Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை மறக்க முடியாத யாழ் இடப்பெயர்வு | ஒக்ரோபர் 30,1995 | 25 வருடங்கள்

மறக்க முடியாத யாழ் இடப்பெயர்வு | ஒக்ரோபர் 30,1995 | 25 வருடங்கள்

4 minutes read
No description available.

அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள்.

யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.

காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான். ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

No description available.

ஆனால் இன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள். இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.

8 மணியிருக்கும். பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.

யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.

யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.

இப்போது நினைத்துப்பார்த்தால், புலிகள் அந்த வெளியேற்றத்தை திட்டமிட்டு நடாத்தி முடித்திருக்கலாமோ என தோன்றுகிறது. ஏனெனில் அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிகளின் கைகளில் தான் இருந்தது. இடப்பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால் எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று.

அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் – உலகம் என்ற ஒன்று பார்த்து ‘உச்’ மட்டும் கொட்டியது.

அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.

24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.

சொந்த வீடுகளை இழந்து, உடமைகளை பறிகொடுத்து இடம்பெயரும்போது தமது உறவுகளையும் இழந்து தமது பூர்வீக நிலங்களை விட்டு வெளியேறிய நாள் இன்றாகும்.

நன்றி – சாரல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More