Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக 5 கட்சிகள் உடன்படிக்கை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக 5 கட்சிகள் உடன்படிக்கை!

3 minutes read

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய 5 தமிழ்க் கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளன. 5 தமிழ்க் கட்சிகளும் ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’ எனும் பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத் தங்களைப் பிரகடனப்படுத்தியுள்ளன.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலுக்குப் பின்னர் 5 தமிழ்க் கட்சிகளும் பிற்பகல் 12.20 மணியளவில் புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

ரெலோ சார்பாக அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், புளொட் சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் அதன் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனும், தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் அதன் தலைவர் ந.சிறிகாந்தாவும், ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பில் அதன் தலைவர் சிவநாதன் நவீந்திராவும் (வேந்தன்) இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத் தம்மைப் பிரகடனப்படுத்தியுள்ள இந்தப் புதிய கூட்டணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’ எனும் பெயரில் ‘குத்துவிளக்கு’ சின்னத்தில் போட்டியிடவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5 தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றாக இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியாக, எமது இனத்துக்கான பலம் பொருந்திய கட்டமைப்பாக தோற்றம் பெறவேண்டும் என்ற கோரிக்கையை மறுதலித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக உருவாக்குவதற்கு மறுப்புத் தெரிவித்தும் தானாகவே அதிலிருந்து வெளியேறியதால் மேற்கண்ட 5 கட்சிகள் தமிழ் மக்களின் நலன்களையும் நம்பிக்கையையும் காப்பாற்றும் பொருட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக எம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளோம்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இருதரப்பு அரசுகளும் ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களின் வரலாற்றுபூர்வ வாழ்விடமான இணைந்த வடக்கு – கிழக்குப் பிராந்தியத்தில் தமிழ் மக்களின் இறையாண்மையின் அடிப்படையிலும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துவமாக வாழ்வதை உறுதி செய்யும் வகையில், ஒற்றையாட்சி முறையை நிராகரித்து சமஷ்டி அடிப்படையிலான பூரண பொறுப்பு வாய்ந்த சுயாட்சியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறுபட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மேற்கண்ட அரசியல் அமைப்புகள் தமது நோக்கங்களை வெற்றிகொள்ளும் பொருட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்தி இயங்குவது என்று 5 தமிழ்க் கட்சிகளும் தீர்மானித்துள்ளன.

மேலும் இலங்கைத் தீவில் எமது மரபுவழித் தாயகத்துக்கு வெளியே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் சட்ட பூர்வமானதும், ஜனனாயக ரீதியிலானதுமான சகல உரிமைகளை நிலை நாட்டுவதையும் பேணிப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்தக் கூட்டமைப்பு செயற்படும்.

தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கிவரும் பல்வேறு கட்சிகள் 2001ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டு வருகின்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் நிறுவனமாக இல்லாமையினால், மேற்கூறிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்டமைக்கப்பட்ட வலுவான அரசியல் சக்தியாக உருவாக்குவதற்குத் தீர்மானித்துள்ளன.

மேற்கூறிய அரசியல் கட்சிகளுக்கிடையில் எட்டப்பட்டிருக்கும் கருத்தொற்றுமையின் பிரகாரம், பின்வரும் விடயங்கள் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடக்கப்படுகின்றன.

  1. மேற்கூறிய அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் ஒற்றுமையாகவும் கூட்டாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படும்.
  2. மேற்கண்ட கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேசிய செயற்குழு ஒன்று அமைக்கப்படும்.
  3. இத்தேசியச் செயற்குழு, வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிற்கான முழுமையான அரசியல் தீர்வை நோக்கமாகக் கொண்டு, அதனை அடைவதற்கான அனைத்து வழிகாட்டல்களையும் நெறிமுறைகளையும் வகுத்துச் செயற்படும்.
  4. செயற்குழுவிலும் செயற்குழுவால் அமைக்கப்படும் ஏனைய குழுக்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கு சம உரிமைகளும் சம அளவான பிரதிநிதித்துவமும் வழங்கப்படும்.
  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழுவின் ஏகமனதான முடிவுகளுக்கும் தவறும் பட்சத்தில் அதன் பெரும்பான்மை முடிவுகளுக்கும் அங்கத்துவக் கட்சிகள் கட்டுப்படும்.
  6. மேற்கண்ட கட்சிகளையும் தேவையேற்படின் ஏனைய கட்சிகளையும் உள்ளடக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பரந்துபட்ட வலுவான கட்டமைப்பாக உருவாக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
  7. தேர்தல் விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற பெயரிலும் அதன் சின்னமான குத்துவிளக்கையும் கொண்டு செயற்படும்.
  8. இதற்கான நிரந்தர ஒரு கட்டமைப்பை சாத்தியமான விரைவில் உருவாக்கும்வரை இதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றிலிருந்தும் கட்சித் தலைவர்கள் உட்பட தலா மூவரைக்கொண்ட தேசிய செயற்குழு ஒன்று நிறுவப்படும்.
  9. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற நடவடிக்கைகளையும் இந்தச் செயற்குழுவே வழிநடத்தும்.
  10. தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவாகளைக் கையாள்வதற்கும், ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏனைய பிற பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் தேவையான நிபுணர் குழுக்களையும் ஏனைய உப செயற்குழுக்களையும் தேவைகருதி தேசிய செயற்குழு நியமித்துக்கொள்ளும்.
  11. அங்கத்துவக் கட்சிகள் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்டாலும் தத்தமது சுயாதீனத் தன்மையையும் தனித்துவத்தையும் பேணிக்கொள்ள உரித்துடையவை.
  12. ஒவ்வொரு கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தலைமை அமைப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், அங்கத்துவக் கட்சிகளையோ அல்லது கூட்டமைப்பின் கொள்கை, வேலைத்திட்டங்களை ஊடகங்களிலோ பொதுமேடைகளிலோ அல்லது சம்பந்தமில்லா தரப்பினரிடமோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ கருத்திடுவது தவிர்க்கப்பட வேண்டும். இவை தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளையும் கண்காணிக்க ஒழுக்காற்றுக் குழு நிறுவப்படும்.
  13. ஒரு கட்சியின் நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி, உறுப்பினர்கள் மற்றொரு கட்சிக்குத் தாவினால் அதனை அங்கத்துவக் கட்சிகள் ஏற்கக்கூடாது.
  14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவமானது கூட்டுத் தலைமைத்துவமாகவும் சுழற்சி முறையிலான தலைமைத்துவமாகவும் அமையும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான முழுமையான யாப்பு உருவாகின்றபோது, இந்த விடயங்கள் ஆழமாகப் பரிசீலிக்கப்பட்டு உள்ளடக்கப்படும்” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More