தமிழகத்தில் தி.மு.க. 234 இடங்களிலும் வெற்றி பெற்று, எதிர்க்கட்சியே இல்லாத ஆட்சியை அமைக்கவுள்ளது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தல், நடந்து வரும் அநியாய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் மட்டுமல்லாது முதல்வர் பழனிசாமிக்கு கடைசித் தேர்தலாகவும், அரசியலை விட்டு ஓட வைக்கும் தேர்தலாகவும் இருக்கப் போகிறது.
வாய்க்கு வந்தபடி பேசி வரும் முதல்வர் பழனிசாமி, தன்னை முதல்வராக்கியது மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்று பொய் உரைத்து வருகிறார். ஜெயலலிதாவால் அவர் கட்சிப் பொறுப்புகளைப் பெற்று இருக்கலாம், எம்.எல்.ஏ., அமைச்சராகியிருக்கலாமே தவிர, சசிகலா காலில் விழுந்து தான் முதல்வரானார் என்பதை சமூக வலைத்தளங்கள் உலகளவில் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிறைக்குச் சென்ற போதும், உடல் நிலை நலிவுற்று இருந்த போதும், அவரால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வமே தவிர பழனிசாமி அல்ல. அப்படியிருக்க, சசிகலாவால் முதல்வர் பதவிக்கு வந்த பழனிசாமி, அவருக்கே விசுவாசமாக இல்லாத போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எவ்வாறு விசுவாசமாக இருந்திருக்க முடியும்?
இதேவேளை, தமிழக மக்கள் அனைவராலும் அறியப்பட்ட இந்து ராம் என்பவர் எந்த அரசியல் கட்சியையும் சேராதவர். அவர் ருவிற்றர் பக்கத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும், அ.தி.மு.க. தோல்வியைத் தழுவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, வடமாநிலத்தில் பிரபலமான ஏ.பி.பி. சி-வோட்டர்ஸ் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், தேர்தலில் தி.மு.க. 43 சதவீத ஓட்டுகளையும், அ.தி.மு.க. 30 சதவீத ஓட்டுகளையும் பெறும் எனத் தெரிவித்துள்ளது.
நான்கூட தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் 200 இடங்களைத்தான் பிடிக்கும் என்று கூறியிருந்தேன். தற்போதைய நிலையில் தமிழகத்தில் தி.மு.க. 234 இடங்களிலும் வெற்றி பெற்று, எதிர்க்கட்சியே இல்லாத ஆட்சியை அமைக்கவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.