புதுடெல்லி:
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை வெளியான அறிக்கையின்படி 3.17 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் 28,000-த்தை கடந்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளன.
இந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரக் குழுக்களை அனுப்பி உள்ளோம், தொடர்ந்து நிலைமையை மதிப்பாய்வு செய்து வருகிறோம்.
தமிழகத்தில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது தொற்று விகிதம் 10.70 சதவீதத்தில் இருந்து 20.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சிகிச்சையில் உள்ள வழக்குகளின் அடிப்படையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், குஜராத், ஒடிசா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.
நாட்டில் 15-18 வயதுக்குட்பட்ட 52% குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டில் இரண்டு தடுப்பூசிகளுக்கு சந்தை அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேசிய கட்டுப்பாட்டாளரின் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.