Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அழிக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் அத்திவாரங்கள் பிடுங்கப்படுகின்றனவா? | ஸ்ரீநேசன்

அழிக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் அத்திவாரங்கள் பிடுங்கப்படுகின்றனவா? | ஸ்ரீநேசன்

2 minutes read

பௌத்த பிக்குகளின்  கோரிக்கையில் படையினரின் பலப்பிரயோகத்துடன் தமிழர் தாயக நிலங்களிலுள்ள கலாசாரப்பதிவுகள், படிமங்கள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு அவ்விடங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதனை பௌத்த பிக்குகளின்  கோரிக்கையில்,

தமிழர் தேச அத்திவாரங்களைப் பிடுங்குவது போல் கலாசார அழிப்புகளை  திட்டமிட்டு  மேற்கொள்கின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பில் வைத்து புதன்கிழமை (12.4.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை சிங்கள அடிப்படைவாத ஆட்சியாளர்கள்  மேற்கொண்டனர்.

தற்போது,பாரிய தமிழின அழிப்பின் பின்னர், தமிழர் தேச அத்திவாரங்களைப் பிடுங்குவது போல் கலாசார அழிப்புகளை தொடர்ந்து மேற்கொள்கின்றனர்.

தமிழின ஒடுக்கு முறையானது அச்சுறுத்தல், மிரட்டல், இன அழிப்பு, சொத்தழிப்பு, வெளியேற்றல், அகதிகளாக்கல்,நாட்டை விட்டு அகற்றல்,  ஆக்கிரமித்தல்,சிங்கள மயமாக்கல் என்ற பொறிமுறைகளில் நடைபெற்றன.

1948 இல் இருந்து இன்று வரை அப்பொறிமுறைகள்  நடைபெறுகின்றன.2009 இல் இன அழிப்புப் பொறி  முறை அதியுச்சமாக நடை பெற்றது.

கடத்தல், கப்பம் பறித்தல்,காணாமல் ஆக்குதல், வதைத்தல் வன்புணர்வாடல், அழித்தல், சடலங்களைக் காணாமல் ஒளித்தல், சாட்சியங்களை அழித்தல், மிரட்டல் என்ற அடிப்படையில் அது தொடர்ந்தது. இப்படியாகத் தமிழர் தேசம் பேரின அராஜகர்களால் முடியுமான வரை அழிக்கப்பட்டது.

தற்போது அழிக்கப்பட்ட தேசத்தின் அத்திவாரக்கற்கள் பிடுங்கப்படும் இறுதிச் செயற்பாடுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறுகின்றன.

பௌத்தசாசன, மகாவலி, வனவள, வனசீவராசிகள் அமைச்சுகள் போன்றவற்றின் வழிப்படுத்தலில் தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வன வளத்திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம் போன்ற வற்றின் செயற்படுத்தலில், பௌத்த பிக்குகளின் கோரிக்கையில் படையினரின் பலப்பிரயோகத்துடன் தமிழர் தாயக நிலங்களிலுள்ள கலாசாரப்பதிவுகள் படிமங்கள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு அவ்விடங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கில் தமிழர்களின் விடுதலைப்புலிகள் என்ற பலமான சக்தி மெளனிக்கப்பட்டதன் பின்னர், சிங்கள பெளத்த மயமாக்கல் பொறிமுறை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் வெடுக்கு நாறிமலை, முல்லைத்தீவில் குருந்தூர், மலை, மட்டக்களப்பில் குசலான மலை, நெலுக்கல் மலை, திருகோணமலை கன்னியா, கோணேஸ்வரர் ஆலயம், அம்பாறையில் சங்கமான்கண்டி, மாணிக்கமடு, கஞ்சி குடிச்சாறு போன்ற இடங்களில் தமிழர் கலாசார அத்திவாரங்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு சிங்கள பெளத்த கலாசாரத்தினை செயற்கையாக நடுகின்ற பலவந்தமான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அரசின் அதிகாரம், பெளத்த பிக்குகளின் ஆணை, படையினரின் கெடுபிடிகள், அடக்கு முறைகள் மத்தியில் தொல்லியல் என்ற போர் வையில் ஆக்கிரமிப்புகள் நடைபெறுகின்றன.

தமிழர்கள் தமிழ்த் தேசியக்கட்சிகள், தமிழ் சிவில் அமைப்புகள், மதத்தலைவர்கள் 24 மணித்தியாலம்களும் விழிப்புடன் இருந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழர்களின் பலமான போரியல் சக்தி பலவீனமான பின்புதான் இப்படியான ஆக்கிரமிப்புகள் தீவிரம் அடைந்துள்ளன.

எனவே தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள்? என்பதற்கான நியாயத்தினை தற்போது பேரினவாதிகள் மீண்டும் இளைய சந்ததியினருக்கு வெளிக்காட்டி வருகின்றனர்.

தமிழ் இளைஞர்,யுவதிகளை போராட்டத்தை நோக்கித் தள்ளியவர்கள் சிங்களப் பேரினவாதிகளேயன்றித் தமிழர்கள் அல்லர்.

தமிழர்களின் அகிம்சையான போராட்டத்தை சிங்கள அரசு ஒடுக்கியதால், இளைஞர்கள் அகிம்சையில் நம்பிக்கை இழந்து ஆயுதங்களை ஏந்த வேண்டி ஏற்பட்டது. இப்போது சிங்கள இனவாதம் அதனையே மீண்டும் செய்து வருகின்றது. குட்டக் குட்ட குனிந்து கொடுப்பவன் மடையன் என்பார்கள்.

அன்று சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து முப்பதாண்டுகளாகக் குட்டுப்பட்ட தமிழர்கள் நிமிர்ந்த போது அது ஆயுதப் போராட்டமாக வெடித்தது என்பதை அதிகார வர்க்கம் மறக்கக் கூடாது. 2009 இன் பின்னர் மீண்டும் தமிழர்களுக்கு குட்டுகள் விழுந்த வண்ணம் உள்ளன.

14 ஆண்டுகளாக மீண்டும் குட்டுகள் தொடர்கின்றன. யுத்த சகதிக்குள் மறைந்து போன உண்மைகள் நீதிகள் இன்னும் வெளிக்கவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னும் வழங்கவில்லை.

அன்பின் வடிவான கௌதம புத்தரின் சிலைகள்,வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பின் அடையாளங்களாக மாற்றப்பட்டுள்ளன.அடுத்த தேர்தலுக்கான அடிப்படைவாத செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

சிங்கள பௌத்தத்தின் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர் கலாசாரங்கள் பிடுங்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கல தீவிரமடைந்துள்ளன.

இணக்க அரசியல்,அபிவிருத்தி அரசியல்,மண்மீட்பு அரசியல் என்று புலம்பி பதவி சுகம்,பணசுகம் அனுபவிக்கிறார்கள் தமிழின எடுபிடி அரசியல்வாதிகள். தினமும் போராட வேண்டிய நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அவர்களை மீண்டும் அடக்கி ஒடுக்குவதற்கும், பயங்கரவாதிகளாக சித்திரிப்பதற்கும் பயங்ரமான சட்டத்தைக் கொணர சிங்கள அதிகார வர்க்கம் துடிக்கிறது. அதற்குத் தலைகளாட்ட தமிழர் விரோதத் தமிழ் அமைச்சர்கள் தயாராகிவிட்டார்கள். அவர்களுக்கோ சலுகைகளில் கொண்டாட்டம், மக்களுக்கோ உரிமைக்கான போராட்டம் தொடர்கிறது. என தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More