எள்ளுருண்டை காலை உணவாக இருந்தால், தேர்வுக்குமுன் ஏற்படும் மன அழுத்தத்தை திறம்பட சமாளிக்கலாம் என்று கூறப்படும் கருத்தை அறிவியலும் ஆமோதிக்கிறது.
தேர்வு நேரத்தில் மாணவர்கள் உட்கொள்ளும் உணவு, தூங்கும் நேரம், மற்ற வழக்கங்களை முறையாக கடைபிடிக்காவிட்டால் நன்றாக படித்திருந்தாலும், சரியாக தேர்வு எழுதுவது கடினம்.
சிலருக்கு தேர்வு எழுதும்போது கைவிரல்கள் இழுத்துக்கொள்ளுதல், கண் இருட்டுதல் போன்றவை ஏற்படும். இதற்கு காரணம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து, உடலில் திறன் குறைவதுதான். இதனால் மாணவர்களின் முயற்சிக்கு முழு பலன் கிடைக்காமல் போய்விடும். இப்படி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மனச்சோர்வு இல்லாமல், படித்தது மறக்காமல், ஆரோக்கியமான திட மனதுடன் தேர்வுக்காலம் முடியும்வரை இருக்க என்ன செய்ய வேண்டும்? எனக்கேட்கலாம்.
தேர்வுக்கூடத்துக்கு சாப்பிடாமல் செல்வது பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு. இதை உணராமல் போனால் தேர்வு எழுதும்போது கவனமின்மை, மனச்சோர்வு, விரைவாக விடையளிக்க முடியாத நிலை ஏற்படலாம். காலை உணவு எடுத்துக்கொள்வது கட்டாயம். பிரேக் பாஸ்ட் இன் த கிளாஸ்ரூம் என்ற திட்டம் அமெரிக்க மாகாணங்கள், சிங்கப்பூர் போன்ற முன்னேறிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதே, இதற்கு நல்ல அத்தாட்சி.
அதிலும் காலை உணவில் வாழைப்பழத்தைச் சேர்த்துக்கொள்வது அவசியம். தேர்வு எழுதும் மூன்று மணி நேரமும் தொடர்ந்து உட்கார்ந்து எழுதுவதால் ஏற்படும் கை, கால் சோர்வுக்குக் காரணம் பொட்டாசியம் சத்து குறைவுதான். அதை ஈடுகட்டும் சிறந்த உணவு எதுவென்று கேட்டால், அது வாழைப்பழமே.
அதிக உடல் உழைப்பு தேவைப்படும் டென்னிஸ் போன்ற போட்டிகளில் பங்கேற்பவர்கள், இடைவேளையில் வாழைப்பழம் சாப்பிடுவதைப் பார்த்திருக்கலாம். இப்படி சர்வதேச விளையாட்டு வீரர்களின் உணவாகத் திகழும் வாழைப்பழம், தமிழ்நாட்டில் உள்ள பொதிகைமலையை தாயகமாகக்கொண்டது. குறைந்த அளவு இனிப்புச்சுவை கொண்ட மாவுப்பொருட்கள் மற்றும் புரதப் பொருட்கள் சேர்ந்த உணவே சமச்சீரான காலை உணவு. அனைத்து சத்துகளும் சமஅளவு கொண்ட வெண் பொங்கல் மற்றும் கேழ்வரகுப் புட்டு, அவித்த பச்சைப்பயறு கலவை உடலுக்குத் தேவையான அதிக கலோரியைத் தொடர்ச்சியாக வழங்கும்.
சங்க கால பாடல்களில் போரில் வெற்றி பெற்ற போர் வீரர்கள் நாடு திரும்பும்போது, தம்முடன் எடுத்துச் சென்ற எள், கொள்ளு ஆகிய விதைகளை எதிரி நாட்டில் விதைத்துவிட்டு திரும்பிய நிகழ்வு பதிவாகியுள்ளது. இதேபோல முதல் உலகப்போருக்குச் சென்ற வீரர்கள் எள்ளை உடன் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். எனவே மன அழுத்தத்தை குறைக்கும் தன்மையை எள் கொண்டிருப்பதே இதற்கு முதன்மை காரணம். எள்ளுருண்டை காலை உணவாக இருந்தால், தேர்வுக்குமுன் ஏற்படும் மன அழுத்தத்தை திறம்பட சமாளிக்கலாம் என்று கூறப்படும் கருத்தை அறிவியலும் ஆமோதிக்கிறது.
நன்றி | மாலை மலர்