Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் அடாவடியான செயற்பாட்டிற்கு வலுக்கும் கண்டனங்கள்

அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் அடாவடியான செயற்பாட்டிற்கு வலுக்கும் கண்டனங்கள்

2 minutes read

அம்பிட்டியே சுமனரத்ன தேரர் இவ்வாரத்தொடக்கத்தில் மட்டக்களப்பு பிரதேச செயலகப்பிரிவொன்றின் அதிகாரிகளைக் கடுந்தொனியில் பேசும் காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றது.

 ஏற்கனவே இனவாதத்தைத் தூண்டுபவராகப் பரவலாக அறியப்பட்ட அம்பிட்டியே சுமனரத்ன தேரர், மட்டக்களப்பு கெவிலியாமடு பகுதியில் விகாரையொன்றை அமைப்பதற்கு காணியை வழங்குமாறு மட்டக்களப்பிலுள்ள பட்டிப்பளை, மண்முனை தென்கிழக்கு பிரதேச செயலகத்தில் கோரிக்கைவிடுத்திருந்த நிலையில் அதற்கு அனுமதி வழங்குவதற்குரிய அதிகாரம் தனக்கில்லை என பிரதேச செயலாளரினால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

 அதனையடுத்து இவ்வாரத்தொடக்கத்தில் அப்பிரதேச செயலகத்திற்குச் சென்ற அம்பிட்டியே சுமனரத்ன தேரர், அங்கிருந்த அதிகாரிகளைக் கடுந்தொனியில் பேசியதுடன் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை அனைவருக்கும் பொதுவானது என்றும் அவ்வாறிருக்கையில் கிழக்கில் விகாரை அமைப்பதற்கு அனுமதிவழங்க மறுப்பதன் காரணம் என்னவென்றும் கேள்வி எழுப்பினார்.

 அதுமாத்திமன்றி இதற்குரிய தீர்வு வழங்கப்படும் வரையில் அங்கேயே அமர்ந்து போராடப்போவதாகக்கூறி தரையில் அமர்ந்துகொண்டார்.

 பிரதேச செயலக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோர் அங்கிருந்தபோதிலும் தொடர்ந்தும் குரலை உயர்த்திக் கடுந்தொனியில் பேசிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் இக்காணொளியை அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். 

அரச அதிகாரிகளை மிகமோசமாகப் பேசியபோதிலும் தனக்கெதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை நன்கறிந்திருப்பதன் காரணமாகவே அவராகவே பேஸ்புக் பக்கத்தில் அக்காணொளியைப் பகிர்ந்திருக்கின்றார் என்ற விமர்சனங்கள் பலரும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இக்காணொளியை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவருமான அம்பிகா சற்குணநாதன், ‘ஒரு குடிமகன் அரச அதிகாரிகளை இவ்வாறு அச்சுறுத்தும்போது பொலிஸார் எதனையும் செய்யாமல் இவ்வாறு வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்களா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி கடந்த காலத்தில் பொலிஸார் முன்நிலையில் நபரொருவரின் கன்னத்தில் அறைந்தமை மற்றும் 2016 நவம்பர் மாதம் மட்டக்களப்பில் அரச அதிகாரியொருவரைப் படுகொலை செய்வதாக அச்சுறுத்தியமை ஆகிய சம்பவங்களுடன் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தொடர்புபட்டிருந்ததாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இக்காணொளியை மேற்கோள்காட்டி தமது டுவிட்டர் பக்கங்களில் பதிவுகளைச் செய்திருக்கும் டுவிட்டர் பயனாளர்கள், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ குறித்து பேசப்படுகின்றபோதிலும் இங்கு அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமல் பொலிஸ் அதிகாரி வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதன் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியிருப்பதுடன் இனவாதத்தைத் தூண்டும் வகையிலான அவரது பேச்சைக் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More