Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 184பேர் பலியெடுக்கப்பட்ட மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் படுகொலை: தீபச்செல்வன்

184பேர் பலியெடுக்கப்பட்ட மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் படுகொலை: தீபச்செல்வன்

4 minutes read

 

1990ஆம் ஆண்டு. புரட்டாதி 9ஆம் திகதி. வடகிழக்கே சோகத்தில் மூழ்கிய நாள். வந்தாருமூலைப் பல்கலைக்கழகத்தில் 158பேர் பலியெடுக்கப்பட்டு நான்கு நாட்கள்தான். இலங்கை  அரசின் திட்டமிட்ட அடுத்த இனப்படுகொலை கிழக்கை மட்டக்களப்பை உலுக்கியது. மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது சத்துருக்கொண்டான் பிரதேசம். ஊறனி, பிள்ளையாரடி, பனிச்சையடி முதலிய கிராமங்களை உள்ளடக்கியது சத்துருக்கொண்டான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை. நாலு அணியிருக்கும். ஊரை இராணுவம் சுற்றி வளைத்தது. 5.30மணிக்கு மணிக்கு வின்சன் டிப்போ தோட்ட இராணுவமுகாமில் கூட்டம் ஒன்று இருக்கிறது அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று இராணுவச் சீருடை அணிந்த ஒருவர் ஊரில் வந்து மக்களுக்குக் கூறியுள்ளார். போகாது விட்டால் பிரச்சினை என நினைத்த மக்கள் இராணுவமுகாமிற்குச் சென்றனர். வயது முதிர்ந்தவர்களை லொறிகளில் ஏற்றிச்சென்றனர். கொண்டு செல்லப்பட்டவர்கள் ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் இருத்தப்பட்டனர்.
ஏழு மணியிருக்கும். அங்கிருந்தவர்களை சரிக்கத் தொடங்கியது சிங்கள இராணுவம். அவர்களுடன் ஊர்காவல்படையும் இணைந்துகொண்டனர். வாளினால் வெட்டினர். கத்தியினால் குத்தினர். துப்பாக்கியினால் சுட்டனர். கிடங்கொன்றில் ரயரை எரித்து கொன்ற அதில் அப்பாவித் தமிழ் மக்களை வீசினர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் எவரும் வேறுபாடற்று அழித்து எரிக்கப்பட்டனர். பிரதேசமே ஓலத்தால் நிரம்பியது.
சிறுவர்களின் கைகளை பின்பக்கமாக கட்டினர். பின்னர் அவர்களை கத்தியால் குத்திக் கொன்று வீசினர். நிலவு வெளிச்சம் இருட்டில் கலந்திருந்தது. வெட்டி வீசப்பட்டவர்களின் குறை உயிருடன் துடிப்பவர்களைத் தேடித் தேடி எந்த இடத்தில் குத்தினால் உயிர் பிரியும் என பார்த்துப் பாரத்துக் குத்திக் கொன்றனர் இலங்கை இராணுவத்தினர். 47 குழந்தைகள். 85 பெண்கள். 28 முதியவர்கள். 184பேர் காவுகொள்ளப்பட்டனர். வின்சன் டிப்போ தோட்டத்தில் விடிய விடிய எரிந்த நெருப்பை எஞ்சியவர்கள் பார்த்தக்கொண்டிருந்தனர். ஒரு கிராமே கொலை செய்யப்பட்டது. ஒரு பிரதேசமே அழிந்தது.
எந்த தடயமும் எந்த ஆதாரங்களும் எந்த சாட்சிகளுமற்ற ரீதியில் இந்தப் இனப் படுகொலையை சிங்களப் படைகள் மேற்கொண்டனர். ஆனால் இந்தப் படுகொலையில் சிக்கி காயமுற்ற கந்தசாமி கிருஷ்ணகுமார் என்பவர் அதிஸ்டவசமாக உயிர் தப்பினார். அவரே மனித குலம் நடுங்கும்  இந்தப் படுகொலையின் ஒற்றைச் சாட்சியமானார். வெட்டி வீசப்பட்ட கிருஷ்ணகுமார் இராணுவத்தின் மரணக் குழியில் விழாமல் அதிஸ்டவசமாக வெளியில் விழுந்தார். வெட்டுக்காயங்களுடன் வேலிக் கரையாக வீசப்பட்ட கிருஸ்ணகுமார் மெல்ல மெல்ல தவள்ந்து சென்று ஒரு பற்றையினுள் ஒளிந்துகொண்டார்.
மறுநாள் மதகுரு ஒருவரின் உதவியுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனை கேள்வியுற்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அவரை வைத்தியசாலையிலிருந்து கடத்த முற்பட்டனர். குறித்த மதகுரு தனது கடும் பாதுகாக்கில் – இரகசியமாக வைத்து சிகிச்சை அளித்து கிருஷ்ணகுமாரைக் காப்பாற்றினார். சத்துருக்கொண்டான் படுகொலை குறித்து கிருஷ்ணகுமார்  சாட்சியங்களை வழங்கினார்.
கொலை நடைபெற்று சில நாட்கள் வின்சன் தோட்ட இராணுவ முகாமை நெருங்க முடியவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். ஒரு வாரம் கடந்த நிலையிலையே, அந்த இராணுவமுகாமிற்குச் சென்று உங்களால் கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே என்று ஊர் மக்கள் கேட்கத் தொடங்கினார்.   இந்த நிலையில் கொல்லப்பட்ட மக்கள் குறித்து உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது. மனித உரிமை ஆணைக்குழு செஞ்சிலுவை சங்கம் போன்ற இராணுவத்தரப்பிடம் இந்தப் படுகெராலை குறித்து விசாரித்தது. எனினும் இராணுவத்தினர் அவ்வாறு தாம் செய்யவில்லை என்று மறுத்தனர்.
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் வெளிவந்த உண்மைகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதனை அடுத்து அன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு நீதி விசாரணை நடத்துவதாக கூறி இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நிறுவியது. ஓய்வுபெற்ற நீதிபதியான கே. பாலகிட்ணர் தலைமை வகித்த குறித்த விசாரணையின் முடிவில் நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜனாதிபதியை வேண்டிக்கொண்டார்.
இவ் இனப்படுகொலை சம்பவம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட கொலம்பிய பல்கலைக்கழகம்  இப் படுகொலை தொடர்பான விடயத்தையும் சாட்சிகளையும் ஆவணப்படுத்தியது.அத்துடன் அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர்களும் திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்த இப் படுகொலை குறித்து ஆராயந்துள்ளனர். இந்தப் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வலுவாக குரல் எழுப்பப்பட்டபோதும் இலங்கை அரசு எதனையும் செய்துவிடவில்லை.
இவ் இனப் படுகொலையின் குற்றவாளிகளாக இதற்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளாக இம்முகாமில் கடமையாற்றிய கப்டன் காமினி வர்ணகுலசூரிய, கெரத் மற்றும் விஜயநாயக்க மேலும் இதற்கான கட்டளை அதிகாரி கேணல் பெசி பெனாண்டோ ஆகியோர் இனம் காணப்பட்டனர். எனினும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன்மூலம் இலங்கை அரசு திட்டமிட்ட ரீதியில் தமிழ் மக்களை அழிக்க இந்தப் படுகொலைக்கு உத்தரவிட்டதா என்ற கேள்வியும் மனித உரிமைவாதிகளால் முன்வைக்கப்பட்டது.
இலங்கை அரச படைகள் நிகழ்த்தும் எந்தவொரு இனப்படுகொலை நடவடிக்கைக்கும் நீதி கிடைப்பதில்லை என்ற இலங்கையின் அநீதி வரலாற்றில் சத்துருக்கொண்டான் படுகொலையும் அடங்கிற்று.குழந்தைகள் என்றும் பாராமல், பெண்கள் என்றும் பாராமல் முதியவர்கள் என்றும் பாராமல் எம் சனங்கள் வெட்டி எரியும் நெருப்பில் வீசப்பட்டமைக்கு இலங்கையில் நீதி மறுக்கப்பட்டது. இவ்வாறு எம் சனம் படுகொலை செய்யப்படுவதே இலங்கை அரசின் நீதியா?
இன்றுடன் 29 வருடங்கள் நீதியற்றுக் கடந்துவிட்டன. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதிகோரிய நமது போராட்டத்தில் சத்துருக்கொண்டான் இனப் படுகொலை தொடர்பிலும் கவனத்தை முன்வைப்போம். ஈழத்தின் கிழக்கை, மட்டு மண்ணை, ஈழத்தை, உலகத்தை அதிரப்பண்ணிய இந்தப் படுகொலைகளை தமிழ் இனம் என்றும் மறக்காது. என்றாவது ஒருநாள் உங்களுக்கு நீதி கடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த ஆண்டும் நெய் விளக்கு ஏற்றுகிறோம்.
-தீபச்செல்வன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More