Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா

கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா

4 minutes read

‘கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்’ (எனது பழைய கோப்பிலிருந்து)

அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு எங்கள் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது. அவர் ஒரு கைம்பெண். இரு பெண் பிள்ளைகளுடன் பனை ஓலையால் வேயப்பட்ட மண் வீட்டில், தங்களுக்குச் சொந்தமான பனைகளை நம்பி மிகவும் கண்ணியமாக வாழ்ந்துவந்தார். சின்ன வயதில் அவர் வீட்டிலேயே, பனை மரத்தின் விளை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளை அதிகம் சாப்பிட்டிருக்கிறேன். அவரது கைப் பக்குவத்தில் தயாராகும் பாணிப் பினாட்டும், புழுக்கொடியல் மாவுறுண்டைகளும் மிகவும் சுவையானவை. பனம் பழக் காலங்களிலே பனங்காய்ப் பணியாரம் சுடப்படுவதுமுண்டு.

இவரைப்போல இன்னும் சில பெத்தாச்சிகளும் அயலட்டையில் வாழ்ந்தார்கள். அவர்கள் வீட்டில் எப்பொழுதும் நான் செல்லப் பிள்ளை. அவர்கள் அனைவரும் தோட்டத்தை நம்பியே வாழ்ந்தார்கள். அவர்களிடம் பணவசதி இல்லாவிட்டாலும் வந்தவர்களையும் உறவினர்களையும் மனதார வரவேற்று உபசரிக்கும் பண்பு இருந்தது. போலித்தனமோ எந்தவித எதிர்பார்ப்போ அவர்களிடம் இருந்ததில்லை.

பெத்தாச்சி தனது வளவிலுள்ள பத்து பெண் பனை மரங்களை கள்ளுச் சீவ, கந்தையாவுக்கு கொடுத்திருந்தார். ஆண் பனைகளைக் கொடுப்பதற்கே பெத்தாச்சி முதலில் ஆசைப்பட்டார். ஆனால் ஆண் பனை மரப் பாளையில் அதிகம் கள்ளு ஊறாதென கந்தையா மறுத்துவிட்டார்.

இருந்தாலும் ஆண் பனைக் களுக்கும் ஊரில் தனி மரியாதை இருந்தது. ஆண் பனையிலிருந்து இறக்கப்படும் உடன் கள்ளு, முடக்கு வாதத்துக்கு நல்லதென அதையே நம்மூர் பெரிய கமக்காரரான துரையர், தினமும் தன் பின்வளவு ஆண் பனையிலிருந்து இறக்குவித்துக் குடிப்பார். இருப்பினும், அவரைப் பொறுத்தவரை அது பொய்யாகி, அறுபது வயதில் பாரிசவாதத்தால் இறந்தது கொசுறுச் செய்தி.

பத்தொன்பதாம் நூற்நாண்டின் அறுபதாம் ஆண்டுகளில் பனை தென்னை மரங்களுக்கு ‘மர-வரி’ இலங்கையில் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த வரிமுறையின் கீழ் கள்ளிறக்குவதற்கு, பெண்பனைக்கும் தென்னைக்கும் ஆண்டு ஒன்றுக்கு ‘லைசென்ஸ்’ பெற அப்போது பத்து ரூபாய் வீதம் கட்டவேண்டும். தென்னையிலும் பெண் பனையிலும் கள்ளுச் சீவுவதால் தேங்காய், பனங்காய் ஆகியவற்றினால் கிடைக்கும் பயன்கள் இல்லாமற் போவதை ஈடுசெய்வதற்காக மரத்துக்கு பத்து ரூபாய் வீதம் அப்போது பணம் வசூலிக்கப் பட்டது. தென்னை மரங்களில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை. ஆனால் பனை மரங்களில் உண்டு. ஆண் பனைகளிலே பெண் பனைகளைப் போல பயன்கள் கிடைக்காத காரணத்தால் அதற்கான ‘லைசென்ஸ்’ பணமாக ஆண் பனைக்கு, ரூபா இரண்டு வசூலிக்கப்பட்டது.

‘லைசென்ஸ்’ கட்டிச் சீவப்படும் மரங்களுக்கு வெள்ளை மையால் நம்பர் எழுதப்படும். நாலு மரங்களுக்கு பணம் கட்டி, கொசுறாக மேலும் சில மரங்களிலேயும் கள்ளுச்சீவுதல் கிராமங்களிலே சகஜமாக நடைபெறும். அப்பொழுது ‘கலால்’ இலாகா விழித்துக் கொள்ளும். நம்பரில்லாத மரங்களிலுள்ள கள்ளு முட்டிகளை அடித்துடைத்து, பாளைகளையும் ‘கலால்’ இலாகாவினர் வெட்டி எறிவது கிராமங்களில் அவ்வப்போது நடக்கும் சங்கதி.

பெத்தாச்சியின் வளவில் பத்து பெண் பனைகளில் கள்ளுச் சீவி, கொழுத்த வருமானம் பார்த்த கந்தையா, எந்த மரத்துக்கும் மரவரி கட்டவில்லை. இதை கந்தையாவின் குடும்ப எதிரி சின்னராசா கலால் இலாகாவுக்கு அறிவித்திருக்கிறான். கலால் இலாகா வந்து விட்டார்கள். கந்தையாவின் மனைவி வள்ளி, ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டினாள். வந்தவர்கள் அசரவிலல்லை. பாளையை வெட்ட ஆயத்தமானார்கள்.

அப்போது நடந்ததுதான் அதி உச்ச கிளைமாக்ஸ் காட்சி!

திடீரென வள்ளி தன் மாராப்பை அவிட்டு, மார்பைக் காட்டிக் கத்தவே, பாளை வெட்ட வந்தவர்கள் தலை தெறிக்க ஓடியது எங்கள் ஊரின் அந்த நாளைய ஈஸ்மன் கலர் வசுக்கோப்பு.

பனைகளின் முக்கிய பொருளாதார பயன்கள், கள்ளு சாராயம் பனங்கட்டி பனங் கற்கண்டு ஆகியனவே. ‘கல்லாக்காரம்’ என்னும் பெயரில் விற்பனையாகும் பனங்கற்கண்டு இருமலுக்கும் தொண்டை அரிப்புக்கும் நல்ல மருந்தென விஞ்ஞான ரீதியாக இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலாதிகாலமாக கல்லாக்காரமே யாழ்ப்பாணத்தில் இருமலுக்கான இயற்கை மருந்தாக பாவனையியிலிருந்த தகவல், முறைப்படி நம்மால் பதியப்படாதது துர்ரதிஸ்டமே!

இவைதவிர பனாட்டு, பாணிப்பனாட்டு, பனங்காயப் பணியாரம், பூரான், பனங்கிழங்கு, ஒடியல். புழுக்கொடியல், ஊமல், மற்றும் பனை ஓலையிலிருந்தும், மட்டையிலிருந்தும், மரத்திலிருந்தும் பெறப்படும் பயன்களை நீண்ட பட்டியலிடலாம்.

இடையில் அவசரமாக இன்னொரு சங்கதி மூளையைக் குடைகிறது. யாழ்ப்பாணத்துக் ‘கிளாக்கர் ஐயாக்களின்’ அதிகாரங்கள் கொழும்பிலே கொடிகட்டிப் பறந்த காலத்தில், கந்தோர்களில் கோப்புக்களைக் கட்டிப்பிடித்து, நாட்டின் நலன்களை அடைகாத்துப் பெருக்கியதாகப் பெருமைப் பட்ட காலங்களில், அவர்களுக்குத் தேவையான ‘சுதி’யை பனங்கள்ளே அளித்தது என்பதை அறுபதைத் தாண்டி வாழும் எந்த யாழ்ப்ப்பாணியாலும் மறுக்க முடியாது.

அன்றைய காலங்களில் யாழ்ப்பாணத்து கள்ளுக் கொட்டில்களிலதான் ‘சமத்துவம்’ முழுதாக அமுல் படுத்தப்பட்டது. சின்னவிக்கும் விதானை மாணிக்கத்துக்கும் கொட்டிலில் ஒரே ‘பிளா’தான். பிளா, யாழ்ப்பாணத்தானின் மகத்தான கண்டு பிடிப்பில் ஒன்று. பனை ஓலையை வெட்டி மடித்து, கை பிடிக்க வசதியாக ஒரு பக்கத்தில் வால் விட்டு செய்தால், அது பிளா. இது கள்ளுக் குடிக்கப் பாவிக்கப்படும். பனை ஓலையை பக்கவாமட்டில் மடித்து மூடிக் கட்டினால், அது குடலை. இது கிராமப்புறங்களில் இறைச்சி, வெள்ளரிப்பழம் என்பவற்றை காவிச்செல்ல பாவிக்கப்படும். முற்றிய பனை ஓலையை பிளாபோல் மடித்து, வாலை பக்கவாட்டில் மடித்துக் கட்டினால், அது தட்டுவம். இது சோறு தின்னப் பாவிக்கப்படும்.

இந்த வகையில் ‘கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்’ என்ற சொற்தொடர் இன்றும் என் நெஞ்சிலே முகங்காட்டி மறைகிறது.

கூவில் கள்ளின் மகத்துவம்பற்றி தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடுங்ககள். எனக்குத் தெரிய இதுபற்றிய பதிவு இன்னமும் இல்லை. தகவல் கிடைத்தால் கட்டுரையாக்கலாம்…

கட்டுரை 1: https://aasikantharajah.blogspot.com/…/unitedarab-state…

கட்டுரை 2:

https://aasimuttam.blogspot.com/2021/02/blog-post_18.html…

ஆசி கந்தராஜா., ஈழத்தின் குறிப்பிடக்கத்த புனைகதை எழுத்தாளர். சுவாரசியமான பத்தி எழுத்துக்களையும் எழுதி வருகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More