ஆப்கானிஸ்தான் கார் குண்டு தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் குறைந்தது 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்ததாக ஆப்கான் உள்த்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் தெரிவித்துள்ளார்.

லோகரின் தலைநகரான புல்-இ-ஆலம் நகரின் ஷர்வால் சதுக்கத்தில் உள்ளூர் நேரம் இரவு 7:40 மணியளவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் பலியானவா்களில் குழந்தைகளும் அடங்குவதாக உள்த்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் கூறினார்.

ஈத் பண்டிகையை ஒட்டி இன்று வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு தலிபான்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்தக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை தமது அமைப்பு நடத்தவில்லை என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸாபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார். அதே நேரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இது குறித்து எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

இந்த தாக்குதலை தற்கொலை குண்டுதாரி நடத்தியதாக நம்பப்படுவதாக லோகர் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் தேதர் லாவாங் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிரந்தர போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகளில் ஏற்கனவே தலிபான்களும் அரசு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் தங்கள் பிடியில் உள்ள 1000 ஆப்கான் படையினரை விடுவிக்க தலிபான்கள் ஒப்புக்கொண்டனர். அதேபோன்று தமது பிடியில் உள்ள 5000 தலிபான்களை விடுவிக்க அரசு ஒப்புக்கொண்டது.

இதன்படி ஆப்கானிஸ்தான் அரசாங்கம் 4,400 க்கும் மேற்பட்ட தலிபான் கைதிகளை ஏற்கனவே விடுவித்துள்ளது.

அதேநேரம் தங்கள் பிடியில் இருந்த 1,005 ஆப்கான் படைகளை விடுவித்துள்ளதாக தலிபான்களில் செய்தித் தொடா்பாளர் நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்