Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கு எதிராக இராஜதந்திர தடைகளை விதிப்பது தொடர்பில் அவதானம் | சஜித்

இலங்கைக்கு எதிராக இராஜதந்திர தடைகளை விதிப்பது தொடர்பில் அவதானம் | சஜித்

3 minutes read

மேற்குலக நாடுகளின் தலைநகரங்களில் இலங்கைக்கு எதிரான இராஜதந்திர செயல்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

விதிக்கப்படும் தடைகள் அரசியல் ரீதியானதாக இருந்தாலும் , பொருளாதார ரீதியிலானதாக இந்தாலும் பாதிக்கப்பட போவது நாட்டு மக்களே என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேசிய மறுசீரமைப்புகளுக்கான அமைப்பின் விசேட கூட்டம் திங்கட்கிழமை (25) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தற்போது எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் அரசியல் மறுசீரமைப்பு செயலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக முன்வைக்கக்கூடிய தளத்தினை நாம் உருவாக்கி இருக்கின்றோம்.

இந்த நடவடிக்கைகள் வாராந்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டில் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. அவை அரசியல் அமைப்பிற்கும் அப்பால் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு வழி வகுக்கக்கூடிய பலமாக அமைந்துள்ளன.

நாடு அராஜக நிலைமையை நோக்கி செல்வதை தடுத்து அரசியலமைப்பு ரீதியான நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வழியை அமைத்துக் கொடுப்பதே எமது இலக்காகும். நாட்டில் தற்போது எவ்வாறான நிலைமை நிலவுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்று அரசியலமைப்புக்கு அப்பால் சென்று 69 லட்சம் பெரும்பான்மை வாக்குகளால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தினால் பதவி விலக நேர்ந்தது.

அது மாத்திரமன்றி அவருக்கு நாட்டை விட்டும் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் பலத்தை உதாசீனப்படுத்தி ஆட்சியாளர்கள் மாத்திரம் தனித்து தீர்மானங்களை எடுக்க முடியாது.

யார் எந்த பதவிக்கு நியமிக்கப்பட்டாலும் நாட்டில் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அரச மிலேச்சத்தனம், அரச துன்புறுத்தல், அரச பயங்கரவாதம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

நிராயுதபாணிகளாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டத்தை மிலேச்சத்தனத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான ஆரம்பம் மே ஒன்பதாம் தினதி அலரி மாளிகையிலேயே இடம்பெற்றது.

அந்த நடவடிக்கையுடன் அப்போதைய பிரமருக்கு பதவியை துறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனுடன் நின்று விடாத மக்களின் எழுச்சி போராட்டம் ஜனாதிபதியையும் பதவி விலகச் செய்தது.

அதன் பின்னர் கடந்த 20 ஆம் திகதி அரசியலமைப்பு ரீதியாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் வன்முறை அற்ற மிலிச்சதனமற்ற சிறந்த தேசிய ஒருமித்த பயணம் ஆரம்பிக்கப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம்.

ஆனால் கடந்த வாரம் நள்ளிரவில் முன்னெடுக்கப்பட்ட சம்பவங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பாரிய பேரழிவாகும். மக்களின் அடிப்படை உரிமைகளும் ஜனநாயக உரிமைகளும் மிலேச்சத்தனமான அரசு பயங்கரவாதத்தினால் முடக்கப்பட்டன.

அதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்தோடு அதனை முற்றாக நிராகரிக்கின்றோம். இதன் மூலம் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இன்று பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.

மேற்குலக நாடுகளின் தலைநகரங்களில் இலங்கைக்கு எதிரான இராஜதந்திர செயல்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. பல தடைகளை விதைப்பதற்கான கலந்துரையாடல்களே இவ்வாறு இடம் பெற்று வருகின்றன.

இராஜதந்திர தடைகள் பொருளாதார ரீதியானதாக காணப்பட்டாலும் அரசியல் ரீதியாக காணப்பட்டாலும் அவற்றினால் இறுதியில் பாதிக்கப்பட போவது இலங்கையில் உள்ள 220 இலட்சம் மக்களே ஆவர். மாறாக ஆட்சியாளர்களுக்கு இதனால் எந்த ஒரு நஷ்டமும் ஏற்படப் போவதில்லை.

எனவே இந்த அரசியல் மறுசீரமைப்பு கலந்துரையாடல்களின் மூலம் சர்வாதிகாரம் தோற்றம் பெறாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும்.

ஜனநாயகம், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். அரச மிலேச்சத்தினத்திற்கு அரச பயங்கரவாதத்திற்கும் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

கற்களைக் கொண்டு தாக்குதல்கள் நடத்துவதாலும் தீமூட்டி அரச அல்லது தனியார் சொத்துக்களை அழிப்பதாலும் இந்நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் உருவாக போவதில்லை.

நல்லிணக்கத்திற்கான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நாட்டின் ஆட்சியாளர்களின் பொறுப்பாகும். அவ்வாறு ஆட்சியாளர்கள் நல்லிணக்கத்திற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும் போது நாட்டு மக்களும் அதனை பின்பற்ற வேண்டும். அதற்கமைய அனைத்து தரப்பினரதும் குரலையும் செவிமடுத்து நாட்டை சிறந்த பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு நாம் செயல்படுவோம் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More