத்தில் மன்னர் முதல் வெற்றிலை கேணி வரை 93 காவல் கண்காணிப்பு நிலைகளை நிறுவி விசேட ரோந்து நடவடிக்கைகளில் கடற்படையினர் ஈடுபடுவதாகவும் கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கடற்படையும் கண்காணிப்புப் புலனாய்வாளர்களும் 24 மணி  நேரமும்  யாழ் கடற்பரப்பை கண்காணிக்கும் பொழுதும் தாராளமாக வடற்கிற்குள் கஞ்சாவும் ஏனைய போதைப் பொருட்களும் கடத்தப்படுவதைத் தடுக்க இவர்களால் முடியவில்லை.

 கேரளாவில் இருந்து தென்னிந்தியா வழியாக வடபகுதிக்குள் கடத்தப்படும் கஞ்சாவை கடற்படையினரின் ஒத்துழைப்புடனேயே கடத்தல் காரர்கள் செய்வதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடற்படையின் இக்கண்காணிப்பையும் மீறி போதைப்  பொருள் இறக்குமதியில் வட மாகாணமே முன்னணியில் திகழ்கிறது. பொதுவாக வறுமை கோட்டுக்குட்பட்ட மீனவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இக்கடத்தல்களை செய்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.

 காங்கேசன்துறை, பருத்தித்துறை  முனைப்பகுதி , குருநகர் , உடுத்துறை ஆழியவளை, நாவாந்துறை  கேவில் ஆகிய கிராமங்களும். மன்னார் பகுதியும் முக்கிய கடத்தல் மையங்களாகத் திகழ்கிறன. கடற்படையினர் அவ்வப்போது சாட்டுக்கு சில போதைப்  பொருட்களைக் கைப்பற்றினாலும் தாராளமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதைப்  பொருள் பாவனையிலுள்ளன.

 யாழ்  மாவட்ட கரையோரப் பகுதிகளிலுள்ள மீனவர்கள் சிலர் பல வருடங்களாக தென்னிந்தியா ஊடாகப் பல விதமான போதைவஸ்துக்களை சிறு படகுகள் மூலம் ஏற்றி வருகின்றனரெனவும், இதற்கு கடற்படை ,  பொலிஸ்,  இராணுவ உளவுத்துறை முதலானவர்களின் ஒத்துழைப்பும் இருப்பதோடு இக்கடத்தல் செயல்கள் பற்றித் தெரிந்திருந்தும் இப்பகுதிகளில் உள்ள பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள், சில அரசியல் வாதிகள் கண்டும் காணாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கு  கேவில் வரையான பகுதிகளிலேயே கூடுதலான போதைப் பொருள் கடத்தல்கள் இடம்பெறுகின்றன. இதில் கேவிலிலுள்ள கடற்படை முகாமுக்கு அருகில் அவர்களின் உதவியுடனேயே கேரள கஞ்சா   இறக்கப்பட்டு அங்கிருந்து யாழ் மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாண பகுதிகளுக்கும்  இக் கஞ்சாக் கடத்தல்கள் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

 இப்பிரதேசங்களிலுள்ள சம்மாட்டிமார் பலர் ஒரு குழுவாக இணைந்து பாரிய முதலீட்டினைச்  செய்து இக்கடத்தல் தொழிலைச் செய்து வருகின்றனர்.

  இப்பகுதிகளில் போதைப்  பொருள் கடத்தல் தொழிலைச் செய்யும்  பிரபலமானவர்களாக

மாமுனையைச்  சேர்ந்த வசந்தன், 

உடுத்துறையைச்  சேர்ந்தவர்களான தங்கவேல், தங்காதரன் (புகையிலைக்குட்டி), மற்றும்

காந்தன், புலேக்குமார் (பீப்பா கரன்), அரவிந்தன் ஆகியோரும்,  ஆழியவளையைச் சேர்ந்த  E.P. நாதன் மற்றும் அவருடைய மருமகனான. ஜெயக்குமார், மற்றும்

கட்டைக்காட்டைச்  சேர்ந்த றஜனி முதலானவர்களைக் குறிப்பிடலாம்.

சம்பந்தப்பட்ட கடத்தல் முதலாளிகளின் வீட்டில் பொலிசார் இரவு நேரத்தில் விருந்துபசாரமும், குடிபானமும் குடித்து சந்தோசமாக களித்து வருகின்றனர்.  இதனால் எங்களுடைய சமூகத்திலுள்ள சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் எனப்பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் சமூகவிரோதச் செயல் குறித்து பல இடங்களில் முறையிட்டும் யாழ்  மாவட்டத்தில் பொது அமைப்புக்களோ, அரச அதிகாரிகளோ, அரசியல் வாதிகளோ இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர். 

அத்துடன் கஞ்சாவினை இலங்கையில் சட்டபூர்வமாக்க சிங்கள அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது.

வடக்கில்:

கஞ்சாவானது மத்திய ஆசியா மற்றும் இந்திய துணைக்  கண்டத்தில் அதிகம் பயிரிடப்படுகிறது. இது புற்றுநோய் மற்றும் நரம்பியல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். காலணித்துவ காலத்தில் இலங்கையில்  பெயரளவில் தடை செய்யப்பட்ட கஞ்சா பின்னர்  1929 இல் ஓபியம் மற்றும் ஆபத்தான போதைப்  பொருள்களுக்கான  சட்டம் திருத்தப்பட்டு கஞ்சா தடை செய்யப்பட்டது. இருந்தபோதும் அரசு  1961 ஆம் ஆண்டு ஆயுர்வேத சட்டம் இயற்றப்பட்டு  மருத்துவர்கள் மருத்துவ தயாரிப்புக்கு  இக்கஞ்சாவினை  அனுமதித்தது. பின் ஆயுர்வேத பயன்பாட்டுக்கு கஞ்சா பயன்படுத்தப்பட்டுவந்தது.

தற்போது சிறி லங்கா பொது ஐன பெரமுன  (SLPP) தலைமயிலான அரசாங்கத்திற்கு ஆதரவு அழிக்கும் சமகி ஜன பல வேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கஞ்சா சாகுபடி மற்றும் ஏற்று மதியை அனுமதிப்பதன் மூலம் இலங்கை கணிசமாக ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுவதனூடாக சர்வதேச கடன் வழங்கும் நாடுகளை நம்பியிருக்கத் தேவையில்லை என்கிறார்.  இதன் மூலம் பல பில்லியன் டொலர்களைச் சம்பாதிக்க முடியுமென தொடர்ந்தும் தெரிவித்துவரும் நிலையில் கஞ்சாவை சட்டபூர்வமாக்கும் முயற்சியில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் முயற்சியாகவே சுதேச வைத்திய ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி அமைச்சரவையில் இதற்கான தீர்மான முன்மொழிவைச்  சமர்ப்பித்து அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

கஞ்சா சட்டபூர்வமாக்கப்படுமானால் தமிழர் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பலர் இத்தொழிலை செய்வதற்கு வழி சமைக்கிறது. அத்தோடு வடக்கில் ராணுவம் மேலும் இதை விரிவு படுத்த சந்தர்ப்பம் உண்டு.  இராணுவத்தினரால் வடக்கில் கடத்தல்களுக்கு ஆதரவளிப்பது போல் அதைத் தெற்கில்  செய்யமுடியாது.  இதன் மூலம் பாதிக்கப்பட போவது வடக்கு கிழக்கு தமிழர்களே.

அத்துடன் இந்தியாவைச் சீர்குலைப்பதற்கான சீனாவின்  நீண்ட கால திட்டங்களில் ஒன்று இந்த போதை பொருள் வர்த்தகமாகும். இதனை இலங்கை அரசின் ஊடாக ஊக்குவிப்பதன் மூலம் தமிழகத்தையும் கேரளத்தையும் இந்தியாவிலிருந்து பிரித்து இந்தியாவை தூண்டாடுவதற்கான அதன் நீண்டகாலத்  திட்டத்தில் இது  ஒன்று எனலாம். எனவே கஞ்சாவை சட்டமாக்குவது வடக்கு தமிழர்களை கலாச்சார ரீதியாக சிதைப்பதும் இந்தியாவை துண்டாடுகின்ற முயற்சியுமாகும்

ஈழத் தமிழரைச் சிதைப்பது பொறுத்தும் தென்னிந்தியாவை குற்றக் கும்பல் மயமாக்குவதற்கும் அடிப்படையான ஓர் ஆப்பாய் சிங்கள — சீன அரசுகள் இதனை முன்னெடுக்கின்றன எனத் தெரிகிறது.

அ.மயூரன் , M.A.

நன்றி – உலகத்தமிழர் பத்திரிகை (கனடா)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More