சங்க இலக்கியங்களில் பெண்ணைப் போகப் பொருளாக வர்ணிப்பது மிகவும் அரிதாகவே காணப்பட்டது. இன்றைய காலப் பாடல்களில் இடம் பெறும் பெண்களின் உடல் வர்ணனை சங்க இலக்கியங்களில் ஆங்காங்கு தான் காணப்படுகின்றன. பெண்ணின் இயல்புகளும், மனப் பண்புகளும், உளவியல் நுட்பங்களும் நன்கு சங்க இலக்கியங்களில் விளக்கப்பட்டுள்ளன.
எமது தொன்னெடுங்கால சங்க இலக்கியமானது இறைவன், இயற்கை, பெண்மை என்ற இந்த மூன்றையும் மிகவும் சிறப்பித்து நிற்பதை நாம் காணலாம். அக்கால இலக்கியங்கள் கண்ணியமாகப் பெண்ணை வர்ணித்தன. பெண்ணின் உடல் வர்ணனை என்பது கொட்டிக் கிடக்கும் சங்க இலக்கியங்களில் மிகவும் தேடிப் பார்க்க வேண்டியதொன்றாகவே காணப்படுகிறது. பெண்களின் அங்கங்களைக் குறித்த வர்ணனைகள் உச்சம் தொட்டாலும், அவை இரசிக்கத் தக்க வகையில் அமைந்திருக்கின்றன. முகச்சுழிப்பை அவை ஏற்படுத்தவில்லை.
குறுந்தொகை 325
“சேறும் சேறும் என்றலின்” என்று தொடங்கும் இந்தப் பாடலை நன்னாகையார் எனும் புலவர் பாடுகிறார்.
தலைவி பிரிவின் ஆற்றாமையில் குலுங்கிக் குலுங்கி அழுது புலம்புகின்றாள். அவளின் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர், கன்னங்கள் வழியே கீழே இறங்கி அவளின் சங்குக் கழுத்தைக் கடந்து நெருக்கமாகத் திரண்ட மார்பகங்களின் இடைவெளியில் நிரம்பிக் குளம் போல் தேங்கி நின்றதாம். அந்த நேரத்தில் மேலே பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று அதைக் கண்டு, மேய்வதற்கு நல்ல குளம் ஒன்று கிடைத்துவிட்டது என்று நினைத்துக் கொண்டதாம். இதுதான் அந்தப் பாடலின் விளக்கம். பெண்ணின் பிரிவாற்றலை மிகைப் படுத்திய புலவர் நன்னாகையாரின் கற்பனைத் திறத்தை காலம் கடந்தும், வியந்து நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
உழைக்கும் பெண்கள்
சங்ககால பெண்கள் பிற்காலத்தைப் போல அரண்மனைக்குள்ளும், இல்லத்திற்குள்ளும் தமது நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. குறுக்கிக் கொள்ளவில்லை. தினைப்புலத்திலும், கடற்கரையிலும், காட்டிலும், பாலை நிலத்திலும் இப் பெண்கள் தாராளமாக நடமாடினார்கள். வேலை செய்தார்கள். வெறுமனே காதல் கிழத்தியராகவும், விளையாட்டுப் பருவத்தினராகவும் இவர்கள் சித்தரிக்கப்படவில்லை. உழைப்போராகவும், உற்பத்தியில் பங்கெடுத்தவர்களாகவும் இவர்களை சங்க இலக்கியங்கள் காட்டி நிற்கின்றன.
கடினமான வழிகளைக் கடந்து வெவ்வேறு அரசர்களிடம் சென்று அவர்களைப் புகழ்ந்து பாடிய விறலியரும், பாடினிகளும் கூட உள்ளனர் என்பதை சங்க இலக்கியங்கள் காட்டி நிற்கின்றன.
புறநானூறு 315
“மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவர்” என்று தொடங்கும் பாடலை ஐயூர் முடவனார் என்னும் புலவர் பாடுகிறார். அதாகப் பட்டது,
வல்லமை பொருந்திய ஆண் மகனது குடும்பத்தின் மனை விளக்கு, அவனது மனைவி என்று சித்தரிக்கின்றார்.
பதிவிரதை தர்மம்
வருந்தத் தக்க விடையமாகச் சங்க காலம் கடந்த இடைப்பட்ட காலத்தவர்களால் பெண்களின் குணமென சிறப்பித்துக் கூறப்படும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு கொண்டவர்களாக, கொண்ட கணவனையே தெய்வம் எனக் கொண்டு பதிவிரத தர்மம் தவறாமல் வாழ்ந்தவர்களாகப் பெண்களை இக்கால இலக்கியங்கள் கூறுகின்றன.
சங்க காலத்தின் பின்னர் ஆணில் தங்கி வாழ வேண்டியவளாக, கணவனே கண் கண்ட தெய்வம் எனப் போற்றுபவளாக பெண் சித்தரிக்கப்படுகின்றாள். உதாரணமாகப் பரத்தையிடம் கணவனைக் கூடையில் சுமந்து செல்லும் நளாயிணி, சிலம்பு காட்டும் பத்தினியான கண்ணகி, சீதாப் பிராட்டியை நாம் இங்கு குறிப்பிடலாம்.
வள்ளுவம் காட்டும் பெண்மை
“கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும்
ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே” என்று வரும் குறளில்,
கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தீண்டியும் அறிகின்ற ஐம்புல இன்பங்களும் ஒளி வீசும் வளையல் அணிந்த இவள் ஒருத்தியிடத்திலேயே அமைந்துள்ளது என்று 1101 வது திருக்குறளில், காமத்துப் பால் அதிகாரத்தில் திருவள்ளுவர் வர்ணிக்கிறார்.
வள்ளுவர் “பெண் வழிச் சேறல்” எனும் அதிகாரத்தையே வைத்துள்ளார். அதாவது பெண் சொல் கேட்டல் தீது என்கிறார்.
பெண்ணுக்குரிய அறம் என்பது சங்க காலத்தில் இருந்து வள்ளுவர் காலத்தில் மாற்றப்பட்டது எனலாம். வள்ளுவர் வாழ்ந்த காலத்தின் தாக்கத்தால் குறள்களில், ஆங்காங்கே பெண்களைத் தெய்வமாகப் போற்றியும் சில இடங்களில் குறைத்துக் காட்டுவதையும் கூடப் பார்க்கலாம்.
பின் நாட்களில் பெண்ணுக்குரிய எல்லாமே ஆண்களே வகுக்கின்றனர். உலா பரணி, குறவஞ்சி போன்ற இலக்கியங்களில் பெண் உடல் வர்ணனைகள் இடம்பெறுகின்றன.
பின்னாளில் பெண்களின் மார்பகம், உதடுகள், பாலியல் அம்சம் கொண்ட இடை, தொடை, கண், நெற்றி, புருவம் முக்கியம் என்று அவைகள் கூடுதலாக வர்ணிக்கப்பட்டன.
நாம் அனைவரும் வாசித்துக் கடந்து வந்த சாண்டில்யனின் வரலாற்று நாவல்களில் கூடப் பக்கம் பக்கமாக பெண்ணின் உடல் பற்றிய வர்ணனைகள் கொட்டிக் கிடப்பதை கண் முன் கொண்டு வரலாம்.
இன்று பெண்களின் சதை வர்ணனை அல்லது உடல் வர்ணனை, ஊடகச் சந்தையில் நிறுத்தப்படுகின்றது என்பதை வேதனைக்குரிய விடையமாகக் காண்கின்றோம். ஆகப் பண்டைய சங்க கால இலக்கியங்களை விட பிந்தைய கால இலக்கியங்களில் பெண்களின் நிலை மிகவும் பின் தங்கி உள்ளதைக் காணலாம்.
இறுதியாகவும் அதே நேரம் உறுதியாகவும் இந்தப் பதிவின் மூலம் நாம் கூறக்கூடியது, சங்க காலத் தமிழ்ச் சமுதாயத்தில் மகளீர் பெற்றிருந்த இடம் என்பது, தனி சிறப்பு வாய்ந்தது ஆகும்.
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்